Saturday, February 28, 2015

பேல்பூரி

கண்டது;
( விக்கிரமசிங்கபுரம்  கோயில்  செருப்பு  பாதுகாக்கும்  இடத்தில் )
  உங்கள்  மிதியடிகளை
  நாங்கள்  பார்த்துக்  கொள்கிறோம்.
  இறைவன்  திருவடிகளை
  நீங்கள்  பாருங்கள்.

( திருச்சி  கிரிதார்  தெருவில்  நின்றுகொண்டிருந்த  ஆட்டோவில் )
  நேற்று  என்பது  நினைவு
  இன்று  என்பது  உனது
  நாளை  என்பது  கனவு.
-- தினமணி கதிர்.  8 -4 -2012.
--  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

Friday, February 27, 2015

தெரியுமா? - தெரியுமே!

*  உலகப்  புகழ்  பெற்ற  ஈஃபிள்  டவர்  1889- ம்  ஆண்டு  மார்ச்  மாதம்  11 -ம்  தேதி  மக்களின்  பார்வைக்காக  திறக்கப்பட்டது.
*  சிறந்த  கட்டடக்  கலை  பொறியாளரான  கஸ்டாவ்  ஈஃபிள்  என்பவரால்  கட்டப்பட்டதால்,  அவரின்  பெயராலேயே  ' ஈஃபிள்  டவர் '  என்று  பெயர்
   உண்டாயிற்று.
*  மக்களின்  பேராதரவைப்  பெற்ற,  ' கோலா '  1886 -ம்  ஆண்டு  மார்ச்  29 -ம்  தேதி  அறிமுகமானது.
*  1- 4-1912 -- இந்தியாவின்  தலைநகரமாக  புது  டில்லி  அறிவிக்கப்பட்டது.  இதற்கு  முன்னர்  கல்கத்தா  தலைநகராக  செயல்பட்டு  வந்தது.
*  6 - 4 - 1942  - ஜப்பான்  விமானப்படை  இரண்டாவது  உலக  மகா  யுத்தத்தின்  போது  இந்தியாவின்  மீது  வெடிகுண்டு  தாக்குதல்  நடத்தியது.
*  25 - 4 - 1982  - தூர்தர்ஷன்  முதல்முறையாக  வண்னத்தில்  தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பியது.
*  18 - 4 - 1991  -  இந்தியாவிலேயே  முழுவதும்  கல்வியறிவு  பெற்ற  மக்களைக்  கொண்ட  மாநிலமாக  கேரளா  அறிவிக்கப்பட்டது.
-- தினமணி  சிறுவர்மணி .  31 - 3 - 2012.                                        
--- இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

அவர் நிம்மதியாக உறங்கட்டும்!

  ( சிறப்பு )
     ஆக்னஸ்  கோன்ஜா  போஜாஜியூ   என்றால்  யாருக்கும்  தெரியாது.  அன்னை  தெரசா  என்றால்  தெரியாதவர்  யாரும்  இருக்க  மாட்டார்கள்.  தெரசாவின்  இயற்பெயர்தான்  அது.  அல்போனியாவில்  பிறந்து,  இந்திய  குடியுரிமை  பெற்று,  கல்கத்தாவில்  ஆசிரமம்  அமைத்து  ஆதரவற்ற  ஏழைகளுக்கு  சேவை  செய்து  பெரும்  புகழ்  பெற்று  மறைந்தவர்.
     அல்போனிய  மொழியில்  கோன்ஜா  என்றால்  'ரோஜா  அரும்பு'  என்று  அர்த்தம்.  பெயரிலேயே  ரோஜா  இருந்ததாலோ  என்னவோ  அவரது  உள்ளத்தில்  சுரந்த  அன்புக்கும்  குறைவேயில்லை.  1910  ஆகஸ்ட்  26ல்  அவர்  பிறந்தாலும்,  அவர்  ஞானஸ்நானம்  பெற்ற  ஆகஸ்ட்  27ம்  தேதியையே  பிறந்த  நாளாக  கொண்டாடினார்.  அந்த  அளவுக்கு  கிறிஸ்தவம்  மீது  பற்று  கொண்டவர்.
     இளம்  வயதிலேயே  இந்தியா  வந்து  'மிஷினரிஸ்  ஆப்  சாரிட்டி'  என்ற  அமைப்பை  தொடங்கினார்.  12  பேருடன்  தொடங்கப்பட்ட   'மிஷினரிஸ்  ஆப்  சாரிட்டி'  இன்று  4  ஆயிரத்து  500 க்கும்  அதிகமான  சகோதரிகளுடன்  133  நாடுகளில்  600 க்கும்  அதிகமான  தொண்டு  நிறுவனங்களாக  விரிந்து  பரவி  நிற்கிறது.  தொழு  நோயாளிகள்  தொடங்கி  எய்ம்ஸ்  போன்ற  குணப்படுத்த  முடியாத  நோயால்  பாதிக்கப்பட்டவர்கள்,  ஏழை  எளியவர்கள்,  அனாதைகள்,  இறக்கும்  தருவாயில்  தவித்தவர்களுக்காக  45  ஆண்டுகளுக்கும்  மேலாக  அவர்  ஆற்றிய  தொண்டு  மகத்தானது.  அவரது  சேவையை  இப்போது  பலரும்  விவாதத்துக்குரிய  பொருளாக  எடுத்துக்  கொண்டிருப்பது  சகிக்க  முடியாதது.
     சர்ச்சையை  துவக்கிய  ஆர்எஸ்எஸ்  தலைவர்  மோகன்  பகவத்,  அவரது  சேவையையும்  மனிதநேயத்தையும்  குறைகூறவில்லை.  சேவை  என்றால்  பிரதிபலன்  எதிர்பாராததாக  இருக்க  வேண்டும்  என்றுதான்  கூறினார்.  தெரசா  சேவையில்  மதமாற்றம்  என்ற  உள்நோக்கம்  இருகிறது  என்ற  பொருளில்  அவர்  பேசினார்  என்று  அவரது  பேச்சு  அரசியலாக்கப்பட்டது.  தெரசா  சேவை,  இதற்கு  முன்பும்  பலமுறை  விமர்சனம்  செய்யப்பட்டுள்ளது.  கிறிஸ்தவர்கள்  சிலரே  அவரது  சேவையை,  பழமைவாத  மத  நம்பிக்கையை  விமர்சித்துள்ளனர்.
     ஆனால்,  இப்போது  விமர்சித்தவர்    ஆர்எஸ்எஸ்  தலைவர்  என்பதால்  கண்டன  சத்தம்  பலமாக  கேட்கிறது.  மோகன்  பகவத் கருத்தை  எதிர்ப்பவர்களின்  பேச்சுக்களை  கூர்ந்து  கவனித்தால்  ஒன்று  மட்டும்  தெளிவாகிறது.  சேவை  என்ற  பெயரில்  மதமாற்றம்  செய்வது  என்பது  பெருமைக்குரிய  செயல்  அல்ல  என்பதை  அவர்களே  ஒப்புக்  கொள்கிறார்கள்.  சேவை  செய்து  பலனாக  மதமாற்றம்  செய்வது  கேவலமானது  என்று  அவர்களை  அறியாமலேயே  உரக்க  சொல்கிறார்கள்.
     தெரசா  சேவையை  களங்கப்படுத்தக்  கூடாது.  அதேசமயம்,  பொருள்  தந்து  மத மாற்றம்  செய்வது  போன்றதுதான்,  சேவை  செய்து  மதமாற்றம்  செய்வதும்  என்பது  இப்போது  நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
-- தலையங்கம்.
-- தினமலர்.  திருச்சி  27,  பிப்ரவரி  2015,  வெள்ளி. 

Thursday, February 26, 2015

மெட்ரிக் பள்ளிகள்.

" மெட்ரிக்  பள்ளிகளில்  கட்டணங்களைக்  கடுமையாக  உயர்த்தியுள்ளார்களே?"
" இதைத்தான்  நெல்லை  ஜெயந்தா  இப்படிக்  கூறுகிறார்.
 ' கொள்ளை  --
   வீடுகளைப்  பூட்டும்போதுன்
   பள்ளிகளைத்  திறக்கும்போதும் !' "
-- தாமு,  தஞ்சாவூர்.
-- நானே  கேள்வி...நானே  பதில்!  ஆனந்த விகடன்.  11 - 07 - 2012.                          

 " முரண்  என்பதை  உதாரணத்துடன்  விளக்கவும்?"
" ' பாலிதீன்  பைகள்  மண்ணுக்கு  எதிரி !'  எனச்  சொல்லிவிட்டு,  மரக்கன்றுகளை  நட ... பாலிதீன்  பைகளிலேயே  மரக்  கன்றுகளை  வைத்துக்  கொடுப்பது!'"
--- என்.சீத்தாலட்சுமி,  சென்னை.
--- நானே  கேள்வி...நானே  பதில்!  ஆனந்த விகடன்.  19 - 09 - 2012.                        
--- இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

மீட்டர் பேசுது


'கிராண்ட்கேன்யன்'


தேசியப்  பூங்காவாக  அறிவிக்கப்பட்டது!  1919  பிப்ரவரி  26.
     (  சிறப்பு ).
     உலகில்  நூற்றுக்  கணக்கான  பள்ளத்தாக்குகள்  இருக்கின்றன.   எனினும்,  அமெரிக்காவின்  அரிசோனா  மாகாணத்தில்  உள்ள  'கிராண்ட்கேன்யன்'  எனும்  மாபெரும்  பள்ளத்தாக்கு  உலகப்  புகழ்பெற்றது.  ஒவ்வொரு  ஆண்டும்  50  லட்சம்  சுற்றுலாப்  பயணிகள்  கண்டுகளிக்கும்  இயற்கைப்  பிரதேசம்.  இது,  277  மைல்  நீளம்,  அதிகப்பட்சமாக  18  மைல்  அகலம்  கொண்ட  இந்தப்  பள்ளத்தாக்கின்  ஆழம்  6,000  அடி.  கண்ணுக்கு  எட்டிய  தூரம்  வரை  பளிச்சென்ற  வண்ணத்தில்  நிற்கும்  பிரமாண்டமான  பாறைகள்,  அவற்றுக்கிடையே  வெண்பஞ்சு  போல்  மிதக்கும்  மேகங்கள்  என்று  பரவசம்  தரும்  பள்ளத்தாக்கு  இது.  1,500 -க்கும்  மேற்பட்ட  வகை  தாவரங்கள்,  மலை  சிங்கம்,  அபூர்வ  வகை  தவளைகள்,  கழுகுகள்  என்று  பல்லுயிரிகளின்  இருப்பிடமாக  இது  இருக்கிறது. 1.7  கோடி  ஆண்டுகளுக்கு  முன்னர்  கொலராடோ  ஆற்றின்  ஆர்பரிக்கும்  நீரோட்டம்  இந்தப்  பகுதியில்  ஏற்படுத்திய  அரிப்பின்  விளைவாக  உருவானது  இந்த  கிராண்ட்கேன்யன்!
     பல  நூற்றாண்டுகளாகச்  செவ்விந்தியப்  பழங்குடிகளின்  இருப்பிடமாக  இருந்த  பிரதேசம்  இது.  பியூப்லோ  இனத்தைச்  சேர்ந்தவர்கள்,  இந்தப்  பள்ளத்தாக்கைப்  புனித  ஸ்தலமாகக்  கருதினார்கள்.  இந்த  இடத்திற்கு  புனிதப்  பயணம்  மேற்கொண்டார்கள்.  1540-ல்  ஸ்பெயினைச்  சேர்ந்த  கார்சியா  லோபெஸ்  டி  கார்டெனாஸ்  என்ற  பயணி  இந்தப்  பள்ளத்தாக்கைக்  கண்டறிந்த  பின்னர்தான்  இந்தப்  பிரதேசம்பற்றி  வெளியுலகத்துக்குத்  தெரியவந்தது.
     300  ஆண்டுகளுக்குப்  பின்னர்,  அமெரிக்காவைச்  சேர்ந்த  மண்ணியல்  ஆய்வாளர்  வெஸ்லி  பாவல்,  இந்தப்  பகுதிக்குப்  பயணம்  செய்த  பின்னர் 'கிராண்ட்கேன்யன்'  என்ற  பெயரைப்  பிரபலப்படுத்தினார்.
     1919  பிப்ரவரி  26-ல்  அப்போதைய  அதிபர்  உட்ரோ  வில்சன்,  இந்தப்  பகுதியை  தேசியப்  பூங்காவாக  அறிவித்தார்.
-- சரித்திரன்.   ( கருத்துப்  பேழை ).
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  பிப்ரவரி  26, 2015.
    (  பின் குறிப்பு :  நாங்கள்  குடும்பத்துடன்  கடந்த  2008 ஆம்  ஆண்டு  ஆகஸ்ட்  மாதம்  16 மற்றும்  17 -ல் 'கிராண்ட்கேன்யன்'
பிரதேசத்தைக்  கண்டு  களித்தோம்  என்பதை  மகிழ்வுடன்  தெரிவித்துக்கொள்கிறேன். )                         

Wednesday, February 25, 2015

ஆசிரியன்.

   வேத  மந்திரம்  கற்பிப்பவன்  ஆச்சாரியன்.
      பொருள்  பெற்றுக்  கொண்டு  கல்வி  கற்பிப்போன்  உபாத்யாயன்.
      பிறவியையும்  வாழும்  வழியையும்  பயிற்றுவோன்  குரு.
      விரும்பி  வேண்டிக்  கொள்ள  தீ  வளர்த்தலும்  வேள்விகளும்    கற்பிக்கிறவன்  ' ரித்விக்.
      வேத  மொழிகளை,  ஒலி  பிசகாது  உச்சரித்து,  கேட்போர்  செவிகளுக்கு  நிறைவு  தருகின்றவன்  தாய்  தந்தைக்குச்  சமம்.
      உபாத்தியாயனைப்  பார்க்கிலும்,  ஆச்சாரியன்  பத்து  மடங்கு  உயர்ந்தவன்.  ஆச்சார்யனை  விட  அறிவு  நூல்  கற்க  வழி  காட்டிய  குரு  நூறு  மடங்கு  உயர்ந்தவன்.  பெற்ற  தாயோ  குருவைவிட  ஆயிரம்  மடங்கு  உயர்ந்தவள்.  பெற்ற  தாயைவிட  நன்னடை  தந்த  குருவே  உயர்ந்தவர்.
      தாயும்  தந்தையும்  பெற்றெடுக்கும்  உடல்  ஒரு  விலங்கு  போன்றதே.'
- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு. 

Tuesday, February 24, 2015

பிராமணர் சிறப்பு

 ஆணின்  மெய்  முழுவதும்  தூய்மையானது.  இடைக்கு  மேலே  மிகவும்  தூய்மையானது.  அதனால்  பிரம்மாவின்  முகம்  மிகத்  தூய்மையானது.
      பிராமணன்  பிரம்மாவின்  தூய்மையான  முகத்திலிருந்து  முதன்முதலில்  தோன்றினான்.  அதனால்  அவன்  பிறவியிலேயே  வேதங்கள்  பெற்றவனாகிறான்.  ஆகவே  அவன்  மனிதப்  படைப்புகள்  யாவற்றிலும்  மேலானவன்.
வளரும்  போது:
      முதல்  மூன்று  வருணத்தாரும்  பிறந்த  ஆண்டோ  மூன்றாம்  ஆண்டோ  முடி  எடுக்க,  16,  22,  24 ஆம்  வயதிலும்  முடி  நீக்கம்  செய்க.
      எட்டு  வயதில்  பிராமணனுக்கும்,  பதினோரு  வயதில்  சத்திரியனுக்கும்,  பன்னிரெண்டு  வயதில்  வைசியனுக்கும்  கல்வி  அளிக்க.  வயதுக்  கணக்கு  கருவுற்றதில்  இருந்து.
--- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்  
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.  

Monday, February 23, 2015

இதயத்தைச் சுரண்டாதீர்!

 ரத்தக்குழாய்களில்  ஏற்படும்  அடைப்பைப்  போக்குவதற்கும்  ரத்தக்குழாய்களை  வலுப்படுத்துவதற்கும்  ரத்தக்குழாய்களுக்குள்  பொருத்தப்படும்  சிறு  பொருள்தான்  'ஸ்டென்ட்'.  இவற்றின்  நீளம்  8  ,மி.மீ.  முதல்  38  மி.மீ.  வரை  இருக்கும்.  கம்பிவலையால்  ஆன  சிறு  குழாய்போல  இருக்கும்  இந்த  ஸ்டென்ட்டுகளில்  பல  வகைகள்  இருக்கின்றன.  அவற்றுள்  ஒரு  வகைதான்  மருந்து  செலுத்தும்  'ஸ்டென்ட் ' ( டி.இ.எஸ்.).  ரத்தக்குழாய்க்குள்  வைக்கப்பட்ட  பிறகு,  கொஞ்சம்  கொஞ்சமாக  மருந்தைக்  கரைய  விடும்  'ஸ்டென்ட்'  இது.
     இந்தியாவில்  கடந்த  2014-ல்  மட்டும்  சுமார்  4  லட்சம்  பேருக்கு  'ஸ்டென்ட்'டுகள் பொருத்தப்படிருக்கின்றன.  அவற்றில்  85%  டி.இ.எஸ்.  வகை  'ஸ்டென்ட்'டுகள்.  இப்போது  இவற்றின்  விலை  ரூ.65,000  முதல்  ரூ.1,00,000  வரை  போய்  நிற்கிறது.  குறைந்தபட்சமாக  ரூ.65  ஆயிரம்  என்று  வைத்துக்கொண்டால்கூட  கடந்த  ஆண்டு  மட்டும்  இதற்கென்று  இந்திய  நோயாளிகள்  செலவிட்டிருக்கும்  தொகை  சுமார்  ரூ. 2,300  கோடி.  இதுவும்  அந்தக்  கருவிக்கான  தொகை  மட்டுமே.  அதைப்  பொருத்துவதற்கான  மருத்துவரின்  கட்டணம்,  மருத்துவமனை  செலவு,  பரிசோதனைகள்,  சிகிச்சைகள்  எல்லாவற்றையும்  சேர்த்தால்  கணக்கு  எங்கோ  போய்  நிற்கிறது.
     கொடுமை  என்னவென்றால்,  மத்திய  சுகாதாரத்  அமைச்சகம்  வெவ்வேறு  மருத்துவத்  திட்டங்களின்  கீழ்  இந்தக்  கருவிக்கு  நிர்ணயித்திருக்கும்  விலை  ரூ.23,625.  அதாவது,  இந்த  விலையில்  'டி.இ.எஸ்.'  எல்லோருக்கும்  கிடைக்கும்  என்றால்,  வருடத்துக்குக்  கிட்டதட்ட  ரூ. 1,500  கோடி  மிச்சமாகும்.  ஆனால்,  ஒட்டுமொத்த  நோயாளிகளில்  அரசின்  மருத்துவத்  திட்டங்களின்  கீழ்  வருபவர்களின்  எண்ணிக்கை  கிட்டதட்ட  30%தான்.
     பெருகிவரும்  இதய  நோய்கள்  காரணமாக  'ஸ்டென்ட்'டுகளுக்கான  சந்தை  ஆண்டுதோறும்  15%  அதிகரிக்கிறது.  இது  மேலும்  அதிகரிக்குமே  தவிர  குறைவதற்கான  அறிகுறிகளே  இல்லை.  பெரும்பாலான  மருத்துவர்கள்  மிகக்  குறைந்த  விலையில்  'ஸ்டென்ட்'டுகளை  பெற்றுக்கொண்டு,  நோயாளிகளுக்குப்  பொருத்தும்போது,  சம்பந்தமில்லாத  கூடுதல்  செலவுகளையும்  அவர்கள்  தலையில்  கட்டிவிடுவதாகக்  குற்றம்  சாட்டப்படுகிறது.  இதைவிடக்  கொடுமை  இந்திய  நிறுவனங்கள்  இந்த  சாதனத்தை  ரூ.12,000  முதல்  ரூ. 30,000  வரையிலான  விலையில்  தருகின்றன.  ஆனால்,  மூன்று  அமெரிக்க  நிறுவனங்கள்  உள்ளிட்ட  பன்னாட்டு  நிறுவனங்கள்  பெருமருத்துவமனைகளை  வைத்து  நடத்தும்  சூதாட்டம்.  நோயாளிகள்  மீது  பல  மடங்கு  சுமையைச்  சுமத்தக்  காரணமாக  அமைகிறது  மருத்துவமனைகள்  நோயாளிகளுக்கேற்ப/ தங்கள்  லாப  நோக்கதுக்கேற்ப  விலை  நிர்ணயித்துச்  சுரண்டலை  நடத்துகிறது.
     ஒரு  மக்கள்நல  அரசானது  கல்ல்வி- சுகாதாரம்  உள்ளிட்ட  மக்களின்  தேவைகளை  நிறைவேற்றும்  பொறுப்பைத்  தம்  கையில்  வைத்திருக்க  வேண்டும்.  அது  இங்கே  நடக்காத  சூழலில்தான், தம்  உழைப்பையும்  சேமிப்பையும்  தனியார்  மருத்துவமனைகளின்  மேஜைகளில்  கொண்டுபோய்  கொட்டுகிறார்கள்.  இந்திய  மக்கள்,  அங்கும்  தன்னுடைய  கண்காணிப்பின்மையாலும்  பொறுப்பற்றதனத்தாலும்  மக்களைத்  தனியார்   மருத்துவமனைகள்  சுரண்ட  அரசு  அனுமதிக்கக்  கூடாது.  அரசு  நினைத்தால்,  ஒரு  ஆணையில்  மாற்றத்தைக்  கொண்டுவரக்கூடிய  விவகாரம்  இது.
-- தலையங்கம்.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி  23, 2015. 

சாம்பிராணி தைலம் !.

ஜலதோஷத்துக்கு  சாம்பிராணி  தைலம் !
      தலைவலி,  ஜலதோஷம்  போன்றவற்றை  போக்கும்  சாம்பிராணி  தைலத்தை  செய்வது  எப்படி?
      களிம்பு  ஏறாத  பெரிய  பாத்திரத்தை  எடுத்து,  அதில்  300  கிராம்  பளிங்கு  சாம்பிராணியை  போட்டு  மேலே  காற்று  புகமுடியாத  அளவில்  ஒரு  தாம்பாள  தட்டை  வைத்து  மூடி,  தீ  எரிக்க  வேண்டும்.  மூடியிருக்கும்  தாம்பாளத்தில்  தண்ணீர்  விட்டு  வைக்க  வேண்டும்.  ஒரு  மணி  நேரம்  கழித்தபிறகு,  மூடிய  எடுத்து  பிடித்தால்  மூடியில்  அடியில்  சாம்பிராணி  தைலம்  ஒட்டி  இருக்கும்.  இதை  வழித்து  ஒரு  கண்ணாடி  கோப்பையில்  வைத்து  கொண்டு  கஸ்தூரி  தைலத்தை  அதில்  விட்டு  கலக்கி  மூடி  போட்ட  சீசாவில்  அடைத்து  கொள்ள  வேண்டும்.
-- -தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012. 

Sunday, February 22, 2015தெரியுமா? தெரியுமே!

*  முதன்முதலில்  பிளாஸ்டிக்  ரூபாய்  நோட்டை  அறிமுகப்படுத்திய  நாடு  ஆஸ்திரேலியா.
*  இந்திய  சினிமாவுக்கு  வயது  100  ஆகிவிட்டது.
*  கடந்த  1859ம்  ஆண்டு  கொல்கத்தா  அருகே  ரிஸ்ரா  என்ற  இடத்தில்  இந்தியாவின்  முதல்  சணல்  நார்  தொழிற்சாலை  தொடங்கப்பட்டது.
*  இந்தியாவின்  உப்பு  தேவையில்  குஜராத்  மாநிலத்தில்  மட்டும்  60%  உப்பு  உற்பத்தி  செய்யப்படுகிறது.  2 வது  இடமான  தமிழகத்தில்  16%  உப்பு
   உற்பத்தி  செய்யப்படுகிறது.
*  இந்தியாவின்  முதல்  அணுசக்தி  ஆலை  அப்சரா  அணுசக்தி  ஆலையாகும்.  இந்த  ஆலை  4 . 8. 1956ல்  தொடங்கி  வைக்கப்பட்டது.
*  உலகளவில்  அரிசி  உற்பதியில் இந்தியா  2 வது  இடம்  வகிக்கிறது.
*  இந்தியாவின்  முதல்  நவீன  காகித  தொழிற்சாலை  கடந்த  1879ம்  ஆண்டு  உத்தரப்பிரதேச  தலைநகர்  லக்னோ  அருகே  தொடங்கப்பட்டது.
---   -தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012.

Saturday, February 21, 2015

ஸ்னோ கிரீம்,

ஸ்னோ  கிரீம்  செய்வது  எப்படி?
     10  கிராம்  ஸ்பெர்மாசிட்டி,  1  கிராம்  சுத்தமான  மெழுகு,  500  கிராம்  ஆயில்  ஆப்  சுவீட்  ஆமண்ட்,  50  கிராம்  பன்னீர்  போன்றவை  போதும்.
     ஒரு  பாத்திரத்தில்  ஸ்பெர்மாசிட்டி,  மெழுகு  போன்றவற்றை  போட்டு  உருக்க  வேண்டும். நன்றாக  உருகிய  பிறகு,  ஆயில்  ஆப்  ஸ்வீட்  ஆமண்ட்,  பன்னீரை  சேர்த்து  நன்றாக  கலக்க  வேண்டும்.  கிளறிக்கொண்டே  இருந்தால்  கெட்டிப்படும்.  அப்போது  கலவையை  கீழே  இறக்கி  நன்றாக  கிளறிக்கொண்டே  இருந்தால்  ஆறிவிடும்.  இப்போது  ஸ்னோ  க்ரீம்  ரெடி.
---தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012.

Friday, February 20, 2015

மல்லிகைப்பூ அத்தர்

மல்லிகைப்பூ  அத்தரை  தயாரிப்பது  எப்படி?
     600  கிராம்  நல்லெண்ணையை  களிம்பு  ஏறாத  பாத்திரத்தில்  விட்டு  அடுப்பில்  வைத்து  25  கிராம்  ஆல்கனெட்  ரூட்டை  போட்டு  நன்றாக  காய்ச்சினால்  அது  சிவந்த  நிறமாக  மாறிவிடும்.  அப்போது  பாத்திரத்தை  இறக்கி  விட  வேண்டும்.  சிறிது  நேரம்  ஆறிய  பிறகு,  துணியில்  வடிகட்டி  அதில்  45  மில்லிகிராம்  லெமன்  ரோசை  விட்டு  நன்றாக  கலந்து  அழகிய  சீசாக்களில்  அடைத்து  உபயோகப்படுத்தலாம்.

கண்  மை.
கண்  மை  தயாரிப்பது  எப்படி?
     சுத்தமான  மெல்லிய  வெள்ளை  துணியில்  சுத்தமான  பசுவின்  வெண்ணையை  தடவி  திரியை  தயாரித்து  கொள்ள  வேண்டும்.  அதை  அகல்  விளக்கில்  போட்டு  மேலும்  வெண்ணையை  விட்டு  திரியை  எரிய  விட  வேண்டும்.  திரி  எரியும்  போது  வரும்  புகையை,  ஒரு  தட்டையான  எவர்சில்வர்  பாத்திரத்தில்  லேசாக  வெண்ணையை  தடவி  அதில்  பிடித்துக்  கொள்ள  வேண்டும்.  புகை  சேர,  சேர  அதை  சுத்தமான  கரண்டியால்  வழித்து  ஒரு  கிண்ணத்தில்  வைத்து  கொள்ள  வேண்டும்.  இதை  சிறிய  டப்பாக்களில்  போட்டு  அடைத்து,  உபயோகிக்க  வேண்டும்.
--- தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012. 

Thursday, February 19, 2015

தெரிஞ்சுக்கோங்க...

*  திருக்குறளை  முதன்முதலாக  ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தவர்  ஜி.யு.போப்  ஆவார்.
*  தேசிய  தாவரவியல்  பூங்கா  லக்னோவில்  துவங்கப்பட்டது.
*  ஆங்கிலம்  1835 ம்  ஆண்டு  இந்தியாவின்  கல்வி  மொழியானது.
*  சூயஸ்  கால்வாய்  செங்கடலையும்,  மத்தியதரைகடலையும்  இணைக்கிறது.
*  மிகக்  குறைந்த  வெப்பநிலை  குறித்தும்,  அதை  உருவாக்குவது  பற்றியும்  படிப்பது  ' கிரயோஜெனிக்ஸ் ' ஆகும்.
*  டில்லி - லாகூர்  இடையே  பஸ்  போக்குவரத்து  முதன்முதலாக  1999ம்  ஆண்டு  துவங்கப்பட்டது.
*  இந்தியாவில்  1957ம்  ஆண்டு  " அனா  நாணய  முறை  மாற்றப்பட்டு  புதிய " பைசா "  நாணய  முறை  அறிமுகப்படுத்தப்பட்டது.
*" மெட்ராஸ் "  என்னும்  பெயர்  " சென்னை "  என்று  1996ம்  ஆண்டு  அதிகாரப்பூர்வமாக  மாற்றம்  செய்யப்பட்டது.
*  பூமி  சூரியனை  சுற்றிவரும்  அதே  திசையில்  வலம்  வரும்  கிரகம்  " வீனஸ் "  ஆகும்.
-- தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012. 

Wednesday, February 18, 2015

நால்வருண ஒழுக்கம்.

பிராமணர்:  வேதஞானம்,  வேதம்  ஓதல்,  ஓதுவித்தல்,  வேள்விபுரிதல்,  புரிவித்தல்,  செல்வம்  ஈதல்,  ஏற்றல்.
சத்திரியர்:  உலகை  ஆளுதல்,  மக்களைக்  காத்தல்,  கொடை,  வேள்வி  செய்வித்தல்,  வேதம்  பயிற்றுவித்தல்,  எதனாலும்  ஈர்க்கப்படாத  திடமனத்தினராய்
                 இருத்தல்.
வைசியர்:  செல்வம்  தேடுதல்,  கடல்,  மலை,  கனிப்பொருள்,  விளைபொருள்,  வணிகம்  செய்தல்,  ஆநிரை  காத்தல்,  பயிர்த்தொழில்,  வட்டித்  தொழில்
                 செய்தல்.
சூத்திரர்:  பிராமணர்,  சத்திரையர்,  வைசியர்  மூவர்க்கும்  அவர்களின்  விருப்பப்படி  பணிபுரிதல்.  சூத்திரர்  ஈதல்  முதலிய  பிற  கடங்களும்  செய்வர்.
---   காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
--- இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.

Tuesday, February 17, 2015

யுகங்கள்.

கிருதயுகம்,  4000  தேவ  ஆண்டுகள்.  விடிவதற்கு  400,  அந்திமயங்க  400  ஆண்டுகள்.  ஆக  4800  தேவ  ஆண்டுகள்  கொண்டது  கிருதயுகம்.
திரேதாயுகம்  3600,  துவாபரயுகம்  2400,  கலியுகம்  1200  தேவ  ஆண்டுகள்  கொண்டவை.  இந்த  யுகங்கள்  ஒவ்வொன்றிற்கும்  வைகறைக்கு  நூறு,  அந்திக்கு  நூறு,  ஒரு  யுகத்திற்கு  1000  ஆக  1200  தேவ  ஆண்டுகள்  வீதம்  கிருதயுகத்தின்  4800  இலிருந்து  குறைந்து  கொண்டே  வருவதாம்.
இந்த  நான்கு  யுகங்களும்  சேர்ந்த  12000  வருடங்கள்  ஒரு  தேவயுகமாகும்.  ஒரு  1000  தேவயுகங்கள்  பிரம்மாவுக்கு  ஒரு  முழுநாள்.
பகல்  பிரம்மாவின்  தொழில்  நேரம்.  இரவு  அவரின்  கனவு  நேரம்.
--   காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.  

Monday, February 16, 2015

காலக்கணக்கு.

18  இமை நேரம்  =  1  காஷ்ட்டை
30  காஷ்ட்டை    =  1  கலை
30  கலை            =  1  முகூர்த்தம்
30  முகூர்த்தம்     =  1  நாள்
( ஓர்  இரவும்  ஒரு  பகலும்  சேர்ந்தது  1  நாள் )
பகல்  இரவுகளை  வகுப்பவன்  சூரியன்.
30  நாள்  1  மாதம்,  15  நாட்கள்  வளர்பிறை,  15  நாட்கள்  தேய்பிறை,  12  மாதம்  1  ஆண்டு.  இது  மனிதர்க்கு  வகுக்கப்பட்ட  கால  அடைவு.
தேய்பிறை  15  நாட்களும்  1  பகல்,  வளர்பிறை  15  நாட்களூம்  1  இரவு.  இரண்டும்  கூடிய  1  மாதம்,  முன்னோர்க்கு  ஒரு  நாள்.
1  மனித  ஆண்டு  தேவர்க்கு  1  நாள்.  உத்தராயணம் ( ஆடி  முதல்  ஆனி  முடிய  6  மாதம் )  1  தேவ  பகல்.  தட்சிணாயணம் ( ஆடி  முதல்  மார்கழி  முடிய  6  மாதம் ) 1  தேவ  இரவு.  மானிட  ஆண்டுகள்  30  அல்லது  360  மாதம்  ஒரு  தேவ  மாதம்.  அவை  பன்னிரெண்டு  கொண்டது  ஒரு  தேவ  ஆண்டு.
--  காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
--- இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.  

Sunday, February 15, 2015

நான்கு வருணங்கள்.

   பிரம்மா  மனிதரைப்  படைக்கும்  போதே  பிரம்மர்,  சத்திரியர்,  வைசியர்,  சூத்திரர்  என  நான்கு  வருணத்தவர்களாகப்  படைத்தார்.
     பிரம்மா  தம்  முகத்திலிருந்து  பிரம்மர்களையும்,  தோளிலிருந்து  சத்திரியர்களையும்,  தொடையிலிருந்து  வைசியர்களையும்,  காலிலிருந்து  சூத்திரர்களையும்  பிறப்பித்தார்.
     பிரம்மா  வடிவம்  கொண்டு  படைப்புத்  தொழிலைச்  செய்த  பரம்பொருள்  பின்  இரண்டாவது  முறையாக  ஆண்,  பெண்  தன்மைகள்  கலந்த  பேருருவினன்  என்னும் ( விராட் புருஷன் )  வடிவம்  கொண்டார்.
     விராட்  புருஷனாய்  வந்த  பிரம்மா,  முதலில்  பத்து  முதல்  மனிதர்களைப்  படைத்தார்.  அவர்கள்  மரீசி,  அத்திரி,  ஆங்கிரசர்.  புலஸ்தியர்,  புலகர்,  கிருது,  பிரசேதசர்,  வசிட்டர்,  பிறகு,  நாரதர்  ஆகியோராவர்.
-- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு

Saturday, February 14, 2015

' நச் ' பதில் ?

" புராண  காலத்துல்கூட  ' நச் '  பதில்  உண்டா?"
' ஒரு  பத்திரிகையில்  படித்தது.  தங்களுக்கும்  தர்றேன்.
     துஷ்யந்தன்  கேள்வி:  ' பெண்ணே...நீ  யார்?  உன்  பெயர்  என்ன?  உன்  பெற்றோர்  யார்?   உனக்குக்  கணவன்  இருக்கிறானா?  உனக்கு  என்ன  வேண்டும்?  இந்த  நாட்டில்  யாராவது  உனக்குக்  கெடுதல்  செய்தார்களா?  இந்தச்  சிறுவன்  யார்?  இவனுக்கும்  உனக்கும்  உள்ள  உறவு  என்ன? '
     சகுந்தலை:  ' மகனே...உன்  தந்தைக்கு  வணக்கம்  சொல் !' "
-- சௌந்தரராஜன்,  சென்னை - 26. ( நானே  கேள்வி ...நானே  பதில் !  பகுதியில் )
-- ஆனந்த விகடன் .  5 - 9 - 2012.  

Friday, February 13, 2015

நிலா, பாட்டி, ஆம்ஸ்ட் ராங் !

  சந்திரனில்  காலடித்  தடத்தைப்  பதிவு  செய்த  முதல்  மனிதர்  ஆம்ஸ்ட்ராங்  தனது  82 -வது  வயதில்  வாழக்கைப்  பயணத்தை  நிறைவு  செய்துகொண்டார்.  நிலவில்  முதல்  மனிதனாகக்  காலடி  வைத்து  அமெரிக்கக்  கொடியை  நட்ட  நீல்  ஆம்ஸ்ட்ராங்,  அங்கு  மொத்தம்  2  மணி  நேரம்  31  நிமிடங்கள்  இருந்தார்.  அந்தப்  பயணம்  முடிந்து  பூமிக்குத்  திரும்பிய  ஆம்ஸ்ட்ராங்கை  உலகமே  கொண்டாடியது.  ஆனால்,  அவர்  அந்தப்  புகழ்  போதையை  மனதில்  ஏற்றிக்கொள்லாமல்  இறுதிவரை  எளிமையாகவே  வாழ்ந்து  மறைந்திருக்கிறார்.  பாராட்டு  விழாக்களைக்கூடத்  தவிர்த்தவர்.  ஓய்வுக்குப்  பின்னும்  அமெரிக்காவின்  விண்வெளி  ஆராய்ச்சித்  திட்ட  மேம்பாடுகளுக்காக  நாசாவுக்கு  மெயில்  அனுப்பாத  நாளே  கிடையாது  என்கிறார்கள்.  யார்  கண்டது?  உடலைவிட்டுப்  பிரிந்த  அவரது  ஆன்மா  சந்திரனில்  சுற்றிக்கொண்டு  இருக்கலாம்.  இனி  நிலா - பாட்டி  கதை  சொல்பவர்கள்  ஆம்ஸ்ட்ராங்கையும்  அதில்  சேர்த்துக்  கொள்ளுங்கள் !
--ஆனந்த விகடன் .  5 - 9 - 2012.  

Thursday, February 12, 2015

ஒடிசா உல்லாசம் !

ஒடிசா  கடற்கரையில்  ஒரு  உல்லாசம் !
     ஒடிசா  மாநிலத்தில்  உள்ள  35  கி.மீ,  நீளமுள்ள  கடற்கரைக்கு  ' கரிமாத்தா '  என்று  பெயர்.  ஆண்டுதோறும்  டிசம்பர்  முதல்  மார்ச்  மாதம்  வரையிலான  காலத்தில்  இந்தக்  கடற்கரையில்  ' அரிபாடா '  என்னும்  அரிய  கண்கவர்  நிகழ்ச்சி  சிறப்பாக  நடைபெறுகிறது
     அரிபாடா  என்பது  வேறொன்றுமில்லை.  ஆலிவ்  ரிட்லி  எனப்படும்  உலகிலேயே  மிகச்  சிறிய  வகை  ஆமைகள்  பெருந்திரளாய்க்  கூடி  முட்டையிடும்  காட்சிதான்.
      உலகக்  கடற்பரப்பில்  பல  திசைகளில்  இருந்து  வந்து  சேரும்  இந்த  ஆமைகள்,  கரிமாத்தா  கடற்கரையில்  ஜோடி  ஜோடியாய்  காதல்  புரியும்  போது,  கடற்கரை  நீர்ப்பகுதி  முழுவதும்  கருந்திட்டுகள்  போல்  காட்சியளிக்கும்.
      கடல்நீரிலேயே  முழுமையாய்  காலம்  கழிக்கும்  இந்த  ஆமைகள்  முட்டையிடுவதற்கு  மட்டுமே  தடம்மாறி  தரைக்கு  வருகின்றன.  இப்படி  வரும்  ஆமைகள்  ஆபத்து  கருதி,  இரண்டு  மணி  நேரத்திற்குள்  தமக்கு  பிடித்தமான  இடத்தைக்  கடற்கரையில்  தேர்வு  செய்து  தன்  பின்னங்கால்களால்  மண்ணைத்  தோண்டி  ஒரு  மணர்குழிவை  ஏற்படுத்துகின்றன.  பிறகு  இக்குழியின்  முன்புறத்தில்  அமர்ந்து  எக்கச்சக்கமான  முட்டைகளை  இட்டு,  தம் பின்ங்கால்களால்  மணலை  இறைத்து  குழியை  மூடிவிட்டு  கடலுக்குத்  திரும்பி  விடுகின்றன.  இப்படி  ஒவ்வொரு  சீசனிலும்  பெண்  ஆமைகள்  ஒரு  மில்லியனுக்கு  மேல்  இங்கே  ஒன்று  கூடி  50  மில்லியன்  முட்டைகளுக்குமேல்  இடுகின்றன  என்பது  ஒரு  ஆச்சரியம்.
     இந்த  நிகழ்வு  ஒடிசாவில்  மட்டுமே,  பல  நூற்றாண்டுகளாக  நடந்து  வருகிறது  என்பது  ஒரு  ஆச்சரியம்.
-- டாக்டர்  ஆர்.கோவிந்தராஜ்,  சென்னிமலை.
-- தினமலர்  இணைப்பு .  21  அக்டோபர், 2012. 

Wednesday, February 11, 2015

தித்திப்பா? திக்திக்கா?

  பெரிய  நிறுவனங்களில்  மட்டுமே  தயாரிக்கப்பட்டு  வந்த  சாக்லேட்டுகள்,  சமீபகாலமாக  வீடுகளிலும் ( ஹோம்  மேட் )  உற்பத்தி  செய்யப்படுவது  ஆச்சரியம்.  வணிகப்  போட்டி  வேறு  நெருக்குவதால்,  விற்பனையைப்  பெருக்க  நிறுவனங்கள்  புதிய  உத்தியை  பயன்படுத்த  வேண்டிய  கட்டாயம்.  அதனால்  ' சாக்லேட்டு'களில்  சுவையை  கூட்டுவதற்கு  'கஃபீன்',  ' கொகெய்ன்'  உள்ளிட்ட  உயிருக்கு  உலை  வைக்கும்  'அல்கலாய்டு'  வகை  ரசாயனப்  பொருட்களை  அளவுக்கு  அதிகமாகச்  சேர்ப்பதாகச்  சொல்கிறார்கள்.  கலர்  கலராய்,  வாங்கத்  தூண்டும்  வகையில்  நிறமிகள்  சேர்த்து  தயாரிக்கப்பட்ட  சீன  சாக்லேட்டுகளில்  இந்த  ஆபத்து  அதிகமாக  இருப்பது  கூடுதல்  அதிர்ச்சி.  இந்த  ' பகீர் '  தகவலால்  பெற்றோர்களிடையே  ஒருவித  பீதி,  பயம்  பரவியுள்ளது.
     பால்,  சர்க்கரை,  கொக்கோ,  காபி  பவுடர்  உள்ளிட்டவை  தான்  சாக்லேட்  தயாரிக்க  அடிப்படை.  அதுவும்  கறுப்பு  ( டார்க் )  சாக்லேட்டுக்கு  90%  காபி  பவுடர்  மட்டுமே  மூலதனம்.  இந்தப்  பொருட்களை  அனுமதிக்கப்பட்ட  அளவு  மட்டும்  பயன்படுத்தினால்  ஆபத்தில்லை.  ஆனால்  சுவையைக்  கூட்டுவதற்காக  அளவுக்கு  அதிகமாக  பயன்படுத்துவதுதான்  பிரச்னைக்கு  பிள்ளையார்  சுழி.
    இதில்  மற்றொரு  ஆபத்து  என்ன  தெரியுமா?  சாக்லேட்  தயாரிக்கும்  போது,  காற்றின்  ஈரப்  பதத்திலிருக்கும்  காரீயம் ( ! )  ( லெட் )  மூலப்  பொருளோடு  கலந்துவிடும்  என்பதுதான்.  மிக  நுண்ணிய  அளவு  காரீயம்  இருந்தாலே  ஆபத்து  பல  மடங்கு.  இது  மனிதத்  தவறு  இல்லைதான்.  ஆனால்,  இயற்கையாகவே  சாக்லேட்டில்  காரீயம்  கலப்பதற்கான  வழிமுறைகள்  ஏதும்  இன்றுவரை  கிடையாது  என்பது  கூடுதல்  அதிர்ச்சி.
--- எஸ்.அன்வர்.  குமுதம்.  24 - 10 - 2012 .  

Tuesday, February 10, 2015

கேள்வி & பதில்

கேள்வி:  குழந்தைகள்  ஏன்  பிறக்கிறார்கள்?
பதில்:  புட்டபர்த்தி  சத்யசாய்பாபா.
நான்கு  வித  காரணங்களுக்காக  குழந்தைகள்  பிறக்கிறார்கள்.
1.  நியாச  புத்திரர்கள்:.  --  உங்களுடைய  முந்தைய  பிறவிகளில்  நீங்கள்  தவறான  வழியில்  கைப்பற்றிய  செல்வத்தை,  இன்றைய  பிறவியில்  திரும்பப்
    பெற்றுக்  கொள்ளப்  பிறப்பவர்கள்.
2.  ருண  புத்திரர்கள்:  --  உங்களுக்கு  இந்தப்  பிறவியில்  தந்தையாக  வாய்த்த  மனிதரிடம்  முந்தைய  பிறவியில்  கடனாகத்  தந்த  பணத்தைப்  பெற்றுக்
     கொள்ளப்  பிறப்பவர்கள்.
3.  சுக  புத்திரர்கள்:  --  கடவுளின்  ஆசிர்வாதத்தால்  பிறந்த  குழந்தைகள்.
4.  உபேக்க்ஷா  புத்திரர்கள்:  --  பெற்றோர்,  உற்றார்  உறவினர்  என்ற  பற்றுதல்  அற்ற  நிலையில்,  அனைவரிடமும்  அன்பும்  இரக்கமும்  கொண்டு  தனது
     அவதார  காரியங்களை  நிறைவேற்றும்  பொருட்டுத்  தோன்றுபவர்கள்.
-- ப்ரியா  கல்யாணராமன்,  ( சத்யம்  சிவம்  சாய்பாபா  தொடரில் ).
-- குமுதம்.  24 - 10 - 2012 . 

Monday, February 9, 2015

இன்பாக்ஸ்.

 " லட்சக்கணக்கான  குழந்தைகள்  வறுமை  காரணமாகப்  போதிய  உணவு  இல்லாமல்  வாடுவது  நாட்டுக்கே  தலைகுனிவான  விஷயம் !."  என்று  பிரதமர்  மன்மோகன்  சிங்  ஒருபுறம்  கவலை  தெரிவிக்கும்  அதே  சமயம்,  பெங்களூரில்  மட்டும்  ஆண்டுக்கு  943  டன்  உணவுப்  பொருட்கள்  கல்யாண  மண்டபங்களில்  குப்பையில்  எறியப்படுவதாகச்  சொல்கிறது  ஒரு  சர்வே.  ஒரு  சாப்பாட்டின்  விலை  ரூ 40  என்று  நிர்ணயித்தால்கூட,  சுமார்  ரூ339  கோடி  இப்படி  வீணாகிறதாம்.  - இது  இந்தியாவில்தான்  சாத்தியம்.
-- ஆனந்த விகடன். 24 - 10 - 2012 .

Sunday, February 8, 2015

தமிழில் பாரசீகம்

 நம்  தமிழ்  மொழியில்  200க்கும்  அதிகமான  பாரசீக  மொழிச்  சொற்கள்  கலந்துள்ளதாக  மொழியியல்  அறிஞர்கள்  சொல்கின்றனர்.
      ஜாகீர்,  ஜமீன்,  ஜமீந்தார்,  ஜமக்காளம்,  குல்கந்து,  குமாஸ்தா,  பீங்கான்,  ரசீது,  புதினா,  பிஸ்தா,  பந்தோபஸ்து,  பஜார்,  லுங்கி,  குஸ்தி  போன்றவை  அதில்  சில.
-- ச.ஹேமலதா,  திருச்சி.
-- தினமணி  இணைப்பு.  20  அக்ட்டோபர் 2012.
--   இதழ் உதவி: செல்லூர் கண்ணன். 

Saturday, February 7, 2015

வாழ்க்கை கணக்கு

வாழக்கை  ஒரு  கணிதம்.  அதில்  சிக்கல்களும்,  தீர்வுகளும்  நிரம்பியுள்ளன.
நல்லவற்றைக்  ' கூட்டி' க்கொள்.
தீயவற்றைக்  ' கழித்து' க்கொள்.
அறிவை  ' பெருக்கி 'க்கொள்.
நேரத்தை  ' வகுத்து 'க்கொள்.
இன்பதுன்பங்களை  'சமமாய் '  கருது.
வளர்பிறை  போல்  முன்னேறு.
செலவைக்  குறைத்து  வரவைப்  பெருக்கு.
அன்பைப்  பெருக்கு,  ஆணவத்தைக்  குறை.
நல்லவர்களுக்கு  இணையாக  இரு.
பிறரை  நம்பி  வாழும்  வாழ்வு  நிலையற்றது.
-- மா.கல்பனா,  கூத்தப்பாடி.
-- தினமணி  இணைப்பு.  20  அக்ட்டோபர் 2012.  
--  இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.

Friday, February 6, 2015

இப்படித்தான் சுற்றணும்.

 பிரதட்சணம்  செய்யும்  முறை....
விநாயகருக்கு.........  --  ஒன்று
சூரியனுக்கு ..........   --  இரண்டு
சிவன்,  அம்பாள் ..... --  மூன்று
திருமால்,  திருமகள்..  --  நான்கு
அரசமரம் ............... ..--  ஏழு
நவக்கிரகம்................--  ஒன்பது
ஜீவ  சமாதிக்கு...........-  நான்கு.
-- ப.சங்கவி,  குளித்தலை.
-- தினமணி  இணைப்பு.  20  அக்ட்டோபர் 2012.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.

Thursday, February 5, 2015

கோடிக்கு மேல்.

 கோடிக்கு  மேற்பட்ட  எண்ணிக்கையைக்  குறிப்பிடும்,  உச்சரிக்கும்  வார்த்தைகளைப்  பழந்தமிழில்  இருந்து  பரிந்துரைக்கிறோம்.
1,00,00,000...................................-- கோடி
10,00,00,000.................................--  அற்புதம்
1,00,00,00,000..............................--  நிகற்புதம்
10,00,00,00,000............................--  கும்பம்
1,00,00,00,00,000.........................--  கனம்
10,00,00,00,00,000.......................--  கற்பம்
1,00,00,00,00,00,000.................... -- நிகற்பம்
10,00,00,00,00,00,000......... .........-- பதுமம்
1,00,00,00,00,00,00,000.................-- சங்கம்
10,00,00,00,00,00,00,000...............--  வெள்ளம்
1,00,00,00,00,00,00,00,000............--  அன்னியம்
10,00,00,00,00,00,00,00,000...........-- மத்தியம்
1,00,00,00,00,00,00,00,00,000.........-- பிராத்தம்
10,00,00,00,00,00,00,00,00,000.......-- பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000....-- பிரம்மகற்பம்.
--- ஆனந்த விகடன்,  29 - 8 - 2012.

Wednesday, February 4, 2015

நிதி அமைச்சர் !

 " ' ஒரு  ரூபாய்  அரிசி  விலை  உயர்ந்தால்  மக்கள்  கூச்சல்  போடுகிறார்களே '  என்ற  ப. சிதம்பரத்துக்கு  நாட்டின்  நிதி  அமைச்சர்  பதவி  பரிசளிக்கப்பட்டுள்ளது  சரியா?"
       " உங்களை  ஆள்கிற  முதலமைச்சராகவோ  அல்லது  பிரதம  மந்திரியாகவோ  வராமல்போனாரே !
         ஒரு  சிறிய  கதை.  ஒருவர்  ஆசையோடு  வளர்த்த  மான்  காணாமல்  போனதால்  ரொம்பக்  கலங்கிப்  போனார்.  அவர்  கலக்கத்தைக்  கண்டு  மனம்  இரங்கி  இறைவன்  அவர்  முன்  தோன்றி, வேண்டிய  வரத்தைக்  கேட்கச்  சொன்னார்.
          அவர்,  ' என்  மான்  காணாமல்போக  யார்  காரணமோ,  அவர்  என்  கண்  முன்  வர  வேண்டும்.  என்  கையால்  அவருக்கு  நானே  தண்டனை  தர  வேண்டும்  என்றதும்  இறைவன்  அதிர்ந்துபோனார்.  பின்பு  தயங்கி,  ' அது  வேண்டாம்  பக்தனே...'  என்று  இழுத்தார்.  பக்தன்  கோபமுற்று,  ' இறைவா... ஒரு  பக்தனின்  வேண்டுகோளை  நிறைவேற்றாமல்  போவதற்குப்  பெயர்  வரமா? "  என்று  கேட்டார்.
         ' பக்தா...நன்றாக  யோசித்துத்தான்  கேட்கிறாயா...? '  என்ற  இறைவனைப்  பார்த்து,  ' ஆமாம்... நன்றாக  யோசித்த  பின்பே  கேட்கிறேன்.  முடியுமா..முடியாதா? '  என  பிடிவாதமாக  கேட்க,  இறைவன்  சலித்துப்போய்,  ' சரி...வேறு  வழி  இல்லை.  உன்  மானைக்  கொண்டுபோன  உயிரினம்  உன்  முன்  நிற்கக்  கடவது '  என்று  கூறி  மறைந்தார்.
          பக்தன்  முன்  தோன்றியது... ஒரு  சிங்கம்.
          பக்தன்  அலறினான்,  அலறி  என்ன  செய்ய?"
-- உ.அனந்த  கோபால்,  கரூர்.  நானே  கேள்வி...நானே  பதில்!
-- ஆனந்த விகடன்.  22 - 8 - 2012.   

Tuesday, February 3, 2015

அதிசய கிரகம்

4  சூரியன்  கொண்ட  அதிசய  கிரகம் !
     விண்வெளியில்,  ஒரு  சூரியனை  பல  கிரகங்கள்  சுற்றிவரும்  பல  சூரிய  மண்டலங்கள்  உள்ளன.  2  சூரியனைச்  சுற்றிவரும்  6  அதிசய  கிரகங்கள்  ஏற்கனவே  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  4  சூரியன்களைச்  சுற்றிவரும்  அதிசய  கிரகம்  இப்போதுதான்  முதன்முறையாகக்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
     பொதுமக்களூக்கான  பிளானட்  ஹன்டர்ஸ்  இணையதளத்தைப்  பயன்படுத்தி  கண்டுபிடிக்கப்பட்ட  முதல்  கிரகம்  என்பதால்,  இதற்கு  பிஎச் - 1  என்று  பெயரிடப்பட்டுள்ளது ( பிளானட்  ஹன்டர்ஸ்  என்ற  ஆங்கில  வார்த்தைகளின்  முதல்     எழுத்துக்கள்  ' பி ,' ' எச் '. முதல்  கண்டுபிடிப்பு  என்பதைக்  குறிக்க ' 1' ).  பிஎச் - 1  கிரகம்  நெப்டியூன்  கிரகத்தைவிட  கொஞ்சம்  பெரியதாக  உள்ளது.  இதன்  விட்டம்,  பூமியை  விட  ஆறு  மடங்கு  அதிகம்.  இந்த  கிரகம்,  2  சூரியன்களை  சுற்றி  வருகிறது.  இந்த  2  சூரியன்களின்  வெளிப்பகுதியில்  மேலும்  2  சூரியன்கள்  சுற்றி  வருகின்றன.
     பல  சூரிய  மண்டலங்கள்  நெருக்கமாக  இருக்கும்  விண்வெளி  பகுதியில்  இந்த  2  அடுக்கு  சூரிய  மண்டலம்  எப்படி  உருவானது  என்பது  ஆச்சரியமாக  இருக்கிறது.  இந்த  அதிசய  அமைப்பால்,  பிஎச் - 1 கிரகத்துக்கு  ஒரே  வேளையில்  4  சூரியன்களின்  ஒளி  கிடைத்து  வருகிறது.  பிஎச் - 1  கிரகம்  பற்றிய  ஆய்வுகள்,  விண்வெளி  ஆய்வியலில்  புதிய  திருப்புமுனைகளை  ஏற்படுத்தும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
-- தினமலர்.  17 - 10 - 2012. 

Monday, February 2, 2015

ஆன்மிக கேள்வி - பதில்!

*  விநாயகர்  அகவலை  இயற்றியவர்  யார்?  --  ஔவையார்.
*  திருவாரூர்  கமலாலயக்  குளக்கரையில்  உள்ள  விநாயகர்  பெயர்  என்ன?  --  மாற்று  உரைத்த   விநாயகர்.
*  சந்தானக்  குரவர்கள்  யாவர்?  --  மெய்கண்டார்,  மறைஞான  சம்பந்தர்,  அருணந்தி  சிவாச்சாரியார்,  உமாபதி  சிவம்.
*  சைவ  சமயக்  குரவர்கள்  யாவர்?  --  திருநாவுக்கரசர்,  சுந்தரர்,  திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்.
*  பெருந்தமிழன்  என்று  தன்னைக்  கூறிக்கொண்ட  ஆழ்வார்  யார்?  --  பூதத்தாழ்வார்.
*  திருவிண்ணகரம்  என்று  அழைக்கப்படும்  தலம்  எது?  --  உப்பிலியப்பன்கோவில்.
*  பைந்தமிழின்  பின்சென்ற  பச்சைப்  பசுங்கொண்டல்  என்று  திருமாலைப்  புகழும்  நூல்  எது?  --  மீனாட்சியம்மை  பிள்ளைத்தமிழ்.
*  திருவாவினங்குடி  தலத்தின்  தற்போதைய பெயர்  எது?  --  பழனி.
-- தினமணி  வெள்ளிமணி,..11 - 5 - 2012.
-- இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர். 

Sunday, February 1, 2015

இன்பாக்ஸ்.

  பீகார்  மாநிலம்  கயா  மாவட்டத்தில்  உள்ள  கெலார்  கிராமத்திச்  சேர்ந்த  தசரத் மான்ஜி,  தன்  ஊர்  மக்கள்  பக்கத்து  ஊர்  மருத்துவமனைக்குச்  செல்ல  தனி  நபராக  ஒரு  மலையைக்  குடைந்து  பாதை  அமைத்திருக்கிறார்.  2007-ல்  இறந்த  இவர்  பெயரில்  இந்த  ஆண்டு  சிறப்பு  விருதினை  சமூக  சேவகர்களுக்காக  அறிவித்து  இருக்கிறது  மத்திய  அரசு.  ஆனால்,  அவர்  உயிரோடு  இருந்தபோது,  அவர்  பெயரை  பத்ம  பூஷண்  விருதுக்குப்  பரிந்துரைத்த  போது  நிராகரித்ததும்  இதே  அரசுதான்.  அவர்  பாதையில்  பயணிப்போம்.
-- ஆனந்த விகடன் .  15 - 8 - 2012 

இரண்டும் ஒன்றல்ல.

  ஒரே மாதிரி இருக்கிறவங்களை இரட்டையர்கள்னு சொல்வோம்.  விலங்குகளிலும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டுள்ளவை உண்டு.  ஆனால், அவை இரட்டையர் வகையறா இல்லை.  இரண்டுக்கும் பேர், குணம், வாழிடம், பழக்கவழக்கம்னு நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
சீலும் கடல் சிங்கமும்.
     சீல், கடல் சிங்கம் இரண்டையும் பார்க்கறவங்க, ரெண்டும் ஒரே விலங்குகள்தான்னு நினைக்கலாம்.  ஆனா, உத்துப் பார்த்தா சின்னச்  சின்ன வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கலாம்.
1.  கடல் சிங்கத்துக்குக் காது மடல்கள் உண்டு.  சீலுக்கு காது துளைகள் மட்டுமே உண்டு.
2.  கடல் சிங்கத்துக்கு நீளமான முன் துடுப்புகள் இருக்கும்.  சீலுடைய முன் தடுப்புகள் குட்டையாக, மயிரிழைகளுடன் இருக்கும்.
3.  கடல் சிங்கம் நிலத்துல துடுப்பின் மூலமா நடக்கும்.  சீல் தன்னோட துடுப்பைப் பயன்படுத்தாம உடலைத் தரையில் தேய்த்து நடக்கும்.
4.  கடல் சிங்கம் நீந்தும்போது தன்னோட முன் துடுப்புகளை பறவையோட றெக்கை மாதிரி விரித்து நீந்தும்.  சீல், முன் தடுப்புகளைவிட பின் தடுப்புகளைப்
     பயன்படுத்தி நீந்தும்.
-- பிருந்தா.  மாயாபஜார்.  குழந்தைகளின் குதூகல உலகம்.
-- ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. .

இரண்டும் ஒன்றல்ல.

  ஒரே மாதிரி இருக்கிறவங்களை இரட்டையர்கள்னு சொல்வோம்.  விலங்குகளிலும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டுள்ளவை உண்டு.  ஆனால், அவை இரட்டையர் வகையறா இல்லை.  இரண்டுக்கும் பேர், குணம், வாழிடம், பழக்கவழக்கம்னு நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
சீலும் கடல் சிங்கமும்.
     சீல், கடல் சிங்கம் இரண்டையும் பார்க்கறவங்க, ரெண்டும் ஒரே விலங்குகள்தான்னு நினைக்கலாம்.  ஆனா, உத்துப் பார்த்தா சின்னச்  சின்ன வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கலாம்.
1.  கடல் சிங்கத்துக்குக் காது மடல்கள் உண்டு.  சீலுக்கு காது துளைகள் மட்டுமே உண்டு.
2.  கடல் சிங்கத்துக்கு நீளமான முன் துடுப்புகள் இருக்கும்.  சீலுடைய முன் தடுப்புகள் குட்டையாக, மயிரிழைகளுடன் இருக்கும்.
3.  கடல் சிங்கம் நிலத்துல துடுப்பின் மூலமா நடக்கும்.  சீல் தன்னோட துடுப்பைப் பயன்படுத்தாம உடலைத் தரையில் தேய்த்து நடக்கும்.
4.  கடல் சிங்கம் நீந்தும்போது தன்னோட முன் துடுப்புகளை பறவையோட றெக்கை மாதிரி விரித்து நீந்தும்.  சீல், முன் தடுப்புகளைவிட பின் தடுப்புகளைப்
     பயன்படுத்தி நீந்தும்.
-- பிருந்தா.  மாயாபஜார்.  குழந்தைகளின் குதூகல உலகம்.
-- ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. .