Tuesday, December 15, 2015

'போயிங்' மொபைல்போன்

பாதுகாப்பான மொபைல்போன் 'போயிங்' நிறுவனம் கண்டுபிடிப்பு.
*  சிகாகோ *
     உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக்கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது.
     கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும்.  அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
     இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.  ஜிஎஸ்எம், டபிள்யூ சிடிஎம்ஏ மற்றும் எல்டி இ தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு மைக்ரோ சிம்கார்டுகளை இந்த போனில் பயன்படுத்த முடியும்.  இந்த போனில் மேற்கொள்ளும் உரையாடல்களை மற்றவர்கள் இடைமறித்துக் கேட்பது சிரமம்.
     தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளத் தக்க வகையில் எச்டிஎம்ஐ கேபிளை இணைப்பதற்கான வசதியும் இந்த மொபைல் போனில் தரப்பட்டு உள்ளது.  யூஎஸ்பி, வைபை, புளுடூத் போன்ற வசதிகளும் உள்ளன.
     அங்கீகரிக்கப்பட்ட குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த உயர்ரக போனை விற்பனை செய்ய போயிங் திட்டமிட்டுள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த போன் விற்பனை செய்யப்பட்டாலும், அவர்கள் இந்த போனின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிடமாட்டோம் என ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.
     பொதுமக்களுக்கு இந்தப் போனின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழிநுட்பம் குறித்த தகவல்கள் வெளியிடப்படமாட்டாது எனவும் போயிங் அறிவித்துள்ளது.
     இந்த போன் திறக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.  மீறித் திறக்க முயன்றால் அதிலுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்து விடும்.  பிளாக் போன் எனப் பெயரிடப்பட்ட இந்த போனுக்கு மாற்று உதிரிபாகங்களை மாற்ற முயன்றாலும் போன் அழிந்து விடும்.
-- சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ். திங்கள், மார்ச் 3,2014.  

No comments: