Wednesday, December 31, 2014

ஆண் மூளை - பெண் மூளை!

 ஆண்களின்  மூளையைவிட,  பெண்களின்  மூளை  அளவில்  சிறிது  குறைவாக  இருப்பதினால்,  ஆண்களைவிட  பெண்களுக்கு  அறிவும்  சிறிது  குறைவு  தானே?
     மூளையின்  அளவுக்கும்  அறிவுக்கும்  சம்பந்தமே  கிடையாது.  ' கனெக் ஷன் 'களின்  வீரியம்தான்  முக்கியம்.  புகழ்பெற்ற  இலக்கிய  மேதையான  அனபோல்  ப்ரான்ஸ்  என்பவரின்  மூளை  சராசரி  மனிதனின்  மூளையைவிட  ரொம்பச்  சின்னது.(அவர்  இறந்த  பிறகு  மூளையை  எடை  போட்டார்கள் ).
சராசரி  மனிதனின்  மூளை  1,400  கிராம்.  சராசரி  பெண்ணின்  மூளை  1,350  கிராம்.  அனபோலின்  மூளை  1,017  கிராம்.  வாட்டசாட்டமாக  வளர்ந்த ஒருமுட்டாளின்  மூளையையும்  சோதித்தார்கள்.  எடை  2,050  கிராம்  இருந்தது.  ஆகவே,  பெரிய  களிமண்  உருண்டை  வேறு.  குட்டி  வைரக்கல்  வேறு!--ஹாய் மதன்.  கேள்வி -- பதில்.
-- ஆனந்த விகடன்,  18 - 4 - 2012. 

Tuesday, December 30, 2014

அக்மார்க் முத்திரை.

  பிரிட்டிஷ்  ஆட்சியின்போது,  விவசாயப்  பொருட்களுக்கு  தரநிர்ணயம்  செய்வது  தொடர்பாக  1937-ம்  ஆண்டு  ஒரு  சட்டம்  கொண்டுவரப்பட்டது.  அதன்  அடிப்படையில்,  உணவுப்பொருட்களுக்கு  இந்திய  அரசு  வழங்கிவரும்  தரச்சான்றின்  பெயர்தான்  ' அக்மார்க் '.  இது,  ' அக்ரிகல்ச்சுரல்  மார்க்கெட்டிங்'  ( விவசாயப்  பொருட்களின்  விற்பனை )  என்பதன்  சுருக்கம்.
     தானியங்கள்,  பருப்புகள்,  சமையல்  எண்ணெய்கள்,  மசாலா  பொருட்கள்,  சமையல்  பொடிகள்,  கூட்டுப்  பெருங்காயம்,  நெய்,  தேன்  உள்ளிட்ட  200க்கும்  மேற்பட்ட  உணவுப்பொருட்களுக்கு  அக்மார்க்  முத்திரை  வழங்கப்படுகிறது.
     ஏதாவது  பொருளைக்  கலப்படம்  செய்திருக்கிறார்களா,  ஆரோக்கியத்தைப்  பாதிக்கும்  ரசாயனங்கள்  கலக்கப்பட்டிருக்கிறதா,  சுகாதாரமான  முறையில்  தயாரிக்கப்பட்டதா  என  பல  தீவிர  ஆய்வுகளுக்குப்  பிறகே  அக்மார்க்  முத்திரை  வழங்கப்படும்.  எனவே,  அக்மார்க்  முத்திரை  பெற்றுள்ள  பொருட்களை  நம்பி  வாங்கி  பயன்படுத்தலாம்.
--   -தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011.

Monday, December 29, 2014

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்

 இந்தியா முழுக்கப் பணியாற்றும் 6,217 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளில் 1,057 பேர் தங்கள் சொத்துக் கணக்கை வெளியிட யோசிக்கிறார்களாம்.  அரசு இயந்திரத்தின் அச்சாணிகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.  2010-ல் 198 அதிகாரிகளும் 2011-ல் 107 அதிகாரிகளும் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.  அந்த எண்ணிக்கைதான் 2012-ல் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.  இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 20 பேர்.  --  மடியில் கனம்?
சீனாவில் வீடு விற்பனை.
     வீடு விற்பனையின்போது விதிக்கப்படும் வரியைத் தவிர்க்க கணவன் - மனைவி தங்களுக்குள் விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்து கொள்கிறார்களாம் சீனாவில்.  அங்கு வீடு விற்பதற்கான வரிகளை வசூலிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன.  தனி நபராக இருந்தால் வரி விலக்கு உண்டு.  இதனால், குழந்தைகள் பெற்ற வயதான தம்பதிகள்கூட வரிவிலக்குச் சலுகையை அனுபவிக்க, விவாகரத்து செய்து வீட்டை விற்று பின் மீண்டும் இணைந்துகொள்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரே நாளில் 53 ஜோடிகளுக்கு விவாகரத்து வழங்கி சாதனை படைத்துள்ளது ஒரு திருமண அலுவலகம்.  -- விவாகரத்து பண்றதுக்கு வரி போடுங்க ஆபீஸ்ர்ஸ்!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன்.  27 -03- 2013. 

Sunday, December 28, 2014

' புளூட்டோ கோள் '

  புளூட்டோ  1930-ல்  கண்டுபிக்கப்பட்டது.  அன்றுமுதல்  2006  ஆகஸ்டு  24  வரை,  அதற்கு  ' கோள் '  என்ற  அந்தஸ்து  இருந்தது.
     சர்வதேச  விண்வெளியியல்  கூட்டமைப்பு  2006  ஆகஸ்ட்  24 ல்  ' கோள் '  என்பதற்கான  புதிய  தகுதி  வரையறையை  அமல்படுத்தியது.  ' சூரியனைச்  சுற்றும்  ஒரு  பொருளின்  மிக  அருகில்  ஏறக்குறைய  அதே  நிறை  அல்லது  அதைவிட  அதிக  நிறை  கொண்ட  பொருள்  சுற்றிவந்தால்  அதை  கோள்  என்று  கூறமுடியாது '  என்பதே  அந்த  புதிய  தகுதி.
     புளூட்டோ  சுற்றும்  பகுதியான  ' கூபர்  பெல்ட் '  பகுதியில்  அதைவிட  27  மடங்கு  அதிக  நிறையுள்ள  ' ஈரிஸ் '  மற்றும்  புளூட்டோவின்நிறைகொண்ட  பல  பொருட்களும்  சுற்றிவருகின்றன.  இதனால்தான்  ' கோள் '  என்ற  அந்தஸ்தை  புளூட்டோ இழந்தது.  புளுட்டோ,  ஈரிஸ்  போன்றவற்றின்  புதுப்  பெயர்: 'குள்ள  கிரகம் ' ( ட்வார்ஃப்  ப்ளானட் ).!
--  -தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011. 

Saturday, December 27, 2014

எறும்புகள்.

 எறும்புகளால்  தங்களது  உடல்  எடையை  விட  50  மடங்கு  அதிக  எடை  கொண்ட  பொருட்களை  தூக்கிச்  செல்லவும்,  25  மடங்கு  அதிக  எடை  கொண்ட  பொருட்களை  இழுத்துச்  செல்லவும்  சக்தி  உடையது.
     இந்த  சக்திக்கு  காரணம்,  அவற்றின்  சிறிய  வடிவம்தான். ' ஒரு  பிராணியின்  அளவு  அதிகரிக்கும்போது,  அதன்  உயரத்தை  விட  அதன்  கன  அளவும்,  எடையும்  வேகமாக  அதிகரிக்கும்.  ஆனால்,  அதன்  தசைகளின்  வலிமை  அதன்  கன அளவு  மற்றும்  எடையைப்  போல்  வேகமாக  அதிகரிக்கும்;  உயரம்  குறைவாக  இருக்கும்  பிராணிகளின்  தசைகளின்  வலிமை,  அதிக  உயர  பிராணிகளின்  தசைகளின்  வலிமையை  விட  அதிகமாக  இருக்கும் '  என்பது  உடலியல்  விதி.
     எறும்புகள்  உயரம்  மிகக்  குறைவு   என்பதால்,  அவற்றின்  தசைகளின்  வலிமை  மிக  அதிகமாக  உள்ளது.  இதனால்தான்,  அவற்றால்  தங்களது  எடையை  விட  பல  மடங்கு  எடை  கொண்ட  பொருட்களை  எளிதாக  எடுத்துச்  செல்ல  முடிகிறது.
---தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011.

Friday, December 26, 2014

கைரேகை.

  தாயின்  கருப்பையில்  மூன்று  மாத  சிசுவாக  இருக்கும்போதே  கைரேகைகள்  உருவாகத்  தொடங்கிவிடும்.  ஆயுள்  முழுக்க  கைரேகை  மாறாது.
     விரல்  தோல்கள்  ஏதாவது  காரணத்தால்  உரிந்து  பிரிந்தாலும்,  புதிதாகத்  தோன்றும்  தோலிலும்  பழைய  கைரேகைதான்  இருக்கும்.
     ஒவ்வொருவரின்  கைரேகையும்  தனிப்பட்ட  வகையில்  அமைந்திருக்கும்.  அதாவது,  எந்த  இரு  மனிதர்களின்  கைரேகைகளும்  ஒன்று  போல்  இருக்காது.  இரட்டைக்  குழந்தைகளுக்குக்கூட  ஒரே  கைரேகை  இருக்காது.  இந்த  ' தனித்துவ '  அம்சம்தான்,  கைரேகை  அடிப்படையில்  குற்றவாளிகளை  அடையாளம்  காண  உதவுகிறது.
---  -தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011.  

Thursday, December 25, 2014

கணக்கு மேஜிக்!

 1.  உங்கள்  நண்பரிடம்  ஒரு  பேப்பரில்  ஏதாவது  4  இலக்க  எண்ணை  எழுதச்சொல்லுங்கள்... உடனே  ஒரு  பேப்பர்  துண்டை  எடுத்து  அவர்  எழுதிய
     எண்ணின்  முதலில்  2 -ஐ  இணைத்துவிட்டு,  கடைசி  இலக்கத்தில்  2 -ஐ  குறைத்து  எழுதிக்  கொடுங்கள்.  ' நீ  செய்யப்போகும்  கூட்டலின்  விடை,
     இந்த  5  இலக்க  எண்தான் !'  என்று  ' பில்டப் '  கொடுங்கள்.
 2.  முதலில்  அவர்  எழுதிய  4  இலக்க  எண்ணின்  கீழ்  இன்னொரு  4  இலக்க  எண்ணை  எழுதச்  சொல்லுங்கள்.
 3.  அந்த  எண்ணின்கீழ்  அவர்  எழுதிய  2 -வது  எண்ணை  9999 -ல்  இருந்து  கழித்து  எழுதுங்கள்.
 4.  அவரிடம்  மீண்டும்  ஒரு  4 இலக்க  எண்ணை  எழுதச்  சொல்லுங்கள்.
 5.  அந்த  எண்ணின்  கீழ்,  அவர்  எழுதிய  3 -வது  எண்ணை  9999-ல்  இருந்து  கழித்து  எழுதுங்கள்.
 6.  பிறகு,  " இந்த  5  எண்களையும்  கூட்டிப்பார்  பேப்பர்  துண்டில்  நான்  எழுதித்தந்த  5  இலக்க  விடை  வரும்!"  என்று  சொல்லுங்கள்.  அதே  விடை  வருவதைப்  பார்த்துப்  பார்த்து  நண்பர்  அசந்துவிடுவார் !
  ஒரு  உதாரணம்:  1.  நண்பர்  எழுதிய  எண்  8327... உடனே  நீங்கள்  அவரிடம்  எழுதிக்கொடுக்க  வேண்டிய  எண்  28325;
                            2.  நண்பர்  எழுதும்  2 -வது  4 இலக்க  எண்  9526;
                            3.  இந்த  9526-ஐ  9999-ல்  இருந்து  கழித்து  நீங்கள்  எழுதும்  எண்  0473; நண்பர்  எழுதும்  3-வது  4 இலக்க  எண்  7539;
                            4.  இந்த  7539 -ஐ  9999 -ல்  இருந்து  கழித்து  நீங்கள்  எழுதும்  எண்  2460;
                            5.  இந்த  5  எண்களையும்  கூட்டினால்  வரும்  விடை,  28325 ( 8327 + 9526 + 0473 + 7539 + 2460  = 28325 ).
-- தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011.

Wednesday, December 24, 2014

அசோகச் சக்ரவர்த்தி

   அசோகச்  சக்ரவர்த்திக்கு  ஒருமுறை  கடுமையான  வயிற்று  வலி  வந்து,  அரண்மனை  வைத்தியர்  மருந்து  கொடுத்தும்  குணமாகவில்லயாம்.  அவருடைய  மனைவியர்களுள்  அதிபுத்திசாலியான  ஒருத்தி  சக்ரவர்த்தியின்  வயிற்றை  அழுத்திப்  பார்த்து,  வயிற்றில்  கட்டி  இருப்பதால்  வலி  ஏற்படுகிறது.  கட்டியைக்  கரைத்தால்  வலி  நீங்கும்  என்று  சொன்னாள்.  அதற்கு  காலை - மாலை  வெங்காயச்  சாற்றுடன்  தேன்  கலந்து  பருகச்  சொன்னாள்.  அதேமாதிரி  வைத்தியர்  செய்து  தர,  விரைவில்  கட்டி  கரைந்து,  வலி  நீங்கி,  பூரண  குணம்  அடைந்ததாக  அசோகரின்  வாழ்க்கைக்  குறிப்பு  சான்று  கூறுகின்றது.
--  மூலிகைமணி  டாக்டர்  கே.வெங்கடேசன்.
--  குமுதம்.  Tuesday, December 23, 2014

என்ன வேண்டும்?

படுத்தவுடன்  உறக்கமது  வருதல்  வேண்டும்
பசித்தவுடன் உண்ணுகிற  நிலைமை  வேண்டும்
எடுத்தவுடன்  படிக்கின்ற  நூல்கள்  வேண்டும்
இசைத்தமிழே  என்  செவியை  அடைதல்  வேண்டும்
உடுத்தவுடன்  துணிமணிகள்  இருத்தல்  வேண்டும்
உணவாக  மரக்கறியே  இருக்க  வேண்டும்
கொடுத்தவுடன்  வாங்காத  மாந்தர்  வேண்டும்
குன்றாத  நட்புறவு  இருத்தல்  வேண்டும்.
-- ' முகம் '  இதழில்  - தமிழப்பன்.
கெட்ட  ஜோக் !
பஸ்ஸில்  கேட்ட  ஜோக்  ஒன்று  சொல்லமுடியுமா?
     கேட்ட  ஜோக்  என்றாலும்  கெட்ட  ஜோக்  இது.  பஸ்ஸில்  ஒரு  வம்பு  பிடித்த  கிழவர்  இடத்தை  அடைத்துக்  கொண்டு  நிற்கிறார்.  தெனாவெட்டாய்  நான்,  "  யோவ்  பெரிசு,  நகருய்யா"  என்றேன்.  பெரியவர்  என்னைத்  திரும்பிப்  பார்த்தார்.  " எனக்குப்  பெரிசுன்னு  உனக்கு  எப்படிய்யா  தெரியும்?  எங்க  பார்த்தே? "  என்றார்.  தற்கொலைக்காக  நான்  ஜன்னல்  வழியாகக்  கீழே  குதித்தேன்.
-- அரசு பதில்கள் .  குமுதம் . 10.1.2007.  

Monday, December 22, 2014

அகத்தியர்.

  பதினெண்சித்தர்களில்  ஒருவரான  அகத்தியர்  காய்கறி,  கீரை,  கனிகள்  ஆகியவற்றின்  பண்பு,  பயன்பாடுகளைப்பற்றி  நிறைய  அறிந்தவர்.  அவரிடம்  ஒரு  சீடர்,  " குருநாதரே!  மானிடரின்  இல்லற  இன்பம்  செழிப்பாக  இருக்க  எளிய  கீரை  ஏதும்  சொல்லுங்களேன்?"  என்று  கேட்டார்.
     குறுந்தாடியைத்  தடவியவாறு  அகத்தியர்  ஓர்  உவமை  மூலம்  ஐந்து  விதமான  கீரைகளைப்பற்றிக்  கூறுகின்றார்.  இவைதான்  அந்தக்கால  ' வயாக்ரா'கீரைகள் !
     " நறுந்தாளி  நன்  முருங்கைத்
       தழை
       தூதுவளை  நற்பசலை
       வாளில்  அறுகீரை
       நெய்வார்த்து  உண்ணில்
       யாளியென  விஞ்சுவார்
       போகத்தில்"
என்று  சீடருக்குப்  புன்னகைத்தவாறு  பதில்  கூறினாராம்  அகத்தியர்.
      யானையைவிடப்  பெரிதான  ' யாளி '  தற்போது  இல்லை.  கோயில்  சிலைகளில்  மட்டுமே  ' யாளி '  எனும்  மிருகத்தைக்  காணலாம்.  காதல்  களியாட்டத்தில்  நாம்  அந்த  யாளீயையே  மிஞ்ச  முடியுமாம் !  எப்படி?  நறுந்தாளி,  நன்முருங்கை,  தூதுவளை,  நற்பசலை,  அரைக்கீரை - இந்த  ஐந்து  கீரைகளையும்  தினம்  ஒன்றாக  பருப்பு,  மிளகு,  சீரகம்,  பூண்டு,  சிறுவெங்காயம்  சேர்த்துப்  பொரியல்  செய்து  பகல்  உணவில்  மட்டும்  இரண்டு  பிடி  சாதத்தில்  ஒரு  கப்  அளவு  கீரையும் - ஒரு  ஸ்பூன்  நெய்யும்  சேர்த்துச்  சுவையுடன்  சாப்பிட்டால்  போதும் !  இதுதாங்க  காதல்  கெமிஸ்ட்டிக்கான  பால  பாடம்.
-- மூலிகைமணி  டாக்டர்  கே.வெங்கடேசன்.
-- குமுதம்.  20 . 12. 2006 

Sunday, December 21, 2014

கிருஷ்ணன் வணங்கும் 6 பேர்.

நான்  6  பேரை  வணங்குகிறேன்  என்று  கிருஷ்ணபரமாத்மா  சொல்லியிருக்கிறார்.  அந்த  6  பேர்  யார்  தெரியுமா?
ப்ராதஸ்நாதி........................அதிகாலையில்  குளிப்பவன்
அஸ்வத்தசேவி.....................அரச  மரத்தை  வணங்குபவன்
த்ருணாக்னி  ஜோத்ரி............மூன்று  தீயை  இடையறாது  வளர்ப்பவன்
நித்யான்னதாதா...................நாள்  தோறும்  ஏழைகளுக்கு  உணவளிப்பவன்
சதாபிஷேகி.........................நூற்றாண்டு  விழா  செய்து  கொண்டவன்
ப்ரம்மஞானி........................இறைவனை  உணர்ந்தவன்.
--  தினமலர் .பக்திமலர். ஆகஸ்டு 13., 2009. 

Saturday, December 20, 2014

கவிதை'

காலண்டர்.
ஒரு  வருட
ஒப்பந்தத்தில்
என்  வீட்டிற்கு
புதிதாக
குடிவந்தது
காலண்டர் ..!

விடுதலை.
ஜோசியம்
பார்த்தவனுக்கு
நன்றி  சொல்லிவிட்டு
கூண்டுக்குள்  போனது
கிளி...
ஒரு  நிமிட
விடுதலைக்காக.
-- தினமலர் .பெண்கள்மலர்.  ஜனவரி 5, 2013.  

Friday, December 19, 2014

தெரியுமா? தெரியுமே !

*  பவன  குமாரர்,  மாருதி,  பஜ்ரங்க  பலி,  ஹனுமான்,  பாடலி  புத்திரர்,  கேசரி  நந்தன்,  சங்கட்  மோசன்,  சுந்தரன்,  மகா  ருத்திரன்,  கபீஷ்வரா,
   குமார  பிரம்மச்சாரி,  மகா  தேஜஸ்வி  எனப்  பல  பெயர்கள்  கொண்டு  அழைக்கப்படுகிறார்  மகா  ராம  பக்த  சிரோமணியான  ஆஞ்சனேயர்.
*  ஆதிசங்கர  மகான்  ஏற்படுத்திய  ஷண்மதங்களூள்  முருகனுக்கானது,  கௌமாரம்.
*  இயற்கை  எழில்  சூழ்ந்த  குமரி  மாவட்டத்தில், எண்ணற்ற  மருத்துவ  குணம்  கொண்ட  மூலிகைகளை  ஒரே  இடத்தில்  பார்க்கலாம்.  அந்த  இடம்
   மருந்துவாழ்  மலை.
*  ஸ்ரீராமரோட  நண்பரான  விபீஷணரோட  சகோதரந்தான்  குபேரன்.
*  சனி  கிரகத்தால்  பாதிக்கப்படாதவர்  ஆஞ்சநேயர்.
* ' உத்தர்முஹே  ஆதிவராஹாய '  அப்படின்னு  சொல்லுது  ஒரு  வடமொழி  ஸ்லோகம்.  அதாவது,  ஆஞ்சநேயருக்கு  உரிய  அஞ்சு  முகங்கள்ல,  வடக்கு
   திசைக்கு  உரியது  வராக  முகம்.  பொதுவா  வராகரை  வணங்கினா,  எந்தவிதத்  தடையும்  விலகும்.  எதிரி  பயம்  போகும்.  பூமி  தொடர்பான
   பிரச்சனைகள்  விலகும்,  கடன்கள்  தீரும்,  நோய்கள்  குணமாகும்.  இப்படி  ஐதீகம்  இருக்கு.
*  இந்திய  இல்லங்கள்  பலவற்றில்  வீட்டின்  முன்  முற்றத்திலோ,  பின்புறத்திலோ,  நடு  முற்றத்திலோ  ஒரு  துளசி  மாடம் -- துளசிச்  செடி
   வைக்கப்பட்டுள்ள  ஒரு  பீடம்  உண்டு.
*  சமஸ்கிருத  மொழியில்  " துலனா  நாஸ்தி  அதைவ  துளசி "  என்ற  ஒரு  கூற்று  உள்ளது.  துளசி  ஒப்புயர்வற்ற  குணங்கள்  கொண்டது  என்பது  பொருள்.
   இந்தியர்களுக்கு  துளசி  மிகப்  புனிதமான  செடிகளுள்  ஒன்று.  உண்மையில்,  துளசி  ஒன்றுதான்,  ஒரு  முறை  பூஜைக்குப்  பயன்படுத்தப்பட்ட  பிறகும்
   நீரில்  கழுவப்பட்டால்  மீண்டும்  பூஜைக்குப்  பயன்படுத்தத்  தக்கதாகக்  கருதப்படுகிறது.  துளசி  தன்னைத்தானே  தூய்மைப்படுத்திக்  கொள்ளும்  சக்தி
   கொண்டதாக  ஏற்கப்பட்டுள்ளது.
-- குமுதம்  பக்தி ஸ்பெஷல் .  டிசம்பர்  16 - 31 ,  2912. 

Thursday, December 18, 2014

கணக்குப் புதிர்.

  15 - வது  வாய்பாடு  புதிர்  இது.
     உதாரணத்துக்கு  ஒரு  இரண்டு  இலக்க  எண்ணை  தேர்வு  செய்துகொள்ளுங்கள்.
     உதாரனம்:  23
     இதை  15 ஆல்  பெருக்க  வேண்டும்.    23 X  15.
     தேர்வு  செய்த  எண்ணுடன்  ( 23 )  ' 0 '  சேர்த்துக்கொள்ளுங்கள்.  230.
     230  எண்ணை  ' 2 '  ஆல்  வகுக்க  வேண்டும்.  230 /  2  = 115.
     இப்போது  230 ஐயும்  115  யும்  கூட்ட  வேண்டும்.  230 + 115 = 345.
     இதுதான்  விடை :  23 X 15 = 345.  இதே  போல  மூன்று,  நான்கு,  ஐந்து  இலக்க  எண்ணையும்  பெருக்கலாம்.
--   தினமலர்  சிறுவர்மலர்.  ஜனவரி  4,  2013. 

Wednesday, December 17, 2014

பூசணிக்காய்.

  பெண்களுக்கு  எந்த  பாதிப்பும்  வராமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும்  என்பதற்காகத்தான்  சில  விஷயங்களை  அவர்கள்  செய்யக்கூடாது  என்கிறார்கள்.  பூசணிக்காய்,  தேங்காய்,  பறங்கிக்காய்  போன்றவை  வாஸ்து  புருஷன், பைரவர்,  காளி  போன்ற  தெய்வங்களுக்கு  பலியிடுவதற்காக  உபயோகப்படுத்தப்படுகின்றன.  சைவ  முறைப்படி  உயிர்  பலிக்கு  ஈடானதால்  இவை  செய்யப்படுகின்றன.  இதுபோன்ற  செயல்களை  பெண்கள்  செய்தால்  மனதில்  ஒருவித  பயமும்,  கருச்சிதைவுகளும்  ஏற்படும்  என்பதாலும்  ஆண்களே  செய்ய  வேண்டும்  என்று  ஆன்றோர்கள்  கூறியுள்ளனர்.
--  தினமலர்  பக்திமலர்.  ஜனவரி  3,  2013.

Tuesday, December 16, 2014

ஆந்தையின் ஒலி.

   ஆந்தையின்  ஒலி  கொண்டு  சுப,  அசுபங்களை  அறிதல்  ஆந்தைக்  காதல்  எனப்படும்.  இப்படிச்  சகுனம்  அறியும்  முறை  இயற்கையோடு  இனைந்து  வாழ்ந்த  காலத்தில்  வழக்கில்  இருந்த  முறைகளில்  ஒன்றாகும்.
     ஓருரை  உரைக்கு  மாகில்  உற்ற  தோர்  சாவு  ஸ்ப்ல்லும்
     ஈருரை  உரைக்கு  மாகில்  எண்ணிய  கருமம்  நன்றாம்
     மூவுரை  உரைக்கு  மாகில்  மோகமாய்  மங்கை  சேர்வாள்
     நாலுரை  உரைக்கு  மாகில்  நாழியில்  கலகம்  சொல்லும்
     ஐயுரை  உரைக்கு  மாகில்  அங்கு  ஒரு  பயணம்  சொல்லும்
     ஆருரை  உரைக்கு  மாகில்  அடுத்தவர்  வரவு  கூறும்
     ஏழுரை  உரைக்கு  மாகில்  இறந்த  பண்டங்கள்  போதும்
     எட்டுரை உரைக்கு  மாகில்  திட்டெனச்  சாவு  சொல்லும்
     ஒன்பதும்  பத்துமாகில்  உத்தமாம்  மிகவும்  நன்றே.
-- தினமலர்  பக்திமலர்.  ஜனவரி  3,  2013. 

Monday, December 15, 2014

திருக்கோயில்.

  திருக்கோயில்  தோற்ற  அமைப்பை  மூவகையாகக்  கூறுவர்.
      1. தான்தோன்றி ( சுயம்பு ).  2. தேவர்,  முனிவர்  நிறுவியது.  3. மனிதர்  நிறுவியது.
தான்தோன்றி:  கற்றச்சர்களின்  உளியால்  செதுக்கப்படாமல்  தானாகத்  தோன்றிய  மூல  மூர்த்தம்  உள்ள  கோயில்  தான்தோன்றி  எனப்படும்.  அம்
      மூர்த்தத்தை  உணர்ந்து  வழிபட்டு  வருவர்.  பின்பு  அவ்விடத்தில்  திருக்கோயில்கள்  உருவாகும்.
தேவர்,  முனிவர்  நிறுவியது.:  தனது  எண்ணத்தை  நிறைவேற்ற  அல்லது  உலக  நன்மையைக்  குறித்துத்  தேவர்களும்  முனிவர்களும்  இறைவனுக்கு
       உருவம்  சமைத்துத்  திருக்கோயில்  நிறுவுவது  தேவ  பிரதிஷ்டை  அல்லது  முனிவர்  பிரதிஷ்டை  எனப்படும்.
 மனிதர்  நிறுவியது.:  அரசர்கள்  அல்லது  மனிதர்கள்  நிறுவும்  திருக்கோயில்  மனித  பிரதிஷ்டை  எனப்படும்.
        இவைகளில்  தான்தோன்றித்  திருக்கோயில்கள்  தவிர  ஏனையவற்றில்  முப்பது  ஆண்டுகளுக்கு  ஒரு  முறை  திருக்குடமுழுக்குச்  செய்யாவிடில்  சக்தி  குறையும்  எனக்  கூறுவர்.
--' தமிழ்நாட்டுத்  திருக்கோயில்  மரபுகள் '  என்ற  நூலில்  பொன்முகிலன்.
-- நூல் உதவி:  செல்லூர் கண்ணன். 

Sunday, December 14, 2014

ஜோக்ஸ் !

*  கொஸ்டீன்  கஷ்டம்!
   " காதலுக்கும்,  7.29 - க்கும்  என்ன  ஒற்றுமை...? "
   " இது  ரெண்டுக்கும்  பிறகுதான்  ஏழரை  ஸ்டார்ட்  ஆகும் !"
*  சங்கப்பலகை !
     என்னதான்  எம்.பி.பி.எஸ்  படிச்ச  டாக்டரா  இருந்தாலும்,  கம்ப்யூட்டர்ல  இருக்கிற  வைரஸ்க்கு  டேப்லெட்  கொடுக்க  முடியாது .
    -- இப்படிக்கு  கம்ப்யூட்டர்  மவுஸுக்கு  எலி  மருந்து  வைப்போர்  சங்கம்.
*  நீயல்லாம்  நல்லா  வருவடா...!
   ஆசிரியர்:  பெர்னாட்ஷாவை  பற்றி  உனக்குத்  தெரியுமா...?
   மாணவன்: அவர்  த்ரீஷாவோட  தாத்தாதானே  சார்?!
   ஆசிரியர்:  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
--  அவள் விகடன்.  15 - 01 - 2013.
-- இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ). 

Saturday, December 13, 2014

டிப்ஸ்...டிப்ஸ்...

*  வீட்டுக்கு  வரும்  விருந்தினர்  சாப்பிட்ட  பின்  ஹோட்டல்களில்  கொடுப்பதைப்  போல்  வருத்த  சோம்பை  நீங்கள்  தயாரித்துக்  கொடுக்கலாம்.  ஒரு
   கரண்டி  சோம்பு  வெறும்  வாணலியில்  ஒரு  நிமிடம்  வறுத்தால்  மொறுமொறு  என்றாகிவிடும்.  அதை  ஒரு  தட்டில்  கொட்டிவிட்டு,  அதே  வாணலியில்
   நாலு  ஸ்பூன்  சர்க்கரையை,  இரண்டு  ஸ்பூன்  தண்ணீர்  சேர்த்து  ஒரு  நிமிடம்  கிளரினால்...நன்கு  கரைந்துவிடும்.  இதை  சோம்பில்  கொட்டிக்  கிளறி
   ஆறவிட்டு,  ஒரு  டப்பாவில்  போட்டு  மூடி  வைத்துக்  கொள்ளுங்கள்.  தேவையானபோது  எடுத்துப்  பயன்படுத்துங்கள்.
* .பாயசத்தில்  முந்திரியை  வறுத்துப்  போடும்போது,  சிலசமயம்  கருகிவிடும்.  நேரமானால்  நமத்துவிடும்.  அதற்குப்  பதிலாக,  ஒரு  கரண்டி  பாயசத்தை
   எடுத்து,  அதில்  முந்திரியை  உடைத்துப்  போட்டு,  மிக்ஸியில்  அரைத்து,  பாயசத்தில்  சேர்த்துவிட்டால்... சுவை  கூடும் !
*  வெண்ணெய்  வாங்கி  வந்ததும்  அப்படியே  ஃப்ரிட்ஜுக்குள்  வைத்து  விடாமல்,  சிறு  துண்டுகளாக்கி  வைக்கவும்.  பிரெட்டுக்குத்  தடவ,  பட்டர்  தோசை
   சுட,  பட்சண  வகைகள்  தயாரிக்க  என  பல்வேறு  சமயங்களில்  தேவையான  துண்டுகளை  மட்டும்  எடுத்துக்  கொண்டால்,  மீதி  வெண்ணெய்
   அப்படியே  ஃப்ரிட்ஜில்  பல  நாட்கள்  வரை  கெட்டுப்  போகாமல்  இருக்கும்.
*  சப்பாத்திகளை  சுட்டதும்,  குறைந்தது  ஒன்றிரண்டு  மணி  நேரம்  சூடாகவும்,  மிருதுவாகவும்  வைத்திருக்க  எளிய  வழி... நாலு  சப்பாத்திகள்
   தயாரானதும்,  அலுமினியம்  ஃபாயில்  பேப்பரில் ( aluminium  foil )  சுற்றி  வைத்துவிடுங்கள்.  இப்படி  எல்லா  சப்பாத்திகளையும்  சுற்றி
   வைத்துவிட்டால்...தேவையானபோது  பிரித்தெடுத்து,  சுவை  குறையாமல்  பரிமாறலாம்.
*  ரசம்  தயாரிக்கும்போது  தக்காளியை  முதலிலேயே  சேர்ப்பதைவிட,  தக்காளியைத்  துண்டுகலாக்கி  நெய்யில்  வதக்கி  வைத்துக்  கொண்டு,  ரசம்
   தயாரித்து  முடித்ததும்,  சேர்த்துவிட்டால்... ரசம்  தெளிவாகவும்  சுவையாகவும்  இருக்கும்.
-- அவள் விகடன்.  15 - 01 - 2013.
-- இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Friday, December 12, 2014

365 இரவுகள் !

   " சினிமாவில்  நடிக்க  அழைத்தால்  தமிழ்ப்  பெண்கள்  முகம்  சுளித்து  மறுப்பதேன் ?"
     " ' அவள்  ஒரு  தொடர்கதை'  100 வது  நாள்  விழாவில்  கவியரசு  கண்னதாசன்  பேசியது... ' நானும்  கலைஞரும்  சினிமாவில்  சேர்ந்த  ஆரம்ப  காலத்தில்  ஓர்  அழகி  சினிமா  வாய்ப்பு  கேட்டு  வந்தாள்.  ஏதோ  காரணத்தால்  வாய்ப்பு  தரப்படவில்லை.  ஒரு  வருடம்  கழித்து  மீண்டும்  வந்தாள்.  எனக்கோ  ஆச்சர்யம். ' எவ்வளவு  அழகாயிருந்தவள்  ஒரே  வருடத்தில்  இப்படிச்  சீர்குலைந்து  போய்விட்டாளே '  என்று  வருத்தப்பட்டேன்.  அருகில்  இருந்த  கலைஞர்  மெள்ள  என்னிடம்  சொன்னார், ' ஒரு  வருடத்துக்கு  365  இரவுகள்  ஆயிற்றே!"
-- அ.யாழினி  பர்வதம்,  சென்னை .78.  ( நானே  கேள்வி... நானே  பதில் !...).
--ஆனந்தவிகடன்.  28 .11 . 2012.

Thursday, December 11, 2014

இன்பாக்ஸ்.

  இரண்டாம்  உலகப்  போரின்  அதிர்வுகள்  இன்றும்  ஜப்பானில்  எதிரொலிக்கின்றன.  கடந்த  வருட  சுனாமிச்  சீரழிவுகளை  அகற்றும்போது,  செண்டாய்  நகரின்  விமான  நிலையத்தில்  ஒரு  குண்டைக்  கண்டெடுத்து  இருக்கிறார்கள்.  சுமார்  250  கிலோ  எடை  இந்தக்  குண்டைச்  செயலிழக்கச்  செய்த  பின்தான்  பெருமூச்சுவிட்டது  மீட்புக்  குழு.  ( சுனாமியால்  ஒரு  நல்லது ! )
-- ஆனந்தவிகடன்.  28 .11 . 2012. 

Wednesday, December 10, 2014

பால் தாக்கரே....

  " மராட்டியம்  மராட்டியருக்கே... வேற்று  மொழியினருக்கு  இங்கே  இடம்  இல்லை " என்றார்  ஒருசமயம்.  இன்னொருசமயம்,  " தமிழர்களை  மிகவும்  நேசிக்கிறேன்.  ஈழத்  தமிழர்கள்,  இந்தியாவின்  குழந்தைகள்..." என்றார்.  பாபர்  மசூதி  இடிப்பை  முன்னின்று  நடத்திய  அரசியல்  கட்சிகள்  அடையாளம்  மறைத்துப்  பின்வாங்க,  " ஒருவேளை  சிவசேனா  இடித்து  இருந்தால்,  நான்  பெருமை  அடைகிறேன்..." என்றவர். " இஸ்லாமிய  பயங்கரவாதத்தை  ஒழிக்க  இந்துக்கள்  தற்கொலைப்  படையினராக  மாறவேண்டும் "  என்று  கர்ஜித்தவர்.  தனது  பேத்தி  நெகா,  ஒரு  முஸ்லீமை  மணந்தபோது  முன்னின்று  வாழ்த்தினார்.  "கடவுள்  இல்லாமல்  உலகம்  இயங்காது "  என்று  சொன்ன  தீவிர  சைவ  சித்தந்த  ஆத்திகர்.  தனது  மனைவி  மீனா  இறந்தபோது,  மேஜை  மீது  இருந்த  கடவுள்  படங்களைச்  சிதறடித்து, " கடவுளே  இல்லை "  என்று  கோபம்  காட்டியவர்.  இபபடித்  தனது  வாழ்க்கையின்  ஒவ்வொரு  பக்கத்தையும்  முரண்கள்,  சர்ச்சைகள்,  அதிரடிகளால்  நிரப்பிய  பால்  தாக்கரே,  கடந்த  17-ம்  தேதி  தனது  இறுதி  மூச்சை  நிறுத்திக்  கொண்டதை  நம்ப  முடியாமல்  தவிக்கிறார்கள்  மராட்டிய  மண்ணின்  மைந்தர்கள் !
     போக்குவரத்து  வசதிகள்  நிரம்பியிராத  அந்தக்  காலகட்டத்தில்  அண்ணாவின்  மறைவுக்கு  ஒன்றரைக்  கோடி  பேர்  திரண்டது  கின்னஸ்  ரெக்கார்டு.  ஆனால்,  எந்த  ஆட்சிப்  பொறுப்பிலும்  நேரடியாக  உட்காராத  தாக்கரேவுக்கு  அஞ்சலி  செலுத்த  20  லட்சம்  பேர்  கூடியதும்  ஒரு  ரெக்கார்டுதான்.
-- ஆனந்தவிகடன்.  28 .11 . 2012. 

Tuesday, December 9, 2014

மாயன் காலண்டர்.

  எழுத்து,  கலை,  கணிதம்,  வானவியல்  ஆகியவற்றில்  சிறந்து  விளங்கிய  மாயன்கள்  கி.மு.  2000  முதல்  கி.மு.  900  வரை  வாழ்ந்தனர்.  சூரிய  காலண்டரை  கண்டுபிடித்த  இவர்கள்,  சாக்லட்  தயாரிப்பதிலும்  வல்லவர்களாக  இருந்தனர்.  உலகில்  முதன்  முதலில்  கோகோ  பவுடரை  கண்டுபிடித்து  சுவைத்தவர்கள்  இவர்கள்தான்.  கோகோ  பவுடர்  புத்துணர்ச்சி  தரும்  பானம்  மற்றும்  எல்லா  நோய்களையும்  குணப்படுத்தும்  என்பதால்  சாக்லட்  பிரியர்களாக  இருந்தனர்.
    கி.மு.  1050 ம்  ஆண்டு  சிசேன்  இட்ஷா  என்ற  இடத்தில்  பிரமிடுபோல்  இவர்கள்  ஒரு  கோயிலை  கட்டினர். குல்குல்கான்  என்பது  அந்த  கோயிலின்  பெயர்.  இந்த  கோயிலைத்தான்  அவர்கள்  காலண்டராக  பயன்படுத்தினார்கள்.  பிரமிடு  போல்  அமைந்த  இந்த  கோயிலின்  4  பக்கங்களிலும்  ஒரு  ஆண்டை  நான்காக  வகுத்து  தலா  91  படிகளால்  அமைக்கப்பட்ட  மாடிப்படி  இருந்தது.  பிரமிடின்  மேல்தளம்  கணக்கில்  எடுத்துக்கொள்ளப்பட்டு,  165  நாட்கள்  வரும்  வகையில்  இதை  வடிவமைத்தனர்.
    மாயன்கள்  காலண்டர்  12.12.2012  அன்று  முடிவதாக  அமைக்கப்பட்டிருந்தது.  ஒரு  சுழற்சி  5  ஆயிரத்து  125  ஆண்டுகள்  என்று  கணக்கிட்டு  வானவிவியல்  எண்  கணித  முறைப்படி  இது  அமைக்கப்பட்டதால்  21ம்  தேதி  உலகம்  அழியும்  என்று  எல்லாரும்  நினத்தனர்.  ஆனால்  அது  புஸ்வானமாகிப்போனது.
-- தினமலர் .30.12. 2012. 

Monday, December 8, 2014

ஜொலிக்கிறது 3 ம் பிரகாரம்.

 சிவாலயங்களில்  பிரசித்தி  பெற்றது  ராமேஸ்வரம்  என்றால்,  ராமேஸ்வரம்  கோயிலில்  பிரசித்திப்  பெற்றது  அங்குள்ள  3 ம்  பிரகாரம்  என்றழைக்கப்படும்  நீண்ட  மண்டபம்  ஆகும்.  இந்த  3 ம்  பிரகாரம்,  1740 ம்  ஆண்டு  கட்டப்பட்டது.  2 ஆயிரத்து  400  அடி  நீளம்  கொண்ட  இந்த  3 ம்  பிரகாரத்தில்  ஆயிரத்து  212  தூண்கள்  உள்ளன.
     இத்தூண்களின்  மீதும்,  பிரகாரத்தின் மேல்பகுதியிலும்  கண்னைக்  கவரும்  வகையில்,  வர்ண  ஜாலம்  செய்யும்  ஓவியங்கள்  வரையப்பட்டிருக்கும்.  ராமேஸ்வரம்  கோயிலுக்கு  வரும்  சுற்றுலாப்  பயணிகள்,  இந்த  3ம்  பிரகாரத்தை  பிரமாண்டத்தைக்  கண்டு  லயித்து  நிற்பதுண்டு.
--  தினமலர் .30.12. 2012.  

Sunday, December 7, 2014

வாழ்நாட்கள்.

*  மே  பூச்சியின்  வாழ்நாள்  ஒரு  நாள்.
*  ஆண்  கொசுவின்   வாழ்நாள் 7  நாட்கள்.
*  பெண்   கொசுவின்   வாழ்நாள்
*  வீட்டு  ஈயின்  வாழ்நாள் 4  மாதங்கள்.
*  எலியின்  வாழ்நாள் 3  வருடங்கள்.
*  அணிலின்   வாழ்நாள் 9  வருடங்கள்.
*  பூனையின்  வாழ்நாள் 12  வருடங்கள்.
*  குதிரையின்  வாழ்நாள் 30  வருடங்கள்.
*  யானையின்  வாழ்நாள் 80  வருடங்கள்.
*  ஆமையின்  வாழ்நாள் 300  வருடங்கள்.
--  தினத்தந்தி சிறுவர்  தங்கமலர் .  21 - 12 - 2012. 

Saturday, December 6, 2014


பொதுஅறிவுச் சோலை.

*'' ஆனந்தவனம் '  அமைப்பை  உருவாக்கியவர்  யார்?  -  பாபா  ஆம்தே.
*  அடால்ப்  ஹிட்லர்  எந்த  நாட்டில்  பிறந்தார்?  -  ஆஸ்திரியா.
*  கோவா  மாநிலத்தில்  ஏப்ரல்  மாதங்களில்  வண்ணப்பொடிகளை  தூவி  கொண்டாடப்படும்  விழா  எது?  -  ஷிக்மோ.
*  எந்த  விட்டமின்  சத்தில்  அஸ்கார்பிக்  அமிலம்  உள்ளது?  -  விடமின் சி.
*  ஈரான்  நாட்டில்  பேசப்படும்  முக்கிய  மொழி  எது?  -  பெர்சியன்.
*' தங்க  கடற்கரை'  என்று  அழைக்கப்பட்ட  ஆப்பிரிக்க  நாடு  எது?  -  கானா.
*  கஞ்சா  செடியிலிருந்து  பெறப்படும்,  மருத்துவ  ஆராய்ச்சிக்கு  பயன்படும்  பொருளின்  பெயர்  என்ன?  -  ஒபியம்.
*  ஜிம்  கார்பெட்  தேசிய  மிருகக்காட்சி  சாலை  எந்த  மாநிலத்தில்  உள்ளது?  - உத்தர பிரதேசம்.
--   தினத்தந்தி சிறுவர்  தங்கமலர் .  21 - 12 - 2012.

Friday, December 5, 2014

தகவல் களஞ்சியம்.

*  இந்திய  பெருங்கடலில்  உள்ள  மிகப்பெரிய  தீவு  மடகாஸ்கர்.
*  இந்தியாவில்  ரயில்வே  மியூசியம்  புது  டில்லியில்  உள்ளது.
*  மின்னணுக்  கணிப்  பொறியைக்  கண்டுபிடித்தவர்  டாக்டர்  ஆலன்  எம்டூரிங்.
*  முதுகு  தண்டுவடத்தின்  சராசரி  நீளம்  430  மில்லிமீட்டர்.
*  கலிங்கா  விருதை  வழங்குவது  யுனெஸ்கோ.
*  நீர்மூழ்கிக்  கப்பலை  வடிவமைத்தவர்  டேவிட்  புஷ்னல்.
*  ஒட்டகம்  தேவையான  நீரை  உடலில்  சேமித்து  வைத்துக்  கொள்கிறது  என்று  கூறுவது  தவறு.  அதன்  சருமத்தில்  வியர்வை  கோளங்கள்
   இல்லாததால்  நீர்  ஆவியாகச்  செல்ல  வழியில்லை.  அதனால்  அதற்கு  தாகம்  எடுப்பதில்லை.  நீர்  அருந்தாமலேயே  நீண்டகாலம்  சமாளிக்கிறது.
-- தினத்தந்தி சிறுவர்  தங்கமலர் .  21 - 12 - 2012.  

Wednesday, December 3, 2014

டிப்ஸ்...டிப்ஸ்...

*  பாகற்காயை  அப்படியே  வைத்தால்  ஒன்றிரண்டு  நாட்களில்  பழுத்து  விடும்.  இதைத்  தவிர்க்க,  காய்களை  மேற்புறமும்  அடிப்புறமும்  வெட்டிவிட்டு,
   இரண்டாக  பிளந்து  வைத்து விடவும்.  பல  நாட்கள்  வரை  பழுக்காமல்  இருக்கும்.
*  காய்கறிகளை  பாலிதீன்  கவரில்  போட்டு  ஃபிரிட்ஜில்  வைக்கப்  போகிறீர்களா?  ஒரு  நிமிடம்.. கவர்களில்  கோணி  ஊசி  அல்லது  கூரான  ஆணி
   கொண்டு  குத்தி  துளைகள்  போட்ட  பின்,  காய்களை  அதில்  வைத்தால்,  காய்கள்  பல  நாட்கள்  அழுகாமல்  இருக்கும்.
*  மிக்ஸி ( அ ) கிரைண்டரில்  தோசை  மாவு,  சட்னி,  துவையல்  போன்றவற்றை  அரைத்து  வழித்து எடுத்ததும்,  மீண்டும்  ஜாரில்  சிறிது  நீர்விட்டு
   ஜாரை  ஓட்டவும்.  அதனுள்ளே  கெட்டியாக  ஒட்டிக்  கொண்டிருக்கும்  மாவு  தண்ணீரோடு  கரைந்து  வந்து  விடுவதால்,  ஜாரை  சுத்தம்  செய்வது
   மிகவும்  சுலபம்.
*  தேங்காய்  பர்ஃபி  செய்யும்போது  துருவிய  தேங்காயை  அப்படியே  சர்க்கரை  பாகில்  சேர்க்காமல்,  முதலில்  தேங்காய்  துருவலுடன்  அரை  டம்ளர்
   பால்,  5  முந்திரிப்  பருப்பு  சேர்த்து  மிக்ஸியில்  அரைத்து  பிறகு  சர்க்கரை  பாகில்  சேர்த்தால  தேங்காய்  திப்பிதிப்பியாக  இல்லாமல்,  பர்ஃபி
   மிருதுவாக  இருக்கும்.
*  நெய்  காய்ச்சிய  பாத்திரத்தில்  ஒரு  டம்ளர்  நீர்  வீட்டு  கொதிக்க  வைத்து  அடுப்பில்  வைத்திருக்கும்  சாம்பார்  அல்லது  ரசத்தில்  அதை  வடிகட்டி
   கொட்டி  விடுங்கள்.  நெய்  மணம்  கமழும்  சாம்பார்  ரெடி.
* தேன்குழல்,  முறுக்கு  மிருதுவாக  வர  வேண்டுமா?  மாவில்  வெண்ணெய்,  டால்டா,  நெய்  போன்றவற்றை  நேரடியாக  சேர்க்காமல்,  முதலில்  அரை
   டம்ளர்  வெந்நீரில்  இவற்றை  தேவையான  அளவு  போட்டு  உருக்குங்கள்.  அந்தத்  தண்ணீர்  சூடாக  இருக்கும்போதே  மாவில்  கலந்து  பிசைந்தால்,
   வெண்ணெய்  மாவு  முழுவதும்  சீராக  பரவி,  கைகளில்  ஒட்டாமல்  இருக்கும்.  பலகாரங்களும்  மிருதுவாக  இருக்கும்.
-- மகாலட்சுமி,  காரைக்கால் - 2.
-- அவள் விகடன்.  24 - 10 - 2008.  

Tuesday, December 2, 2014

' இஞ்சி இடுப்பழகு '

  இஞ்சி  என்பது  நம்  உடல்  நலன்காக்கும்  நல்ல  உணவுப்  பொருள் ( மருந்துப்  பொருள் ).  இஞ்சிச்சாறு  காலையில்  பருகினால்  வயிற்றில்  உள்ள  தேவையில்லா  சதையை ( தொப்பையை )  குறைத்து  இடுப்பை  வலிவாகவும்,  வனப்பாகவும்  ஆக்கும்.
     இஞ்சிச்சாறு  வழக்கமாகப்  பருகிகின்றவர்களுக்கு  இடுப்பு  அளவோடு,  அழகாக  இருக்கும்.  அதனாலே  இஞ்சி  இடுப்பழகு  என்றனர்.
    " காலை  இஞ்சி
      கடும்பகல்  சுக்கு
      மாலைக்  கடுக்காய்
      மண்டலம்  தின்றால்
      கோலை  எறிந்து
      குலாவி  நடப்பர் "
-- என்பது  சித்தர்  பாடல்.
     காலையில்  இஞ்சிச்சாறும்,  பகலில்  சுக்குச்சாறும்,  மாலையில்  கடுக்காய்  சாறும்  பருகினால்,  உடல்  வலுப்பெறும்  என்பது  மேற்கண்ட  பாடலின்  பொருள்.  அந்த  அளவுக்கு  இஞ்சி  உடலுக்கு  உகந்தது.  இளமையும்,  இடுப்பழகும்  தரக்கூடியது.  ( இஞ்சி  சாப்பிடும்போது  அதன்மீதுள்ள  தோலை  நன்றாகச்  சீவி  அகற்றி  விடவேண்டும்.  காரணம்,  இஞ்சித்தோல்  நச்சுத்  தன்மை  உடையது.  கேடு  தரக்கூடியது ).
-- மஞ்சை  வசந்தன்,  பாக்யா.  அக்டோபர்  2 - 8;  2009.  

Monday, December 1, 2014

சொல் விளையாட்டு.

  தப்பும்  தவறுமாகப்  பேசி  எக்கச்சக்கமாக  மாட்டிக்கொள்ளும்  போது,  " இல்லையே... நான்  அந்த  அர்த்தத்தில்  சொல்லவில்லையே"  என்று  சமாளிப்பது  நம்  எல்லோருக்கும்  கை  வந்த  கலை.
     அதுவே  புலவர்கள்  என்றால்  சொல்லவே  வேண்டாம்.  அவர்களின்  மொழிப்  புலமையில்  எதை  வேண்டுமானாலும்,  எப்படி  வேண்டுமானாலும்  மாற்றிச்  சொல்லிவிடுவார்கள்.  இதோ  ஒரு  சின்ன  சம்பவம்:
   " வாரும்  ' மட ' த்தடிகளே "  (  மடத்து  அடிகளே  என்பது  பொருள்).  என்கிறார்  வந்தவர்.
     பதிலுக்கு  அவர்,
   " வந்தேன்  ' கல் '  விக்ரகமே "  (  கல்விக்  கிரகமே  என்பது  பொருள்  ). என்கிறார்.  இதைக்  கேட்டதும்  அவரும்  சிரித்துக்கொண்டே,
   " அறிவில்லாதவனே "  ( அறிவில்  ஆதவனே  என்பது  பொருள் ).
என்று  சிலேடையாய்  சொல்கிறார்.
--  தினமலர்  சிறுவர்மலர் . டிசம்பர் , 28, 2012.