Friday, February 27, 2015

அவர் நிம்மதியாக உறங்கட்டும்!

  ( சிறப்பு )
     ஆக்னஸ்  கோன்ஜா  போஜாஜியூ   என்றால்  யாருக்கும்  தெரியாது.  அன்னை  தெரசா  என்றால்  தெரியாதவர்  யாரும்  இருக்க  மாட்டார்கள்.  தெரசாவின்  இயற்பெயர்தான்  அது.  அல்போனியாவில்  பிறந்து,  இந்திய  குடியுரிமை  பெற்று,  கல்கத்தாவில்  ஆசிரமம்  அமைத்து  ஆதரவற்ற  ஏழைகளுக்கு  சேவை  செய்து  பெரும்  புகழ்  பெற்று  மறைந்தவர்.
     அல்போனிய  மொழியில்  கோன்ஜா  என்றால்  'ரோஜா  அரும்பு'  என்று  அர்த்தம்.  பெயரிலேயே  ரோஜா  இருந்ததாலோ  என்னவோ  அவரது  உள்ளத்தில்  சுரந்த  அன்புக்கும்  குறைவேயில்லை.  1910  ஆகஸ்ட்  26ல்  அவர்  பிறந்தாலும்,  அவர்  ஞானஸ்நானம்  பெற்ற  ஆகஸ்ட்  27ம்  தேதியையே  பிறந்த  நாளாக  கொண்டாடினார்.  அந்த  அளவுக்கு  கிறிஸ்தவம்  மீது  பற்று  கொண்டவர்.
     இளம்  வயதிலேயே  இந்தியா  வந்து  'மிஷினரிஸ்  ஆப்  சாரிட்டி'  என்ற  அமைப்பை  தொடங்கினார்.  12  பேருடன்  தொடங்கப்பட்ட   'மிஷினரிஸ்  ஆப்  சாரிட்டி'  இன்று  4  ஆயிரத்து  500 க்கும்  அதிகமான  சகோதரிகளுடன்  133  நாடுகளில்  600 க்கும்  அதிகமான  தொண்டு  நிறுவனங்களாக  விரிந்து  பரவி  நிற்கிறது.  தொழு  நோயாளிகள்  தொடங்கி  எய்ம்ஸ்  போன்ற  குணப்படுத்த  முடியாத  நோயால்  பாதிக்கப்பட்டவர்கள்,  ஏழை  எளியவர்கள்,  அனாதைகள்,  இறக்கும்  தருவாயில்  தவித்தவர்களுக்காக  45  ஆண்டுகளுக்கும்  மேலாக  அவர்  ஆற்றிய  தொண்டு  மகத்தானது.  அவரது  சேவையை  இப்போது  பலரும்  விவாதத்துக்குரிய  பொருளாக  எடுத்துக்  கொண்டிருப்பது  சகிக்க  முடியாதது.
     சர்ச்சையை  துவக்கிய  ஆர்எஸ்எஸ்  தலைவர்  மோகன்  பகவத்,  அவரது  சேவையையும்  மனிதநேயத்தையும்  குறைகூறவில்லை.  சேவை  என்றால்  பிரதிபலன்  எதிர்பாராததாக  இருக்க  வேண்டும்  என்றுதான்  கூறினார்.  தெரசா  சேவையில்  மதமாற்றம்  என்ற  உள்நோக்கம்  இருகிறது  என்ற  பொருளில்  அவர்  பேசினார்  என்று  அவரது  பேச்சு  அரசியலாக்கப்பட்டது.  தெரசா  சேவை,  இதற்கு  முன்பும்  பலமுறை  விமர்சனம்  செய்யப்பட்டுள்ளது.  கிறிஸ்தவர்கள்  சிலரே  அவரது  சேவையை,  பழமைவாத  மத  நம்பிக்கையை  விமர்சித்துள்ளனர்.
     ஆனால்,  இப்போது  விமர்சித்தவர்    ஆர்எஸ்எஸ்  தலைவர்  என்பதால்  கண்டன  சத்தம்  பலமாக  கேட்கிறது.  மோகன்  பகவத் கருத்தை  எதிர்ப்பவர்களின்  பேச்சுக்களை  கூர்ந்து  கவனித்தால்  ஒன்று  மட்டும்  தெளிவாகிறது.  சேவை  என்ற  பெயரில்  மதமாற்றம்  செய்வது  என்பது  பெருமைக்குரிய  செயல்  அல்ல  என்பதை  அவர்களே  ஒப்புக்  கொள்கிறார்கள்.  சேவை  செய்து  பலனாக  மதமாற்றம்  செய்வது  கேவலமானது  என்று  அவர்களை  அறியாமலேயே  உரக்க  சொல்கிறார்கள்.
     தெரசா  சேவையை  களங்கப்படுத்தக்  கூடாது.  அதேசமயம்,  பொருள்  தந்து  மத மாற்றம்  செய்வது  போன்றதுதான்,  சேவை  செய்து  மதமாற்றம்  செய்வதும்  என்பது  இப்போது  நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
-- தலையங்கம்.
-- தினமலர்.  திருச்சி  27,  பிப்ரவரி  2015,  வெள்ளி. 

No comments: