Sunday, July 10, 2011

ஆயுர்வேதம் .

நம்முடைய அளவு கடந்த வெளிநாட்டு மோகத்தால் கைவிட்ட அற்புதங்களில் ஒன்று ஆயுர்வேதம் . புனர்வசு ஆத்ரேயர் என்ற ரிஷியின் சீடரான அக்னிவேசர் எழுதிய ' அக்னிவேச சம்ஹிதை' யே ஆயுர்வேதத்தின் முதல் நூல் . சுஷ்ருதர் என்ற ரிஷி இயற்றிய ' சுஷ்ருத சம்ஹிதை 'யும் ஆயுர்வேதத்தின் அடிப்படை நூல்களில் ஒன்று . புத்தருக்கும் முற்பட்டவர் சுஷ்ருதர் . இப்படி இயேசு பிறப்பதற்கு 4,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பழக்கத்தில் இருந்து வந்த ஆயுர்வேதத்தை இன்று நாம் இழந்துவிட்டோம் . அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, மயக்க மருந்து போன்றவை அலோபதியின் சிறப்புகள் . ஆனால், நோயே வராமல் தடுப்பதற்கு அலோபதியில் வழி இல்லை . ஆயுர்வேதம் அதைச் செய்கிறது . தேகத்தை நோயே வராத சமநிலைக்குக் கொண்டுவருகிறது . நோய் வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதை வேறோடு அகற்றுகிறது . மேலும், ஆயுர்வேத மருந்துக்குப் பக்க விளைவுகள் இல்லை .
அவசர வாழ்க்கை என்று சொல்லி, நம்முடைய பாரம்பரியத்தைத் தொலைத்துவிட்டோம் . எண்ணெய்க் குளியலும் அதில் ஒன்று . வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் போட்டால், பல வியாதிகளில் இருந்து தப்பலாம் . கண்ணிலும் காதிலும் எண்ணெய்விட்டு ஊறவைத்து, சுடச்சுட வெந்நீரில் குளித்த அனுபவம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பாக்கியசாலிகள் . எண்ணெய்க் குளியலை ஆயுர்வேதத்தில் அப்யங்கம் என்பார்கள் .
அப்யங்கத்தைத் தொடர்ந்து செய்வது பஞ்சகர்மா . அந்தக் காலத்தில் ராஜாக்கள் செய்துகொண்ட வைத்தியம் . நோயாளி என்றில்லை யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் . இளமை துள்ளும் . எப்படி ? நம் உடம்பில் 72 ஆயிரம் நாடிகள் உள்ளன . இந்த நாடிகளைச் சுத்தம் செய்வதே பஞ்சகர்மா . கசாய வஸ்தி, ஸ்நேக வஸ்தி, வமனம் ( வாந்தி எடுக்கவைக்கும் சிகிச்சை ), நசியம் ( மூக்கு வழியாக மருந்தைச் செலுத்துவது ), விரேஜனம் ( பேதி ) என்பதே பஞ்சகர்மா . வஸ்தி என்றால் எனிமா . வஸ்தி, விரேஜனம் இரண்டும் பேதிதானே... என்ன வித்தியாசம் ? வஸ்தி ( எனிமா ) என்பது ' கீழ் ' வழியாக மருந்தைச் செலுத்தி பேதி போகவைப்பது . விரேஜனம், வாய் வழியாக பேதி மருந்தைக் கொடுப்பது .
---' மனம்கொத்திப்பறவை ' தொடரில் , சாரு நிவேதிதா . ஆனந்த விகடன் , 6 .10 . 10 .

No comments: