Saturday, October 18, 2014

விசித்திர கிரகம்!

கண்ணாடி மழை பொழியும் விசித்திர கிரகத்தின் நிறம் நீலம்!
     வாஷிங்டன்:  2005ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட  ' கண்னாடி ' மழை பொழியும் விசித்திர கிரகத்தின் நிறம் நீலம் என, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
     பூமியில் இருந்து 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விசித்திர கிரகம் 2005 அக்டோபர் 6ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.  அதற்கு, ' எச்டி 189733பி என்று பெயரிடப்பட்டது.  ஒரு நொடிக்கு 152.5 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும் இந்த கிரகம், ஒரு நட்சத்திரத்தை 2.2 பூமி நாட்களில் சுற்றி சுழன்று வருகிறது.  வாயு கிரகமான இதன் வளிமண்டல வெப்பநிலை, ஆயிரம் டிகிரி செல்சியஸை விட அதிகம்.
     இந்த கிரகம் நீல நிறத்தில் இருப்பது, இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நாசா மற்றும் ஈஎல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள நட்சத்திர மண்டலங்களைச் சேர்ந்த 723 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதில் ஒன்றான எச்டி 189733பி கிரகத்தின் நிறம் நீலம் என இப்போது கண்டறியப்பட்டுள்ளது.  விண்வெளியிலிருந்து நமது பூமியைப் பார்த்தால், நீல நிறக் கோளமாகக் காட்சியளிக்கும்.  இதற்கு, பூமியில் உள்ள கடல்களால் ஏற்படும் ஒளி பிரதிபலிப்புகள் காரணம்.
     எச்டி 189733பி கிரகமும் நீல நிறத்தில் ஒளிர்கிறது.  அது வாயு கிரகம் என்பதால், அதில் கடல்கள் கிடையாது.  அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்து மணிக்கு 7 ஆயிரம் கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.  அதன் ஊடாக கண்ணாடி ( சிலிக்கேட் )  மழையும் பொழிந்து கொண்டிருக்கிறது.  கண்ணாடி துகள்களால் ஏற்படும் பிரதிபலிப்புகள்தான், இந்த கிரகத்துக்கு நீல நிறத்தை அளித்துள்ளன.  ஒரு வெளி கிரகத்தின் உண்மையான நிறம் துல்லியமாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
-- தினமலர். 13.7.2013.  

No comments: