Tuesday, May 31, 2016

சில பரிசோதனைகள்

இயற்கையோடு சில பரிசோதனைகள்.
     மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.  பெயர் அலீ மனிக்ஃபான்.
     பல அடிகள் தள்ளி நின்று மரங்களுக்கு நீர் ஊற்றுவது ஏன் என்று கேட்டதற்கு,  மரங்களின் வேர்கள் இயல்பாகவே நீரைத் தேடிப் பயணிக்கக்கூடியவை. சற்றுத் தொலைவில் நீரூற்றும்போது, அதைத் தேடி அந்த வேர்கள் பரவும்.  அதனால் மரம் வலிமையாக நிலைகொள்ளும்.  ஆனால், மரத்தின் அடியிலேயே நீரை ஊற்றி அதன் தற்சார்புத் தன்மையை பலவீனப்படுத்துகிறோம் என்றார் அந்த முடியவர்.
     ஆடு தின்னும் அனைத்து இலை தழைகளையும் மனிதனும் சாப்பிடலாம் என்று கூறும் இவர், சமைப்பதே இல்லை.  இலை தழைகள்தான் இவருடைய அன்றாட உணவு.  நோய் வந்தால் மருந்து உட்கொள்ளுவது இல்லை.  நோன்பு பிடிப்பதன் மூலமாக நோய் தீர்க்கும் உடலின் ஆற்றல் செயல்படத் தொடங்குவதாகக் கூறினார்.  கால் நடைகளுக்கு நோய் வந்தால் அவை உண்ண மறுக்கின்றன.  நோய் சரியான பிறகே மீண்டும் இரை எடுக்கத் தொடங்குகின்றன என விளக்கினார்.
-- சாளை பஷீர்.  உயிர் மூச்சு.
--   'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய், ஏப்ரல் 29,  2014.   

Monday, May 30, 2016

பேரு வச்சது யாரு !

*  ஹிட்டாச்சி  ( Hitachi )
     ஹிட்டாச்சி என்றாலே பெரிய எல் இ டி  தொழில்நுட்பத்தில் பொருட்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்றது.  டிவி, ஸ்கேனர், பிரிட்ஜ், ஏசி மற்றும் கம்ப்யூட்டர் பாகங்கள் என்று இதன் சந்தைப்பொருட்களின் பட்டியல் வெகு நீளம்.  ஜப்பானிய மொழியில் ஹிட்டாச்சி என்றால் சூரிய உதயம் என்று பொருள்.  சூரியன் உதிக்கும் நாடு என்று ஜப்பான் அழைக்கப்படுவதால் இந்நிறுவனத்தின் பெயரும் அதைச் சார்ந்தே வைக்கப்பட்டுள்ளது.  ஜப்பானியர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் குறிக்கும் வகையில் இப்பெயரை சூட்டியுள்ளதாக அந்நிறுவனத்தினர் குறிப்பிடுகின்றனர்.
*  கேனன் ( Canon ).
     கேனன் என்றவுடன் நம் மனக்கண்ணில் கேமரா தான் பிளாஷ் அடிக்கும்.  அந்தளவுக்கு புகழ்பெற்ற, பிரபலமான இந்நிறுவனத்தின் ஆரம்பகால பெயர் 'பிரிசிசன் ஆப்டிகல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் லேபாரட்டரி' என்றே இருந்தது.  புகைப்படக்கருவி தயாரிப்பில் சிறந்த இந்நிறுவனம்தான் ஜப்பான் நாட்டில் முதன்முதலாக 35மிமீ போகல் பிளேன் ஷட்டர் கேமராவை தயாரித்து வெளியிட்டது.  அதன் பெயர் க்வானன் ( Kwannon ).  இதற்கு ஜப்பானிய மொழியில் 'புத்தரின் போதி தத்துவ கருணை' என்று பொருள்.  இப்பெயரும், தயாரிப்பும் பெரும் வரவேற்பைப் பெறவே சிறிது காலத்திற்குப் பின் நிறுவனத்தின் பெயரே கேனன் ( Canon ) என்று மாற்றப்பட்டது.
-- வினோதா.     சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 27-4-2014.     

Sunday, May 29, 2016

சூரிய நமஸ்காரம் !

   இயற்கையில் கிடைக்கும் பற்றாக்குறையே இல்லாத கிருமிநாசினி, சூரிய ஒளிக்கதிர்கள்.  இதில், 'அல்ட்ரா வயலெட்'  எனப்படும் புற ஊதாக் கதிர்கள் உள்ளன.  மனிதன், கால்நடைகள், தாவரங்கள் மீது கிருமிநாசினியாகச் செயல்பட்டு, தீங்கு செய்யும் நுண்ணுயிர்களை அழிக்கின்றன.  அதனால்தான் நமது முன்னோர்கள் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள்.  பின்னால் வந்தவர்களில் பலர், இதை ஏதோ பக்தி விஷயம் என்று மட்டுமே நினைத்து ஒதுக்கிவிட்டார்கள்.  யோகா பயிற்சிகள் மூலம் இப்போது, சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது.  அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது, மொட்டை மாடியில் கதிரவன் திசையில் கைகூப்பி நிற்கலாமே.  சும்மா கிடைக்கும் கிருமிநாசினியை எதுக்கு விடணும்!
-- மு.புவனரட்சாம்பிகை, போடிநாயக்கனூர்.
-- சுட்டி ஸ்டார் நியூஸ் .
--  சுட்டி விகடன்.  28-02-2014.
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால். 

Saturday, May 28, 2016

புதிரோடு விளையாடு!

*1.அடடா... என்ன சிறப்பு!
     ரஞ்சனின் அப்பா, வேடிக்கையான புதிர்கள் போடுவதில் வல்லவர்.  அவர் இரு மலையாளி.  ரஞ்சனின் அம்மா தமிழர்.  ஒருநாள் சாப்பாட்டு நேரத்தில், ரஞ்சனிடம் குறும்பாக ஒரு புதிர் போட்டார்.  "இந்த  SIR-க்கு இல்லாத சிறப்பை உன் அம்மாவான  MADAM பெறுகிறார்.  அம்மாவின் தமிழுக்கு இல்லாத சிறப்பை என் MALAYALAM பெறுகிறது.  எந்த வகையில்?" என்று கேட்டார்.
    ரஞ்சன் யோசித்தான்.  நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
*2. வயதைக் கண்டுபிடி!
      வாக்காளர் பெயரைச் சரிபார்க்க வந்த அலுவலர், "உங்கள் வீட்டில் எத்தனை பேர்?  வயது என்ன? என்று கேட்டார்.  "நானும் என் அப்பாவும்.  என் பெயர் சீதா.  என் அப்பா பெயர் கோவிந்தன்.  எங்கள் வயதைப் புதிராகச் சொல்கிறேன்.  இரண்டு இலக்க எண்தான் என் வயது.  இரண்டும் ஒரே எண்.  இரண்டும் கூடினால், 'நதி.'  என் முதல் எண்ணை, இரண்டாலும் அடுத்த எண்ணை, மூன்றாலும் பெருக்கி, அதைச் சேர்த்து எழுதினால், அப்பாவின் வயது" என்றார்.  அலுவலர் வயதைக் கண்டுபிடித்துவிட்டார்.  நீங்கள்?
* 3.என்ன உடை ?
     அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா, மறுநாள் நடக்க இருந்தது.  அன்று, யார் யார் எந்த விதமான உடையில் வரப்போகிறார்கள் என்பது பற்றிப் பேச்சு வந்தது.
     ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு உடை பற்றிச் சொல்ல, ஷங்கர் அமைதியாக இருந்தான். "உன் டிரெஸ் பற்றி எதுவும் சொல்லவில்லையே" என்று கேட்டார்கள். "க்ளூ கொடுக்கிறேன்.  கண்டுபிடியுங்கள்.  முதல் மூன்று எழுத்துகள் சுமையைக் குறிக்கும்.  அடுத்த இரண்டு எழுத்துகள் குதியையைக் குறிக்கும்" என்றான்.
      அது என்ன உடை?
விடைகள் :
     1. MADAM,  MALAYALAM.  ஆங்கிலத்தில் இடமிருந்து வலமாகவும்,  வலமிருந்து இடமாகவும் படிக்கல்லாம்.
     2. இரண்டு இலக்க எண்.  இரண்டும் ஒரே எண்.  இரண்டும் கூடினால்  நதி  = 3+3 = 6. ( ஆறு ).  3X2  = 6,  3X3 = 9.  சேர்த்து
         எழுதும்போது  69.
     3. ஷங்கர் சொன்ன பதில் :  'பாரம்பரிய' உடை.
-- அருணா எஸ்.சண்முகம்.
-- சுட்டி விகடன்.  28-02-2014.
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.    

Friday, May 27, 2016

பாம்பன் பாலம்

  "பாம்பன் பாலம் இயற்கையின் மேல் கட்டப்பட்ட பொறியியல் அதிசயம்.  பாம்பன் தீவில் இருக்கும் ராமேஸ்வரம் நகரத்தை, இந்தியாவுடன் இணைக்கும் இந்தப் பாலத்தின் நீளம், 2.3 கிலோமீஈட்டர்.  இந்து மகா சமுத்திரத்தில் உள்ள பாக் ஜலசந்தியின் மேல் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தில், சாலைப் போக்குவரத்து வழியும் ரயில்வே பாதையும் அமைந்துள்ளன.  1914-ல் திறக்கப்பட்ட , இந்தியாவில் முதன்முதலில் கடல் மேல் கட்டப்பட்ட பாலம், 2010 வரை, நம் நாட்டில் கடல் மீது அமைந்துள்ள பாலங்களில் மிக நீளமான பாலமாக விளங்கியது.  இப்போது 2-வது இடம். ( முதல் இடம், மும்பை, பாந்த்ரா - வொர்லி பாலம்).  மிகப் பெரிய கப்பல்கள் இந்த பாக் நீரிணைப்பைக் கடக்கும்போது, இந்தப் பாலத்தின் நடுவே இருக்கும் லீவர்கள் திறந்து வழிவிடும்.  100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, இந்தியர்களால் கட்டப்பட்ட பாம்பன் பலம், நம் நாட்டுப் பொறியியல் வல்லுனர்களின் பணித் திறமைக்கு சிறந்த உதாரணம்.
-- ஹாசிப்கான்.  மை டியர் ஜீபா!
--  சுட்டி விகடன்.  28-02-2014.
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.  

Thursday, May 26, 2016

ஆங்கிலம் அறிவோமே -- 3.

Credulous ,  Credible ,  Creditable .
     Credulous என்ற வார்த்தை 'ஆனாலும் அப்பாவித்தனமாக'  அல்லது 'எளிதில் எதையும் நம்பக்கூடிய' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தக் கூடியது.  "காக்காவின் நிறம் வெள்ளை" என்றோ! "சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்களே கிடையாது" என்றோ சொன்னால்கூட நம்பிவிடுங்கள்.  ( "நீங்கள் ரொம்ப Credulous' என்று ஒருவரிடம் கூறுகிறீர்கள்.  அவர் அதை ஒப்புக்கொண்டால் அவர் Credulous-ஆ இல்லையா என்பது யோசிக்க வேடிக்கையாக இருக்கிறது இல்லையா?).  Credulous என்ற வார்த்தையைக் கொஞ்சம் இழிவுபடுத்தும் விதத்தில்தான் பயன்படுத்துகிறார்கள்.  "He is Credulous" என்றால் அதில் லேசான எரிச்சலும் கலந்திருக்கும்.  'இப்படியுமா ஒரு தத்தி இருப்பான்!' என்பது போல Credulous என்ற வார்த்தைக்குப் பதிலாக  Credible என்ற வார்த்தையையும் பயன்படுத்தலாம்.
      Credible என்றால் நம்பத்தகுந்த அல்லது நம்பிக்கைக்குரிய என்று அர்த்தம்.  ஒருவர் உண்மையைத்தான் சொல்வார்.  நேர்மையாகத்தான் இருப்பார் என்றால் He is a  Credible person எனக் கூறலாம்.   Credible எறால் பாராட்டத்தக்க அல்லது அங்கீகாரம் அளிக்கத்தக்க என்று அர்த்தம்.  Her efforts are  Credible என்றால் அவரது முயற்சி பாராட்டத்தக்கது எனப் பொருள்.   Credible என்ற வார்த்தைக்குச் சமமாக Menitorious அல்லது Commendable என்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம்.  ஒவ்வொரு விதத்தில் யோசிக்கும்போது மூன்றுமே சரி என்று தோன்றுகிறது இல்லையா?
Carrier  --  Career.
     Carrier  என்றால் டிஃபன் கேரியர் என்கிறோமே, அது போல, அதாவது சுமந்து செல்வது.  சிலசமயம் கொசு, பன்றி போன்றவற்றை Carriers என்பதுண்டு.  அதாவது அவை நோய்களை Carry செய்கின்றன என்ற அர்த்தத்தில் அப்படிச் சொல்கிறோம்.  அப்படியானால் அந்த ஊழியர் தனது பணியில் மேலும் மேலும் முன்னேற விரும்புவதைக் குறிப்பிட என்ன வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிறீர்கள்?  அதன் எழுத்துகள் " Career." என்பதாகும்.   Career.என்றால் தொழில் அல்லது நம் வேலையின் நீண்டகால நிலை என்று அர்த்தம்.  "என்  Career சிறப்பா இருக்கணும்" என்று சொல்வது அதனால்தான்.
-- ஜி.எஸ். சுப்ரமணியன். -- aruncharanya@gmail.com.
--    வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 28,  2014.    

Wednesday, May 25, 2016

பேரு வச்சது யாரு !

*  அகாய் (Akai )
    எலக்ட்ரானிக் பொருள் தயாரிப்பின் முன்னோடி நிறுவனங்களில் அகாயும் ஒன்று.  அகாய் என்றால் ஜப்பானிய மொழியில் சிவப்பு வண்ணத்தை குறிக்கும்.  சூரிய உதயத்தின் போது ஏற்படும் சிவப்பு வண்ணமானது இந்நாட்டின் அனைத்து இடத்திலும் இடம்பெறுகிறது.  ஜப்பானிய தேசியக்கொடியின் மையப்பகுதியிலும் சிவப்பு நிற வட்டம் இடம்பெற்றுள்ளது.  அதைப்பின்பற்றியே இப்பெயரினை வைத்துள்ளனர்.
*  சோனி ( Sony )
    எலக்ட்ரானிக் பொருள் என்றாலே பலரும் பரிந்துரைக்கும் பெயர் சோனிதான்.  இந்நிறுவனம் தயாரிக்காத எலக்ட்ரானிக் சாதனமே இல்லை என்று சொல்லலாம்.  இதனை உருவாக்கியவர் ஜப்பானைச் சேர்ந்த அக்யோ மொரிட்டா என்பவர்.  இவர் 1946ம் ஆண்டு மே 7ம் தேதி தனது கடற்படை நண்பர் இபுக்கா என்பவரின் உதவியுடன் டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.  இது டேப் ரெக்கார்டர் தயாரிப்பில் சிறந்து விளங்கியது.  ஆனால், இந்த  டேப் ரெக்கார்டர் அளவில் பெரியதாக இருந்ததால், அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் கையடக்க  டேப் ரெக்கார்டரை உருவாக்கினார்.  அதன்பின், தனது நிறுவன பெயர் உலக மக்கள் அனைவரும் உச்சரிக்க சுலபமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, இலத்தீன் மொழியில் ஒல் என்று பொருள்படும் சோனஸ் என்ற வார்த்தையையும்,அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த சானி பாய்ஸ் என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து தன் நிறுவன பெயரை 1958ல் சோனிகார்ப்பரேஷன் என்று மாற்றினார்.
-- வினோதா.     சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 27-4-2014.   

Tuesday, May 24, 2016

பென்சிலைச் சீவும் லைட்டர்!

  பென்சிலைச் சீவ மிகச் சுலபமான கருவி அமெரிக்கச் சந்தைக்கு வந்துவிட்டது.  லைட்டர் ஷார்ப்னர் என அழைக்கப்படும் இந்த பென்சில் சீவும் கருவி, பிக் லைட்டர் உதவியால் இயங்குகிறது.  வழக்கமாக ஷார்ப்பனரில் பென்சிலை நுழைத்துத் திருகுவது போல் திருகினாலே போதுமாம்.  தீயே இல்லாமல் பென்சிலின் மரப்பாகம் தனியே இறகுகளாக கழன்று லைட்டருகுள் விழுந்துவிடுமாம்.  வெளியே எடுத்தால் கூர் நுனி கொண்ட எழுத்துபாகத்துடன் கூடிய பென்சில் நம்மைப் பார்த்துக் காண்சிமிட்டுமாம்.  புதிய புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டுவோரைப் பரவசப்படுத்தும் இந்த ஷார்ப்பனர்.
-- ரோஹின்.
-- இளமை புதுமை.    வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 28,  2014.  

Monday, May 23, 2016

ராட்ஷச விமானம்


     உலகின் மிகப்பெரிய போக்குவரத்து விமானம் என்ற பெருமை இந்த நிமிடம் வரை ஏ380க்கு உரியதாக இருக்கிறது.  ஏர்பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இது நான்கு ஜெட்  இன்சிங்களைக் கொண்டது.  இரட்டை முழு அடுக்கு கொண்ட இதில் ஒரே நேரத்தில் 550 முதல் அதிகபட்சமக 850 பயணிகள் வரை பறக்க முடியும்.
     இதற்கு அடுத்த அளவு விமானத்தைவிட இது 40 சதவீதம் அளவு இடவசதியிலும், வெளித்தோற்றத்திலும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நம்பர் ஒன் விமானத்தை மிஞ்சும் வகையில் அடுத்த தலைமுறை விமானம் மிகப் பிரமாண்டமானதாக தயாரிக்கப்பட இருக்கிறது.  இது திமிங்கிலம் வடிவில் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
     பெயர் சூட்டப்படாத இந்த புதிய விமானத்தில் லாங் டேக்ஆப்புக்கு பதிலாக வெர்டிகல் டேக் ஆப் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் இன்ஜின்கள் பேட்டரி டர்பைன் மூலம் இயங்கும்.  சிறிதும் உதறல் இல்லாத மென்மையான பயணம் கிடைக்கும் என்கின்றனர் இதை வடிவமைத்த விஞ்ஞானிகள்.  உலகின் அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாக அமையும் இந்த புதிய ரக விமானத்தில் ஆயிரத்து 600 பேர் வரை ஒரே நேரத்தில் பயணம் செய்யமுடியுமாம்.
--  சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 27-4-2014.                                                            

Sunday, May 22, 2016

சட்டைப்பையில் சார்ஜர்.

   ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்ளட் போன்ற சாதனங்களை உபயோகப்படுத்துவதில் பலவிதமான வசதிகள், சவுகரியங்கள் இருந்தாலும் அவற்றிற்கு அவ்வப்போது மின்சாரத் தீனி போடும் வேலை எப்போதும் அயர்ச்சியூட்டுவதுதான்.  எங்கு சென்றாலும் கிலோகணக்கில் எடையுள்ள சார்ஜர்களை சுமந்து கொண்டு, எங்கே பிளக் பாயின்ட் கிடைக்கும் என்று தேடி அலைவதன் கஷ்டம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.  ஆனால், அந்தத் தொல்லை இனி இல்லை.  பின்சிக்ஸ் நிறுவனம் 'டார்ட்' என்ற பெயரில் புதிய அதிவேக சார்ஜரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
     இது வழக்கமான லேப்டாப் சார்ஜரைவிட நான்கு மடங்கு சிறியது மற்றும் ஆறு மடங்கு எடை குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.  இன்ன பிரான்ட் என்று குறிப்பிட்டு இல்லாமல் அனைத்து வகை லேப்டாப்களையும், மற்றும் செல்போன்களையும் இந்த சார்ஜரின் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
     'விஹெச்எப்'  எனப்படும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதால் இந்த சார்ஜரிலிருந்து 65 வாட்ஸ் வரை சக்தி கிடைக்கிறது.  ஆயிரம் மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏற்றும் என்பதோடு இதனால் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியின் ஆயுளும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் இதன் தயாரிப்புக் குழுவினர்.
     இது ஒரு புறம் இருக்க, இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டார் டாட் நிறுவனம் வெறும் முப்பது நொடியில் ஒரு செல்போனை சார்ஜ்  செய்யும் வகையில் பேட்டரியையும், அதற்கான சூப்பர் சார்ஜரையும் உருவாக்கியுள்ளது.
     நானோடாட்கள், பயோ மற்றும் ஆர்கானிக் மூலக்கூறுகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேட்டரி ஆயிரம் மடங்கு வேகத்தில் அதாவது, 30 வினாடிகளுக்குள் முழுதாக சார்ஜ் ஆகுமாம்.
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 27-4-2014.   

Saturday, May 21, 2016

இணைய வெளியிடையே...

*  அழைப்பு வந்தால் எல்லோரையும் ஓரிடத்தில் கூட வைத்தது தொலைபேசி;
   அழைப்பு வந்தால் தனித்தனியே ஓட வைக்கிறது  அலைபேசி,!
   jagan@twitter.com
*  பாஜ தேர்தல் அறிக்கையில் ஊழல் ஒழிப்பு பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை - ராகுல்.
   அதான், காங்கிரசை ஒழிப்போம்னு சொல்லிருக்காங்களே பாஸ்.
   subash @ twitter. com
*  இந்த நாட்டில் தொழிலாளி உயர்வது நான்கு பேர் சேர்ந்து தூக்கும்போதுதான்.
   manimp @ twitter.com
*  புதுவையை சிங்கப்பூராக மாற்றுவேன் - நாராயணசாமி.
   ஆமா, ஏர்போர்டையே ஏர்வாடியா மாத்தினவருக்கு இதெல்லாம் சாதாரணம்.
   kaniyan @ twitter.com
*  அநாவசிய பொருட்கள் அத்தியாவசியம் ஆகிவிடுகிறது,
    பெண்களுக்கு பக்கத்து வீட்டில் அதை பார்க்கும்போது.
   indirajith @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 27-4-2014. 

Friday, May 20, 2016

சூப்பர் 6.

*  மிக்கி மவுஸ் கைகளில் கட்டைவிரல் சேர்த்து, மொத்தம் நான்கு விரல்களே இருக்கும்.
*  நம் நாட்டில், 'பாரத மாதா'வுக்கு உருவம் சித்தரித்திருப்பது போல, ஸ்வீடனிலும் 'Mother Svea' எனும் பெண் உருவம்
   சித்தரிக்கப்பட்டுள்ளது.
*  ஆழ்கடலில் ஏற்படும் சுனாமி அலைகள், மணிக்கு சுமார் 800 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
*  உலகிலேயே அதிக விமான நிலையங்கள் இருக்கும் நாடு, அமெரிக்கா ( 15,079 ).  இரண்டாம் இடத்தில் ...பிரேசில் ( 4,072 ).
*  இங்கிலாந்தின் பர்மிங்காம் ரோலர் எனும் புறாக்கள், அந்தரத்தில் குட்டிக்கரணங்கள் அடிக்கும்.
*  பார்ப்பதற்கு எலி போல இருக்கும் பீவர் ( Beaver ), தண்ணீருக்குள் 15 நிமிடங்கள் வரி சுவாசிக்காமல் இருக்கும்.
-- சுட்டி விகடன்.  28-02-2014.
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால். 

Thursday, May 19, 2016

உற்சாகம், புத்துணர்ச்சி

  பள்ளி மாணவர்கள் வகுப்புகளில் சோர்வடைவதைத் தடுத்து, உற்சாகமும், புத்துணர்ச்சியும் பெற, சீனக் கல்வியாளர்கள் ஒரு திட்டம் மேற்கொண்டனர்.  எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில், தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்தனர்.  இதன்படி, உள்ளா  இடைவேளைக்குப் பிறகு, சுமார் 20 நிமிடங்கள் அந்த மாணவர்கள் உறங்க வைக்கப்பட்டனர்.  இது கைமேல் பலன் தந்தது.  இப்போட்து, மேல் வகுப்புகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த, சீனக் கல்வித் துறை பரிசீலித்துவருகிறது.  --  இனி, வகுப்பில் 'ஒழுங்கா தூங்கச் சொல்றப்ப, யாருடா பாடம் படிச்சுகிட்டு இருக்கிறது?' என்ற டயலாக் கேட்குமோ!
-- பெண்டிரைவ்.
-- சுட்டி விகடன்.  28-02-2014.
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.    

Wednesday, May 18, 2016

வினா விடை.

*  " 'NOTA'  விரிவாக்கம் என்ன?"
     -- None Of The Above.
*    "மோடி, எத்தனையாவது வயதில் யசோதா பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்?"
    -- 17 வயதில்.
*    " 'சட்டசபையில் என்னோடு நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா?' என்று கருணாநிதிக்கு,  ஜெயலலிதா சவால் விடுத்தது எந்த
        விவகாரம் குறித்து?"
    -- காவிரிப் பிரச்னை.
*     "இந்திய நாடாளூமன்றத் தேர்தல் தொடர்பாக, கூகுளில் அதிகம் தேடப்பட்ட சினிமா நடிகர் யார்?"
    --ஜனசேனா கட்சித் தலைவர், நடிகர் பவன் கல்யாண்.
*    "இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வும் அ.தி.மு.க -வும் எத்தனை தொகுதியில் நேரடியாக மோதுகின்றன?"
     --35 தொகுதிகளில்.
-- நா.சிபிச்சக்கரவர்த்தி.
--  ஆனந்த விகடன்.  30-4-2014.  

Tuesday, May 17, 2016

பயமுறுத்திய செய்தி

"சமீபத்தில் உங்களைப் பயமுறுத்திய செய்தி எது?"
     "டிஸ்கவரி தமிழ் சேனலில், பிளாஸ்டிக் பாட்டிலைச் சாப்பிட்டதால் இறந்துபோன முதலையைப் பற்றி காட்டினார்கள்.  முதலையால் நம்மைப் போல் கீழ் தாடையை அசைக்க முடியாது.  வரிக்குதிரையையோ, மானையையோ கொன்று பெரிய பெரிய துண்டுகளாகக் கடித்து, நான்கு முறை மென்று அப்படியே விழுங்கிவிடும்.  உறுதியான எலும்புகளையும் கடுமையான கறித் துண்டுகளையும் எளிதாக ஜீரணிக்கும் முதலையால், சின்ன பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை ஜீரணிக்க முடியவில்லை.
     உலகெங்கும் கொட்டப்படும் லட்சக்கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவு, மண் வளம், வனவிலங்குகளை மட்டுமல்ல... மனிதனையும் விரைவில் 'தின்று செரிக்கும்'!"
-- எஸ்.மோகன் குமார், சேலம்.
-- ஆனந்த விகடன்.  30-4-2014.  

Monday, May 16, 2016

கலிலியோவின் விரல்!

  'புகழ்பெற்றவர்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் சாதனைகள் நிலைத்து நிற்கும்' என்று சொல்வார்கள்.  இந்த அறிவியல் யுகத்தில், உடல் பாகங்களையும் பாதுகாத்துவைக்க முடியும் என்பதற்கு உதாரணம் இது.
     கலிலியோ இறந்து 100 ஆண்டுகளுக்குப் பின் 1737-ல், அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் கல்லறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, 'சாண்டோகுரோஸ்' என்ற தேவாலயத்தின் நினைவு மண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  அப்போது, கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்துப் பத்திரப்படுத்தினார்கள்.  அந்த விரல், பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகர அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.  இப்போதும் அதைப் பார்வையாளர்கள் பார்க்கலாம்.
-- வெ.லெட்சுமணன், நான்குனேரி.
--   சுட்டி விகடன். 15-01-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.  

Sunday, May 15, 2016

சூப்பர் 6.

*  ஆசியா, ஐரோப்பாஆகிய இரண்டு கண்டங்களிலும் அமைந்திருக்கும் ஒரே நகரம், துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்.
*  காண்டாமிருகத்தின் கொம்பு அடர்த்தியான முடிகளால் ஆனது.
*  அமெரிக்காவில் உள்ள 'ஜார்ஜ் வாஷிங்டன் பாலம்' மீது தினமும் சராசரியாக 2 லட்சம் கார்கள் செல்கின்றன.
*  அமெரிக்காவின் முதல் விமானப் படை , ஐந்து ஹாட் ஏர் பலூன்கள் ( Hot - air balloons) மற்றும் 50 வீரர்களோடு
   தொடங்கப்பட்டது.
* பாம்புகளுக்குக் கண்  இமைகள் இல்லாததால், அதனால் கண் சிமிட்டவும் மூடவும் முடியாது.
*  ஒரு மனிதன், தன் வாழ்நாளில் சுமார் 30 டன் உணவை உட்கொள்கிறான்.  இது ஆறு யானைகளுக்குச் சமம்.
--  சுட்டி விகடன். 15-01-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.  

Saturday, May 14, 2016

'டயட்' ( Diet )

   "aagilaththil 'டயட்' ( Diet ) என்ற சொல்லுக்கு, 'உணவு' என்றுதான் அர்த்தம்.  உணவுக் கட்டுப்பாட்டை 'டயட் கன்ட்ரோல்' என்றுதான் சொல்லவேண்டும்.  உதாரணமாக, நீரிழிவு இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவை, 'டயபெடிக் டயட்' என்பார்கள்.  சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உணவு, 'ரீனல் டயட்' ( Renal diet ).  எனவே, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதை 'டயட்டிங்' என்று சொல்வதே சரி.  பேச்சு வழக்கில் 'டயட்' என்று மாறிவிட்டது."
'ஹீலியம் வாயு'
     ''ஹீலியம் வாயு, மிக மிக லேசானது.  காற்றைவிட எடை குறைந்தது.  ஒரு லிட்டர் காற்றின் எடை 1.25 கிராம் எனக் கொண்டால், ஹீலியத்தின் எடை 0.18 கிராம் மட்டுமே.   தண்ணீருக்குள் பந்தை அமிழ்த்தினாலும் அது வேகமாக வெளியேறி மிதக்கும்.  காரணம், தண்ணீரைவிடக் குறைந்த எடைகொண்டது காற்று.  பந்தின் எடையை அதிகப்படுத்தினாலும், அது அந்த இடத்தில் உள்ள தண்ணீரின் எடைக்குக் குறைவாகவே இருக்கும்.  அதேபோல, பலூனில் எவ்வளவு ஹீலியத்தை நிரப்பினாலும்
அது காற்றின் எடையைவிடக் குறைவாகவே இருப்பதால், மேலே எழும்பிப் பறக்கிறது."
-- மைடியர் ஜீபா!  ஹாசிப்கான்.
--  சுட்டி விகடன். 15-01-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால். 

Friday, May 13, 2016

மெரினா கலங்கரை விளக்கம்!


     சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம், 1977-ல் கட்டப்பட்டது.  பாதுகாப்புக் காரணங்களால் 1994-ல் பார்வையாளர்கள் மேலே சென்று பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.  20 வருடங்கள் கழித்து, நவம்பர் 2013 முதல் மீண்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
     சென்னையில் இது நான்காவதாகக் கட்டப்பட்ட லைட் ஹவுஸ், 1796-ல், ஜார்ஜ் கோட்டையில் முதல்  கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.  அடுத்து, 1844-ல் பூக்கடை பகுதியில் 161 அடி உயரத்தில் கட்டினாங்க.  1894-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் 175 அடிகள் உயரத்தில் விளக்கு அமைச்சாங்க.  அதன்பிறகு, 1977-ல் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.  மொத்தம் 10 தளங்கள்.  242 படிக்கட்டுக்கள்.
     இந்தியாவில் லிப்ட் வெச்சுக் கட்டப்பட்ட முதல்  கலங்கரை விளக்கம் இதுதான்.
-- வி.எஸ்.சரவணன், ஜெ.பி.ரிவி, கு.அபிநயா.
-- சுட்டி விகடன். 15-01-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.                      

Thursday, May 12, 2016

செல்போனில் பாட்டு கேட்கலாம்!

இனி பறந்துகிட்டே செல்போனில் பாட்டு கேட்கலாம்!
     இதுவரை இந்தியாவில் எந்த ஒரு விமானத்தில் பயணித்தாலும் பயணிகள் தங்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்தே பயணிக்க வேண்டும் என்ற நிலை நிலவிவருகிறது.
     இன்றைய நிலையில் செல்போன்கள் தொலை தொடர்பு சாதனமாக மட்டுமின்றி அலுவலக பயன்பாட்டு சாதனமாகவும், மினி கம்ப்யூட்டராகவும், முழுமையான பொழுதுபோக்கு கருவியாகவும் மாறிவிட்டது.  இதனால் சில நிமிடங்கள் கூட செல்போனை இயக்காமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
     இந்த நிலையில் விமானப் பயணத்தின் போதும் செல்போன்களை பயன்படுத்த  ற்போது விமானப் போக்குவரத்துக்கான தலைமை இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.
     எனினும் செல்போனை தொலை தொடர்புக்காக பயன்படுத்த முடியாது.  பிளைட் மோட் எனப்படும் முறையில் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதனால் செல்போன் பேசுவதைத்தவிர இதர அலுவல் பணிகள் மற்றும் பொழுதுபோக்கு பயன்பாடுகளுக்கு செல்போனை இனி விமானங்களில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  அதாவது இனி விமானங்களில் பயணிக்கும்போது உங்கள் செல்போன் அல்லது டேபிளட் அல்லது லேப் - டாப்பில் பிளட் மோட் முறையில் ஆன் செய்து வைத்துக் கொண்டு அலுவல் பணிகளை கவனிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, பாடல்கள் கேட்பது, படம் பார்ப்பது மட்டுமின்றி மின் அஞ்சலும் டைப் செய்யலாம்.  எனினும் விமானம் தரையில் இறங்கிய பின்னர் மட்டுமே இ-மெயிலை அனுப்பமுடியும் என தெரிகிறது.
     இந்த அனுமதி குறிப்பாக எந்த ஒரு பொழுதுபோக்கு வசதியும் இல்லாத விமானங்களில் பயணிப்போருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  இதன் மூலம் விமானப் பயணிகளின் நெடுநாளைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டதுடன், அலுப்பில்லாத விமானப் பயணத்தையும் இந்த அறிவிப்பின் மூலம் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-- தினமலர். 24-4-2014.  

