Monday, May 2, 2016

மனதுக்கு இல்லை வயது !

  நாம் இந்த உலகைப் பற்றித் தெரிந்துகொள்வதே புலன்கள் வாயிலாகத்தான்.  பார்வை, கேட்டல், தொடுதல், முகர்தல், சுவைத்தல் என்று ஐம்புலன்கள் வழியாக அன்றாடம் நம்மை அடையும் ஆயிரக்கணக்கான தகவல்கள்வழியாகவே நம்மைச் சுற்றி நடக்கும் மாறுதல்களைக் கண்டுகொள்கிறோம்.  'ஓடும் நதியில் ஒருமுறை கையில் அள்ளிய நீரை மீண்டும் அள்ள முடியாது' என்று சொல்வதுபோல கணந்தோறும் உலகில் ஒருமுறை நடக்கும் விஷயம் மறுகணம் மாறுகிறது.  இம்மாற்றங்களைப் புலன்கள் மூலமே நாம் பதிந்துகொள்கிறோம்.
     வயதாகும்போது புலன்களின் திறன் குறையத் தொடங்குகிறது.  இதுபோல புலன்களின் திறன் குறையும்போது அதிலிருந்து வரும் தூண்டுதல்கள் இல்லாததால் மூளையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.  பார்வை குறைந்தவர்களுக்கு ஏதோ உருவங்கள் மாயத் தோற்றங்கள் தெரியத் தொடங்கும்.  ஆங்கிலத்தில் இதை ஹாலுசினேஷன் ( hallucinations ) என்பர்.  யாரும் இல்லாமலேயே யாரோ நிற்பதுபோல பேசிக் கொண்டிருப்பார்கள்.  'வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார்கள்.  யாருமே கவனிக்கமாட்டேன் என்கிறீர்களே' என்று சத்தம் போடுவார்கள்.  இன்னும் சிலருக்குத் திருடர்கள் வருவதுபோலக்கூடத் தோன்றும்.
     அதேபோல செவிப்புலன் குறையத் தொடங்கும்போது யாரோ பேசுவதுபோல் தோன்றும். 'மருமகள் என்னைப் பற்றிக் குறை சொல்கிறாள்' என்று புலம்புவார்கள்.  எல்லோரும் என்னை திட்டுகிறார்கள் என்று சொல்வார்கள்.  யதேச்சையாகச் சிரித்தாலும் என்னைப் பற்றித்தான் சிரித்தாள் என்று சந்தேகம் வரும்.  இதைப் பாரானோயா ( Paranoia ) என்பார்கள்.
     மனிதன் எந்த மோசமான விஷயத்தையும் தாங்கிக்கொள்வான்.  ஆனால் நிச்சயமற்ற தன்மையை, மர்மத்தை அவனால் தாங்கிக்கொள்ளவே இயலாது.  ஆகவே புலன்கள் திறன் குறையத்தொடங்கும்போத அவற்றைக் கவனிக்க வேண்டும்.  கண்ணாடியோ, அறுவைசிகிச்சையோ, ஹியரிங் எய்டோ அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.  'வயதானாலே அப்படித்தான்' என்று விட்டுவிடக் கூடாது.
     அதேபோல, காது சரியாக கேட்கவில்லை என்றால் எழுதிக்காட்டுங்கள்.  என்ன நடக்கிறது என்பதை உணரச் செய்யுங்கள்.  வெறும் தொடுதல் மூலம் ஆயிரம் செய்திகளைப் பரிமாறலாம்.
-- மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்.  பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய்,ஏப்ரல் 22, 2014. 

No comments: