Wednesday, November 30, 2011

ஓவர் ஈட்டிங்

சமீபத்தில் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று, 97 சதவிகித பெண்கள் மற்றும் 68 சதவிகித ஆண்கள் உணவுப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது . அதில் கூறப்பட்டிருக்கும் ஒரு முக்கியச் செய்தி, உடற்பயிற்சி செய்வது அதீத உணவுப் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தவிர்க்கும் என்கிறது !
* இனிப்புகளை அதிகம் விரும்புவராக இருந்தால், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறபோது 15 நிமிடங்கள் வெளியே காலார நடமாடுங்கள், அது உங்கள் எண்ணத்தை மாற்றும் !
* ஐஸ்க்ரீம், ரோட்டோர பானி பூரி வகையறாக்கள் உண்ணும் எண்ணங்களைத் தவிர்க்க ... குறுக்கெழுத்துப் புதிர்கள், சுடோகு ஆகியவற்றை முயற்சித்துப் பார்க்கலாம் !
* படிக்கும்போது ' டிடிங்...டிடிங் ' என்று குறுஞ்செய்திகள் வந்தால், கவனம் சிதறத்தான் செய்யும் . அப்போது மெசேஜ் டோனை சைலன்ட் மோட் - ல் வைக்கவும் !
--- ந. வினோத்குமார் , ஆனந்த விகடன் , 10 . 11 . 10 .

Tuesday, November 29, 2011

மடியில் கனமிருந்தால்...

லேப்டாப், கம்ப்யூட்டரால் ஆண்கள் மலடாவதாக தகவல் வந்திருக்கிறது .
மடிக்கணினி என்கிறார்கள் தமிழில் . கால்களை ஒட்டி வைத்து லேப்டாப்பை இயக்கும்போது விரைகள் சூடாகி விந்து உற்பத்தி குறைகிறது என கண்டறிந்துள்ளனர் அவை உடலுக்கு வெளியே அமைந்திருப்பதே கூலாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் . உடல் உஷ்ணத்தின் ஏற்ற இறக்கம் அவற்றை பாதிக்காமல் இருந்தால் உயிரணு உற்பத்தி சீராக நடக்கும் .
ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை ஒன்றும் ஆகாது . அதற்கு மேல் சூடானால் பிரச்னை . 15 நிமிடத்தில் ஒரு டிகிரியை தாண்டிவிடுகிறது . பொதுவாக நமது ஊர் அதிகபட்ச வெப்பம் 30+ செல்சியஸ் . லேப்டாப் இயக்கினால் ஒரு மணி நேரத்தில் விரைப்பகுதியின் வெப்பம் இரண்டரை டிகிரி செல்சியஸ் ஆகிறதாம் . 15 நிமிடத்தில் ஒரு டிகிரியை தாண்டிவிடும் . மடியில் ஒரு பலகை வைத்து இயக்குபவர்கள் உண்டு . சற்று பெரிதாக இருந்தால் கால்களை விரித்து அமரலாம் . ஆனால், இதெல்லாம் பாதிப்பை தடுக்க முடியாது என்று லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் நிரூபணமாகி உள்ளது . பலகை இருந்தால் தொடையில் சூடு தெரியாது . அவ்வளவுதான் .
'1980களில் ஒரு மில்லி லிட்டர் விந்தில் 7 கோடி உயிரணுக்கள் இருந்தால் அவர் ஆரோக்கியமான ஆண் என்கிறார்கள் . இன்று 2 கோடி இருந்தால் நார்மல் என்கின்றனர் இன்னும் 30 ஆண்டுகள் போனால் ஒரு லிட்டரில் 100 அணுக்கள் இருப்பதே நார்மலாகிவிடும் போலிருக்கிறது ' என்கிறார் ஒரு டாக்டர் .
என்னதான் தீர்வு ? லேப்டாப்பை டெஸ்க்டாப்பாக பயன்படுத்துவதுதான் .
--- தினகரன் தலையங்கம் , நவம்பர் 7 , 2010 . ஞாயிற்றுக்கிழமை

Monday, November 28, 2011

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை !

தெரிந்து கொள்ள வேண்டிய துளிகள் .
* மூளைக்கு ரத்தம் செல்வது 2 நிமிடம் தடைபட்டால் மூளை செயலிழந்துவிடும் . மூளை செயலிழந்து விட்டால் மற்ற உறுப்புகள் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த நபர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை . இது போன்று மூளை செயலிழந்துவிட்ட நோயாளிகளிடம் இருந்து உறுப்புகளை எடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பொருத்துவதே உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சையாகும் .
* இதயம், இதய வால்வு, கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கண்கள், கருவிழி, தோல், எலும்பு ஆகிய உறுப்புகள் இறந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படுகின்றன .
* குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல் உறுப்பு தானம் செய்யலாம் . 18 வயதுக்குள் இருப்பவர்கள், பெற்றோர் அல்லது காப்பாளரின் ஒப்புதல் பெறவேண்டும் .
* உடல் உறுப்புகளை விலைக்கு விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ உடல் உறுப்பு மாற்று சிகிச்சை சட்டத்தின்படி 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் .
* இந்திய அரசு 1994 ம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை சட்டத்தை கொண்டு வந்தது .
--- தினமலர் , 7 . 11 . 2010

Sunday, November 27, 2011

நம்பிக்கைதான் !

நம்பிக்கைதான் -- மனிதனை நகர்த்துகிறது !
ஒவ்வொரு முறை செஞ்சுரி அடிக்கும்போதும் --
பெவிலியனுக்கு பேட் ; விசும்பிற்கு விழி; என உயர்த்திக் காட்டி நன்றி உரைப்பது, சர்ச்சிலின் சம்பிரதாயம் !
' அ ' னாவில்தான் -- படத்தின் முதல் உரையாடல் தொடங்க வேண்டும் என்பது, அமரர் திரு. ஏவி. எம். அவர்கள் காத்து நின்ற மரபு !
அஞ்சாம் ரீல்தான், ரீ - ரிக்கார்டிங்கை ஆரம்பிக்கவேண்டும் என்பது -- மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.வி அவர்களின் சென்டிமென்ட் !
பாடல்களின் மேல் -- ஸ்வரங்களைப் பென்சிலால்தான் குறித்துக்கொள்வார் -- வெண்கலக் குரல் வேந்து, திரு. டி.எம்.எஸ் அவர்கள் . பென்சில் சீவ ப்ளேடும் எடுத்து வருவார் !
தன்னுடைய கார்களின் நம்பர்களின் கூட்டுத் தொகை ஏழாக இருக்க வேண்டும் என்பதில், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியாக இருப்பார்கள் . படங்களின் பெயர்களும் கூடிய வரையில் ஏழெழுத்தில் வருவதை விரும்புவார் . உதாரணம் -- ' நாடோடி மன்னன் '; ' அரச கட்டளை '; ' உரிமைக் குரல் '; இத்யாதி இத்யாதி !
' ம '; ' மா '; ' மு '; என்று மகர வரிசையில் நான் அவரோடு எழுதும் பாடல்கள் தொடங்கப்பெற்றால், அவை பெரிதும் ஹிட் ஆகின்றன என்பது திரு.ஏ.ஆர். ரஹ்மானின் கணிப்பு ; உதாரணங்கள் :
' மரியா ! மரியா ! '
' மாயா மச்சீந்தரா ! '
' முக்காபுலா ! '
நம்பிக்கைதான் -- மனிதனை
நகர்த்துகிறது !
--- நினைவு நாடாக்கள் ஒரு rewind , தொடரில் வாலி . ஆனந்த விகடன் .10 . 11 . 10 .

நீதி இருக்கிறது !

" ' தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியா' ? "
" பல சமயங்களில் அது உண்மை . சில சமயங்களில் தாமதிக்கப்பட்டாலும், நீதி நியாயமாகவே அமைவதும் உண்டு . 1970 -ம் ஆண்டு ஆந்திராவில் போலீஸால் கொல்லப்பட்டவர் வர்கீஸ் என்ற நக்சலைட் . வர்கீஸைக் கொல்வது என்று போலீஸ் முடிவெடுத்தது . நடுக்காட்டில் வைத்து, ' யார் வர்கீஸைக் கொல்லப்போகிறீர்கள் ? ' என்று கேட்கப்பட்டது . அப்போது, அங்கே இருந்த ராமச்சந்திரன் நாயர் என்ற கான்ஸ்டபிள் மட்டும் கையை உயர்த்தவில்லை . ' சரி, வர்கீஸைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள் . நாளை செய்தித்தாளில் இப்படி செய்தி வர வேண்டும் . ' போலீஸ் -- தீவிரவாதி மோதல் . வர்கீஸ் சுட்டுக் கொலை . மோதலில் ஒரு போலீஸும் மரணமடைந்தார் .' இதைக் கேட்டு பதறிப்போன ராமச்சந்திரன் நாயரும் எங்கவுன் டருக்கு உடன்பட்டார் . பிறகு, தனது மனசாட்சி உறுத்த, வேலையில் இருந்து ஓய்வுபெற்ற ராமச்சந்திரன் நாயர் எழுதிப் புகழ்பெற்ற புத்தகம், ' நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி '. இப்போது அந்த வழக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது . நடைபெற்றது போலி மோத்ல் என்றும், வர்கீஸின் மரணம் ஒரு கொலை என்றும் தீர்ப்பு அளித்துள்ள சி. பி. ஐ நீதிமன்றம் . என்கவுன்டருக்கு உததரவிட்ட போலீஸ் அதிகாரி லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது . இப்போது வர்கீஸும் இல்லை . ராமச்சந்திரன் நாயரும் இல்லை . ஆனால், நீதி இருக்கிறது .
வி.கி.சுந்தர், திருப்பூர். நானே கேள்வி... நானே பதில் . ஆனந்த விகடன் , 10 . 11 . 10 .

Saturday, November 26, 2011

' டை ' அடிக்கப் போறீங்களா ?

டை ( dye ) பாக்கெட்டுகளில் மருதாணியும், நெல்லிக்காயும், ஆலோவீரா படமும் போட்டிருந்தாலும், அதில் சேர்த்திருக்கும் ரசாயனத்தின் பெயர்களைமட்டும் பொடி எழுத்தில் போட்டிருப்பார்கள் . அதைப் படித்துப் பார்த்து முடிந்தவரை அதிகம் ரசாயனம் கலக்காத, சிறிது நேச்சுரலான ஹேர் டை மட்டும் வாங்கவும் .
முதன் முதலில் உபடோகிக்கும்பொது அந்தப் பாக்கெட்டில் குறிப்பிட்டபடி உபயோகித்துப் பார்க்கவும் . அலர்ஜி எதுவும் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டு பூசவும் .
நன்கு ஷாம்பூ போட்டு அலசி, வாரிய முடியில் மற்றொருவரின் உதவியோடு டை போட்டு நன்கு காயவைத்து சீப்பால் வாரி பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரம் மட்டும் ஊறிக் குளிக்க வேண்டும் . டை போட்டு இரவு முழுவதும் ஊறி மறுநாள் .குளிக்கக் கூடாது . அந்த ரசாயனம் மண்டையில் இறங்கி இரத்தத்தில் கலந்து ஆபத்தாகி விடக்கூடும் .
அதே போல் குளிக்கும்போது கண்டிப்பாக உச்சந்தலையில் நீர் ஊற்றக் கூடாது . அப்படிச் செய்தால் விரைவிலேயே கண்கள் பாதிப்படையும், தலைமுடியை முன்பக்கமாகப் போட்டு தலைகுனிந்தபடியே தலைமுடியை அலச வேண்டும் .
குளித்தவுடன் இறுதியில் டீ டிக்காஷன், எலுமிச்சைச் சாறு கலந்து டை போட்ட கூந்தலில் ஊற்றி, நன்கு பரவலாகத் தேய்த்து நீ ஊற்றி அலசவும் . கூந்தல் வறண்டு போகாமல் பளபளவென நன்கு சீவ வரும் . டை போடும் நாளில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் . அப்போதுதான் டையில் இருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும் .
அதே போல அடிக்கடி ' டை ' போடக் கூடாது . ' டை ' போடப் போட கூந்தல் இன்னும் அதிகமாக நரைக்க ஆரம்பித்து விடும் . விதிகளை எச்சரிக்கையுடன் பின்பற்றி, கூந்தலைப் பாராமரிக்கவும் .
--- கலைவாணி, இராசிபுரம் . மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி ..

Friday, November 25, 2011

இதய கோளாறை காணும் கருவி !

தமிழக விஞ்ஞானி அறிமுகம் .
இதய கோளாறை சில நொடிகளில் துல்லியமாக கண்டுபிடிக்கும் கருவி .
சென்னையைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி அரவிந்த் தியாகராஜன் கண்டுபிடித்தார் . அது பற்றி அவர் கூறியதாவது :
பண்டைய காலங்களில் ஒலி மூலமாக உடலில் ஏற்படும் கோளாறுகளை கண்டுபிடித்து வந்தனர் . அந்த முறையில்தான் டாக்டர்கள் தற்போது உபயோகிக்கும் ஸ்டெதஸ்கோப் கருவியும் உருவாகியது . இதேபோன்று இதயத்தில் ஏற்படும் ஒலியை டிஜிட்டல் ஒலியாக மாற்றிக் காட்டும் புதிய வகை ஸ்டெதஸ்கோப் கருவியை ( போனோடாக் ) கண்டுபிடித்துள்ளேன் . இந்த கருவி மூலம் ஒருவரது இதயத்தில் இருக்கும் வால்வு கோளாறுகளை ஒரு சில நொடிகளில் கண்டுபிடிக்கமுடியும் . சாதாரணமாக லப்டப் என்று சத்தம் கேட்டால் இதயத்தில் எந்த கோளாறும் இல்லை என்று அர்த்தம் . இதயத்தின் வால்வு பகுதியில் அடைப்பு மற்றும் ஓட்டை இருந்தால், புதிய கருவியில் இருந்து வரும் டிஜிட்டல் ஒலி மூலம் எளிதாக கண்டுபிடித்து, அவருக்கு இதய கோளாறு இருப்பதை 100 சதவிகிதம் உறுதி செய்ய முடியும் .
தற்போது இதயகோளாறுகளை எக்கோ கார்டியோ கிராம் மூலம் கண்டுபிடிக்கமுடியும் . இதற்கு அதிக நேரமும் செலவும் ஆகும் . மேலும், இந்த வசதி நகரத்தில் மட்டுமே உள்ளது .டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப் கிராமப்புறங்களிலும் பயன்படுத்த முடியும் என்றார் அரவிந்த் தியாகராஜன் .
--- தினகரன் , 3 நவம்பர் .2010 .

Thursday, November 24, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...

* மாடர்ன் கிச்சன் வைத்திருப்பவர்கள், சிம்னியை ஆறு மாதத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் . இல்லாவிடில் சிம்னியில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கு எளிதில் தீப்பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு .
* தலைவலி அதிகமாக இருக்கும்போது, ஒரு பென்சிலை எடுத்து மேல்வரிசை பற்களுக்கும், கீழ் வரிசை பற்களுக்கும் இடையில் வைத்து பிடித்துக் கொண்டால், தலைவலி குறையும் , பென்சிலை அழுத்த வேண்டாம் .
* பச்சையாக இருக்கும் ஒருவகைப் பூச்சி நம்மீது பட்டாலோ, நம்மையும் அறியாமல் தொட்டாலோ அருவருக்கத்தக்க ஒரு நாற்றம் அடிக்கும் . அதைப் போக்க சிறிது விபூதியை எடுத்து தடவிக் கொண்டால் போதும் . நாற்றம் மறைந்து விடும் .
* மாவடு செய்தால், சில நாட்களிலேயே பூஞ்சை பிடித்து விடுகிறது . வடுமாங்காய் தயாரித்து ஒரு வாரம் கடந்தபின், அந்த நீரை வடிகட்டி கல் சட்டியில் விட்டு, சுண்டக் காய்ச்சி மீண்டும் ஜாடியில் ஊற்றி, வடுமாங்காய்களைப் போட்டு வைத்தால் பூஞ்சை பிடிக்காது .
* சின்ன வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு மூன்று மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து, பிறகு நறுக்கினால் கண்ணில் எரிச்சல் வராது .
* குளிர்க்காலத்தில் ஸ்வெட்டர்களைக் கையால் துவைக்கும்போது, ஷாம்பு போட்ட நீரில் ஊறவைத்துத் துவைத்தால் பளிச்சென்று இருப்பதுடன், கரையில்லாமல் வாசனையாகவும் இருக்கும் .
* ஃப்ளாஸ்க் அழுக்கடைந்து காணப்படுகிறதா ? வெந்நீரில் சிறிது உப்பைக் கரைத்து அதை ஃப்ளாஸ்கில் ஊற்றி, அரைமணி நேரம் ஊறவிடவும் . பிறகு வேறு நீரால் கழுவினால் ஃப்ளாஸ்க் சுத்தமாகி பளிச்சென இருக்கும் .
* இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா ? தலையனை, மெத்தை எதுவும் இல்லாமல் உடம்பைத் தளர்வாக வைத்துக் கொண்டு தரையில் 20 நிமிடம் படுத்திருங்கள் . இதனால் இடுப்பு வலியும் வராது , கூன் முதுகும் விழாது .
* இரவில் தூக்கமில்லையா ? ஒரு வாழைப்பழத்தை உரித்து, ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகத்தை தொட்டுக் கொண்டு இரவு சாப்பிட்டு வர ஆனந்தமான தூக்கம் வரும் .
* மிக்ஸி ஜார்களை அரைத்தவுடன் அதிக நேரம் சிங்கில் போடக் கூடாது . அரைத்ததும் ஜார்களை உடனே அலசி தனித்தனியே கவிழத்து வைத்து உலரவிட வேண்டும் . அப்படிச் செய்தால் நீண்ட நாள் உழைக்கும் .
* தேனை, மண், பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்களில் வைப்பதே சிறந்தது
* இருமல் பாடாய்படுத்துகிறதா ? இலுப்பக் கரண்டியில் நெய்விட்டு உருகியவுடன் சில மிளகுகளைப் பொடி செய்து அதில் பொரித்துச் சாப்பிட்டால் இருமல் போய்விடும் .
--- மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி ..

Tuesday, November 22, 2011

கேட்டதில் பிடித்தது !


இளைஞன் ஒருவன் எண்ணெய் வியாபாரியின் வீட்டிற்குப் போய் எண்ணெய் வாங்கினான் . வியாபாரி, வீட்டின் பின்புறம் ' செக் 'கில் எண்ணெய் ஆட்டிக்கொண்டு இருந்தார் . எண்ணெயை அளந்து விட்டுக்கொண்டே , மாட்டை ஓட்டுவது போல வாயினால் சப்தம் செய்தார் . சுற்றும் முற்றும் பார்த்த இளைஞன், " ஐயா ! மாடு எதுவும் இங்கு வரலையே, ஏன் மாட்டை விரட்டுவது போல ஒலி எழுப்புறீங்க ? " என்று வியந்து கேட்டான் .
அதற்கு அந்த வியாபாரி, " வீட்டின் பின்புறம் 'செக்கு ' ஓடிக் கொண்டிருக்கிறது . அதில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள் சுற்றி வந்தால்தான் செக்கில் உள்ள பொருள் அரைபட்டு எண்ணெயாக வெளியே வரும் . மாட்டின் கழுத்தில் மணி கட்டப்பட்டிருக்கும் . அதனால், மாடு சுற்றி வந்தால் மணி ஓசை கேட்கும் . மாடு சுற்றாமல் நின்று விட்டதால் ஓசை கேட்கவில்லை . அதான் மாட்டை விரட்ட ஒலி எழுப்பினேன் " என்றார் .
இதைக் கேட்ட இளைஞன், " ஐயா, மாடு ஒருவேளை நின்ற இடத்திலிருந்தே கழுத்தை மட்டும் ஆட்டி ஓசை எழுப்பினால் நீங்கள் மாடு சுற்றுவதாகத்தானே நினைத்துக் கொள்வீர்கள் " என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் .
அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்த வியாபாரி, " நீ சொல்வது சரிதான் ... ஆனால், மாடு உங்களைப் போல பி. எ,.. எம்.எ . எல்லாம் படித்ததில்லை . அதற்கு ஏமாற்றத் தெரியாது " என்றார் .
--- சுகிசிவம் உரையிலிருந்து , கேட்டவர் : சங்கரி வெங்கட் , பெருங்களத்தூர் . மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

Monday, November 21, 2011

ராஜராஜன் காலத்தில்...


* ராஜராஜ சோழனின் ராஜகுருவாக விளங்கியவர் ஈசான சிவ பண்டிதர் .
* தஞ்சைப் பெரிய கோயிலின் தலைமை அர்ச்சகராகத் திகழ்ந்தவர் பவணபிடாரன் .
* தஞ்சைக் கோயிலில் இன்றும் நாம் காணும் கல்வெட்டுகளை வெட்டியவர் பாளூர் கிழவன் .
* கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி, வீர சோழன் குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன் . அவரது உதவியாளர்கள் : மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் .
* ஆலயத்தின் நிர்வாக அதிகாரியாக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் .
* மற்ற மன்னர்கள்போல் தன் பெயரை மட்டும் கல்வெட்டில் பதித்து பெருமை கொண்டாடாமல், தனக்கு உதவிய அத்தனை பேரின் பெயரையும் பொறித்தது தமிழ்மன்னன் ராஜராஜனின் பெருந்தன்மை .
--' மாண்புமிகு மகான்கள் ' தொடரில், ப்ரியா கல்யாணராமன் . குமுதம் 3 . 11 . 10 ..

Sunday, November 20, 2011

வெனிஸ் நகரம்.


வெனிஸ் நகரம் ரொம்ப பழமையான நகரம் . வண்ண வண்னமான வீடுக்ள் . மிக அழகான பாரம்பரியம் மிக்க தேவாலயங்கள் என பிரமாதமான நகரம் .
அங்கே வீட்டு வாசலில் கார்கள் நிற்பதற்குப் பதில் படகுகள் நிற்கின்றன . ஏனென்றால் நகரம் முழுக்க நதியும் நீரோடைகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன . பக்கத்துத் தெருவுக்குப் போவதென்றால்கூட ஓடத்தில்தான் போகிறார்கள் . அந்தப் படகை ' கண்டோலா ' என்று அழைக்கிறார்கள் . வீடுகளுக்கெல்லாம் வினோதமாக வித வித வண்னங்களைப் பூசுகிறார்கள் . அதனால், நகரமே வண்ணமயமாக இருக்கிறது . ஆனால், பிரமாண்ட கட்டடங்கள் அந்த நகரில் கிடையாது . நவீனமான கட்டடங்களைக் கட்டினால் அந்த நகரத்தின் பழைமையான தோற்றம் போய்விடும் என்று கட்டுவதில்லையாம் . பழைமையை மிகுந்த சிரத்தையோடு பராமரிக்கிறார்கள் பழைமையான கட்டடங்களை புதுப்பிக்கும் போது அந்த கட்டடத்தின் பழைமை மாறாமல் பார்த்துக் கொள்கிறார்கள் .
முடிவா, வெனிஸ்ல எங்கேயும் பப்ளிக் டாய்லெட் கிடையாது . ஒரு அவசரம்னா பக்கத்துல இருக்குற ஏதாவது ஓட்டல் இல்லைனா கடைக்குத்தான் ஓடனும் . அங்கேயும் சும்மா போக முடியாது . ஏதாவது வாங்கினாதான் அனுமதிப்பாங்க . ஓட்டல்ல சாதாரணமா ஒரு காபி இருநூறு ரூபாய் . ஸோ, ஒரு தடவை பாத்ரூம் போகனும்னா இருநூறு ரூபாய் செலவழிக்கணும் .
இதுக்கெல்லாம் நம்ம ஊருதான் வசதி . ஹிஹி .
--- டால்மென் .' படப்பிடிப்பு பயணம் ' கட்டுரையில் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் .குமுதம் தீபாவளி மலர் , 3 . 11 . 2010 .

Saturday, November 19, 2011

குறைந்த செலவில் காற்றாலை


அதிக மின் உற்பத்தி செய்ய .குறைந்த செலவில் காற்றாலை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையைச் சேர்ந்த காளியாப்பிள்ளை மகன் சத்தியமூர்த்தி ( 42 ) , ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர், ஒரு எளிய முறை காற்றாலையை வடிவமைதுள்ளார் .
ஆண்டு முழுவதும் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், புதிய காற்றாலையை வடிவமைதுள்ளார் . பாய்மரம் போன்ற வடிவமைப்பில் ஆறு இறக்கைகள் இந்த காற்றாலையில் உள்ளது . மரம், கம்பி, காடா துணியைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . காற்றுவீசும் திசைக்கேற்ப காற்றாடியை திருப்பி வைத்துக்கொள்ளும் வகையில் சுழலும் அடிப்பகுதியுடன் இந்தக் காற்றாலையை வடிவமைத்துள்ளார் . குறைவான விசிறிகள், லேசான காற்றுக்கே வேகமாக சுழல்வதால் அதிக மின்சாரம் உற்பத்தி செய்வது என்பதே இவரது கண்டுபிடிப்பின் சிறப்பம்சம் .
இதனால் குறைந்த செலவில் அதிக மின்சாரம் பெறமுடியும் என்று கூறும் சத்தியமூர்த்தி, தற்போது டென்மார்க் நாட்டின் கண்டுபிடிப்பான 90 அடி விட்டமுடைய 3 இறக்கைகள் கொண்ட விசிறியே காற்றாலைகளில் பயன்படுத்தப்படுகிறது . இறக்கைகளின் அடிப்பகுதி அகன்றும் நுனிப்பகுதி குறுகியும் உள்ள இந்த அமைப்பினால் மணிக்கு 11 கிலோவாட் மின்சாரம் கிடைக்கிறது . அப்படியில்லாமல் நான் உருவாகியுள்ளபடி அடிப்பகுதி குறுகலான, நுனிப்பகுதி அகன்ற பாய்மரக் கப்பல் போன்று உள்வாங்கிய வகையில் விசிறிகளை அமைக்க வேண்டும் . அப்போதுதான் குறைந்த காற்று வீசும்பொது கூட வேகமாக சுழன்று அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் .
டென்மார்க் முறைப்படி தமிழ்நாட்டில் செயல்படும் காற்றாலை அமைக்க குறைந்தது ரூ. 10 கோடி செலவாகும் . ஆனால், எனது கண்டுபிடிப்பைப் போல் காற்றாலை அமைக்க ரூ. 2 முதல் 3 கோடி போதுமானது என்று கூறினார் .
--- தினமலர் . 1 நவம்பர் . 2010 .

Friday, November 18, 2011

' பறை ' -- ' தப்பு ' தமிழனின் பெருமை !


குறிஞ்சிப் பறை, நெய்தல் பறை, மருதம் பறை என ஐவகைத் திணைகளுக்கும் ஐந்து வகையான பறைகள் இருந்ததாக சங்க இலக்கியம் குறிபிடுகிறது . பக்தி இலக்கியத்திலும் பறை ஒலிக்கிறது . வேறு எந்த இசைக் கருவிக்கும் நேராத அநீதி, பறைக்கு நேர்ந்தது . ' பறை ' என்ற சொல் நேரடியாக சாதியைக் குறிப்பதால், அதற்கு ' தப்பு ' என்ற பெயர் மாற்ற வேண்டி வந்தது . மிக உன்னதமாகப் போற்றப்பட்ட ஒரு கலை காலப்போக்கில் இழிவானதாக மாற்றப்பட்டதுதான் காலப்பிழை .
' தெம்மாங்குக் கொட்டு, கல்யாணக் கொட்டு, கோவில் கொட்டு, சாவுக் கொட்டு, சல்லிமாடுக் கொட்டுன்னு இதில் நிறைய வகைகள் இருக்கு . நாற்பதுக்கும் அதிகமான அடவுகள் இருக்கு . சோழமலை, கண்டம், திசரம்னு தாள முறைகளிலும் பல வகைகள் இருக்கு . தப்புதல்னா அடித்தல்னு அர்த்தம் . அடித்தலும் ஆட்டமும் சேர்ந்து இருகுறதுனாலதான் இதைத் தப்பாட்டம்னு சொல்றோம் . வேற எந்தக் கலைக்கும் இல்லாத சிறப்பு என்னன்னா, இதில் மட்டும்தான் ஒரே நேரத்தில் ஆடிக்கிட்டே இசைக்கணும் . கலைஞனே இசைக் கருவியை உருவாக்குறதும் இதுலதான் .
--- கு. ராமகிருஷ்ணன் , ஆனந்த விகடன் . 3 . 11 . 10 .

Thursday, November 17, 2011

எச்சில் துப்பும் பழக்கம் !


ஒரு மனிதனின் வாயில், அவன் வாழ்நாளில் மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் எச்சில் உற்பத்தி ஆகிறது . உணவுக்கு குழைவைச் சேர்த்து, அதைச் சுலபமாக வயிற்றுக்குள் அனுப்புவது எச்சில்தான் . அது இல்லையேல், உங்களால் சரளமாகப் பேச முடியாமல், வாய் ஒட்டிக்கொள்ளும் . வாயில்தான் ஜீரணம் ( Digestion ) துவங்குகிறது . அதைச் செயல்படுத்தும் ptyalin என்கிற ' என்ஸைம் ' எச்சிலில்தான் இருக்கிறது . எச்சிலில் உள்ள தற்காப்பு புரோட்டீன்கள் வாயில் ரணங்கள் வராமல் தடுத்துக் காப்பாற்றுகிறது . முத்தங்களை மென்மையாக்குவது எச்சில்தான் !
இருப்பினும், வாய்க்குள் இருக்கும் வரையில்தான் எச்சிலுக்கு இவ்வளவு மதிப்பு . பிரபல மனோதத்துவ ஆய்வாளர் அந்தோணிஸ்ட்டோர் இதைக் கச்சிதமாக ( தர்மசங்கடமாக ! ) விளக்குகிறார் . ' வாய்க்குள் இருக்கும் எச்சிலை விழுங்குங்கள் . இதை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்வீர்கள் . சரி, உங்கள் எச்சிலையே டம்ளர் ஒன்றில் துப்புங்கள் . பிறகு, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீர், சர்க்கரை எல்லாம் சேர்த்து... இப்போது அதை ஒரே மடக்கில் குடிப்பீர்களா ? மாட்டீர்கள் ! வாயில் இருந்து வெளியே வந்த மறு விநாடி எச்சில் தன் குடியுரிமையை ( Renounced its citizenship ! ) ' இழந்துவிடுகிறது .
இந்தியா மட்டும் இல்லை ; ஆசியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக உண்டு . அமெரிக்காவில் 19 -ம் நூற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள் . அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது . துப்புவதற்கான கிண்ணங்கள் ( Spittoons ) தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன . ' மேஜை, நாற்காலிகள் மீது மட்டும் எச்சில் துப்பாதீர்கள் ! ' என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன . இப்படி கண்ட இடத்தில் துப்புகிற ' கலாசாரத்தை' ப் பார்த்துவிட்டு ஆஸ்கர் ஒயில்டு, ' அமெரிக்கா என்பது பிரமாண்டமான ஒரு எச்சில் ! ' என்றார் . இப்போது, அங்கே யாரும் பொது இடத்தில் துப்புவது இல்லை .
--- ஹாய் மதன் . ஆனந்த விகடன் . 3 . 11 . 10 .

Wednesday, November 16, 2011

அதிக சுகத்தைத் தர வல்லவன் !


நீளமான தந்தத்தைக்கொண்ட ஆண் யானையை மட்டுமே தேர்ந்தெடுத்து பெண் யானைகள் கூடும் . இதனாலேயே ஆண் யானைகளுக்குள் தந்தத்தின் அளவைவைத்து ஒரு போட்டி நடைபெறுகிறது . அதேபோலத்தான் மயில் . மிக நீளமான தோகை கொண்ட ஆண் மயிலோடுதான் பெண் மயில் சேர விரும்பும் . இதனால் ஆண் மயில்களுக்குள் ' யாருக்கு நீண்ட தோகை ' என்பதில் போட்டி . இப்படி உலகின் எல்லா ஜீவராசிகளிலும் பெண்ணைக் கவர ஆண் சில பாகங்களையோ, திறமைகளையோ விளம்பரமாக வெளிப்படுத்துவதைப் போலவே, மனித ஆண்களும் தங்கள் இனப்பெருக்க உறுப்பை ஒரு வீரிய விளம்பரமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள் .
இதனால், மனித ஆண் உறுப்பின் நீளம் அதிகரிக்க ஆரம்பித்தது . இன்றுள்ள வானர இனங்ககளிலேயே மனித ஆணின் உறுப்புதான் மிகவும் நீளமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது . இத்தனைக்கும் மனிதப் பெண்ணின் ஜனனக் குழாய் நீளம் என்னவோ எல்லோருக்கும் 10 செ.மீதான் . இதனுள் சென்றடைய அதே 10 செ.மீ நீளம் உள்ள கருவி இருந்தாலே போதும் . ஆனால், போட்டி என்று வந்துவிட்டால், வளர்ச்சி விகிதம் மாறித்தானே போகும் !
--- உயிர்மொழி தொடரில் டாக்டர் ஷாலினி , ஆனந்த விகடன் . 3 . 11 . 10 .

Tuesday, November 15, 2011

இனிக்கும் கணக்கு .


ஒரு காகிதத்தில் ' 9 ' என்று எழுதி மடித்து உங்கள் நண்பரிடம் கொடுங்கள் . " நான் ஒரு சின்னக் கணக்கு சொல்வேன், நீ என்னிடம் எதுவுமே கூறவேண்டாம் . அந்தக் கணக்கின் விடையை இதில் எழுதியிருக்கிறேன் . கணக்கு செய்து முடித்தபின் திறந்துபார் ! " என்று ' பில்டெப் ' கொடுத்துவிட்டு இப்படி சொல்லுங்கள் :
1 . எத்தனை இலக்க எண் வேண்டுமானாலும் எழுதிக்கொள் .
2 . அந்த எண்ணில் உள்ள இலக்கங்களைக் கூட்டு .
3 . இந்தக் கூட்டுத்தொகையை முதலில் எழுதிய எண்ணில் இருந்து கழித்துக் கொள் .
4 . வரும் விடையில் உள்ள இலக்கங்களைக் கூட்டு . விடை இரண்டு இலக்க எண்ணாக வந்தால், அந்த இரு எண்களையும் கூட்டி ஒற்றை இலக்கமாக மாற்று... இனி நான் தந்த
காகிதத்தைப் பிரித்துப் பார் ! அதே விடை இருக்கும் !
காகிதத்தைப் பிரித்துப் பார்க்கும் நண்பர், ' அடடே ! ' என்று அசந்துபோவார் !
ஒரு உதாரணம் :
நண்பர் எழுதிய எண் 123456 . இதன் இலக்கங்களின் கூட்டுத் தொகை 21 .( 1 + 2 + 3 + 4 + 5 + 6 ). இதை 123456 -ல் இருந்து கழித்தால் 123435 . இதன் கூட்டுத்தொகை ( 1 + 2 + 3 + 4 + 3 + 5 )
18 ; இதில் 1 மற்றும் 8 ஐக் கூட்டினால் 9 . எத்தனை இலக்க எண் என்றாலும், எப்போதுமே இதில் 9 -தான் விடையாக வரும் !
-- தினமலர் ,அக்டோபர் 29 , 2010 .

Monday, November 14, 2011

தானே இயங்கும் கார் !


டிரைவர் இன்றி செல், கம்ப்யூட்டரால் இயக்கலாம். நாகை வாலிபர் கண்டுபிடித்து அசத்தினார் .
நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடியைச் சேர்ந்த கார்த்திக் ( 20 ) என்பவர் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் செயற்கைக்கோள் மூலம் வீட்டில் இருந்தபடியே இயக்கக்கூடிய குட்டிக் காரை உருவாக்கியுள்ளார் .
கம்ப்யூட்டர், செல்போன் உதவியுடன் இயங்கும் இந்த கார், பேட்டரி மூலம் ஓடக்கூடியது . இரவு நேரங்களில் இந்த காரை ரோட்டில் விட்டுவிட்டு அதில் ஒரு கேமராவை பொருத்திவிட்டால் போலீசார் கண்காணிப்புப் பணிகளை தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் நேரடியாக பார்த்துக் கொள்ளலாம் .
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிற்சாலைகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு டிரைவர் இல்லாமலேயே சரக்குகளை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைக்க முடியும் . வீட்டில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்தபடியே அந்த வாகனத்தை இயக்கி எந்த இடத்துக்கும் சென்று, திரும்பி வர வைக்க முடியும் . தனியாக டிரைவர் தேவையில்லை .
மேலும், இந்த வாகனத்தை ராணுவத்திலும் பயன்படுத்த முடியும் . குறிப்பாக தீவிரவாதிகள் நடமாட்டத்தை எளிதில் கண்காணிக்கலாம் . அதேபோல காடுகளில் அபாயகரமான விலங்குகளை அருகில் சென்று படமெடுக்கவும் பயன்படுத்த முடியும் என்கிறார் கார்த்திக் .
---- தினமலர் ,அக்டோபர் 30 , 2010 .

Sunday, November 13, 2011

கறுப்பு மனிதர் !


அவர் பிறந்தது மிக சாதாரணமான குடும்பத்தில் . திருமணமான சில மாதங்களீலேயே பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு போகிறார் . அங்கே விடா முயற்சி , கடின உழைப்பு . கொஞ்சம் பணம் சேர்கிறது . அவர்கள் குடும்பத்தில் யாரும் கார் வாங்கியதில்லை . ' அங்கே அவர் வாங்குகிறார் . தன்னுடன் வசிக்க மனைவியை அந்த நாட்டுக்கு அழைக்கிறார் . அந்த அழைப்புக் கடிதத்தில் இப்படி எழுதியிருக்கிறார் . ' உன்னை அழைத்துப் போக ஒரு கார் வாங்கியிருக்கிறேன் . காரின் நிறம் என்ன தெரியுமா ? கறுப்பு, என்னைப் போல '. இந்த கறுப்பு மனிதர் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த திருபாய் அம்பானி !
--- அரசு பதில்கள் , குமுதம் தீபாவளி மலர் . 3 . 11 . 2010 .

Saturday, November 12, 2011

வெப்பம் அளவு . .


20 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவும் 68 டிகிரி பாரன்ஹீட் வெப்ப அளவும் சரிசமம் ; மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு சமமான பாரன்ஹீட் வெப்ப அளவு எவ்வளவு ?
விடை : மைனஸ் 68 டிகிரி பாரன்ஹீட் என்பது ' அவசர 'த்தில் வரும் தவறு ! மைனஸ் 4 டிகிரி பாரன்ஹீட் என்பதே சரி ! செல்சியஸ் அளவை பாரன்ஹீட்டாக மாற்ற 1.8 -ஆல் பெருக்கி 32ஐக் கூட்ட வேண்டும் !
3 -- டி படம் !
சாதாரணமான படங்களுக்கும், 3 -டி படங்களுக்கும் உள்ள வித்தியாசம், சாதாரண படங்களை கண்ணாடி போடாமல் பார்க்கலாம் , ஆனால், 3 -டி படங்களை ஸ்பெஷல் கண்னாடி போட்டுகிட்டு பார்க்கவேண்டும் . 3 -டி படத்தைப் பார்க்கறப்போ, காட்சிகள்லாம் நேரில் பார்க்கற மாதிரி இருக்கும் .
அப்படி நேரடியாகப் பார்க்கற காட்சிகளை முப்பரிமாணக் காட்சின்னு சொல்வார்கள் . ஆங்கிலத்தில் ' த்ரீ டைமன்ஷன் ', அதோட சுருக்கம்தான் ' 3 -டி '. இதோட இன்னொரு பெயர் ஸ்டீரியோகிராபி ! முதல் 3 - டி படம் லாஸ் ஏஞ்சலில் உள்ள அம்பாசடர் ஓட்டல் தியேட்டரில் 1922 ம் ஆண்டு செப்டம்பர் 22 ல் திரையிடப்பட்டது .
-- தினமலர் ,அக்டோபர் 29 , 2010 .

Friday, November 11, 2011

நியூட்ரான் நட்சத்திரம் !


சூரியனை போல இருமடங்கு நட்சத்திரம் கண்டுபிடிப்பு .
சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் ( மின் இயக்கமற்ற ) நட்சத்திரம் வான்வெளி கோளப்பாதையில் கண்டறியப்பட்டுள்ளது .
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் தேசிய கதிரியக்க வான்கோள்கள் கண்காணிப்பு துறையின் விஞ்ஞானி பால் டெமோரெஸ்ட் கூறியதாவது :
சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது . இது ஆச்சரியமாக உள்ளது . உயர் அடர்த்தி மற்றும் அணு இயற்பியல் தொடர்பான எங்களுடைய பல்வேறு விதிகளுக்கு பல்வேறு அர்த்தங்களை இந்த நட்சத்திர கண்டுபிடிப்பு அளித்துள்ளது . அணுக்கருவை விட, நியூட்ரான் நட்சத்திரம் பல மடங்கு அடர்த்தியானது . இந்த நட்சத்திரத்தின் மூலப்பொருள் மட்டும் 5000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும் . இது விண்வெளிக் கோளத்தில் சுற்றிவரும்போது இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் விண்வெளியில் படும் . இந்த கண்டுபிடிப்பு நியூட்ரான் நட்சத்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது என்றார் .
--- தினகரன் , 29 அக்டோபர் 2010 .

Thursday, November 10, 2011

ஹை டெக் தேசம் !


ஆட்டோமொபைல் துறையில் ஜப்பானுக்கே முதல் இடம் . உலகில் அதிக அளவு பயன்படுத்தப்படும் போக்குவரத்துச் சாதனங்கள் இங்கு தயாரானவையே . உலகத்தின் முக்கிய 15 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இங்குதான் இருக்கின்றன . 60 வருடங்களுக்கு முன்பு அணு ஆயுதங்களால் பாதிக்கப்பட்ட இந்தக் குட்டி நாட்டின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் இரண்டு தான் . ஒன்று, கடின உழைப்பு . மற்றது, உறவு . ஆம், ஜப்பானின் நிறுவன முதலாளி -- தொழிலாளி உறவு ஒரு குடும்பம் போலவே இருக்கிறது . விஞ்ஞானியோ, கடைநிலை ஊழியரோ பணிபுரியும் நிறுவனத்தை குடும்பமாகவே மதிக்கின்றனர் . இந்த நேசிப்புதான் ஜப்பானின் வெற்றியைச் சாத்தியப்படுத்தி உள்ளது !
-- கார்த்திகா ,
குளித்துக்கொண்டே படம் பார் !
டாய்லெட்டில் ஹைடெக் உண்டா ? தன்னையும் மனிதனையும் சுத்தப்படுத்தும் தானியங்கி பாத்ரூம் டாய்லெட் வந்துவிட்டது . கண்டுபிடித்திருப்பவர்கள் ஜ்ப்பானியர்களேதான் !
' வெந்நீர் ரெடியா ? ' என்று எகிறவேண்டாம் . ரிமோட் அழுத்தினாலேபோதும் . தேவையான சூட்டில் உடல் நனையுமாறு எட்டுதிக்கில் இருந்தும் தண்ணீர் கொட்டும் . கூடுதலாக பாடல்களும் ஒலிபரப்பாகும் . டவரில் குளித்தால், இன்னும் சூப்பர் . குளித்துக்கொண்டே படமும் பார்க்கலாம் .
நம்முடைய உடல் வெப்பநிலைக்கு ஏற்ப, தண்ணீரின் வெப்பநிலையும் மாறிக்கொள்ளும் . கழிவுகள் வெளியேறியதும் டாய்லெட் தானாகவே தண்ணீரின் அளவைத் தீர்மானித்து தன்னையும், நம்மையும் சுத்தப்படுத்தும் . அதற்கடுத்து சூடான காற்றால் காயவைக்கும் .
ம் ஹூம்... எதுக்கெல்லாம் டெக்னாலஜியை யூஸ் பண்றாங்க !
--- யா. நபீசா , ஹைடெக் விகடன் , 24 . 2 . 10 .

Wednesday, November 9, 2011

வண்ணம் உங்கள் கையில் !


ஒரு வண்ணத்துப் பூச்சியை கையில் பிடிக்கிறீர்கள் . அதை அப்படியே படம் வரைய ஆசை . அதன் இறகில் உங்களிடம் இல்லாத புது வண்ணம் இருக்கிறது . அதற்கு எங்கே போவது ?
கொரியாவின் பேனா டிசைனர் ஜின்கன் பார் என்பவர் கண்டுபிடித்து இருக்கும் இந்த புதிய பேனா உங்கள் பிரச்னையை நொடியில் தீர்த்துவிடும் . எந்த நிறமாக இருந்தாலும் அதை ஸ்கேன் செய்து, அந்த கலர் மையை உடனே தயாரிக்கும் . பேனாவை வைத்து வரைய ஆரம்பிக்க வேண்டியதுதான் !
வண்ணங்கள் கொட்டிக்கிடக்கும் துலிப் மலரோ, ஜப்பானில் வருடத்துக்கு ஒரு முறையே பூக்கும் சகுரா மர இலையோ, எந்த வித்தியாசமான வண்ணத்தையும் நொடியில் தயாரிக்கும் இந்த பேனா, ஆப்பிளை வரைய வேண்டும் என்றால் சிவப்பு வண்ணத்தைத் தண்ணீரில் கலந்து ஆப்பிளின் நிறம் வரும்வரை மல்லுக்கட்ட வேண்டியது இல்லை . ஒரு ஸ்கேனில் வேலை முடிந்துவிடும் . ஆப்பிள் ரெடி !
--- இரா. கோகுல் ரமணன் , ஹைடெக் விகடன் , 24 . 2 . 10 .

Tuesday, November 8, 2011

ஹோட்டல் !


உலகைச் சுற்றும் ஹோட்டல் !
விண்வெளி டெக்னாலஜியில் மனிதனின் அடுத்த சாதனை விண்வெளி ஹோட்டல் ! பார்சிலோனாவைச் சேர்ந்த ' தி கேலக்டிக் ஷூட் ஸ்பேஸ் ரிசார்ட் ' என்ற நிறுவனம் விண்வெளியில் 450 கி.மீ உயரத்தில் ஹோட்டல் கட்டும் முயற்சியில் இருக்கிறது . 2012 - ம் வருடம் ரிப்பன் வெட்டி இந்த ஹோட்டலைத் திறந்துவைக்க இருக்கிறார்கள் . பூமியில் இருந்து கிளம்பினால், ஒன்றரை நாளில் இந்த ஹோட்டலை அடையலாம் . ஒரு கண்டிஷன், அங்கே செல்வதற்கு சுமார் ஆறு மாத காலம் பயிற்சி பெறவேண்டும் . ஏழு மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும் கொண்ட கண்ணாடி அறையில் தங்கலாம் . இந்த ஹோட்டலில் தங்கி இருந்தால், ஒரு நாளைக்கு 15 முறை சூரிய உதயம் காணலாம் .
அங்கே மூன்று இரவுகள் தங்குவதற்கு ஒருவருக்கு 19 கோடியே 80 லட்சம் ரூபாய் கட்டணம் . ஒரு ட்ரிப்புக்குக் குறைந்தது நான்கு சுற்றுலா பயணிகளும், இரண்டு பைலட்டுகளும் மட்டுமே இருக்க முடியும் . இப்போதுவரை ஹோட்டலில் தங்க 200 பேர் ரிசர்வ் செய்திருக்கிறார்கள் . ஒண்ணு மட்டும் நிச்சயம்... அங்கே கொடுக்கிற காபியில் நிச்சயம் ஈ மிதக்காது !
--- செ. கார்த்திகேயன் , ஹைடெக் விகடன் , 24 . 2 . 10 .

Monday, November 7, 2011

கார் பற... பற...


காதலியை உடனே சந்திக்க வேண்டும் . ஆனால், போகிற வழியில் ட்ராஃபிக் என்று எஃப்.எம் தகவல் சொல்கிறதா ? உங்களுக்கே உங்களுக்காக வந்து விட்டது பறக்கும் கார் .
Terrafugia என்கிற அமெரிக்க நிறுவனம் முதல்முறையாக பறக்கும் காரை வடிவமைத்து இருக்கிறது . இந்த பறக்கும் காரில் றெக்கைகள் பக்கவாட்டில் மடித்து வைக்கப்பட்டு இருக்கும் .
ஸீட்டுக்குப் பின்னால் ஒரு புரபெல்லர் இருக்கும் . மற்ற கார்களைப்போலவே பெட்ரோல் போட்டுக்கொண்டு சாதாரணமாக ரோட்டில் ஓட்டிச் செல்லலாம் . நோ பார்க்கிங்கில் பார்க் பண்ணி போலீஸுக்கு லஞ்சம் கொடுக்கலாம் . ரோட்டில் கார் ஓட்ட போரடிக்கிறதா...? றெக்கைகளை விரித்து, புரபெல்லரை ஆன் பண்ணினால், 30 விநாடிகளில் விமானம் ரெடி . அப்படியே டேக் ஆஃப் ஆகி 115 கி.மீ வேகத்தில் பறக்கும் . 725 கி.மீ தூரம் வரை இறங்காமல் பறக்க முடியும் . ஒரு வேளை பெட்ரோல் போட மறந்துவிட்டால் பதறாதீர்கள், முதுகுக்கு பின்னால் பாராசூட் இணைக்கப்பட்டிருக்கும் . காரில் இருந்து எகிறிக் குதித்துவிடலாம் . ரோட்டில் போகும்போது யாராவது உரசினால் அதை காட்டிக் கொடுக்கும் அலாரம் இதில் இணைக்கப்பட்டிருக்கும் . கண்ணாடியில் கீறல் இருந்தாலும் எச்சரிக்கை மணி அலற ஆரம்பித்துவிடும் . அதிக பட்சம் இரண்டு பேர் மட்டும் அமர்ந்து பறக்க முடியும் .
---எம்.ஜி.பாஸ்கரராஜன் . ஹைடெக் விகடன் , 24 . 2 . 10 .

Sunday, November 6, 2011

தூங்காமல் தடுக்கும் கருவி !


டிரைவர் தூங்காமல் தடுக்கும் கருவி !
ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு . டிரைவர் தூங்காமல் புதிய கருவி தடுக்கும் .
ஜெர்மனியில் இல்மெனா என்ற இடத்தில் உள்ளது டிஜிட்டல் மீடியா டெக்னாலஜிக்கான பிரான்ஹோபர் நிறுவனம் . இந்த நிறுவன விஞ்ஞானிகள், ' ஐ டிரேக்கர் ' எனப்படும் இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர் . இக்கருவியை காரினுள் எந்த பகுதியிலும் பொருத்திக் கொள்ளலாம் . இக்கருவிக்குள் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, டிரைவரின் கண் அசைவுகளை நோட்டமிட்டு கொண்டே இருக்கும் . டிரைவர் சிறிது அசந்தாலும், கருவி பலத்த சத்தம் ஏற்படுத்தி எழுப்பிவிடும் . .இதற்கு கம்யூட்டர் அல்லது லேப்டாப் தேவையில்லை . டிரைவரின் தலை இடது, வலது என எந்த பக்கம் திரும்பினாலும், ஒரு நிமிடத்துக்கு 200 பிரதிபலிப்புகளை கேமரா வெளிப்படுத்தும் . வேண்டுமானால், கேமராவில் இருந்து காரில் இருக்கும் சிறிய கம்யூட்டருக்கு இணைப்பு கொடுத்துக் கொள்ளலாம் .
இக்கருவி தீப்பெட்டி அளவில் பாதி அளவாக இருக்கும் . காரினுள் பொருத்தினால்கூட தெரியாது . அந்த அளவுக்கு சிறிய கருவி . இதில் இருக்கும் லென்ஸ் 4 மி.மீ விட்டம் கொண்டது . கண் பார்வை குறைபாடுகள் கண்டறியும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது .
--- தினகரன் . அக்டோபர் 28 , 2010 .

Saturday, November 5, 2011

சொந்தங்களே...


ஜப்பானில் இருக்கும் காகங்கள் டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது ஓடிச்சென்று கார் டயர்களுக்கு முன்னால் சில கொட்டைகளை வைக்கின்றன . பச்சை விளக்கு ஒளிர ஆரம்பிக்கும்போது....அவை சாலையை விட்டு சடுதியில் பறந்து விடுகின்றன . கார்கள் ஏறி உடைத்து விட்டுப் போன கொட்டையில் இருக்கும் பருப்புகளை மீண்டும் சிவப்பு விளக்கு ஒளிரும்போது அவை எடுத்துக் கொள்கின்றன .
காகங்கள் புத்திசாலிகள் என்பதை என் மகன் செயல்முறை விளக்கம் மூலமாகவே நிரூபிப்பான் . எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கூடும் காகங்களுக்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், அதன் பக்கத்திலேயே பாதம் பருப்புகளையும் வைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு விலகி வந்து விடுவான் . பாதம் பருப்புகளை எடுக்க வரும் காகங்கள், அவற்றைத் தண்ணீரில் போட்டு சற்று ஊறவைத்துச் சாப்பிடுவதை பார்த்தால்.... ஆச்சர்யத்தில் கண்கள் விரியும் !
அடைகாக்கும்போது, ' இது பெண்ணின் வேலை ' என்று ஒதுங்கிவிடாமல் அப்பா காகம், அம்மா காகம் என்று இரண்டுமே மாறி மாறி அடைகாக்கும் .
காகங்கள் தங்களின் உணவுக்காக நிலத்தில் வெவ்வேறு இடத்தில் கொட்டைகளை மறைத்து வைப்பதும், மாதங்கள் கழித்தும் பனி, மண் மூடினாலும் அபார ஞாபகத்துடன் அதே இடத்திலிருந்து அந்த கொட்டைகளை எடுப்பதும் ஆச்சர்யம் . இந்தக் கொட்டைகளை வேறு பறவைகள் திருடுவதைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது இடம் மாற்றியும் வைப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் . காகங்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டுமல்ல, அடுத்தவர்கள் என்ன சிந்திப்பார்கள் என்று கணிக்கும் திறனும் இருப்பது, வியப்பு .
--- மேனகா காந்தி .அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

டிப்ஸ்...டிப்ஸ்...


* நறுக்கிய வெங்காயத்தை கடாயில் வதக்கும்போது, ஒரு நிமிடம் வெங்காயத்தை மட்டும் புரட்டிவிட்டு, தண்ணீர்ப் பசை போனதும், எண்ணெய் ஊற்றி வதக்கினால்... குறைவான எண்ணெயே தேவைப்படும் . சீக்கிரமாகவே பொன்னிறமாக வதங்கவும் செய்யும் .
* வேர்க்கடலை உருண்டை, பர்ஃபி போன்றவற்ரைத் தயாரிக்க, வறுத்த வேர்க்கடலையைத் தோல் உரித்தாக வேண்டும் . அதற்குச் சுலபமான வழி... வறுத்த கடலையை கெட்டியான துணிப் பையில் ... அல்லது துணியில் போட்டு, வாய்ப்பகுதியை இறுக்கிக் கட்டவேண்டும் . பின்னர் கைகளர்ல் கடலையை பரபரவென்று அழுத்தித் தேய்த்தால்... சுலபமாகத் தோல்
உரிந்து விடும் . ஒரு தட்டில் கொட்டி ஊதினால்... தோல் பறந்து விடும் ... .
--- அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

Friday, November 4, 2011

புதிய மனிதா... பூமிக்கு வா !


சந்திராயன் -1 விண்கல கவுன்ட் டவுனின் கடைசி நொடிகள்... 99 - வது ரன்னில் சச்சின் சந்திக்கும் செஞ்சுரி பந்து... இதுபோன்ற சின்னச் சின்னா டென்ஷனையே நம்மால் தாங்க முடியாமல் போய்விடுகிறது . ஆனால், 33 உயிர்கள் ... 2,300 அடி ஆழம்... என ஒட்டுமொத்த சிலியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க... உலகமும் அந்தப் பதைபதைப்பில் சேர்ந்து கொள்ள... அந்த 69 நாட்கள் டென்ஷனை என்னவென்று சொல்ல ?
கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி, சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனத்தில் இருக்கும் காப்பர் மற்றும் தங்க சுரங்கத்தில் வழக்கம்போல வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் தொழிலாளர்கள்
திடீரென சுரங்கம் சரிந்து விழ, உள்ளே இருந்த தொழிலாளர்கள் ' உயிரோடு இருந்த தொழிலாளர்கள் ' உயிரோடு சமாதி ' என முடிவுக்கு வந்தது உலகம் !
ஆனால், இருள் மட்டுமேயான நரகத்தில் மாட்டிக் கொண்டு, நம்பிக்கை இழக்காமல், அவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது 17 நாட்களுக்குப் பிறகு தெரிய வந்தபோது, உலகமே அதிசயித்தது ! இப்போது, 69 நாட்களுக்குப் பிறகு, புதிய மனிதர்களாக மேலே வந்திருக்கிறார்கள் 33 பேரும் !
குடும்பத்தாரின் பதைபதைப்பு, உலகத்தின் ஒட்டுமொத்த கவனிப்பு... என அந்த நிமிடங்கள் இங்கே ' பளிச் பளிச் என பதிவாகின்றன ...!
--- அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

Thursday, November 3, 2011

' அன்ட்டிலியா....'


நீத்தா அம்பானிக்கு வீடு பற்றி ஒரு கனவு இருந்தது . ஆனால், ஒரு சராசரி பெண்ணின் கற்பனைக்குக்கூட எட்டாத காஸ்ட்லி கனவு . அதை நாற்பதாயிரம் சதுர அடியில், 4,500 கோடி ரூபாய் செலவில் நனவாக்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி . ' உலகிலேயே விலை உயர்ந்த வீடு ' என்ற பெருமையுடன் !
ஜன்னலைத் திறந்தால் கண் முன்னே அரபிக்கடல் விரியும் இந்த வீட்டுக்கு.... ' அன்ட்டிலியா ' என்று தேவதைக் கதைகளில் வரும் ஒரு தீவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது .
முகேஷ் -- நீத்தா தம்பதி, அவர்களுடைய வாரிசுகள் ஆகாஷ், ஆனந்த், ஈஷா மற்றும் முகேஷின் அம்மா கோகிலா பென் என ஆறே நபர்கள் வசிக்கப் போகும் அந்த வீடு . மும்பையில் 27 மாடிகளுடன், பிரமாண்டமாக நிற்கிறது . முதல் நான்கு மாடிகளில் கார் பார்க்கிங், வீடுக்கு மேலே ஹெலிகாப்டர் தளம், நவீன வசதிகள் கொண்ட சினிமா தியேட்டர், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளங்கள், பியூட்டி பார்லர் என்று உலகத்தரத்தில் இருக்கிறது வீடு !
" எல்லாம் உனக்காக ! " என்றபடி கடந்த விஜயதசமியன்று ( 17 . 10 . 10 . ஞாயிறு ) நீத்தாவிடம் ஒப்படைத்து பால் காய்ச்ச வைத்துவிட்டார் முகேஷ் !
ம்ம்ம் !
--- அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாற ) கொல்லுமாங்குடி .

Tuesday, November 1, 2011

கிரெடிட் கார்டு .

கிரெடிட் கார்டு கழுத்தை இறுக்காமல் தப்பிப்பது எப்படி >
* கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செல்வினை 45 -- 50 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால், வட்டி எதுவும் இல்லை . அந்தக் காலத்தைத் தாண்டிவிட்டால், மாதம் 2 - 3 சதவீதம் வட்டி . அதாவது, ஆண்டுக்கு 24 -36 சதவிகிதம் !
* குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தைக் கட்டாவிட்டால், வட்டிக்கு வட்டி கட்டுவதோடு, அபராதக் கட்டணமாக ரூ 600 - 700 செலுத்த வேண்டி இருக்கும் . நீங்கள் ரூ.500 -க்குப் பொருள் வாங்கிக் காலம் கடத்தினால்கூட , ரூ. 600 அபராதம் உஷார் !
* வெட்டி பந்தாவுக்காக கிரெடிட் கார்டு வாங்கவே வாங்காதீர்கள் . ஆண்டு முழுக்கச் சும்மா வைத்து இருந்தாலும் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் என்று ரூ. 700 - 1,000 விதிப்பார்கள் !
* ஆடைகள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு .ஒரு வாரம் வரை 20 - 25 சதவிகிதம் தள்ளுபடி என அறிவித்து இருக்கிறார்கள் . அடுத்த 15 -20 நாட்களுக்குள் உங்களுக்கு போனஸ் வந்துவிடும் என்றால், தள்ளுபடி சலுகையை அனுபவிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம் !
* இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் கடன், வீடுக் கடன் வாங்க மார்ஜின் பணத்துக்கு கிரெடிட் கார்டு கடனைப் பயன்படுத்தாதீர்கள் !
* பொருட்கள் வாங்கும்போது ' ஸ்டேட்மென்ட் பில் ' போடப்படும் சுழற்சியைக் கவனிப்பது அவசியம் . பில்லில் தேதி 25 என்றால், நீங்கள் 23 -ம் தேதி பொருள் வாங்கினால், இரண்டு
நாட்கள்தான் வட்டி இல்லாக் காலம் கிடைக்கும் . 26 -ம் தேதி வாங்கினால் வட்டி இல்லா சலுகையை அதிக நாட்கள் அனுபவிக்கலாம் !
* கிரெடிட் கார்டு பெறும் முன் சம்பந்தப்பட்ட வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபர்ந்தனைகளை முழுக்கப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள் . புரியவில்லை என்றால், தெளிவு படுத்திக்கொண்ட பிறகே ஒப்பந்தத்தில் கையோப்பம் இடுங்கள் !
* கார்டைக்கொண்டு பணம் எடுப்பதை 100 சதவிகிதம் தவிர்க்கவேண்டும் . பணம் எடுத்த உடனே வட்டி மீட்டர் ஓடத் தொடங்கிவிடும் . மேலும், பணம் எடுத்ததற்கான பறிமாற்றக்
கட்டணம் சுமார் ரூ. 250 என்பதையும் மறக்காதீர்கள் !
---சி. சரவணன் ,ஆனந்தவிகடன் , 29 . 12 . 2010 .