Thursday, January 14, 2016

அனோ நுவோ.

  ' அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அனோ நுவோ (Ano Nuevo) என்று ஓர் இடம் இருக்கிறது.  2000-ம் ஆண்டு பிறந்த பின்னர் வந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அனோ நுவோ கடற்கரைக்குப் போனேன்.  சும்மா போக முடியாது.  நுழைவுச் சீட்டு எடுக்க வேண்டும்.  ஏனெனில், அது முக்கியமான நாள்.  யானைச் சீல்களை ( Elephant Seals ) பார்ப்பதற்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.
     ஜனவரி தொடக்கத்திலேயே ஆண் சீல்கள், 4,000 மைல் தூரத்தில் இருக்கும் அலாஸ்காவில் இருந்து நீந்தி அனோ நுவோ கடற்கரைக்கு வரும்.  பெண் சீல்கள் எதிர் திசையில் 3,000 மைல் தொலைவில் இருக்கும் ஹவாய் தீவில் இருந்து புறப்பட்டு அனோ நுவோ வரும்.  பெண் சீல்களை தம் வசமாக்க ஆண் சீல்கள் பயங்கரமாகச் சண்டை போடும்.  நினைத்துப் பார்க்க முடியாத மூர்க்கத்தோடு ஒன்றையொன்று தாக்கும்.  அதிபலம் கொண்ட ஆண் சீல்கள் தமக்கென பல பெண் சீல்களை வளைத்து வைத்துக்கொள்ளும்.  அந்தக் காலத்து அரசர்கள் அந்தப்புரத்தில் பெண்களைச் சிறைபிடித்துப் பாதுகாப்பது போலத்தான்.
     பல நோஞ்சான் ஆண் சீல்களுக்கு பெண் சீல்கள் கிடைக்காமலே போய்விடும்.  ஆண்- பெண் சீல்களுக்கு இடையே காதல் உச்சகட்டம் அடைவது பிப்ரவரி 14 அன்றுதான்.  பிறகு, தாய் சீல்கள் பிறந்த குட்டிகளை அங்கேயே விட்டுவிட்டு ஹவாய்க்குத் திரும்ப, ஆண் சீல்களும் அலாஸ்கா போய்விடும்.  மறுபடியும் சந்திப்பு அடுத்த வருடம் நிகழும் .  காதலர் தினமாக பிப்ரவரி 14 அறிவிக்கப்பட்டதற்குக் காரணம், இந்தத் தேதியில் வருடா வருடம் நடக்கும் சீல்களின் சங்கமம்தான் என்று 'அனோ நுவோ'வாசிகள் கூச்சம் இல்லாமல் அடித்துச் சொல்வார்கள்!'.
-- விகடன் மேடை.  வாசகர் கேள்விகள்... அ.முத்துலிங்கம் பதில்கள்.
-- ஆனந்த விகடன்.26-02-2014.    

No comments: