Thursday, February 25, 2016

நவீன சென்சார் கருவி

செல்போன் மூலம் உளவு பார்ப்பதை தடுக்கும் நவீன சென்சார் கருவி.
விலை ரூ.30 ஆயிரம் வரை.
     ரகசிய பேச்சுவார்த்தைகள், உரையாடல்கள் ஆகியவற்றை திருட்டுத்தனமாக செல்போன் மூலம் பதிவு செய்யும் மோசடிக்கு முடிவு கட்டும் வகையிலான அதிநவீன சென்சார் கருவி புழக்கத்துக்கு வந்துள்ளது.
     மனிதர்களின் ஆறாம்விரல் என்று சொல்லும் அளவுக்கு செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது.  ஆரம்பத்தில் பேச மட்டுமே பயன்பட்ட செல்போன்கள், இப்போது காட்சிகளை துல்லியமாக படம்பிடிக்க, பாடல் கேட்க, இணையத்தைப் பயன்படுத்த என்று பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.  குறிப்பாக, குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் செல்போன்களின் பங்கு மிக முக்கியமானதாக மாறிவருகிறது.
     சமீபத்தில் நடந்த பல்வேறு குற்றங்களுக்கு டிஜிட்டல் ஏவிடன்ஸாக இருந்த செல்போன்கள், குற்றவாளிகளைப் பிடிக்க பெரிதும் உதவின.  இது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு பக்கம் சென்போன்களால் சிறுசிறு பிரச்சினைகளும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.  செல்போன்களைப் பயன்படுத்தி உளவு பார்ப்பது என்பது இதில் முக்கியமான விஷயம்.  நான்கு சுவருக்குள் ரகசியமாக நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தைகள், உரையாடல்களை வெளியில் கசியவிடுவதற்கு உளவாளிகள் செல்போன்களையே முக்கிய சாதனமாகப் பயன்படுத்துகின்றனர்.  இது பாதுகாப்புத் துறை, காவல்துறைக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது.  செல்போன் உதவியோடு வேறொருவர் சொல்லச் சொல்ல கேட்டு தேர்வு எழுதும் குற்றங்களும் அவ்வப்போது நடக்கின்றன.
     கையடக்கமான இந்த சென்சார் கருவியின் பெயர்'செல்லுலர் போன் காலிங் டிடெக்டர்.' இதன் எடை வெறும் 110 கிராம்.  குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் சென்போனுக்கு ஏதேனும் அழைப்புகள் வருகிறதா என்பதை இக்கருவியின் உதவியுடன் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
    குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் செல்போனுக்கு அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வரும்போது அந்த சிக்னலை உணர்ந்துகொள்ளும் டிடெக்டர் கருவியில் சென்சார் உடனே அதிர்வலைகள் மூலம் டிரான்சிஸ்டருக்கு தெரியப் படுத்தும்.
     அந்த நொடியில் கருவியின் மேல் உள்ள எல்.இ.டி விளக்கு எரியும்.  உளவு பார்ப்பவர்களின் செல்போன் சைலன்ட் மோட் அல்லது வைப்ரேஷனில் இருந்தால்கூட , அதையும் இந்த கருவி கண்டுபிடித்துவிடும்.
     ஏற்கனவே செல்போனை ஆன் செய்துகொண்டு யாராவது மறைத்து எடுத்து வந்தால், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அவர்கள் நுழைந்ததுமே சென்சார் கருவி காட்டிக் கொடுத்துவிடும்.  தேர்வு அறைகள், முக்கியமான அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த கருவியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றங்களை முங்கூட்டியே தவிர்த்துவிடலாம்.
-- மா.மணிகண்டன்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், பிப்ரவரி 19, 2014. 

No comments: