Friday, December 30, 2011

மருந்து கம்பெனிகள் !

ஒரு புதிய மருந்து சந்தையை வந்தடைய சராசரியாக ரூ .3,600 கோடி வரை செலவாகிறது . இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம், மனிதர்கள் மீதான பரிசோதனை . புதிதாக உருவாக்கப்படும் மருந்து மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று சோதிக்கவேண்டும் .
வளர்ந்த நாடுகளில், இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்குக் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு . தவிர, நோயாளிகளின் பாதுபாப்புக்கான செலவும் அதிகம் . மூன்றாம் உலக நாடுகளில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, செலவில் 60 சதவிகிதம் வரை குறையும் . மேலும், ஏழை மக்களின் அறியாமை, எளிதில் வளையக்கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பு இன்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்தன மருந்து கம்பெனிகள் .
இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன . இந்தப் பரிசோதனைகள் தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடுகின்றன . இதனால், மருந்து நிறுவனங்களால் சட்டத்தில் இருந்து எளிதாகத் தப்ப முடிகிறது . ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்று நோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனையின் ஒரு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட மருந்து ஆராய்ச்சியில், 14 ஆயிரம் சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர் . அந்தச் சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழ்ங்குடியினர் . அவர்களுக்கோ, அவர்களுடைய பெற்றோருக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதே தெரியாது . இந்தக் குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது .
நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் ( எய்ம்ஸ் ) இப்படி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிர் இழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது . சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள் .
புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க அரசு . இனி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் களம் இறங்கப்போகின்றன என்பதே இதன் நேரடியான பொருள் !
எத்தகைய அற உனர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சியாளர்களையும் வழி நடத்துகிறது !
--- சமஸ் , ஆனந்த விகடன் . 29 . 6 . 2011 .

No comments: