Saturday, April 25, 2015

சிறுநீர் !

  இந்த  உலகம்  கடல்  நீரால்  சூழப்பட்டு  இருப்பதுபோல்,  உயிர்கள்  சிறுநீரால்  சூழப்பட்டு  இருக்கின்றன.  சிறுநீர்   இழிவானதன்று.  மாரடைப்பைத்  தடுக்கும்  மருந்து  சிறுநீரில்  தயாரிக்கப்படுகிறது.  சிறுநீரில் தங்கமெடுக்க  முனைந்த  ஆராய்ச்சி  வெள்ளை  பாஸ்பரஸ்  கண்டுபிடிப்பில்  முடிந்தது.  சில  நூற்றாண்டுகளுக்கு  முன்பு  வரைக்கும்  தோலின்  மினுமினுப்புக்கு  உடம்பெங்கும்  சிறுநீர்  பூசிக்கொண்டார்கள்  இங்கிலாந்துப்  பெண்கள்.
      சிறுநீரில்  ஊறிய  புல்லைத்தான்  பல்  துலக்கப்  பயன்படுத்துகிறார்கள்  எஸ்கிமோக்கள்.  கோமேயம்தான்  சிறந்த  கிருமி  நாசினி  என்று  கண்டுபிடித்தவர்கள்  இந்துக்களும்  ஆப்பிரிக்கர்களும்.
      ஒரு  டஜன்  எலிகள்  கூடி  ஒரு  நாள்  முழுக்கச்  சிறுநீர்  கழித்தாலும்  ஒரு  ஸ்பூன்கூட  நிரம்பாதாம்.  ஆனால்,  ஒரு  யானை  ஒரு  நாளில்  49  லிட்டர்  சிறுநீர்  கழிக்கிறதாம்.
      கொசுவுக்கும்  சிறுநீர்  உண்டு.  ஆனால்,  அதன்  கழிப்பறைதான்  உலகத்திலேயே  உயர்ந்தது.  மனித  உடல்தான்  கொசுவின்  சிறுநீர்  கழிப்பறை.  உடம்பில்  ஊசிபோடும்  கொசு,  தன்  சிறுநீரை  உடம்புக்குள்  கழித்து  விட்டு  அந்தக்  காலி  இடத்தை  நம்  ரத்தத்தால்  நிரப்பிக்கொள்கிறது.
      சிங்கத்தின்  சிறுநீர்  வாசம்  அத்துணை  சீக்கிரம்  தீராது.  காடுகளில்  குறிப்பிட்ட  எல்லைகளில்   சிறுநீர் கழித்துச்  செல்லுமாம்  சிங்கம்.  இது  என்  காடு,  இதற்கு  மேல்  எதிரிகள்  வரக்கூடாது  என்று  எச்சரிக்கை  செய்யுமாம்  சிங்கத்தின்  சிறுநீர் வாசம்.
      ஆட்டுக்  கிடாய்  தன்  உடம்பெங்கும் சிறுநீரைப்  பூசிக்கொள்ளுமாம்.  அது  வெள்ளாட்டைப்  பாலுணர்வுக்கு  அழைத்து  வெறியூட்டுமாம்.  ஆடுகளுக்கு  ' சென்ட்'  ஆகிவிடுகிறது  சிறுநீர்.
       மோஹியோ  பாலைவனத்து  ஆமைகளின்  உடம்பில்  மூன்றில்  ஒரு  பங்கு  சிறுநீர்தானாம்.  உடம்பில்  நீர்ச்  சத்து  குறைந்துபோனால்,  சிறு நீரைத்தான்  சுழற்சிக்கு  அனுப்புமாம்.
       மனிதனின்  பிரச்சனைகள்  ஆரம்பமாவது  இரண்டில்.  சிறுநீர்  அதிகம்  பிரிவது;  மற்றும்  சிறிதும்  பிரியாதது.  அவரவர்  சிறுநீர்  பருகுதல்  அவரவர்  நோய்தீர்க்கும்  என்பதும்  ஒரு  மருத்துவ  நம்பிக்கை.
       எனவே,  சிறுநீர் என்பது  சிறுமைக்குரிய  நீரல்ல,  ' சிறுநீர்  இன்றியும்  அமையாது  இவ்வுலகு '."
-- விகடன் மேடை.  வைரமுத்து  பதில்கள்.
-- ஆனந்த விகடன்.21 . 11 . 2012.  

No comments: