Monday, June 5, 2017

பெயர் வந்தது எப்படி?

  இந்து  சமய  வானவியல்  சாஸ்திரப்படி  "சௌரமானம்"  என்றும்  "சாந்த்ரமானம்"  என்றும்  வருஷத்தைக்  கணக்குப்  பண்ணுவதில்  இரண்டு  முறை  உள்ளது.  சூரியகதியை  கொண்டு  மாதவருடங்களை  கணக்கிடும்  முறை  சௌரமானம்  எனப்படும்.  சூரியன்  ஒரு  ராசியில்  நுழைந்து,  அங்கு  சஞ்சரித்து,  அங்கிருந்து  அடுத்த  ராசிக்கு  நுழையும்  முன்  வரை  உள்ள  காலம்  ஒரு  மாதம் (  சூரிய  மாதம் )  எனப்படும்.  எனவே  சூரிய  சித்தாந்த  நூலின்படி,  சூரியன்  சஞ்சாரம்  செய்து  கொண்டிருக்கும்  அந்த  ராசியின்  பெயரே  அந்த  மாதத்தின்  பெயராகும்.  சௌரமான  முறைப்படி  மேஷம்,  ரிஷபம்,  மிதுனம்,  கடகம்,  சிம்மம்,  கன்னி,  துலாம்,  விருச்சிகம்,  தனுசு,  மகரம்,  கும்பம்,  மீனம்  என  பன்னிரண்டு  ராசியின் பெயர்களே  மாதங்களின்  பெயர்களாகும்.  சூரியன்  ஒன்பதாவது  ராசியான  தனுர்  ராசியில்  பயணம்  செய்யும்  காலம்  "தனுர்  மாதம்"  எனப்படும்.
     சந்திரகதியை  கொண்டு  மாதவருடங்களை  கணக்கிடும்  முறை  சாந்த்ரமானம்  எனப்படும்.  ஒரு  கிருஷ்ணபக்ஷம் ( பௌர்னமி  தொடங்கி  அமாவாசை  வரை )  மற்றும்  சுக்லபக்ஷம் (  அமாவாசை  தொடங்கி  பௌர்ணமி  வரை )  முழுவதும்  சேர்த்து  இருக்கும்  காலம்  ஒரு  மாதம் ( சந்திர  மாதம் )  என  கணக்கிடப்படுகிறது.  பெரும்பாலும்  ஒரு  கிருஷ்ணபக்ஷ  ப்ரதமையிலிருந்து  அடுத்த  கிருஷ்ணபக்ஷ  ப்ரதமை  வரை  ஒரு  மாதம்  என்ற  கணக்கு  உள்ளது.
     ஒரு  சில  வழக்கத்தில்  ஒரு  பௌர்ணமியிலிருந்து  அடுத்த  பௌர்ணமி  வரை  ஒரு  மாதம்  என  கணக்கு  உள்ளது.  சாந்த்ரமான  முறைப்படி  எந்த  நக்ஷத்திரம்  பௌர்ணமியன்று  சந்திரனுக்கு  அருகே  உள்ளதோ  அந்த  நக்ஷத்திரத்தின்  பெயரையே  அந்த  மாதத்தின்  பெயராக  வைப்பார்கள்.சாந்த்ரமான  முறைப்படி  வருடப்பிறப்பிலிருந்து  ஒன்பதாவது  மாதத்தில்  பௌர்ணமியன்று,  சந்திரனுக்கு  அருகே  உள்ள  நக்ஷத்திரம் "ம்ருகசீர்ஷம்"  ஆகும்.  ஆகவே  இந்த  மாதத்தின்  பெயர்  "மார்க்கசீர்ஷம்."  மார்க்கசீர்ஷம்  மருவி  மார்கழி  ஆகிவிட்டது.  எனவே  சௌர்மானப்படி  அழைக்கப்படும்  தனுர்  மாதம்,  சாந்த்ரமானப்படி  மார்கழி ( மார்கசீர்ஷம் )  மாதம்  ஆகும்.
-- கார்த்திக்  ஜெயராமன்.  (  ஆனந்த ஜோதி ).  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  வியாழன்,  ஜனவரி  8,  2015. 

No comments: