Tuesday, March 27, 2012

மெட்ரோ ரயில் திட்டம் .

சென்னையை துளைக்கிறது மெட்ரோ ரயில் திட்டம் ..
பூமியை குடைந்து நம் காலுக்கு அடியில் ரயில் ஓடப்போகிறது . நினைத்தாலே பிரமிப்பாய் இருக்கிறது . விரைவில் நம் தலைநகர் சென்னையில் இது நடக்கப் போகிறது . சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது . சரி....இதெல்லாம் எப்படிச் சாத்தியம் ஆகிறது ! வீடு, கட்டடம் என்று சென்னையில் நிறைந்திருக்க, அவற்றுக்கு கீழே பள்ளம் தோண்டி, ரயில் விடப்போவது எப்படி ?
மெட்ரோ ரயில் பாதை சென்னையில் 2 வழித்தடங்களில் அமைக்கப்படுகிறது . முதலாவது பாதை, வண்னாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை 14.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைகிறது . 2 வது பாதை சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 9.7 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது .
இந்த வழித்தடங்களில் சில இடங்களில் சுரங்கப் பாதை தோண்டப்படுகிறது . அந்த சுரங்கப் பாதையில் ஒரு ரயில் போக, ஒரு ரயில் வர என்று 2 தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன . ஆக அந்த அளவுக்கு பெரிய குகை அது .
தரை மட்டத்தில் இருந்து 51 அடி கீழே இந்த சுரங்கப் பாதை இருக்கும் . 6.2 மீட்டர் அகலத்தில் இந்த வட்டப் பாதை அமையும் . வீடுகளுக்கு கீழே போர் வெல் தோண்டி குழாய்கள் இறங்கி இருக்கும் ; சில இடங்களில் கிணறு இருக்கும் . அவற்றையெல்லாம் அப்புறப்படுத்தி, மாற்று போர் வெல் போட நிவாரண பணம் தரப்பட்ட பிறகு, சுரங்கப் பாதை குடையும் வேலை ஆரம்பமாகும் .
இதற்காக 10 டனல் போரிங் மிஷின்கள் வருகின்றன . அந்த மிஷின்கள் பூமியை குடையும் போது மண் சரிவு இல்லாமல் எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது எல்லோரிடமும் இருக்கும் ஆச்சரியமான கேள்வி .
டனல் போரிங் மிஷின் : இது தான் பூமிக்கு அடியில் சுரங்கப் பாதை தோண்ட இருக்கும் மிஷின் . இதன் முகப்பு மட்டும் 170 டன் எடை கொண்டது . இதில் 62 கட்டிங் பிளேடுகள் உள்ளன . புள்ளி புள்ளியாகத் தெரியும் கட்டிங் பிளேடுகள் வெவ்வேறு திசையில் பொருத்தப்பட்டுள்ளன . இவை எவ்வளவு கடினமான பாறையையும் அறுத்தெடுக்கும் . பிரம்மாண்டமான இந்த மிஷினுக்கு கீழே வேலை ஆட்கள் நிறபார்கள் . அதை ஒப்பிட்டு மிஷினின் பிரம்மாண்டத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம் .
நீளம் : இதன் நீளம் 120 மீட்டர் . இந்த மிஷினுக்கு உள்ளேயே கம்யூட்டர் அறை, ஜெனரேட்டர், கேண்டின், ஓய்வு அறை என்று எல்லா வசதிகளும் உள்ளன . இந்த மிஷினுக்குள் மொத்தம் 100 பேர் வேலை செய்கின்றனர் . உள்ளே இது ஒரு அலுவலகம் மாதிரிதான் இருக்கும் .
உள்கடமைப்பு : இந்த மிஷின் துளை போட்டுகொண்டு போகும் போது தூளான பாறை, மணல், சகதி எல்லாம் கன்வேயர் பெல்ட் மூலம் வெளியேற்றப்படுகிறது .இந்த மிஷினின் முகப்பு, துளை போட்டுச் செல்லும் போதே, 0.4 மீட்டர் தடிமன் கொண்ட கான்கிரீட் சுற்றுச்சுவர் உடனடியாக போடப்படுகிறது.
ஒரு நாள் வேலை : இந்த மிஷின் 24 மணி நேரத்தில் 8 மீட்டரில் இருந்து 10 மீட்டர் தூரம் வரை சுரங்கப் பாதை ஏற்படுத்தும் .
காற்று வசதி : மிஷின் ஒரு கிலோ மீட்டர் தூரம் துளை போட்டதும், சுரங்கத்தின் உள்ளே வேலை செய்பவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் . இதனால் சுரங்கத்தின் மேற்பரப்பில் பெரிய குழாய் மூலம் ஆக்ஸிஜன் உள்ளே அனுப்படுகிறது . உபகரணங்கள், வேலை செய்பவர்களுக்கு உணவு, அடுத்த ஷிப்டுக்கு வேலை ஆட்கள் எல்லாவற்றையும் கொண்டு செல்ல, தற்காலிக மினி ரயில் போக்குவரத்தும் உள்ளே நடக்கும் .
மினி ரயில் : சுரங்கம் தோண்டும் போது, உள்ளே மின்சாரம், மினி ரயில், குடி நீர் சப்ளை என்று எல்லா வாதிகளும் இருக்கும் .
துளையிடும் போது, அடுத்து என்ன எதிர்படும் என்பதை துல்லியமாகச் சொல்ல மண்ணியல் துறை நிபுணர்கள் அந்த மிஷின் அலுவலத்துக்குள் இருப்பார்கள் . கடினமான பாறை, இளகிய மண் என்று வந்தால், அதற்கேற்றாற் போல் பிளேடு மாற்றப்படும் . தண்ணீர் எதிர்ப்பட்டால் அப்படியே உறிஞ்சி பின்பக்கமாக வெளியேற்றப்படும் .
14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டம் 2012 ம் ஆண்டு துவங்கி 2015 ம் ஆண்டு முடைவடைகிறது ..
--- தினமலர் , 18 . 12 . 2011 .

No comments: