Wednesday, March 12, 2014

தங்கம் காய்க்கும் மரங்கள் !

  ஆஸ்திரேலிய  விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
     வடக்கு ஆஸ்த்திரேலியாவின் கல்கூர்லி என்ற பகுதியில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்கிறது என 19ம் நூற்றாண்டில் பரபரப்பாக பேசப்பட்டது.  அந்த பகுதியில் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.  அப்போது அந்த பகுதியில் வளர்ந்திருந்த சில யூக்கலிப்டஸ் மரத்தின் கிளைகளிலும், இலைகளிலும் தங்கத்தின் துகள்கள் கலந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.  மையா டிடெக்டர் என்னும் கருவியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மனித தலைமுடியை விட 5 மடங்கு சிறிய துகள்களாக தங்கம் யூக்கலிப்டஸ் மரத்தின் இலை மற்றும் கிளைகளில் படிந்திருப்பதை கண்டுபிடித்தனர்.  இதுகுறித்து, அந்த ஆராய்ச்சி கழகத்தின் புவியியல் வல்லுனர் மெல்லின் லிட்ரன் கூறுகையில். "10 மீட்டர் உயரத்துக்கு மேல் வளர்ந்திருக்கும் யூக்கலிப்டஸ் மரத்தின் வேர் பூமிக்கடியில் 40 மீட்டர் ஆழம் வரை சென்றிருக்கும்.  வறட்சி காலத்தில் ஈரப்பதத்தை தேடி மரத்தின் வேர்கள் இன்னும் அதிக ஆழத்துக்கு சென்றிருக்கும்.  அப்போது அந்த ஆழத்தில் படிந்துள்ள தங்கத்துகள் கலந்த நீரை மரத்தின் வேர்கள் உறிஞ்சி, மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும்.  மரத்தின் வளர்ச்சிக்கு தங்கம் ஒவ்வாத காரணத்தால் இலைகளின் வழியாக வெளியேற்றப்படுகிறது.  ஆனால் 500 மரங்களில் படிந்துள்ள தங்கத்தின் அளவை எடுத்தால் அது ஒரு மோதிரம் செய்யும் அளவில் மட்டுமே இருக்கும் " என்றார்.
     பூமிக்கு அடியில் படிந்திருக்கும் கனிமங்களை கண்டறிவதற்கும், அவற்றை பூமிக்கு அடியில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-- தினமலர் . 24-10-2013.  

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நாம் நாட்டில் எல்லா மரத்தையும் வெட்டினாலும் இதை மட்டும் நிறைய வளர்ப்பார்கள்...!