Wednesday, May 11, 2016

இமயமலை

இமயமலையில் வெந்நீர் ஊற்றுகள்.
     யமுனோத்ரிக்குப் பயணம் செய்பவர்கள் ஜானகிசட்டி என்ற இடத்திலிருந்துதான் மலைமேல் ஏற வேண்டும்.  அங்குள்ள நீர் ஊற்று ஒரு பெரிய தொட்டி போன்ற இடத்தில் விழுகிறது.  அந்தக் குளிகாலத்திலும் அங்குள்ள நீர் ஊற்றில்  வெந்நீர் வருகிறது.  தொட்டி முழுவதும் நிரம்பி வழியும்.  அந்த  வெந்நீர் ஊற்றில் மிதமான சூட்டில் எல்லாரும் குளித்து உடைமாற்றி இமயமலை மேல் யமுனா உற்பத்தியாகும் தலமான யமுனோத்ரியைக் காணச் செல்கின்றனர்.  யமுனாதேவி கோயிலில் அம்மன் தரிசனம் காணலாம்.  யமுனோத்ரி மலைப்பாதை குறுகலனது.  அந்தப் பகுதிக்கு கால்நடையாக ஏறிச்சென்றால் அங்கேயும் கௌரிகுண்ட் என்னும் இடத்தில்  வெந்நீர் ஊற்று உள்ளது.
     பத்ரிநாத் கோவில் அருகிலொரு  வெந்நீர் ஊற்று உள்ளது.  அது மிகச் சூடான ஆவி பறக்கும் நீர் ஊற்று.  அதில் நேரடியாக இறங்கிக் குளிக்க முடியாது.  யமுனோத்ரி , கங்கோத்ரி, பத்ரிநாத் ஆலய தரிசனம் செய்பவர்கள் இந்த  வெந்நீர் ஊற்றுகளில் நீராடிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
-- சண்முக சுப்ரமணியன்.   -ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன், ஏப்ரல் 24,  2014.  

Tuesday, May 10, 2016

ஆன்மிகம்

*  மாண்டூக்ய உபநிடதம் - என்பது பன்னிரு உபநிடதங்களில் ஒன்று.
*  விராட நகரில் - பண்டவர்கள் தலைமறைவாக ( அக்ஞாத வாசம் ) இருந்தர்கள்.
*  சகுந்தலையின் - கதையை சாகுந்தலம் என்ற காவியமாகப் படைத்தவர் காளிதாசன்.
*  கீதா ரஹஸ்யம் - என்பது பகவத் கீதைக்கு பாலகங்காதர திலகர் எழுதிய உரை நூலின் பெயர்.
*  கடவுளுக்கு - உருவமில்லை, அவர் அருவமானவர் என்பது சுவாமி தயானந்தரின் கருத்து.
*  பக்தி மரபைச் - சேர்ந்த சைதன்ய மகாபிரபு எழுதியவற்றில் இப்போது கிடைப்பது சிக்ஷாஷ்டகா என்னும் நூல் மட்டும்தான்.
*  பகவத் கீதையில் - இறைவனின் மகிமைகளைக் கூறும் பகுதி விபூதி யோகம்.
*  மூதுரை, நல்வழி - போன்ற பாடல்களை வடமொழியில் சுபாஷிதம் என்னும் தலைப்பில் எழுதியவர் பர்த்ருஹரி.
*  அவ்வையார் - எழுதிய நூலின் பெயர் நல்வழி.
*  உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே - என்பது திருமூலர் பாடல் வரி.
--ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன், ஏப்ரல் 24,  2014.  

Monday, May 9, 2016

கஞ்சா பயிரிடலாம்.

கஞ்சா பயிரிடலாம். விற்கலாம், புகைக்கலாம்.
உலகில் முதல்முறையாக,தென் அமெரிக்காவில் உருகுவே அரசு சட்டபூர்வ அனுமதி.
     உருகுவே நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் அரசு மருந்தகங்களில் மாதத்துக்கு 40 கிராம் கஞ்சாவை வாங்கிக்கொள்ளலாம்.  ஒவ்வொரு குடிமகனும் தனது வீட்டில் 6 கஞ்சா செடிகளை வளர்க்கலாம்.  15 முதல் 45 பேர் இணைந்து தனிச் சங்கம் தொடங்கி ஆண்டுக்கு 90 கஞ்சா செடிகள்வரை வளர்க்கலாம் என்று புதியசட்டம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
    சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சிகள், கஞ்சா பயன்பாட்டால் நாட்டு மக்களின்  ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டியுள்ளது.
     மறுபுறம், சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் மாண்டிவிடியோவில் பெருந்திரளான மக்கள் நாடாளுமன்றம் முன்பு குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ். வெள்ளி, டிசம்பர் 13, 2013. 

Sunday, May 8, 2016

இருப்பதைக் கொடு!

  துறவி ஒருவர் தன் சீடர்களோடு புதிதாக ஒரு நகருக்கு வந்தார்.
     அங்கிருந்தவர்களுள் ஒரு சிலரைத் தவிர மற்றப் பலரும் அவரைக் கேலி செய்தனர்.
     ஆனால், துறவி எல்லோரையும் சமமாகவே,  "இறையருள் கிட்டட்டும்'' என வாழ்த்தினார்.
     சீடர்கள், "ஏளனம் செய்தவரையும் வாழ்த்துவது ஏன்?"  எனக் கேட்டனர்.
    "ஒவ்வொருவரும் அவரவரிடம் இருப்பதைத்தானே அடுத்தவர்க்குக் கொடுக்க முடியும்!" அமைதியாகச் சொன்னார் துறவி.
63வர் தெரு!
     பாளையங்கோட்டையில் 63 நாயன்மார்கள் பெயரிலும், பன்னிரு ஆழ்வார்கள் பெயரிலும் தெருக்கள் இருக்கின்றன.  இவை தவிர திருப்பாவை, திருவெம்பாவை, கம்பராமாயணம், திருக்குறள் பெயர்களிலும் தெருக்கள் உள்ளன.
இழக்கும் குணம்!
    "கோபப்படும் குணம் அவ்வளவு கொடியதா சுவாமி?"  சீடன் ஒருவன் குருவிடம் கேட்டான்.
    "ஆம்.  தற்பெருமைப்படுபவன், கடவுளை இழக்கிறான்.  பேராசைக்காரன் நிம்மதி இழக்கிறான்.  பொறாமைப்படுபவன் நண்பனை இழக்கிறான்.  ஆனால், கோபப்படுபவனோ தன்னையே இழக்கிறான்...!" சொன்னார் குரு.
--  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஜனவரி 1-15,  2014.  

Saturday, May 7, 2016

மலர் மேல் மாருதி!


     வட அமெரிக்காவில், கலிபோர்னியாவில் லிவர்மோர் நகரில் சிவா - விஷ்ணு ஆலயத்தில் 14 அடி உயரமுள்ள அனுமன் தாமரை மலர்மீது கூப்பிய திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருவது எந்த அனுமன் கோயிலிலும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
முக்கோல அனுமன்!
     புராண காலத்திலும், வேதகாலத்திலும் மிகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்ந்தது பங்கி எனப்படும் தலம்.  இது இன்றைக்கு கான்பூரிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  இங்குள்ள மிகப் புகழ்பெற்ற அனுமன் கோயிலில் காலையில் சூரிய ஒளியில் பார்க்கும்போது அனுமன் குழந்தையாகவும், மதிய நேரத்தில் இளம் வயதினராகவும், மாலை தரிசனத்தின்போது மகாபுருஷராக பெரியவராகவும் காட்சி தருகிறார்.  இது பக்தர்களுக்குத் தானாக ஏற்படும் பிரம்மையா, அல்லது அனுமனே நிகழ்த்தும் அற்புதமா என்பது யாரும் அறியா ரகசியமாக உள்ளது.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஜனவரி 1-15,  2014.                                     

Friday, May 6, 2016

மழையே வந்திடு !

 ( குழந்தைப் பாடல் ).
மழையே மழையே வந்திடு
     மண்ணில் வந்து விழுந்திடு !
உழவே செழிக்க வந்திடு
     உயிரைக் காக்க வந்திடு !

பச்சை கொஞ்சி வயலிலே
     பயிர்கள் செழிக்க வந்திடு !
இச்சை கொண்டு மக்களே
     இனிதே வாழச் செய்திடு !

தாகம் தீர்க்க வந்திடு
     தாயாய் வந்து நின்றிடு !
மேகம் திரண்டு வானிலே
     மின்னல் இடியுடன் வந்திடு !

கானல் நீக்க வந்திடு
     கங்கை பொன்னியில் வந்திடு !
வேனல் போக்க இன்பமே
     வீற்றி ருக்க வந்திடு !

காடு செழிக்க வந்திடு
     கனிகள் கொடுக்க வந்திடு !
நாடு செழிக்க வைத்திடு
     நல்ல மழையே வந்திடு !
-- செ.சு.மலரடியான், கள்ளக்குறிச்சி.
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 23, 2014. 

Thursday, May 5, 2016

மனக் கணக்கு


     உங்கள் ஆசிரியர் ஒரு எண்ணைக் கண்டுபிடிப்பதற்காகச் சில குறிப்புகளைத் தருகிறார்.  அதை வைத்துக் கொண்டு அந்த எண்ணைக் கண்டுபிடியுங்களேன்.
குறிப்புகள் :
1.  அது ஒரு பகா எண் ( prime number ).
2.  அது ஒரு முழு எண் (whole number ).
3.  ஒன்றை விட அது பெரிய எண்.
4.  அது இரட்டை எண்ணாகவோ அல்லது சதுர எண்ணாகவோ ( double or square ) இருக்கலாம்.
     இன்னும் தெரியவில்லையா?  அது ஒற்றை இலக்க இரட்டைப்படை எண்.  எங்கே விடையைக் கண்டுபிடியுங்கள்.
விடை : 2.
-- மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 23, 2014.                                    
மனக் கணக்கு
     அது இரட்டை இலக்க எண்.  இலக்கங்கள் ஐந்து மடங்கு எண்ணிக்கைக்கு சமம்.  அதனுடன் 9ஐக் கூட்டினால், அந்த எண்கள் வரிசை தலைகீழாக மாறிவிடும்.  அது என்ன எண் என்பதை ஊகிக்க முடிகிறதா?
     -- விடை : 45.
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 30,  2014.                                

Wednesday, May 4, 2016

மகா கும்பமேளா!

  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் உள்ள சாதுக்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் மேளா திருவிழாவே கும்பமேளா.  உலகின் மிக அதிக அளவு மக்கள் கூடும் மதத் திருவிழா கும்பமேளாதான்.இந்த ஆண்டு அலகாபாத்தில் நடக்கும் திருவிழா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சிறப்பு பெற்ற மகா கும்பமேளா.  மொத்தம் 55 நாட்கள் நடக்கும் இந்தக் கும்பமேளாவுக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டும் என்கிறது புள்ளிவிவரம்.  தற்போது உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்த மகா கும்பமேளாவை, சென்னை ஃபேஷன் டிசைனர் அசோக்குமாரின் அனுபவங்களில் இருந்து:
*  "சாதுக்களில் இரண்டு வகை.  காவி உடை அணிந்து, ஜடா முடியுடன் ருத்திராட்சம் அணிந்து இருப்பவர்கள்.  உடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருக்கும் நாக பாபாக்கள்.  நிர்வாணக் கோலத்தில் இருக்கும் நாக பாபாக்கள், கார், பைக்குகளில் சர்வ சாதாரணமாகப் பறக்கின்றனர்.  மதுரையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் நாக பாபாவாக இருக்கிறார்.
*   நாக பாபாக்களைப் படம் பிடிக்க, பணம் கொடுக்க வேண்டும்.  10 ரூபாய் கொடுத்தால், ஆசிர்வாதம் செய்வதைப் போல போஸ் கொடுத்துவிட்டு, 'இடத்தைக் காலி செய்' என்கிறார்கள்.  500 ரூபாய் கொடுத்தால், காலை மடக்கி, கை உயர்த்தி என விதவிதமாக போஸ் கொடுக்கின்றனர்.  பணம் கொடுக்காவிட்டால், எந்த பாபாவிடமும் போஸும் கிடைக்காது, அருளூம் கிடைக்காது.
*   ஒன்றரை அடி உயரமே இருக்கும் ஒரு பாபாவிடம் கூட்டம் அம்முகிறது.  அந்தக் குள்ள பாபா யாரிடமும் பேசுவது இல்லை.  ஆசிர்வாதம் மட்டுமே.  அதுவும் பைசா கொடுத்தால் தான், கை உயர்த்துவார்.
*   ஒவ்வொரு சாதுவும் விதவிதமான ஹேர் ஸ்டைலில் மிரட்டுகிறார்கள்.  மிக நீளமாக முடி வளர்த்து, அதில் வித்தியாசமான அலங்காரங்களைச் செய்துகொள்வதில் அலாதி ஆர்வம்.
*   பெண் சாதுக்களையோ, பெண் பாபாக்களையோ அங்கு பார்க்க முடியவில்லை.  அதேபோல் கும்பமேளாவில் பெண் பக்தைகளின் வருகையும் மிகவும் சொற்பமே.  வெளிநாட்டுப் பெண்கள் ஏகத்துக்கும்  தலைகாட்டுகிறார்கள்.
*   முட்டித் தள்ளும் கும்பமேளா கூட்டத்திற்கு இடையில் தங்க ரதத்தில் தகதகவென வலம்வருகிறார் நித்தியானந்தா.  நாக பாபாக்கள் சிலர் அவரை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, தங்களுக்குள் ரகசியமாகக் கிசுகிசுத்துக் கொள்கின்றனர்.
*   குளிர்க் கண்ணாடிகள், ஜீன்ஸ் பெண்ட் , டீ ஷர்ட் சகிதமாக ஒரு நாக பாபா ஹாயாக அமர்ந்து இருந்தார்.  அவரைப் படம் பிடிக்கலாம் என கேமராவை எடுத்தபோது, சட்டென்று கண்ணாடியில் ஆரம்பித்து ஒட்டுமொத்த ஆடைகளையும் சடசடவேன அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்தர்.
*  'முற்றும் துறந்தவர்'களாக இருந்தாலும் நாக பாபாக்கள், தங்களது ஆணுறுப்பயீல் மட்டும் சிறிய கம்பியைச் சுற்றி இருக்கிறார்கள்.  அந்தக் கம்பியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடுவார்களாம்.
--கே.ராஜாதிருவேங்கடம்.
-- ஆனந்த விகடன்.  27-2-2013.   

Tuesday, May 3, 2016

குடிகாரர்.

  பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
    "நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் குடிப்ப்வர்களுக்கு 200 டாலர் பரிசு.  போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும்.  சவாலுக்கு தயாரா?" என்று அறிவித்தார்.
     யாரும் அசையவில்லை.  ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார்.  இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
    "பந்தயத்துக்கு நான் தயார்," என்றார்.
     அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார்.  சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, "ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?" என்று கேட்டார்.
    "பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்." என்றார் அவர்.
     இதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்?
-- ஜாலிக்காக குடிக்கலாமா?  NO !  ( மது அருந்துதல் பற்றி சத்குருவின் பதில்கள் தொடரில் ).
-- சத்குரு ஜக்கி வாசுதேவ்.
-- ஈஷா காட்டுப்பூ .  பிப்ரவரி 2014.   

Monday, May 2, 2016

மனதுக்கு இல்லை வயது !

  நாம் இந்த உலகைப் பற்றித் தெரிந்துகொள்வதே புலன்கள் வாயிலாகத்தான்.  பார்வை, கேட்டல், தொடுதல், முகர்தல், சுவைத்தல் என்று ஐம்புலன்கள் வழியாக அன்றாடம் நம்மை அடையும் ஆயிரக்கணக்கான தகவல்கள்வழியாகவே நம்மைச் சுற்றி நடக்கும் மாறுதல்களைக் கண்டுகொள்கிறோம்.  'ஓடும் நதியில் ஒருமுறை கையில் அள்ளிய நீரை மீண்டும் அள்ள முடியாது' என்று சொல்வதுபோல கணந்தோறும் உலகில் ஒருமுறை நடக்கும் விஷயம் மறுகணம் மாறுகிறது.  இம்மாற்றங்களைப் புலன்கள் மூலமே நாம் பதிந்துகொள்கிறோம்.
     வயதாகும்போது புலன்களின் திறன் குறையத் தொடங்குகிறது.  இதுபோல புலன்களின் திறன் குறையும்போது அதிலிருந்து வரும் தூண்டுதல்கள் இல்லாததால் மூளையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.  பார்வை குறைந்தவர்களுக்கு ஏதோ உருவங்கள் மாயத் தோற்றங்கள் தெரியத் தொடங்கும்.  ஆங்கிலத்தில் இதை ஹாலுசினேஷன் ( hallucinations ) என்பர்.  யாரும் இல்லாமலேயே யாரோ நிற்பதுபோல பேசிக் கொண்டிருப்பார்கள்.  'வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார்கள்.  யாருமே கவனிக்கமாட்டேன் என்கிறீர்களே' என்று சத்தம் போடுவார்கள்.  இன்னும் சிலருக்குத் திருடர்கள் வருவதுபோலக்கூடத் தோன்றும்.
     அதேபோல செவிப்புலன் குறையத் தொடங்கும்போது யாரோ பேசுவதுபோல் தோன்றும். 'மருமகள் என்னைப் பற்றிக் குறை சொல்கிறாள்' என்று புலம்புவார்கள்.  எல்லோரும் என்னை திட்டுகிறார்கள் என்று சொல்வார்கள்.  யதேச்சையாகச் சிரித்தாலும் என்னைப் பற்றித்தான் சிரித்தாள் என்று சந்தேகம் வரும்.  இதைப் பாரானோயா ( Paranoia ) என்பார்கள்.
     மனிதன் எந்த மோசமான விஷயத்தையும் தாங்கிக்கொள்வான்.  ஆனால் நிச்சயமற்ற தன்மையை, மர்மத்தை அவனால் தாங்கிக்கொள்ளவே இயலாது.  ஆகவே புலன்கள் திறன் குறையத்தொடங்கும்போத அவற்றைக் கவனிக்க வேண்டும்.  கண்ணாடியோ, அறுவைசிகிச்சையோ, ஹியரிங் எய்டோ அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.  'வயதானாலே அப்படித்தான்' என்று விட்டுவிடக் கூடாது.
     அதேபோல, காது சரியாக கேட்கவில்லை என்றால் எழுதிக்காட்டுங்கள்.  என்ன நடக்கிறது என்பதை உணரச் செய்யுங்கள்.  வெறும் தொடுதல் மூலம் ஆயிரம் செய்திகளைப் பரிமாறலாம்.
-- மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்.  பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய்,ஏப்ரல் 22, 2014. 

Sunday, May 1, 2016

'இயற்கை பானம்'

 பழத்தைக் கழிவி ( washing ), சாறு பிழிந்து ( extracting ) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து ( blending ), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி ( de-oilling ), விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி ( deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி ( paste urize), கசப்பு நீக்கி ( debittering ) அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி ( acide stabliization ), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி ( cloud stabliization ),கொதிக்கவைத்து ( evaporating ) பிறகு குளிர்வித்து ( freezing ) திடப்படுத்துகிறார்கள்.  இப்படி ஒவ்வோரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப்பதப்படுத்தி எடுத்து, கடைசியாக பழச்சாரின் அடர்வை ( concentrate ) பெறுகின்றனர்.  இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள்.  பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணீர் தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்' என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.
-- மருத்துவர் கு.சிவராமன்.  ( ஆறாம் திணை  தொடரில் ).
-- ஆனந்த விகடன் . 27-2-2013.