Thursday, December 31, 2015

திருமழிசையாழ்வார்

   பெருமாளின் சக்கரம்.
     பார்க்கவ மகரிஷிக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் பிறந்த திருமழிசை என்ற திருநாமம் கொண்ட ஆண் மகவு,  பின்னாளில் பெருமாள் மேல் கொண்ட ஆறாத பக்தியால் பல பாசுரங்களை இயற்றித் திளைத்தது.  சக்கரத்தாழ்வாரே இத்திருக்குழந்தையாகப் பிறந்து திருமழிசை ஆழ்வார் என பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
     பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் பதிமூன்று திவ்விய தேசத் திருக்கோயில்களில் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-- ராஜேஸ்வரி ஐயர். ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன், பிப்ரவரி27, 2014.   

Wednesday, December 30, 2015

மரத்தடியில் கிடைத்த புதையல்

அமெரிக்க தம்பதிக்கு அதிர்ஷ்டம்.
*வாஷிங்டன் *
      வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு தம்பதி, தங்கள் நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.  தங்களுக்குச் சொந்தமான நிலத்தில், ஒரு மரத்தின் கீழே, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, மிகப் பழமையான சிதிலமடைந்த உலோகக் குவளைகளில் தங்கக் காசுகள் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர்.
      அதைத் தோண்டி எடுத்த போது 1,400 தங்கக்காசுகள் இருப்பது தெரியவந்துள்ளது.  இவற்றின் மதிப்பு ரூ.62 கோடி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
     இது தொடர்பாக நாணயவியல் வல்லுனர் டான் காகின் கூறியதாவது : " அண்மையில் கிடைத்த தங்கப் புதையலில் இதுவே மிகப் பெரிய அளவாகும்.  இந்த தங்க நாணயங்களின் உண்மையான முக மதிப்பு 28 ஆயிரம் அமெரிக்க டாலர்களாகும் ( சுமார்
ரூ.17 லட்சம் ). ஆனால், அந்த தங்கக் காசுகளில் சில அரிதான காசுகளும் உள்ளன.  அவை ஒவ்வொன்றும் சுமார் ரூ.6.2 லட்சம் மதிப்புள்ளவை.  அவற்றை நாணய சேகரிப்பாளர்கள் விலைக்கு வாங்கத் தயாராகவுள்ளனர்.  கிடைத்துள்ள நாணயங்களில் பெரும்பாலானவை, தற்போது அருங்காட்சியகத்திலும், பெரும் நாணய சேகரிப்பாளர்களிடமும் உள்ளவற்றை விட மிக நல்ல வடிவமைப்புடன் கூடியவை. தங்கப் புதையல் கிடைத்த அந்த தம்பதி தங்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை.  பெரும்பாலான தங்கக் காசுகளை அவர்கள் விற்க முடிவு செய்துள்ளனர்" என்றார்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன், பிப்ரவரி27, 2014. 

சுரங்க ரயில் நிலையம்

 ( சிறப்பு )
ஆசியாவின்  மிகப்பெரிய  சுரங்க ரயில் நிலையம்  இன்று  திறப்பு
   ஆசியாவின்  மிகப்பெரிய  சுரங்க ரயில் நிலையம்  சீனாவின்  செஞ்சென்  நகரில்  கட்டப்பட்டுள்ளது.  இந்த  ரயில்  நிலையம்  இன்று  திறக்கப்படுகிறது.
   இதன்  மொத்த  பரப்பளவு  1,47,000  சதுர  அடியாகும். இது  21  கால்பந்து  மைதானங்களுக்கு  சமானதாகும்.  பூமிக்கடியில்  3  அடுக்குகள்  அமைக்கப்பட்டுள்ளன.     இங்கு  ஒரே  நேரத்தில்  3  ஆயிரம்  பயணிகள்  வரை  ரயிலுக்காக  காத்திருக்க  முடியும்.  இந்த  ரயில்  நிலையம்  வழியாக  முதல்  கட்டமாக  11  அதிவேக  ரயில்கள்  இயக்கப்பட  உள்ளன.  இந்நகரில்  இருந்து  15  நிமிடங்களில்  ஹங்காங்  செல்லமுடியும்.
-- ஐஏஎன்எஸ்.  தேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர் 30, 2015.   

Tuesday, December 29, 2015

டிப்ஸ்... டிப்ஸ்...

*  காய்களை விரைவாகவும் பதமாகவும் வேகவைக்க வேண்டுமா... தோல் சீவிய காய்களை வேகவிடும்போது, முதலில்
    தண்ணீரைக் கொதிக்கவிட்டு, பின்னர் காய்களைப் போட வேண்டும்.  தோலுடன்கூடிய காய்களை வேகவிடும்போது,
    காய்களை பச்சை தண்னீரில் போட்டு, பிறகு வேக வைக்க வேண்டும்.  'மைக்ரோவேவ் அவன்' என்றாலும், இதே போலவே
   வேகவைக்கலாம்.
* மோர்க்குழம்பு மிச்சம் இருக்கிறதா?... அதில் பாதியளவு அரிசி மாவைக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.  வாணலியில்
   நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, இரண்டு மூன்று மோர் மிளகாய்கள் ஆகியவற்றைத் தாளித்து,
  கரைத்து வைத்துள்ள மோர்க்குழம்பை ஊற்றி 2 நிமிடங்கள் கிளறினால்... மோர்க்களி தயார்.  அரிசி மாவை வறுத்துச் சேர்த்தால்
  உதிர் உதிரான மோர் உப்புமா கிடைக்கும்.
--- அவள் விகடன். 11-3-2014.  இதழ்...400.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.    

Monday, December 28, 2015

பொது அறிவு

*  முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில், அவருடைய நாட்டில் வாழ்ந்த 400 சிறந்த நடனக் கலைஞர்களின் பெயர்கள் தஞ்சை
   பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
*  அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி சேகரிக்கும் நன்முயற்சியாக, 400 விஷ சிலந்திகளுடன் மூன்று வாரங்கள் வசித்து உலக சாதனை
    படைத்தார் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த 67 வயதான நிக் லீ சொய்ப் என்ற பெண்மணி.
*  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறு எனும் தொகைநூல் 400 பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த சங்கத்
    தமிழ் பாடல்கள் கொண்ட நூலாகும்.
*  சென்னையின் புகழ்பெற்ற அண்ணா சாலை ( மவுன்ட் ரோடு ), உருவாக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆகின்றன.
*  பூமியின் அளவும், எடையும் கொண்ட ( கற்பாறைகள் மற்றும் இரும்பால் ஆன ) கோள் ஒன்று, சுமார் 400 ஒளி ஆண்டுகள்
   தொலைவில் இருப்பதாக கண்டரியப்பட்டு, கெப்லர் 78 பி ( KEPLER 78B ) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
*  கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் கூறும், 'ஏசு காவியம்' என்ற நூல்,
   400 பக்கங்களைக் கொண்டதாகும்.
*  400 கி.மீ.நீளம் கொண்ட தென்னிந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தென் பெண்ணை ஆறு, கர்நாடக மாநிலம் சிக்க
    பல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் பிறந்து, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
-- அவள் விகடன். 11-3-2014.  இதழ்...400.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

கண்டது

( சிவகாசி  கோனம்பட்டியில்  இராமகிருஷ்ண  சாரதா  ஆசிரமத்தில் )
 தெரிந்த  மனிதர்களுக்கு
 உதவி  செய்யும்போது
 நல்ல  மனிதன்.
 தெரியாதவர்களுக்கு
 உதவி  செய்யும்போது
 நீ  கடவுள்.
-- ஏ.எஸ்.ஆர்., வெள்ளூர்.
( திருநெல்வேலி  ஜங்ஷனின்  அருகில்  உள்ள  ஒரு  கலர்  லேப்பில் )
 QUALITY  BEGINS  WITH
 QUALITY  PEOPLE
-- ஜி.வினோத்,  கிருஷ்ணாபுரம்,  திருநெல்வேலி.
-- தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன். 

Sunday, December 27, 2015

கம்மல் கம்ப்யூட்டர்

முக அசைவுகளால் இயங்கும் கம்மல் கம்ப்யூட்டர்
ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை.
    டோக்கியோ:
    கம்மலை போல் காதில் மாட்டிக்கொண்டு முக அசைவுகளால் இயங்கக்கூடிய 17 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய கம்ப்யூட்டரை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
    கம்ப்யூட்டர் யுகம் தொடங்கிய காலத்தில், வீடு அளவு பெரிதாக இருந்த கம்ப்யூட்டரில் வெறும் கணக்குகள் மட்டுமே போட முடியும் என்ற நிலை இருந்தது.  அதன்பின், கம்ப்யூட்டரின் அளவு குறைந்து, அதன் திறன் பலமடங்கு அதிகரிக்க தொடங்கியது.
    இந்த  கம்ப்யூட்டர், கைகளை பயன்படுத்தாமல் கண் சிமிட்டல், நாக்கை வளைப்பது, உதட்டை கோணுவது, புருவத்தை உயர்த்துவது, மூக்கை அசைப்பது போன்ற முக அசைவுகள் மூலமாகவே இயக்கலாம்.
    புளூடூத் வசதிக்கொண்ட இந்த கருவியில் சாப்ட்வேர் பதிவிறக்கம், தகவல்களை சேகரிப்பு போன்ற வசதிகள் உள்ளன.  மேலும், நாம் இருக்கும் இடத்தை அறிய உதவும் ஜிபிஎஸ், கைரோ சென்சார் தொழில்நுட்பங்களும் மைக், ஸ்பீக்கர் போன்ற வசதிகளும் உள்ளன.
    மலையேற்ற வீரர்கள் போன்ற, கைகளை பயன்படுத்தாமல் கம்ப்யூட்டர் உபயோகிக்க வேண்டிய தேவை உள்ளவர்களுக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த கம்ப்யூட்டர் மிகவும் உபயோகமாக இருக்கும்.
    இந்த கருவியின் ஆற்றல் குறித்து பேசிய ஆராய்ச்சியாளர் கசுஹிரோ டனிகுச்சி, " இந்த கருவியை மாட்டிக்கொண்டு நாம் ஒரு நட்சத்திரத்தை பார்த்தால், நாம் எந்த நட்சத்திரத்தை பார்க்கிறோம், அதை எந்த கோணத்தில் பார்க்கிறோம், நாம் பார்க்கும் நட்சத்திரத்தை நம்மை போல் உலகில் வேறு யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்ற தகவல்களை கம்ப்யூட்டர் தெரிவிக்கும்.
    மேலும், நம் உடலிலேயே இந்த கருவி பொருத்தப்படுவதால், நமது உடல்நிலை குறித்த தகவல்களை தருவதோடு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் நம்மை எச்சரிக்கவும் செய்யும்" என்றார்.
-- தினமலர்.  02-03-2014.  

Saturday, December 26, 2015

சும்மா தெரிஞ்சுக்கலாம்!

*  யானையின் உடலில் 107 மர்ம ஸ்தானங்கள் இருக்கின்றன.  அவற்றில் அடித்தால் யானைக்கு மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற
   அதிர்ச்சிகள் ஏற்படும்.
*  முதலையின் ஆங்கில வார்த்தை 'குரோக்கடைல்'.  இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது.  அந்த மொழியில் இந்த
   வார்த்தைக்கு அர்த்தமே 'பல்லி' என்பதுதான்.
*  மகாபாரத யுத்தம் நடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் துவாரகையை கடல் கொண்டது.
*  ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய விண்கலம் ஒன்று இப்போது 67 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வால்
   நட்சத்திரம் ஒன்றை எட்டிப்பிடிப்பதற்காக அதைத் துரத்திச் சென்றுகொண்டிருக்கிறது.
   அந்த விண்கலத்தின் பெயர் ரொசட்டா.

Friday, December 25, 2015

பார்னம் விளைவு

  உளவியலில் பார்னம் விளைவு என்ற அம்சம் ஒன்று உண்டு.  பார்னம் சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம்.  அதன் விதவிதமான ஆட்டங்கள் பலதரப்பட்ட மக்களுக்குப் பிடித்திருப்பதுதான்.  எல்லோருக்கும் எல்லாமும் பிடித்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.  ஆனாலும், ஒன்றிரண்டு ஆட்டங்கள் பிடித்திருப்பதால் சர்க்கஸ் முழுவதும் பிடித்திருக்கிறது.  இதே போன்று பல கணிப்புகள் சொல்லப்பட்டலும், பலித்திருக்கும் கணிப்பை மட்டும் நினைவில்கொள்கிறது.
    நம்பிக்கை சார்ந்த எதையும் மக்களுக்குத் தர்க்கரீதியாகப் புரியவைப்பது கடினம்.  சோதிடம் நம்பிக்கையைச் சார்ந்தது.
அறிவியலின் கடும் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது.  அதனால் மாறுதல்களையும் அடைந்திருக்கிறது.  உதாரணமாக, புளூட்டோ என்ற 'முன்னாள்' கோள், இன்று கோளாக அடையாளம் காணப்படுவது இல்லை.  சோதிடம் இதே போன்று சோதனைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள முடியுமா?
--- பி.ஏ.கிருஷ்ணன்.  கருத்துப் பேழை.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள்,  மார்ச் 3  ,2014.  

Thursday, December 24, 2015

ஐந்து கேள்விகள்

 சோதிடத்தை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள்.  அது மனம் சார்ந்தது.  ஆனால், சோதிடம் அறிவியலின் ஓர் அங்கமா?  பல சோதிடர்கள் ஆம் என்கிறார்கள்.  அதற்கு அவர்களில் பலர் ஐந்து காரணங்களைத் தருகிறார்கள் என்று புகழ்பெற்ற விஞ்ஞானி நர்லிகர் சொல்கிறார்.
1.  வானவியலைப் போலவே சோதிடமும் கோள்களை ஆதாரமாகக் கொண்டது.  வானவியல், அறிவியலின் அங்கமாக இருக்கும்போதுசோதிடம் ஏன் இருக்கக் கூடாது.
2.  சில சோதிடர்களின் கணிப்பு துல்லியமாக இருக்கிறது என்பது உலகறிந்த ஒன்று.  எனவே, அவர்களது சோதிடத்தையாவது அறிவியல் என்று ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
3.  வானிலை மற்றும் மருத்துவத் துறையை எடுத்துக்கொள்ளுவோம், வானிலை அறிவிப்புகள் பொய்த்துப்போகின்றன.  மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காமல் போகிறது.  இவற்றை அறிவியலின் அங்கமாக எடுத்துக்கொள்ளும்போது, சோதிடத்தை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
4.  சோதிடத்தைச் சரியாகப் படிக்காதவர்கள் சொல்வதூதான் பொய்த்துப்போகிறது.  நன்றாகப் படித்தவர்கள் சொல்வது பொய்க்காது.  அவர்கள் சொல்வதையாவது அறிவியல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.  போலிகளை வைத்துக்கொண்டு, இந்தத் துறையையே குறைசொல்ல முடியாது.
5.  அறிவியலுக்குக் கொடிபிடிப்பவர்கள் சோதிடத்தைப் படிக்காமலும் சோதனைக்குள்ளாக்காமலும் அகந்தையோடு அதைப் புறந்தள்ளுகிறார்கள்.
--- பி.ஏ.கிருஷ்ணன்.  கருத்துப் பேழை.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள்,  மார்ச் 3  ,2014

Wednesday, December 23, 2015

சோதிடமும் அறிவியலும்

   எம்.ஜே.அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது.  குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில், ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு.  1950-களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம்.  நடக்கப்போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார்.  அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள்.  சோதிடர் சொன்ன நாள் 27 மே 1964.
     இந்தச் சம்பவத்துக்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த மத்தாய் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.  நேரு, அவரிடம் "நான் 74 வயதுக்கு மேல் இருக்க மாட்டேன்" என்று சொல்லியிருக்கிறார்.  சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள் என்ற மத்தாய்க்கு நேரு அளித்த பதில்;  "இல்லை.  குடும்பத்தில் இருந்த ஆண்களின் வயதுகளின் சராசரியைக் கணக்கிட்டேன்.  சரியாக 74 வருடங்கள், 6 மாதங்கள், 13 நாட்கள் வருகின்றன."
     நேருவின் பிறந்த நாள் 14 நவம்பர் 1889.
-- பி.ஏ.கிருஷ்ணன்.  கருத்துப் பேழை.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள்,  மார்ச் 3  ,2014.  

Tuesday, December 22, 2015

கிரகங்கள்.

புதன்  --   அதிவேகம்
     சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் கோள்.  விநாடிக்கு 48 கி.மீ. வேகத்தில்.  88 நாட்களில் சூரியனை ஒரு சுற்று சுற்றிவிடுகிறது.
வெள்ளி  --  அதிவெப்பம்.
     சூரியக் குடும்பத்தின் வெப்பமான கோள்.  இதன் வளிமண்டலத்தில் 96 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடு நிரம்பியிருப்பதே காரணம்.  சராசரி வெப்பநிலை 4600 டிகிரி செல்சியஸ்.
செவ்வாய்  --  சிவந்த மண்.
     செவ்வாய் கோள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், அதில் இரும்பு ஆக்சைடு நிரம்பியிருப்பதுதான்.
வியாழன்  --  புயலடிக்கும்.
     வாயு மிகுந்த இந்தக் கோளின் எடையற்ற வளிமண்டலமும், வலுவான ஈர்ப்புவிசையும் பெரும் புயல் மேகங்கள் உருவாகக் காரணமாக இருக்கின்றன.  பூமியில் உருவாகும் புயல்களைப் போல 3 மடங்கு வலுவானவை அவை.
சனியின் டைட்டன்  --  மீதேன் மழை.
     சனி கோளின் மிகப் பெரிய நிலவான டைட்டனில் பெய்யும் மீதேன் மழையைக் கொண்டு ராக்கெட்டே ஓட்டலாம்.
நெப்டியூன்  --  அடர்த்தி.
     வாயுக்களால் நிரம்பிய, வெளிப்புறம் பனிப்படலத்தைக் கொண்ட நான்கு கோள்களில் நெப்டியூனும் ஒன்று.  அந்த வகையில் மிகவும் அடர்த்தியானது.
யுரேனஸ்  --  தொலைவு.
      சூரியனில் இருந்து பெறும் வெபத்தில் வெறும் 5 சதவீதத்தையே இது திரும்ப எதிரொளிக்கிறது.  சூரியனில் இருந்து தள்ளி இருப்பதே காரணம்.
நிலவு  --  குளிர்ச்சி
     வளிமண்டலமே கிடையாது என்பதால், இதைப் போல ஜில்லென்று துணைக்கோள் வேறு எதுவுமே இல்லை.  நிலவின் மறுபக்கத்தில் உள்ள சூரியனைப் பார்க்காத பெருங்குழிகள் குளிர் சுரங்கங்களாக இருக்கின்றன.
-- ஆதி.  நம்ப முடிகிறதா?  மாயாபஜார்.
--  'தி இந்து' நாளிதழ். புதன்,  மார்ச் 5  ,2014

Monday, December 21, 2015

இன்றைய பௌத்தம்.

அரச மரத்தைப் போற்றுவது ஏன்?
     தமிழகத்தில் பௌத்த, சமண எச்சங்கள் நம்மிடையே பல வகைகளில் இன்னமும் எஞ்சியிருக்கின்றன.  அதற்கான ஒரு நல்ல அடையாளம், அரச மரத்தைப் போற்றுவது.
     போதி என்று பாலி, வடமொழியில் அழைக்கப்படும் அரச மரம், பௌத்தர்களின் புனித மரம்.  அரச மரத்தடியில் நீண்ட காலம் செய்த தியானத்தின் முடிவில் புத்தருக்கு ஞானம் கிடைத்ததே இதற்குக் காரணம்.  இதனால் புத்தரைப் போலவே, அரச மரத்தைப் போற்றுவது பௌத்தர்களின் வழக்கம்.
     பழந்தமிழ் நூல்கள் பலவும் புத்தரைப் போதி மரத்துடன் இணைத்தே கூறுகின்றன.  பௌத்த மதத்தைப் பின்பற்றுவோரைத் தேவாரம் 'போதியர்'.  அதாவது அரச மரத்தைத் தொழுவோர் என்று குறிப்பிடுகிறது.  சங்ககாலத்தில் இருந்தே பௌத்த புலவர்களுக்கு 'இளம்போதியர்' என்று பெயர் இருந்ததாகப் பௌத்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், மார்ச் 6,2014.    

Sunday, December 20, 2015

வருத்தம் தந்த வாசகம் !


     சமீபத்தில் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்தபோது, அதில் கண்ட வாசகம் :
    'வார்த்தை தடுமாற காரணம் கண்கள்,
     வாழ்க்கை தடுமாற காரணம் பெண்கள்'
    'மண்ணை நம்பினால் ஒரு கோடி,
    பெண்ணை நம்பினால் தெருக்கோடி'
-- இரா.பொன்னரசி, வேலூர்.
--   தினமலர். பெண்கள்மலர். 8-3-2014.                                    

Saturday, December 19, 2015

திருமண ஆண்டு நிறைவுப் பெயர்கள்!

முதலாம் திருமண ஆண்டு நிறைவின் பெயர்  --  பருத்தி.
2 ஆம் ஆண்டு  --  காகிதம்.
3 ஆம் ஆண்டு  --  தோல்.
4 ஆம் ஆண்டு  --  பழமும், மலரும்.                                          
5  ஆம் ஆண்டு --  மரம்.
6 ஆம் ஆண்டு  --  சர்க்கரை.
7  ஆம் ஆண்டு --  கம்பளி.
8  ஆம் ஆண்டு --  உப்பு.
9  ஆம் ஆண்டு -- செம்பு.
10  ஆம் ஆண்டு --  தகரம்.
12  ஆம் ஆண்டு  --  பட்டு நைஸ்லின்.
15  ஆம் ஆண்டு ..கிறிஸ்டல்.
20  ஆம் ஆண்டு -- சைனா.
25  ஆம் ஆண்டு  --  வெள்ளி.
30  ஆம் ஆண்டு --  முத்து.
40  ஆம் ஆண்டு -- ரூபி.
50  ஆம் ஆண்டு -- பொன்.
60  ஆம் ஆண்டு திருமண ஆண்டு நிறைவின் பெயர் -- வைரம்.
-- மா.கல்பனா பழனி, கூத்தப்பாடி.
--  தினமலர். பெண்கள்மலர். 8-3-2014.  

Friday, December 18, 2015

எத்தனை சிரிப்பு...


தனக்குள் சிரிப்பவன் ஞானி.
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச் சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்மயோகி.
--  சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.
-- தினமலர். பெண்கள்மலர். 8-3-2014.                                    

Thursday, December 17, 2015

3 ! ( மூன்று )

வெற்றிக்கு 3! :  அதிகமாக அறிந்துகொள்ள முயலுங்கள்.  அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குறைவாக
                           பிறரரிடமிருந்து பெற முலுங்கள்.
கடினமான 3! : ரகசியத்தை காப்பது.  இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.  ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.
நன்றிக்கு 3 ! :   இதயத்தால் உணர்தல்.  சொற்களால் தெரிவித்தல்.  பதிலுக்கு உதவி செய்தல்.
பெண்மைக்கு 3 !: அடக்கம்.  உண்மை.  கற்பு.
மகிழ்ச்சிக்கு 3! :  சென்றதை மறப்பது.  நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. வருங்காலத்தை பற்றி சிந்திப்பது.
இழப்புக்கு 3! : சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.  அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.  திருமணம் பொருந்தா
                         விட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.
உயர்வுக்கு 3! : ஒழுக்கத்தோடு இருந்தால் கவல்யில்லை.  அறிவாளியாக இருந்தால் குழப்பங்கள் இல்லை. துணிவாக இருந்தால்
                          அச்சமில்லை.
-- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.
-- தினமலர். பெண்கள்மலர். 8-3-2014. 

Wednesday, December 16, 2015

சர்க்கரை மூலம் சார்ஜ்

சர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி உருவாக்கம்.  10 நாள்களுக்கு மின்னாற்றல் தரும்.
*  வாஷிங்டன்  *
      சர்க்கரையைப் பயன்படுத்தி சார்ஜ் ஆகிக்கொள்ளும் பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாள்களுக்கு மின்னாற்றல் தரும் என்பது இதன் சிறப்பம்சம்.
     தற்போது ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்களுக்கு லித்தியம் - அயன் வகை பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன.  இவ்வகை பேட்டரிகள் செயலிழந்த பிறகு உரிய முறையில் அப்புறப்படுத்தபடாவிட்டால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை.  மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருநாள் அல்லது அதிகபட்சமாக 2 நாள்களுக்குத் தாங்கும்.
     ஆனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து உழைக்கக் கூடிய அதுவும் சர்க்கரையைப் பயன்படுத்தி சார்ஜ் செய்துகொள்ளத்தக்க பேட்டரியை விர்ஜீனியா பாலிடெக்னிக் மற்றும் அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
      முழுக்க முழுக்க உயிர்பொருள்களால் இந்த பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது.  தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் இதர பேட்டரி வகைகளை விட எடை குறைவானதும், திறன் மிக்கதுமாகும்.
      இந்த பேட்டரியில் சர்க்கரையைச் சேர்க்கும் போது, அந்தச் சர்க்கரை மெல்ல கார்பன் டை ஆக்ஸைடு ஆகவும், நீராகவும் பிரிகிறது.  இந்த வளர்சிதை மாற்றத்தின் போது வெளிப்படும் எலக்ட் ரான்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து சேமித்துக் கொள்கிறது.
    "லித்தியம் அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தும்போது ஸ்மார்ட் போனில் ஒரு நாளுக்கு மட்டுமே அதன் எரிசக்தி நீடிக்கும்.  ஆனால், சர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் இந்த புதிய பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாள்களுக்கு நீடிக்கும்"
      இந்த பேட்டரியில் உள்ள 2 நொதிப்பான்கள் ( என்சைம்கள்) சர்க்கரையிலுள்ள ஜோடி எலக்ட்ரான்களைப் பிரிக்க உதவுகின்றன.  மற்ற 10 நொதிப்பான்கள் இதே செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய உதவுகின்றன.  மீண்டும் இச்செயல் நடைபெறும்போது, அடுத்த இரு நொதிப்பான்கள் செயல்பட்டு எலக்ட்ரான்களைப் பிரிக்கின்றன.  இதுபோன்று ஆறு சுழற்சிகளில் நொதிப்பான்கள் சர்க்கரை மூலக்கூறிலுள்ள அனைத்து சக்தியையும் எரிபொருளாக மாற்றிவிட்டுகின்றன.
-- பி.டி.ஐ. - சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ். திங்கள், மார்ச் 3,2014. 

Tuesday, December 15, 2015

'போயிங்' மொபைல்போன்

பாதுகாப்பான மொபைல்போன் 'போயிங்' நிறுவனம் கண்டுபிடிப்பு.
*  சிகாகோ *
     உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக்கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது.
     கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும்.  அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
     இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.  ஜிஎஸ்எம், டபிள்யூ சிடிஎம்ஏ மற்றும் எல்டி இ தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு மைக்ரோ சிம்கார்டுகளை இந்த போனில் பயன்படுத்த முடியும்.  இந்த போனில் மேற்கொள்ளும் உரையாடல்களை மற்றவர்கள் இடைமறித்துக் கேட்பது சிரமம்.
     தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளத் தக்க வகையில் எச்டிஎம்ஐ கேபிளை இணைப்பதற்கான வசதியும் இந்த மொபைல் போனில் தரப்பட்டு உள்ளது.  யூஎஸ்பி, வைபை, புளுடூத் போன்ற வசதிகளும் உள்ளன.
     அங்கீகரிக்கப்பட்ட குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த உயர்ரக போனை விற்பனை செய்ய போயிங் திட்டமிட்டுள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த போன் விற்பனை செய்யப்பட்டாலும், அவர்கள் இந்த போனின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிடமாட்டோம் என ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.
     பொதுமக்களுக்கு இந்தப் போனின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழிநுட்பம் குறித்த தகவல்கள் வெளியிடப்படமாட்டாது எனவும் போயிங் அறிவித்துள்ளது.
     இந்த போன் திறக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.  மீறித் திறக்க முயன்றால் அதிலுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்து விடும்.  பிளாக் போன் எனப் பெயரிடப்பட்ட இந்த போனுக்கு மாற்று உதிரிபாகங்களை மாற்ற முயன்றாலும் போன் அழிந்து விடும்.
-- சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ். திங்கள், மார்ச் 3,2014.  

Monday, December 14, 2015

அரசன் -- தெய்வம்


"அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.  நீதி...?"
"எங்கோ, எப்போதோ படித்த கவிதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது...
 'ஒரு
  மருத்துவரின் தவறு
  ஆறடி மண்ணில்
  புதைந்துவிடுகிறது.
  ஒரு
  நீதிபதியின் தவறோ
  ஆறடி உயரத்தில்
  தொடங்கிவிடுகிறது !'
  புரிஞ்சுதா?"
-- முத்தூஸ், தொண்டி.
"லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் இந்தியாவில், 450 கோடி செல்வுசெய்து ராக்கெட் விடுவது தேவையா?"
"லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் இந்தியாவில், தீபாவளியன்று நாம் விடும் பொம்மை ராக்கெட்டுகளின் மதிப்பு
அந்த 450 கோடியையும் மிஞ்சும் சாரே.  அது தேவையா என்று முதலில் சொல்லுங்கள் !"
-- ஜெ.சரவணன், சென்னை.
-- நானே கேள்வி...நானே பதில் ! பகுதியில்...
-- ஆனந்த விகடன்.11-12-2013.                                 

Sunday, December 13, 2015

செல்போன்

  செல்போன் செயல்பட மூலகாரணமாக இருக்கும் பேட்டரியின் சார்ஜ் தாக்குபிடிக்க சில ஆலோசனைகள் :
*   புது பேட்டரியை ஆப் செய்த நிலையில் 8 மணிநேர சார்ஜ் போடவேண்டியது அவசியம்.  பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால்
    போன்றது இது.
*  பேட்டரியின் சார்ஜ் அளவு பாதிக்கும் கீழ் குறைந்த பிறகு சார்ஜ் செய்வது அதன் ஆயுளைஅதிகரிக்கும்.  அதற்காக லோ
    பேட்டரி காட்டும் அளவுக்கு காயப்போடவும் கூடாது.  நீண்ட நேரம் சார்ஜ் செய்வது தவறு.  3 முதல் 4 மணி நேரமே போதும்.
*   புளூடூத் சேவையை உபயோகப்படுத்தி முடிந்ததும் அணைத்துவிட வேண்டும்.  இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள
    செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை உபயோகப்படுத்தும்.  புளூடூத் வழியாக வைரஸ்களும்
    பரவ வாய்ப்பிருப்பதால், தேவையில்லாதபோது அணைத்து வைப்பது பேட்டரிக்கு மட்டுமல்லாமல், செல்போனுக்கும் நல்லது.
*   காரணமில்லாமல் வைப்ரேஷன் மோட் எனும் அதிர்வில் வைத்திருப்பது, சார்ஜ் அதிகமாக குடிக்கும்.  அதே போல் கீ பேட்
    டோன், ஸ்டாட் அப் டோன் போன்றவையும் அவசியமானவை அல்ல.  தேவைப்படின் ஒலி அளவை குறைத்து பயன்படுதலாம்.
*   செல்போனை அழகாக காட்டுகிறது என்பதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால் பேப்பர் போன்ற சேவைகளை
    பயன்படுத்துவது பேட்டரியின் சார்ஜை குறைக்கும்.  அதேபோல டவர் இல்லாத இடங்களில் அணைத்து வைப்பது நல்லது.
*   அடிக்கடி உபயோகப்படுத்தும் ஆபரேஷன்களை மட்டும் ஆக்டிவில் வைத்துக்கொள்ளலாம்.  எப்போதாவது உபயோகிக்கும்
    ஆபரேஷங்கள். தேவையில்லாத ஆபரேஷன்களையும் ஆப் செய்து வைப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும்.
*   ஓடியாடி விளையாடுவது எப்படி உடலில் உள்ள கலோரிகளை எரிக்குமோ, அதே போல செல்போனில் கேம்ஸ்
     விளையாடுவதும் அதன் சக்தியை அதிக அளவில் செலவழிக்கும்.  எனவே பேட்டரி நலன் கருதுபவர்கள்  அளவாகவே
     விளையாடுங்கள்.
--   சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 2-3-2014. 

Saturday, December 12, 2015

இணைய வெளியிடையே...

*   எல்லாவற்றையும் மக்கச்செய்து அழித்துவிடும் மண், விதையை மட்டும் உயிர்பிக்கச் செய்வதுதான் இயற்கையின் மிகப்
    பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று...!
    -- thimiru @ twitter.com
*   கூட்டமாக இருக்கும் பசுக்களை "HERD OF COWS" என்றுதான் ஆங்கில இலக்கணப்படி அழைக்க வேண்டும்.
    மீன்களின் கூட்டத்தை "SCHOOL"  என்றும்,  சிங்கங்களின் கூட்டத்தை "PRIDE"  என்றும்,  செம்மறி ஆடுகளின் கூட்டத்தை
   "FLOCK"  என்றும்,  காகங்களின் கூட்டத்தை "MURDER"  என்றும் அழைக்க வேண்டூம்.
    ஆனா இதெல்லாத்தையும் விட சுவாரஸ்யமானது என்னன்னா ஆந்தைகளின் கூட்டத்தை "PARLIAMENT"  என்றும்,  பபூன்
   குரங்குகளின் கூட்டத்தை "CONGRESS" என்றும் சொல்ல வேண்டுமாம்.
--- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 2-3-2014.  

Friday, December 11, 2015

எந்த வாசனை நல்ல வாசனை?

*   லாவண்டர் நறுமணம் மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸான மனநிறைவைத்தரும்.
*   ரோஜா மணம் காதலைத் தூண்டும்.  படுக்கையறையில் இதைப் பயன்படுத்தலாம்.
*   எலுமிச்சை புத்துணர்ச்சியும், ஆற்றலையும் தரும்.  அது பூச்சிக்கொல்லியும்கூட .
*   திரவ நறுமணப் பொருள்கள் குளிர்ச்சியான உணர்வைத் தருவதுடன், அமைதியான சூழலை ஏற்படுத்தவும் உதவும்.
*   மல்லிகையின் நறுமணம் இனிமையான புத்துணர்ச்சியைத் தரும்.
-- சொந்த வீடு.
--   'தி இந்து' நாளிதழ். சனி, மார்ச் 1,2014. 

Thursday, December 10, 2015

விநாயகர் மண்சிலை

  நாம் பூஜிக்கும் இறைவனின் திருவுருவத்தை இரண்டு விதமாக வைத்து கொள்ளலாம்.  ஒன்று கருங்கல், உலோகம் போன்றவற்றினால் செய்து நிரந்தரமாக வைத்துக் கொள்வது.  மற்றொன்று மஞ்சள்பொடி, சந்தனம், மண், கோமயம் போன்றவற்றினால் திருவுருவம் செய்து பூஜை முடிந்தவுடன் கரைத்துவிடுவது.  இதற்கு க்ஷணிக உருவம் என்று பெயர்.  இப்படிச் செய்வதற்குக் காரணம், எல்லோராலும் நிரந்தரமாக சிலை வைத்து தினமும் வழிபட இயலாது.  வீட்டில் சிலை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றால் மாமிசம் உண்பது, மாதவிடாய் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பது போன்றவை கூடாது.  இப்படிப்பட்டவர்கள் கோயிலுக்கு மட்டும் சென்று வழிபடுவது வழக்கில் இருந்தது.
     விநாயகர் சதுர்த்தியன்று க்ஷணிக உருவத்தில், அதாவது மண் சிலை விநாயகரை வைத்து வழிபட்டு ஆற்றில் கரைக்கும் வழக்கம் தோன்றியது.  காலப்போக்கில் நிரந்தரமாக சிலை வைத்திருப்பவர்கள் கூட அன்றைய தினம் மட்டும் மண் சிலை வழிபடுவதும் வழக்கில் வந்தது.  எப்படி இருந்தாலும் மண் சிலை விநாயகரை கரைப்பது என்ற சம்பிரதாயத்தை மாற்ற இயலாது.  மெகா சைஸ் மண் சிலைகள் கரைப்பதுதான் பல கோயில்களுக்கு இடமளிக்கிறது.
-- மயிலாடுதுறை. ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார். ( அறிவோம்! தெளிவோம்!)
-- தினமலர்.பக்திமலர். பிப்ரவரி 27, 2014.  

Wednesday, December 9, 2015

சாக்லெட் சாப்பிடுங்க...

சாக்லெட் சாப்பிடுங்க...இதயத்துக்கு நல்லது
     டார்க் சாக்லெட்டுகள் சாப்பிடுவது இதயத்தின் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது.  டார்க் சாக்லெட்டுகளை சாப்பிடுவது, தமனிகளின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது.  மேலும், ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது.
    தமனிகளின் விரைப்புத்தன்மையும், வெள்ளை அணுக்களின் ஒட்டும்தன்மையும் தமனி வீக்கத்துக்குக் காரணமாக அமைகின்றன.  இச்செயல்கள் தடுக்கப்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
    நெதர்லாந்தில் உள்ள உணவு மற்றும் நுண்ணூட்டக் கழக ஆய்வுக்குழுவின் டைடெரிக் எஸ்ஸெர் கூறியதாவது : " டார்க் சாக்லெட்டுகளில் உள்ள பிளாவனல்கள் உணவு அருந்தும் தூண்டலை நிறுத்துகின்றன.  இந்த சாக்லெட்டுகள் ஆரோக்கியமானவைதான்" என்றார்.
    நடுத்தர வயதுடைய அதிக எடைகொண்ட 44 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  நான்கு வாரங்களுக்கு தினமும் 70 கிராம் அளவுக்கு அவர்கள் சாக்லெட் எடுத்துக் கொண்டனர்.
--  பி.டி.ஐ.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ். சனி, மார்ச் 1,2014.   

Tuesday, December 8, 2015

பிட்காயின்

பிட்காயின்களுக்கு வியட்நாம் தடை.
      வியட்நாமிலுள்ள வங்கிகள் பிட் காயிங்களைக் கையாளக்கூடாது என அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.  டிஜிட்டல் நாணயமான பிட் காயின்கள் யாரால் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என்பதைப் பிறர் அறியாமல் பயன்படுத்த முடியும்.  சங்கேத குறியீடுகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் பிட் காயின்கள்பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
    "பிட்காயின்களின் உரிமையாளர்,வர்த்தகம், பரிவர்த்தனை, அதன் சொத்து மதிப்பு ஆகியவை அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு அபாயத்தை அளிப்பவை.  இதனைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.  பிட் காயின்கள் மூலம் முதலீடு செய்வது, பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை" என வியட்நாம் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
     வியட்நாமில் பிட் காயின்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதில்லை.  இருப்பினும் பிட் காயின்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
     கடந்த செவ்வாய்க்கிழமை பிட் காயின்களின் மிகப் பெரிய பரிவர்த்தனை சந்தையான ஜப்பானின் எம்டி காக்ஸ் ( எம்டி ஜி ஓஎக்ஸ் ) திடீரென முடங்கியது.  இது பிட் காயின்களைப் பயன்படுத்துவோரிடையேபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ். சனி, மார்ச் 1,2014.  

Monday, December 7, 2015

715 புதிய கோள்கள்

715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு.  நாசா அறிவிப்பு.
     இதுவரை மனிதர்களால் அடையாளம் காணப்பட்ட கோள்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.  நம் சூரிய குடும்பத்துக்கு வெளியே தற்போது மட்டும் 715 புதிய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன என நாசா அறிவித்திருக்கிறது. கெப்ளர் தொலைநோக்கி புதிய உத்தி மூலம் புதிய கோள்களுக்கான தேடலில் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
     மனிதர்களூக்குத் தெரிந்த கோள்களின் எண்ணிக்கை இன்று இரு மடங்காகியிருக்கிறது.  305 வெவ்வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.
     புதிய கோள்கள் கண்டறியப்பட்டாலும், இக்கோள்களின் கூட்டுப் பொருள்கள் ( அல்லது எவற்றையெல்லாம் உள்ளடக்கியவை ) என்பது குறித்த அதிக விவரங்கள் தெரியவில்லை.  கடினமான தரை, நீர், அவை சுற்றிவரும் நட்சத்திரங்களிலிருந்து அவற்றின் தொலைவு, உயிர்கள் வாழ்வதற்கான சூழல் ஆகியவை குறித்து அறியப்படவில்லை.  அந்தக் கோள்கள் அதிக வெப்பமுடையவையா, கடும் குளிர் நிலவும் பிரதேசமா என்பன போன்ற விவரங்களும் அறியப்படவில்லை.  ஆனால், தங்கள் நட்சத்திரங்களை அவை பலமுறை கடப்பதை வானிலையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ். வெள்ளி, பிப்ரவரி 28 , 2014.  

Sunday, December 6, 2015

மின்சார தகனமேடை.


     உடலை எரியூட்டுதல் என்பது மிக அதிகமான வெப்பத்தின் மூலம் அந்த உடலை முழுவதுமாக மறைய வைப்பதாகும்.  ஆனால், எலும்புகள் மட்டும் மிஞ்சும்.  இவை பின்னர் சாம்பலாகிவிடும்.
     மின்சார தகனமேடைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால் வெப்பத்தால் வெடித்துவிடும் பொருள்களை உடலிலிருந்து நீக்கி விடுவார்கள்.  உதாரணமாக இதய துடிப்பு சரியில்லை என்று அவர் உடலில் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தியிருந்தால் அதை நீக்கிவிடுவார்கள்.
     பிறகு சுலபத்தில் எரியக்கூடிய மரக் கட்டை, அட்டை, கீற்று போன்றவற்றை உடலில் வைத்து தகன அறைக்குள் தள்ளிவிடுவார்கள்.  உடல் உள்ளே சென்றவுடன் கதவுகள் தானாக மூடிக்கொள்ளத் துவங்கும்.  உள்ளே இருக்கும் வெப்பம் 1100 டிகிரி பாரஹீட் ( அல்லது 593 டிகிரி செல்சியஸ் ).  உடலில் 75 சதவீதம் தண்ணீர்தான்.  எனவே இத்தனை வெப்பத்தில் அது சீக்கிரம் நீரை இழந்து உலர்ந்துவிடுகிறது.  மெல்லிய திசுக்கள் எரிந்துவிட , தோல் மெழுகு போல் ஆக... போதும் இதற்கு மேல் விளக்கம் வேண்டாம்.  ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்தில் பொதுவாக மின்சார தகன் மேடை உடலை எரித்து விடுகிறது.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை ?!
-- தினமலர். சிறுவர்மலர். பிப்ரவரி 28, 2014.                                     

Saturday, December 5, 2015

விடை தேடும் பயணம்.

*   ஏ.கே.47 துப்பாக்கியில் உள்ள 47 என்பது எதைக் குறிக்கிறது?
     -- 'ஆட்டோமேடிக்' என்பதிலிருந்து A , இத்துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலாஷ்நிகோவ் பெயரிலிருந்து K, இது முதலில்
     தயாரிக்கப்பட்ட வருடமான 1947 லிருந்து 47 ஆகியவற்றை இணைத்துத்தான் இது AK 47 என்று அழைக்கப்படுகிறது.
*   நோபல் பரிசுகளுக்கான நோபல் குறித்த தகவல் உண்டா?
     -- பொருளாதாரப் பிரிவில் தற்போது நோபல் விருது வழங்கப்படுவது, நோபலின் உயிலில் காணப்படும் வாசகத்தைப்
     பின்பற்றிய ஒன்றல்ல.  அந்த விருதை ராயல் ஸ்வீடிஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற அமைப்பே வழங்குகிறது.  நோபல்
     பெயரில் உள்ள தனிமத்தின் பெயர் நோபலியம்.( Nobelium ).  இதன் அணு எண் 102.
*   பஞ்சாபில் உள்ள லூதியானா எந்தத் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றது?
     --- பஞ்சாபிலுள்ள  மிகப் பெரிய நகரம் லூதியானா.  லோடி பரம்பரையினர் இங்கு கோலோச்சியடைத் தொடர்ந்து இப்பெயர்
    சூட்டப்பட்டது.  இங்கு சைக்கிள்கள் மிக அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
*   பிரபல அரசியல்வாதியின் பேரன் தொடங்கியதுதான் 'பாம்பே டையிங்' நிறுவனம். அந்த அரசியல்வாதி யார்?
     -- இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒரு முக்கியக் காரணமாக விளங்கிய ஜின்னாவின் பேரனான நுஸ்லி வாடியாதான்.
*   வெள்ளி உலோகத்தின் பெயர் சூட்டப்பட்ட நாடு எது?
    -- நைஜீரியா என்ற பெயர் அந்த நாட்டில் ஓடும் நைஜர் நதியிலிருந்து வந்தது.  கோஸ்டரிகா என்றால் செல்வம் கொழிக்கும்
    கடற்கரை என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தம்.  அந்த கடற்கரையில் நிறைய தங்கம் இருக்குமென்று, அங்கு முதலில் சென்ற
    ஸ்பானியர்கள் நினைத்தனர்.  அர்ஜெண்டினம் என்பது வேதியியலில் வெள்ளியின் பெயர்.  அது அதிகமாகக் கிடைப்பதால்
    அந்த நாட்டின் பெயர் அர்ஜெண்டினா ஆனது.
*   ஒலிம்பிக் கொடியில் எவ்வளவு வண்ணங்கள் உள்ளன?
     -- மஞ்சள், நீலம், கறுப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து வண்ண வட்டங்கள் ஒலிம்பிக் கொடியில் உள்ளன.  என்றாலும்
     பின்னணியாக இருக்கும் வெள்ளையையும் சேர்த்தால், ஆறு என்பதுதான் சரியான விடை.
---ஜி.எஸ்.எஸ்.  வினாடி வினா. வெற்றிக்கொடி.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி 24 , 2014. 

Friday, December 4, 2015

பிரசாதம்

 ஹோமங்கள், யாகங்கள் ஆகியவை தேவர்களையும் தெய்வங்களையும் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படுபவை.  இவற்றால் மகிழ்ச்சியடையும் தேவர்கள், மனிதர்களுக்கு அருள்புரிவார்கள்.  'இது எனதல்ல' என்னும் மனநிலையோடு தெய்வங்களுக்கு அர்ப்பணம் செய்வதே யாகங்களின் அடிப்படை.  இந்த அர்ப்பணத்துக்கான பலன் அர்ப்பணம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்கும்.  அந்த யாகங்களில் சிலவற்றையும் அவற்றின் பலங்களையும் இங்கே காணலாம்.
பஞ்ச யக்ன ஹோமத்தின் பலன்கள்:
*   கணபதி ஹோமம்  --  தடைகள் விலகி சகல செல்வங்களும் கிடைக்கும்.
*   மகாசண்டி ஹோமம்  --  பயம், தரித்திரம், எதிரிகள் தொல்லை நீங்கும்.
*   நவக்கிரக ஹோமம்  --  கிரக தோஷங்களை நீக்கும்.
*   மகாசுதர்சன ஹோமம்  --  ஏவல், பில்லி, சூனியம், எதிரிகளை அழிக்கும்.  வெற்றி கிட்டும்.
*   ருத்ர ஹோமம்  --  ஆயுள் விருத்தியடையும்.
-- தொகுப்பு : யோகி.  ஆனந்த ஜோதி.
---'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 13 , 2014.  

Thursday, December 3, 2015

எண்களின் மாயாஜாலம்

  37 என்னும் எண்ணை மூன்று மற்றும் அதன் மடங்கால் பெருக்குங்கள்.  விடைகளின் வரிசை உங்களை ஆச்சரியப்படுத்தும்.
37  x  3  =  111
37  x  6  =  222
37  x  9  =  333
37  x  12 = 444
37  x  15 =  555
வெவ்வேறு எண்களைப் பயன்படுத்தி நீங்களும் இதுபோல முயற்சி செய்து பாருங்களேன்.
-- எஸ்.திருமலை, கோயம்புத்தூர்.
--'தி இந்து' நாளிதழ். புதன், பிப்ரவரி 26,2014.  

Wednesday, December 2, 2015

யானை

*  யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன.  ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.
*  ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு.  ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே
   தந்தங்கள் உண்டு.  உணவைத் தோண்டித் தின்பதற்குத் தந்தங்கள் உதவுகின்றன.
* பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன.  யானைகளின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
*  யானைகளால் தந்தங்களைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரையும் தோண்டிப் பருக முடியும்.
*  யானைகளுக்குப் பெரிய, மெல்லிய காதுகள், யானையின் காதுகளில் அமைந்துள்ள ரத்தத் தமனிகள்தான் அவற்றின் உடல்
   வெப்பநிலையைச் சீராக வைக்கின்றன.  உஷ்ணமான தட்பவெப்பநிலையில் காதுகள் வழியாகப் பயணிக்கும் ரத்தம் அதன்
   உடலைக் குளிர்விக்கிறது.
* பொதுவாக யானைகளை எந்தப் பிராணியும் உணவாகக் கொள்வதில்லை.  இருப்பினும் ஆப்பிரிக்க சிங்கங்கள், குட்டி
   யானைகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள யானைகளை வேட்டையாடித் தின்னும்.  யானைகளுக்குப் பெரிய
   அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மனிதர்களே.
*  யானைகளின் தும்பிக்கையால் ஒரு பொருளின் அளவு, வடிவம், வெப்பநிலையை உணர முடியும்.  உணவைத் தூக்கவும்,
   தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றவும் தும்பிக்கை பயன்படுகிறது.
*  யானையின் தும்பிக்கை 2 மீட்டர் அளவு வளரக்கூடியது.  தும்பிக்கையின் கனம் 140 கிலோகிராம்.  ஒரு லட்சம் தசை
   நாண்களால் உருவாக்கப்பட்டது அது.  ஆனால், தும்பிக்கையில் எலும்புகள் இல்லை.
*  பெண் யானைகள் சேர்ந்து வாழக்கூடியவை.  ஆண் யானைகள் 13 வயதில் தங்கள் மந்தையை விட்டுப் பிரிந்து செல்கின்றன.
   அந்த வயதிலிருந்து ஒரு ஆண் யானை தனியாகவே வாழத் தொடங்குகிறது.
*  யானைகள் தாவர உண்ணிகள்.  இலைகள், கிளைகள், மூங்கில்கள் மற்றும் வேர்ப்பகுதிகளை உணவாக கொள்கின்றன.
-- ஷங்கர்.  உயிரினங்கள் யானை.  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், பிப்ரவரி 26,2014.  

Tuesday, December 1, 2015

பெருமாளின் வாள்

 தொண்டைமண்டலத்தில் உள்ள சென்னப் பட்டினமான இன்றைய சென்னை நகரில் பிரபலமான திருமயிலையில் கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர் பேயாழ்வார்.  ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிறந்த இவர் திருமாலின் நந்தகம் என்னும் வாள் அம்சமாகப் பிறந்தவர்.
   பேயாழ்வார், நாலாயிரத் திவ்வியயப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் நூறு வெண்பாக்களை கொண்டுள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.
   பேயாழ்வார், பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருக்கு சமகாலத்தவர்.  இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிகுந்த வகையில் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே இறையுணர்வுடன் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
    அப்போது இறைவனுடன் ஏற்பட்ட ஆனந்தம் உள்ளடங்காமல் செய்யுள் வடிவமாக வெளிவரலாயிற்று.  அச்செய்யுள் தொகுதி முறையே பொய்கையாழ்வாருடைய முதல் திருவந்தாதி, பூதத்தாழ்வாருடையது இரண்டாம் திருவந்தாதி, பேயாழ்வாருடையது மூன்றாம் திருவந்தாதி எனப் பெயர் பெற்றன.
    இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டும் ஒன்றே என்ற ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார் என்றும் கருதப்படுகிறது.
    இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர்.  இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் மற்றவர்களிடமிருந்து இவரைத் தனித்துக் காட்டின.  தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர்போல, கண்கள் சுழலும்படி விழுந்தார், எழுந்தார், தொழுதார், குதித்து ஆடினார், பாடினார், பெருமானை விண்ணுலகத்தில் விட்டுவிட்டு, தான் மட்டும் பூலோகத்தில் இருந்ததால் ஏற்பட்ட பிரிவாற்றாமை தாளாமல் அலறினார்.  இதனால் இவரைப் பேயாழ்வார் என்று குறிப்பிட்டு பக்தர்கள் கொண்டாடினர்.
     பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள திருக்கோயில்கள் வேளுக்கை, திருக்கடிகை, திருவல்லிக்கேணி, திருவிண்ணகரம், திருக்கோஷ்டியூர், திருப்பாடகம், திருவெக்கா,திருமாவிலஞ்சோலை, கும்பகோணம் மற்றும் திருவேங்கடகம்.
     திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியுள்ள சக்கரத்தைக் காலைக் கதிரவன் என்று கருதி மலர்கிறதாம்.  அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதை அவரது கற்பனை சக்திக்கு உதாரணமாகக் கூறலாம்.
-- ராஜேஸ்வரி ஐயர்.  ஆழ்வார்கள். ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 13,2014.