Friday, June 15, 2012

தகுதி !


எதற்குமே தகுதி என்ற ஒன்று வேண்டும். வாழும்போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தகுதி வேண்டும்.
பரிணாமவியல் பிதாமகர் சார்லஸ் டார்வினின் முக்கிய கோட்பாடு, ' Survival of the fittest. ' எந்த உயிரினம் சூழலுக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறதோ, அதுவே வாழத் தகுதியானதாக இருக்கும். தாக்குப்பிடிக்க முடியாதவை அழிந்து போய்விடும். அரிதான எத்தனை உயிரினங்கள் அழிந்துகொண்டிருப்பதாக தினசரி செய்திகள் படிக்கிறோம்! ஆனால், எல்லாவற்றையும் அழித்துவிட்டு, அவற்றைத் தாண்டி ஜீவித்திருக்கும் சாமர்த்தியத்தை மனிதன் பெற்றிருக்கிறான்.
' எலிஜிபிள் பேச்சிலர் ' என்னும் சொல்லாடலைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். திருமண மாப்பிள்ளைக்கு இருக்க வேண்டிய அதிமுக்கிய தகுதியை, நாவிதர் மூலம் திருமணத்திற்கு முந்தைய நாள் பரிசோதிக்கும் வழக்கம் இன்னும் சில கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது.
வாழ்வில் வெற்றிபெறச் சில அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என 60 வகையான தகுதிகளைச் சில சுய முன்னேற்றப் பயிற்சிகளில் வலியுறுத்துவார்கள். இதை Soft skills என்பார்கள். நம்பகத்தன்மை, வளைந்துகொடுத்துப் பேசுவது, கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது, கூட்டுமுயற்சியில் ஒத்துழைப்பது, அனுபவம், கண்ணியம் என நீளும் அந்த லிஸ்ட்...
' இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். '
என்ற திருக்குறளில் திருவள்ளுவர் ஆராயச் சொன்னது தகுதியைத்தான் !
--- லதானந்த், குங்குமம் 29 . 11 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

No comments: