Tuesday, March 1, 2016

எரிபொருள் பிரச்சினை

எரிபொருள் பிரச்சினைக்கு எளிய தீர்வு கண்ட இளைஞர்கள்.
     பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பல்வேறு தேவைகளின் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் எரிபொருள் பற்றாக்குறை கடுமையான அளவில் இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் பயமுறுத்தி வரும் நிலையில், மாற்று எரிபொருளுக்காக அனைத்து நாடுகளும் ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கின்றன.
     இந்த நிலையில், நாகப்பட்டினம் மாணவர்கள் கார்த்திகேசன், சிவச்சந்திரன் ஆகியோர் ஒரு புதிய முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.  தண்ணீரை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி அதிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுத்து அதனை எரிபொருளோடு சேர்த்து பயன்படுத்தி வாகன மோட்டாரை இயக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள்.
     தற்போதைய நிலையில் எரிபொருள் செலவைப் பாதியாகக் குறைக்கும் ஒரு கருவி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.  இரு தனித்தனி பாகங்களைக் கொண்ட இக்கருவி 300 கிராம் வரை எடையுள்ளது.  இதனை ஒரு இரு சக்கர வாகனத்தில் பொருத்திவிட்டால் போதும்.
     வாகனம் இயங்க ஆரம்பித்தவுடன் இந்த கருவியும் இயங்கத் தொடங்கி அதில் இருக்கும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயு பிரிக்கப்பட்டு எரிபொருள் செல்லும் பாதையில் செலுத்தப்படும்.  அதனால், எரிபொருளின் தேவை பாதியாகக் குறையும்.  உதாரணத்துக்கு லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அந்த வாகனம் 90 கிலோ மீட்டர் தூரம்வரை செல்லும்.  இதை மைலேஜ் டெஸ்ட் , லோடு டெஸ்ட் உள்பட பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறோம் என்கின்றனர் அவர்கள்.
     இக்கருவி இயங்கத் தனியான பொருட்கள் எதுவும் தேவையில்லை.  வண்டியை முடுக்கத் தேவைப்படும் மின்சாரத்திலேயே இதுவும் இயங்கத் தொடங்கிவிடும் என்பதுதான் இக்கருவியின் தனிச்சிறப்பு.  இக்கருவி பொருத்தப்படுவதன் மூலம் இன்னொரு பயனும் கிடைக்கிறது.  எரிபோருள் எரிக்கப்படுவதால் வெளியாகும் கார்பனின் அளவு 75 % வரையிலும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.  பெருகிவரும் வாகனப் புகையால் மூச்சுத்திணறும் இன்றைய காலக்கட்டத்தில் இது மிகப்பெரிய சமுதாய சீர்திருத்தம் என்றே சொல்லலாம்.
-- கரு.முத்து.  பூச்செண்டு
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 2, 2014.

No comments: