Thursday, May 12, 2016

செல்போனில் பாட்டு கேட்கலாம்!

இனி பறந்துகிட்டே செல்போனில் பாட்டு கேட்கலாம்!
     இதுவரை இந்தியாவில் எந்த ஒரு விமானத்தில் பயணித்தாலும் பயணிகள் தங்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்தே பயணிக்க வேண்டும் என்ற நிலை நிலவிவருகிறது.
     இன்றைய நிலையில் செல்போன்கள் தொலை தொடர்பு சாதனமாக மட்டுமின்றி அலுவலக பயன்பாட்டு சாதனமாகவும், மினி கம்ப்யூட்டராகவும், முழுமையான பொழுதுபோக்கு கருவியாகவும் மாறிவிட்டது.  இதனால் சில நிமிடங்கள் கூட செல்போனை இயக்காமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
     இந்த நிலையில் விமானப் பயணத்தின் போதும் செல்போன்களை பயன்படுத்த  ற்போது விமானப் போக்குவரத்துக்கான தலைமை இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.
     எனினும் செல்போனை தொலை தொடர்புக்காக பயன்படுத்த முடியாது.  பிளைட் மோட் எனப்படும் முறையில் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதனால் செல்போன் பேசுவதைத்தவிர இதர அலுவல் பணிகள் மற்றும் பொழுதுபோக்கு பயன்பாடுகளுக்கு செல்போனை இனி விமானங்களில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  அதாவது இனி விமானங்களில் பயணிக்கும்போது உங்கள் செல்போன் அல்லது டேபிளட் அல்லது லேப் - டாப்பில் பிளட் மோட் முறையில் ஆன் செய்து வைத்துக் கொண்டு அலுவல் பணிகளை கவனிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, பாடல்கள் கேட்பது, படம் பார்ப்பது மட்டுமின்றி மின் அஞ்சலும் டைப் செய்யலாம்.  எனினும் விமானம் தரையில் இறங்கிய பின்னர் மட்டுமே இ-மெயிலை அனுப்பமுடியும் என தெரிகிறது.
     இந்த அனுமதி குறிப்பாக எந்த ஒரு பொழுதுபோக்கு வசதியும் இல்லாத விமானங்களில் பயணிப்போருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  இதன் மூலம் விமானப் பயணிகளின் நெடுநாளைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டதுடன், அலுப்பில்லாத விமானப் பயணத்தையும் இந்த அறிவிப்பின் மூலம் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-- தினமலர். 24-4-2014.  

No comments: