Sunday, May 22, 2016

சட்டைப்பையில் சார்ஜர்.

   ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்ளட் போன்ற சாதனங்களை உபயோகப்படுத்துவதில் பலவிதமான வசதிகள், சவுகரியங்கள் இருந்தாலும் அவற்றிற்கு அவ்வப்போது மின்சாரத் தீனி போடும் வேலை எப்போதும் அயர்ச்சியூட்டுவதுதான்.  எங்கு சென்றாலும் கிலோகணக்கில் எடையுள்ள சார்ஜர்களை சுமந்து கொண்டு, எங்கே பிளக் பாயின்ட் கிடைக்கும் என்று தேடி அலைவதன் கஷ்டம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.  ஆனால், அந்தத் தொல்லை இனி இல்லை.  பின்சிக்ஸ் நிறுவனம் 'டார்ட்' என்ற பெயரில் புதிய அதிவேக சார்ஜரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
     இது வழக்கமான லேப்டாப் சார்ஜரைவிட நான்கு மடங்கு சிறியது மற்றும் ஆறு மடங்கு எடை குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.  இன்ன பிரான்ட் என்று குறிப்பிட்டு இல்லாமல் அனைத்து வகை லேப்டாப்களையும், மற்றும் செல்போன்களையும் இந்த சார்ஜரின் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
     'விஹெச்எப்'  எனப்படும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதால் இந்த சார்ஜரிலிருந்து 65 வாட்ஸ் வரை சக்தி கிடைக்கிறது.  ஆயிரம் மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏற்றும் என்பதோடு இதனால் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியின் ஆயுளும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் இதன் தயாரிப்புக் குழுவினர்.
     இது ஒரு புறம் இருக்க, இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டார் டாட் நிறுவனம் வெறும் முப்பது நொடியில் ஒரு செல்போனை சார்ஜ்  செய்யும் வகையில் பேட்டரியையும், அதற்கான சூப்பர் சார்ஜரையும் உருவாக்கியுள்ளது.
     நானோடாட்கள், பயோ மற்றும் ஆர்கானிக் மூலக்கூறுகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேட்டரி ஆயிரம் மடங்கு வேகத்தில் அதாவது, 30 வினாடிகளுக்குள் முழுதாக சார்ஜ் ஆகுமாம்.
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 27-4-2014.   

No comments: