Sunday, July 31, 2011

அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை .

சனிக்கிழமை மாலையே துவங்கிவிடுகிறது ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் குதூகலம் பள்ளி செல்கிற குழந்தைகளுக்கு ஞாயிறு காலை செய்தித்தாள் இணைப்புகளுடன் ஒன்றிவிடுகின்றார் ஓய்வு பெற்ற தாத்தா தொலைக்காட்சியின் ஆட்டம் பாட்டங்களில் ஆரவாரிக்கின்றனர் அக்காவும் தங்கையும் சூரியன் சுட்டெரிக்கத் துவங்கும் வரை தூக்கத்தில் கிடக்கின்றனர் அண்ணன்கள் அசைவ உணவுத் தயாரிப்புக்காக மார்க்கெட்டில் இருந்து திரும்புகின்றனர் அப்பாவும் சித்தப்பாக்களும் மெலிதான டாஸ்மாக் வாசனையுடன் அவரவர் ஞாயிற்றுக்கிழமை அவரவர் விருப்பம்போல ஆனால் அன்றாடம்போலவே அடுப்படியில் தொடங்கி அங்கேயே முடிகிறது அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை ! --- ரவி மோகனா , ஆனந்த விகடன் . 13 . 10 . 10 .

Saturday, July 30, 2011

மேஜிக் கணக்கு !

உங்கள் நண்பரிடம் இப்படிச் சொல்லுங்கள் : 1 . 20க்குள் ஏதாவது இரு எண்களை எழுதிக் கொள் . அவற்றை என்னிடம் காண்பிக்க வேண்டாம் . 2 . அந்த இரு எண்களும் முதல் எண்; 2 வது எண், இந்த இரு எண்களையும் கூட்டி 3 வது எண்ணாக எழுதிக் கொள் . பிறகு 2 வது மற்றும் 3 வது எண்ணைக் கூட்டி 4 வது எண்ணாக எழுதிக் கொள் . இப்படியே 3 மற்றும் 4 வது எண்களைக் கூட்டி 5 வது எண்; 4 மற்றும் 5 வது எண்ணைக் கூட்டி 6 வது எண்; 5 மற்றும் 6 வது எண்ணைக் கூட்டி 7 வது எண்; 6 மற்றும் 7 வது எண்ணைக் கூட்டி 8 வது எண்; 7 மற்றும் 8 வது எண்ணைக் கூட்டி 9 வது எண்; 8 மற்றும் 9 வது எண்ணைக் கூட்டி 10 வது எண்ணாக எழுதிக் கொள் . 3 . இந்த வரிசையில் 7 வது எண்ணை மட்டும் என்னிடம் சொல் ... நீ இந்த 10 எண்களையும் கூட்டு... நீ கூட்டி முடிப்பதற்குள் அந்தக் கூட்டுத்தொகையை நான் சொல்லிவிடுகிறேன் ! இதன்பிறகு நீங்கள் செய்யவேண்டியது, ஒரு சின்ன கணக்குதான் : நண்பர் சொன்ன 7 வது எண்ணை 11 ஆல் பெருக்கினால் போதும் . அந்த விடைதான், இந்த 10 எண்களின் கூட்டுத்தொகையாக இருக்கும்... நண்பர் ஆச்சரியப்படுவார் ! ஒரு உதாரணம் : நண்பர் எழுதிய எண்கள், 4 மற்றும் 6 எனக் கொள்வோம் . முதல் எண் 4; 2 வது எண் 6; 4 + 6 = 10 ( 3 வது எண் ); 6 + 10 = 16 ( 4 வது எண் ); 10 + 16 = 26 ( 5 வது எண் ); 16 + 26 = 42 ( 6 வது எண் ); 26 + 42 = 68 ( 7 வது எண் ); 42 + 68 = 110 ( 8 வது எண் ); 68 + 110 = 178 ( 9 வது எண் ); 110 + 178 = 288 ( 10 வது எண் ). இந்த 10 எண்களின் கூட்டுத்தொகை = 748 . நண்பர் உங்களிடம் சொல்லும் 7 வது எண் 68 ; இதை 11 ஆல் பெருக்கினால் 748 ! ---தினமலர் . அக்டோபர் 8 , 2010 .

Friday, July 29, 2011

இரண்டு கவிஞர்கள் !

திருச்சி லோகநாதன், ஜிக்கி பாடிய ' வாராய் நீ வாராய் ' என்ற அருமையான டூயட்டில் உள்ள புதுமை, மருதகாசி, கா. மு. ஷெரீஃப் ஆகிய இரண்டு கவிஞர்கள் இதை எழுதியிருப்பதுதான் . எந்த வரி யாருடையது என்று தெரியாது . இதே படத்தில் வரும் ' உலவும் தென்றல் காற்றினிலே ' பாடல் கூட இரு கவிஞர்களும் எழுதியதுதான் . இதே போன்று தமிழ் சினிமாவில் பிறகு நடக்கவில்லை ! --- விஜயகுமார் , குமுதம் . தீபாவளி மலர் . 13 . 10. 2010 . சதுப்புநிலக்காடு . பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு உலக அளவிலே 2 வது பெரிய சதுப்பு நிலக்காடு . மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக்காடுகள்தான் உலக அளவில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு . ---தினமலர் . அக்டொபர் 8 , 2010 . காந்திஜியும் 3 குரங்கு பொம்மைகளும் . காந்திஜி தன்னுடன் வைத்திருந்த 3 குரங்கு பொம்மைகளை தனக்குப் பிடித்திருந்ததால் வைத்திருந்தாரே தவிர அவற்றை அவர் உருவாக்கவில்லை . சீன தத்துவஞானியான கன்பூஷியஸ், ' தீயவற்றைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே ' என்று அறிவுரை கூறியுள்ளார் . அதைத்தான் அவரது சீடர்கள் இந்தப் பொம்மை வடிவில் மாற்றினர் என்று சிலர் குறிப்பிரிடுகின்றனர் . ஜப்பானில் இந்தக் குரங்கு பொம்மைகளை ' ஸனோன் ', ' ஸன்ஜாரு ', ' ஸன்பிகிநோ ஜாரு ' என்று மூன்று விதமாகக் குறிப்பிடுகின்றனர் . ஜப்பானிய மொழியில் ' ஜாரு ' என்றால் குரங்கு . கண்களை மூடியிருக்கும் குரங்கின் பெயர், ' மிஜாரு '; காதுகளை மூடியிருக்கும் குரங்கின் பெயர், ' கிதாஜாரு '; வாயை மூடியிருக்கும் குரங்கின் பெயர், ' இவஜாரு '. ----தினமலர் . அக்டோபர் 8 , 2010 .

Thursday, July 28, 2011

ரோபோ இதயம் .

பேட்டரியில் இயங்கும் ரோபோ இதயம் ! இதயம் செயல்படாதவர்களுக்கு நிரந்தரமாக செயற்கையாக தயாரிக்கப்பட்ட இதயத்தை பொருத்தி, மனிதனை உயிர் வாழ வைக்க முடியும் என்பதை லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நிரூபித்துள்ளார் . ரோம் நகரில் உள்ள சிறுவர்கள் மருத்துவமனையில் சதை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனை அவனது பெற்றோர் கொண்டுவந்து சேர்த்தனர் . அவனுக்கு ஏற்பட்டுள்ள சதை செயலிழப்பு நோயால் அவனது இதயமும் பாதிக்கப்பட்டிருந்தது . எனினும் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் சதை செயலிழப்பு நோயால் மாற்று இதயத்தையும் பொருத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது . எப்படியாவது அந்த சிறுவனை காப்பாற்ற வேண்டும் என முடிவுக்கு வந்த டாக்டர் ஆன்டோனியோ அமோடியோ அந்த சிறுவனுக்கு பேட்டரியில் இயங்கும் செயற்கை ( மின்சாரத்தில் இயங்கும் ரோபோட் ) இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளார் . 2.5 அங்குலம் அளவு உள்ள இந்த ரோபோ இதயத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் வயர்கள் சிறுவனின் காது வழியாக வெளியே கொண்டுவந்து பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது . மனிதனின் இடுப்பில் கட்டும் பெல்ட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனத்தில் ரோபோ இதயம் இயங்குவதற்கு தேவையான பேட்டரி வைக்கப்பட்டுள்ளது . இந்த பேட்டரியை செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்வது போல் சார்ஜ் செய்து பெல்டில் பொருத்திக்கொள்ள வேண்டும் . அதை காது வழியாக பொருத்தப்பட்டுள்ள வயருடன் இணைக்கும் போது ரோபோ இதயத்திற்கு தேவையான மின்சாரம் கிடைக்கிறது . இப்படி பேட்டரி மூலம் இயங்கும் ரோபோ இதயத்தை பொருத்தி அந்த சிறுவனுக்கு மீண்டும் வாழ்வளித்துள்ளார் டாக்டர் அமோடியோ . இந்த இதயத்தின் மூலம் அந்த சிறுவன் இன்னும் 25 ஆண்டுகளுக்கு இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் . பேட்டரியில் இருந்து இதயத்திற்கு போகும் மின் வயர்கள் காது கேளாதவருக்கு பொருத்தப்படும் ' ஹியரிங் எய்ட் ' போல வடிவமைக்கப்பட்டுளதால் பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரியாது . --- - தினமலர் .4 . 10 . 10 .

Tuesday, July 26, 2011

மேலும் ஒரு பூமி கண்டுபிடிப்பு !

பிரபஞ்சத்தில் பூமி மட்டும்தான் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் ஒரே கோள் என்று மார் தட்டிக்கொண்டிருக்கும் நிலயில், அட அப்படி எல்லாம் இல்லை . இன்னும் ஒருபூமி இருக்கிறது என்று யதார்த்தமாக சொல்லி உள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள் . சூரியனுக்கு அப்பால் உள்ள நட்சத்திர கூட்டத்தில் அழகிய பூமி பந்து ஒன்று இருப்பது கண்ணில் பட்டுள்ளது . அதாவது கோல்டிலாக்ஸ்சோன் என்று அழைக்கப்படும் பகுதியில்தான் இந்த புதிய பூமி உள்ளதாம் . இது பூமியை போலத்தான் இருக்கிறது . பூமிக்குறிய அத்தனை அம்சங்களும் இதில் உள்ளன என்று, விஞ்ஞானி ஆர். பால் பட்லர் என்பவர் தெரிவித்தார் . இதை பூமியின் உடன் பிறப்பு என்று கூட சொல்லலாம் என்றும், இப்போதைக்கு இந்த புதிய பூமிபந்தில் ஜீவராசிகள் உள்ளனவா என்பதை உறுதியிட்டுக் கூற முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . அதிக குளிரும் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாத சமநிலை சீதோஷ்ண நிலையுடன் தான் இந்த பூமி இருக்குமாம் . ஏனென்றால் இது சூரியமண்டலத்துக்கு அப்பால் உள்ள நட்சத்திரக்கூட்டத்தில் இருப்பதால் இதில் வெப்பம் அதிகம் இருக்க வாய்ப்பு இல்லையாம் . இது ஒன்றுதான் இருக்கிறதா இதுபோல் இன்னும் பல பூமி பந்துகள் உள்ளனவா என்பது இனிவரும் நாள்களில் நடக்கும் ஆய்வுகள் வாயிலாகத் தெரிந்துவிடும் . இந்த புதிய பூமியில் இருந்து பலலட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளது . ஆனால் இந்த பூமியை விட அதிக எடையும் அகலமும் கொண்டதாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது . பூமி சூரியனுக்கு அருகில் இருப்பதால் தான் பகல் இரவு சுழற்சி சரியாக 24 மணி நேரத்துக்கு நடக்கிறது . ஆனால் இந்த புதிய பூமி சூரியனை நெருங்கி வரவே 37 நாட்கள் ஆகும் என்றும், இந்த தகவல்கள் எல்லாமே ஆரம்பக்கட்ட கணிப்பு என்பதால் உடனே எதையும் முடிவு செய்ய முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர் . --- தினமலர் .2 . 10 . 10 .

Monday, July 25, 2011

விளையாட்டு கணக்கு !

77 , 143 , 221 , 323 , 437. ? இந்த வரிசையில் அடுத்து வரும் எண் எது ? விடை : 667 77 = 7 x 11 143 = 11 x 13 221 = 13 x 17 323 = 17 x 19 437 = 19 x 23 667 = 23 x 29 77, 143, 221, 323, 437 க்கு அடுத்து வருவது 667 என்பது சரியான விடை . --- தினமலர் .9 / 30 . 10 . 10 .

Sunday, July 24, 2011

மூப்பு வேகமாக நெருங்கும் !

அடுக்குமாடியில் வசிக்கிறீர்களா ? . மூப்பு வேகமாக நெருங்கும் ! புவிஈர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு உருவான, ' குவாண்டம் தியரி 'யை அடிப்படையாக வைத்து இங்கிலாந்தை சேர்ந்த கொலராடோ நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற அமைப்பு, புவிஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் பொருட்கள் குறித்து ' கிராவிடேஷனல் டைம்டைலேஷனல் ' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது . இந்த ஆய்வில், புவிஈர்ப்பு விசைக்கு எதிராக இயங்கும் பொருட்கள் தரை மட்டத்தில் இயங்குவதைவிட, உயரமான இடத்தில் வேகமாக இயங்குவதை கண்டுபிடித்தனர் . அதாவது தரைதளத்தில் உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரத்தை 100வது மாடியில் உள்ள குடியிருப்புக்கு கொண்டு சென்று வைக்கும்போது அந்த கடிகாரம் தரையில் இருந்தபோது ஓடிய வேகத்தைவிட அதிக வேகமாக ஓடுவதை கண்டுபிடித்தனர் . இதுபோலவே விமானம், செயற்கைகோள் என அனைத்து சாதனங்களின் இயக்கமும் புவியின் ஈர்ப்பு விசையை விட்டு விலகிச் செல்ல செல்ல அந்த பொருட்களின் செயல்வேகம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் . புவிஈர்ப்பு விசையை விட்டு ஒரு பொருள் விலகிச் செல்லும் போது அதன் செயல்வேகம் அதிகரிப்பதை போலவே, புவியின் தரை மட்டத்தைவிட்டு உயரே செல்ல செல்ல மனிதன் மூப்படையும் வேகமும் அதிகரிக்கிறது . இதனால் 150 மாடி கட்டடம் ஒன்றில் ஒத்த வயதுடையவர்களில் ஒருவர் தரைதளத்திலும், மற்றொருவர் 150 வது மாடியிலும் வசித்தால், தரை தளத்தில் இருப்பவரைவிட மேல் தளத்தில் இருப்பவர் விரைவில் மூப்படைந்துவிடுவார் . ஆனால், வாழ்நாளில் எந்த குறைவும் ஏற்படுவதில்லை . எனவே மக்கள் எவரும் அஞ்ச வேண்டாம் . ---தினமலர் .27 . 9 . 2010 .

Saturday, July 23, 2011

வெட்கத்தை போக்க மருந்து .

வெட்கத்தை போக்க வந்துவிட்டது . மருந்து ஐயோ ! என்னால் பலர் முன்னிலையில் மேடையில் ஏறி பேச முடியாது . பத்து பேர் முன்னிலையில் கருத்துக்களை சகஜமாக சொல்ல முடியாது என்று வெட்கப்படுவோர்களின் வெட்கத்தை போக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மனிதர்களிடையே நிலவும் இந்தவகை ( இன்பீரியாரிட்டி காம்பளக்ஸ் ) வெட்கம், கூச்சம் குறித்து ஆய்வு நடத்திய நியூயார்க் பலகலைக்கழகம் மவுண்சினாய் மருத்துவப்பள்ளி பேராசிரியர் ஜெனிபர் பார்ட்ஸ் என்பவர், வெட்கம், கூச்சம், பயம் போன்ற போபியாக்களை விரட்டி அடிக்கும் ஆக்சிடாக்சின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளார் . இதுகுறித்து ஜெனிபர் கூறியதாவது : கிட்டத்தட்ட ஒரு ஹார்மோன் போல செயல்படும், இந்த மருந்தை மூக்கில் வைத்து சுவாசித்தால் நம் மனதில் உள்ள தைரியக்குறைவு, கூச்சம், வெட்கம் காணாமல் போய்விடும் . அதாவது நமது மூளையில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன் சுரக்காமல் போவதாலோ, அல்லது அளவுக்கு அதிகமாக சுரப்பதாலோ தான் இது போன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது .அதை சரிசெய்ய ஆக்சிடாக்சினை நுகர்ந்தால் அது மனிதனுக்கு தைரியத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பை சீர்செய்கிறது . இதை, இத்தகைய குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் . ,மற்றவர்களுக்கு இது தேவையில்லை . இவ்வாறு ஜெனிபர் கூறினார் . ---தினமலர் .29 . 9 . 2010 .

Friday, July 22, 2011

பிறப்பின் அதிசயம் .

அந்தக் கூடலின் இறுதி மூச்சில் , ஆண்பெண் உறவின் அதிசயம் மலர்ந்தது ! அவளது கருவறை யுள்ளே அவனின் அணுக்களின் பந்தயம் ! ! கோடிகள் ஓடின ! ! ! அவற்றில் ஒன்றே ஒன்று வென்றிட ! மற்றவை மாண்டன மறைந்தன ! ! ஒன்றும் ஒன்றும் இணைந்ததும் ஆணென பெண்ணென ஒன்றென அதனின் மேலேன ஒன்றிட கருவறைக் கதவும் மூடியே விடவும் கண்ணிலான் உளம்போல் நீண்டதொரு அமைதி ! ஈரேழு நாட்கள் ! இருண்ட குகையுள் ஒரு மின் மினி பூச்சியாய் கருவறையில் ஒறுஒளி ! உருவைப் படைக்குமுன் இறைவன் உயிரை முதற்கண் படைத்திட ! அங்கே கோட்டையுள் கோட்டையாய் கருவறையுள் அடி கோல் முற்றுப் பெறுகின்றது ! ! கருவாய் ! கடுகினும் சிறிதாய் ! ! குறைமதி நிலவாய் கருவறைத் திருவாய் ! இரண்டு திங்களில் நாளொடும் பொழுதொடும் வளரும் நிலையாய் நிறையுரு நோக்கிய நீண்ட பயணம் . முந்திரி பழத்தின் விதையின் தோற்றம் உருமுன் தலையும் வடிவுற ! ஒன்பது கிழமையில் மூளையும் வடிவம் பெற்றிட கழிந்தன ! ! " நீரோன் " எனும் உயிர்அணு அலை நொடிக்கு நாளாயிரம் மூளையினுள் குடிபுக ! நிறைமூன்று தைங்களில் மூச்சு விடும்நிலை ! நான்கு திங்களில் கண்கள் அசை கின்ற நிலை ! ஆறு திங்களில் முழுமைப் பெற்றிட நரம்பு நாளங்கள் வளர்ந்து , நன்னுயிர் உடலும் ஒன்றென் ராயின ! ! ---எம். கே. எம். அபூபக்கர் . கருவறை முதல் கல்லறை வரை .நூலில் . நூல் உதவி : செல்லூர் கண்ணன்

Thursday, July 21, 2011

நான்கு வழிச் சாலைப் பயணம் !

மிக மிகச் சுருக்கமாக, தினமும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள இந்த நான்கு விதிகளைக் கட்டாயம் கடைபிடியுங்கள் . 1 ) உங்களைப் படுக்கையில் இருந்து துள்ளியெழச் செய்யும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் ! 2 ) உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு எது மட்டும் தேவை என்பதில் தெளிவாக இருங்கள் ! 3 ) உங்கள் இலக்கை அடைய உங்கள் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள் ! 4 ) இலக்குகளைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பகுதி பகுதியாக நிறைவேற்றி வெற்றிக் கோட்டை எட்டிப்பிடியுங்கள் ! வாழ்த்துக்கள் ! --- கி. கார்த்திகேயன் . ஆனந்தவிகடன் . 5 . 5 . 10 .

தேடப்படும் நபர் !

எப்போதும் எல்லோராலும் தேடப்படும் ஒரு நபராக நீங்கள் இருக்க வேண்டுமா..... ? உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நீங்கள் வித்தியாசப்படுங்கள் . அதற்குப் பல தளங்களில் உங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம் . ' Involvement makes you Important ' என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு . ஒரு விஷயத்தைப்பற்றி ஆர்வம் இல்லாதபோதுதான் நமக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது . ஆனால், ஆர்வத்துடன் செயல்பட்டால் எந்த விஷயத்திலும் நம்மால் ' எக்ஸ்பர்ட் ' ஆகிவிட முடியும் .
--- ந. வினோத்குமார் . ஆனந்தவிகடன் . 5 . 5 . 10 .

Wednesday, July 20, 2011

ஆங்கில அடிவருடிகள் !

இவர்கள் ஆங்கில அடிவருடிகள் !
தமிழகத்தில் திராவிட கலாச்சாரம் பரவத் தொடங்கியதும் கூடவே வெறுப்புணர்வும் விதைக்கப்பட்டது . திராவிட இயக்கத்தினருக்கு தமிழ் மொழி மீது அப்படி ஒன்றும் பற்று கிடையாது என்பதை தீர்மானமாகச் சொல்லலாம் .
இந்திய வானொலி அமைப்பு தமிழகத்தில் மட்டுமே ' ஆல் இண்டியா ரேடியோ ' ஆக இருக்கிறது . மற்ற மாநிலங்களில் அது ' ஆகாஷ்வாணி ' என்று இருக்கிறது . இந்தி வேண்டாம், ஆங்கிலமாக இருக்கட்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதன் பேரில் மத்திய அரசு இணங்கி இருக்கிறது .
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக அகில இந்திய வானொலி நிலையமாக இருந்தது . சுதந்திரம் பெற்ற பிறகு ' ஆகாஷவாணி ' என்ற பெயர் சூட்டப்பட்டு, நாடெங்கும் வானொலிப் பெட்டிகளில் அந்தச் சொல் ஒலித்தது .
அன்றைய மைசூர் சமஸ்தானத்தில் ' ஆகாஷவாணி ' என்ற பெயரில் ஒரு வானொலி நிலையம் இயங்கியது . அந்தப் பெயரைத்தான் இந்திய அரசு பெற்று செயல்பட தொடங்கியது . ஆகாஷவாணி என்பது கன்னட மொழிச்சொல் . அதாவது, திராவிட மொழிகளில் ஒன்றான கன்னட மொழிச்சொல் அது . அந்தச் சொல் கூடாது ' ஆல் இண்டியா ரேடியோ ' என்று ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்று அதிபுத்திசாலியான திராவிட இயக்கத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய அரசு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது .
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த ஆல் இண்டியா ரேடியோ ஒன்றே திராவிட இயக்கங்களின் தமிழ்மொழிப்பற்றை எடுத்துச் சொல்லும் .இவர்களுடைய மோசமான, ஆபாசமான கொள்கையால், தேசம் முழுவதும் மற்ற மக்கள் இந்தி அறிந்திருக்க, தமிழக மக்களுக்கு அப்படி ஒரு நலன் கிட்டாமல் போய்விட்டது . இன்றும் திராவிட இயக்கத்தினர் தங்களை ஆங்கில அடிவருடிகள் என்பதை நிரூபித்து வருகின்றனர் . செம்மொழி மாநாடு என்பது எல்லாம் வெறும் நாடகமே .
--- ம.ந. ராமசாமி , கோவை தினமலர் .. 24 . 9 . 2010 .

Tuesday, July 19, 2011

டிப்ஸ்... டிப்ஸ்....

* கேரட்டைக் கவரில் அல்லது துணிப்பையில் சுற்றி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், ஓரிரு நாட்களில் அழுகிப் போய்விட வாய்ப்புள்ளது . ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் கேரட்டைப் போட்டு ஃப்ரிட்ஜ்ஜினுள் வைத்தால் பத்து நாட்கள் ஆனாலும் கேரட் ஃப்ரெஷாகவே இருக்கும் .
* மில்க் பவுடரைச் சற்று வெதுவெதுப்பான நீர் விட்டுக் குழைத்து, நான்கு வித பழங்களை நறுக்கிப் போடவும் . இத்துடன் பொடித்த சர்க்கரையும், எஸென்ஸையும் ஊற்றி, ஃப்ரிஜ்ஜில் மூன்று மணி நேரம் வைத்துப் பரிமாறவும் . அருமையான மில்க் ஃப்ரூட் சாலட் தயார் .
* ஒரு தம்ளர் கடலை மாவுக்கு மூன்று தம்ளர் நெய் என்ற விகிதத்தில் நெய்யை உருக்கி அதில் கடலை மாவைப் போட்டுக் கலக்கவும் . பின்பு மூன்று தம்ளர் சர்க்கரையை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்ததும், கரைத்து வைத்துள்ள கடலை மாவை விட்டுக் கிளறவும் . மைசூர் பாகு பொங்கி வரும் பதத்தில் இறக்கினால் மைசூர் பாகு சூப்பராக இருக்கும் . ஸ்வீட் செய்யத் தெரியாதவர்கள் கூட எளிதாகச் செய்யலாம் .
* அரிசி உப்புமா செய்யும்போது கடுகு மட்டும் தாளித்து உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், து. பருப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் இவற்றை ' சொரசொர 'ப்பாக அரைத்துக் கலந்து உப்புமா கிளறுங்கள் . சுவையோ சூப்பர் ; தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை .
* வாஷிங்மெஷினில் துணிகள் நன்றாக உலர வேண்டும் என்றால், ஸ்பின் பட்டனை இரண்டு முறை திருகினால் ஆடைகள் ஐம்பது சதவிகிதம் உலர்ந்துவிடும் .
* குழாயில் தண்ணீர் வருவதற்கு 1,2,3 என்று எவ்வளவு திருப்புகள் வேண்டுமானாலும் திருப்பலாம் . ஆனால், மூடும்போது ஒரே ஒரு திருப்பில்தான் மூட வேண்டும் . அப்போதுதான் குழாயின் ஆயுள் நீடிக்கும் . அடிக்கடி வாஷர் பொட வேண்டிய பிரச்னையும் இருக்காது .
--- மங்கையர் மலர் . அக்டோபர் 2010 . இதழ் உதவி : N கிரி ,( நியூஸ் ஏஜென்ட் திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

Monday, July 18, 2011

டேஜா வூ !

* உங்கள் முன்னால் தலையில் ரோஜாப் பூவோடு ஒரு பெண் நடந்து போவாள் . ' அந்தப் பூ கீழே விழும் ' என்று நினைப்பீர்கள் . ரோஜா கீழே விழும் . சில மனிதர்களைப் பார்த்ததும் ' எங்கேயோ பார்த்திருக்கோமே ' என்று தோன்றும் . இதற்கு ' டேஜா வூ ' என்று பெயர் . ' ஏற்கனவே பார்த்தது ' என்று அர்த்தம் .
* மாதம் ஒருமுறை ஒரு திகில் கனவு வந்தால் ஓ. கே. வாரத்துக்கு இரண்டு தடவை என்கிற ரீதியில் நீங்கள் அலறி எழுந்தால்... சம்திங் ராங் ! உடனடியாக ஒரு மனநல மருத்துவரைப் போய்ப் பாருங்கள் !
* ரெம் ஸ்லீப் ( REM sleep rapid eye movement ) என்ற ஒரு சமாசாரத்தைவைத்து மனிதர்கள் எப்போது கனவு காண்கிறார்கள் என்பதை 90 சதவிகிதம் வரை சரியாகக் கணிக்கிறார்கள் . கனவு காணும்போது நம் புறக் கண்களும் இமைகளுகுள் வேகமாக நகரும் . இது நாம் கனவில் பார்க்கும் விஷயங்களை எந்தத் திசையில் இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது . தூங்கும் நேரத்தில் 20 - 25 சதவிகிதம் ரெம் தூக்கமாகத்தான் இருக்கும் . பிறந்த குழந்தைக்கு 80 சதவிகிதம் தூக்கம் ரெம் தூக்கம்தான் .
* கனவைப்பற்றிய படிப்புக்கு ' ஓனிரியாலஜி ' என்று பெயர் .
--- ஸ்ம்ருதி . கனவு விகடன் . 13 . 1 . 10 .

Sunday, July 17, 2011

நீரிழிவு நோயாளிகளுக்கு !

நீரிழிவு நோயாளிகளுக்கு -- ஓர் ' இனிப்பான ' செய்தி !
ஒரு நீரிழிவு நோயாளியின் உடலில் உள்ள இரத்தத்தில், சர்க்கரையின் அளவு என்ன என்று அறிய இதுவரை இரத்தப் பரிசோதனை செய்து கண்டறிந்தோம் . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில வயதான நோயாளிகளுக்கு ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து முறைகூட இந்த இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது . இனி நீரிழிவு நோயாளிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியே, தாங்களாகவே வலியற்ற முறையில் இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள முடியும் .
இண்ட்க்ரிடி அப்ளிகேஷன்ஸ் ( Integirty Applications ) என்று ' இஸ்ரேல் ' நாட்டில் உள்ள ஒரு நிறுவனம், நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைத் துல்லியமாக அறிய, ' க்ளுகோ ட்ராக் ' ( Gluco Track ) என்ற க்ளூகோ மீட்டரை, பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெற்றிகரமாக தயாரித்துள்ளது .இந்த க்ளூகோ மீட்டருடன் ' இயர் ஃபோன் ' போன்ற ஒரு சிறிய கருவி இணைக்கப்பட்டுள்ளது . இந்தக் க்ளிப்பை நம் காதில் பொருத்திக்கொண்டால், நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை நாமே க்ளூகோ மீட்டர் மூலம் துல்லியமாக அறியலாம் . ஒரே சமயத்தில் மூன்று பேர் பொருத்திக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது .
ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு இறுதியில், மார்க்கெட்டில் புழங்க உள்ள இந்த ' க்ளூகோ மீட்டரு ' க்கு இப்பொழுதே ஏகப்பட்ட கிராக்கி .
--- ஆதாரம் : இணைய தளம் . ( CERS ). ஆர். பாண்டுரங்கன் , அகமதாபாத் . மங்கையர் மலர் . அக்டோபர் 2010 . இதழ் உதவி : N கிரி ,( நியூஸ் ஏஜென்ட் திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

Saturday, July 16, 2011

கனவுகளின் தந்தை !

* உளவியலில் ' கனவு ' என்கிற வார்த்தையை உச்சரிக்கும்போதெல்லாம் நினைவுகூரப்பட வேண்டியவர், சிக்மண்ட் ஃப்ராய்டு !
' சைக்கோ அனாலிடிக்ஸ் ' என்ற புதிய தத்துவத்தையே உளவியல் பாடத்துக்கு அறிமுகம் செய்துவைத்த ஹங்கேரி சைக்காலஜிஸ்ட் . ' கனவுகளின் விளக்கங்கள் ' என்று இவர் சொன்னதுதான் இன்று வரை உலகில் உளவியலின் வேதம் ! பாலுறவுபற்றி வெளிப்படையாகப் பேசுவது தவறு என்று இருந்த காலகட்டத்தில் அதைப்பற்றி விவாதிக்கச் சொன்னவர் ஃப்ராய்டு .
* பிறவியிலேயே கண் தெரியாதவர்களுக்கும் கனவு வரும் . ஆனால், கனவில் காட்சிகள் தெரியாது . வெறும் சத்தம், தொடு உணர்ச்சி ஆகியவை மட்டுமே இருக்கும் .
* வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்தும் குழந்தைகள் சேரில் உட்கார்ந்தபடி தூங்கினால், ஒன் பாத்ரூம் போய்விடுவார்கள் . இவர்களை இந்தியன் டாய்லெட் முறைக்கு மாற்றினால் பிரச்னை தீர்ந்துவிடும் .
* ஒரு இரவில் எத்தனை முறை வேண்டுமானாலும் கனவு வரலாம் . ஆனால், குறட்டை விடும்போது, ஒருமுறைகூடக் கனவு வராது .
* பெரும்பாலான பெண்களின் கனவில் இண்டோர் பகுதிகள் வரும் . ஆண்களின் கனவில் அவுட்டோர் பகுதிகள் வரும் .
* பார்வை உள்ளவர்களில் 12 சதவிகிதம் பேருக்கு பிளாக் அண்ட் வொயிட் கனவுகள் வருகின்றன . மற்றவர்களுக்கு கலர் கனவுகள் !
* நாம் கனவில் செய்யும் ஆக் ஷன்களை நிஜத்திலும் செய்துவிடக் கூடாது என்பதற்காகத் தூங்கும்போது உடலின் இயக்கத்தைப் பெருமளவு நிறுத்திவிடும் மூளை . அதனால்தான் கண் விழித்ததும் கொஞ்சம் சோம்பலாக உணர்கிறோம் .
* தூக்கத்தில் கனவு வரவில்லை என்றால் சந்தோஷப்படாதீர்கள்... வருத்தப்படுங்கள் . பிரோட்டீன் குறைபாடு, மனநிலை பாதிப்பு இருந்தால்தான் கனவு வராது .
* கனவு முடிந்து 5 நிமிடங்களுக்குப் பின் பாதி கனவுகள் மறந்துவிடும் . 10 நிமிடங்களுக்குப் பின் 90 சதவிகிதக் கனவுகள் மறந்துவிடும் .
--- தீபக், ந. வினோத்குமார் . கனவு விகடன் . 13 . 1 . 10 .

Friday, July 15, 2011

தாளம் !

தாளம் என்றால் வெறுமனே இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு . பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும் . அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்டவேண்டும் . இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது . 1 + 3 + 2 + 2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலைகளைக்கொண்டது . இது ஆதி தாளம் . ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழுவகை உள்ளன .
ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள் . ஜாதி என்றால், வகை . திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி . இதற்கு அடுத்து ஐந்து நடைகள் . ஆக, 7 x 5 x 5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும் . சங்கீதத்தில் 35 வித அலங்காரம் உள்ளதாம் .
----' மனம்கொத்திப்பறவை ' தொடரில் , சாரு நிவேதிதா . ஆனந்த விகடன் , 29 .9 . 10 .

Thursday, July 14, 2011

' பக்கா '

தமிழில்கூட நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ' பக்கா ' என்பது இந்தி வார்த்தைதானே ?
ஒரிஜினலாக சமஸ்கிருதம் . ' நன்றாக சமைக்கப்பட்டது ' ( Well cooked ) என்று அர்த்தம் . அது இந்திக்கு வந்து, ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது இங்கிலீஷ் வார்த்தையாகவும் ஆகிவிட்டது . ' பக்கா ஜென்டில்மேன் ' என்றால் முழுமையான, பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் என்று பொருள் . ( நன்கு சமைக்கப்பட்டவர் என்று இங்கு அர்த்தம் இல்லை ! ).
--- ஹாய் மதன் . கேள்வி - பதில் .ஆனந்த விகடன் , 29 .9 . 10 .

Wednesday, July 13, 2011

தமாஷ் !

* " இந்த விபத்து எப்ப நடந்தது ? "
" ' செத்த ' நேரத்துக்கு முன்னாடிதான் ! "
* " டாக்டர் , பேஷன்ட் வயித்துக்குள்ள செல்போன் அலறுது ! "
" அடடா , ஆபரேஷனப்ப செல்போனை சைலன்ட்ல போடாம விட்டுட்டேனே ! "
* " உங்க மனைவியைக் ' கைபேசி 'னு செல்லமா கூப்பிடுறீங்களே... அவங்க செல்போன் பிரியரா ? "
" அட , நீங்க வேற ! அவளுக்குக் கோபம் வந்தா கைதான் பேசும் ! "
* " டாக்டர்... தியேட்டர் ரெடி ! "
" இன்னிக்கு ' டிக்கெட் ' வாங்கப்போறது யாரு ? "
* " தினமும் சரியா 10 மணிக்கு எங்க தோட்டத்துக்கு ஒரு பாம்பு வருது ! "
" டைம் பாம்பா இருக்கும் ! "
---ஆனந்த விகடன் , 29 .9 . 10 . 4 / 10 / 10
* " டார்லிங், என்னை நம்பி கட்டின புடவையோடு வருவியா ? "
" என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, கட்டின புருஷனொடவே வரத் தாயார் ! "
* " என்னோடது லேட் மேரேஜ் . ஆனா, என் பையன் கல்யாணத்தை சீக்கிரமா முடிச்சுட்டேன் ! "
" எப்போ முடிச்சீங்க ? "
" காலைல 6 மணிக்கு ! ".
* " நீங்க முன்னால ' மீசை ' வெச்சிருந்தீங்க இல்ல.... "
" முன்னால வெச்சிருந்தாத்தான் அது ' மீசை ', பின்னால வெச்சிருந்தா அது ' குடுமி '.
* " வேலைகாரியோட சினிமாவுக்குப் போயிருக்கீங்களே, நல்ல இருக்கா ? "
" பரவா இல்ல, ஒரு வாட்டி பார்க்கலாம் ! "
--- குமுதம் . தீபாவளி மலர் . 13 . 10. 2010 .

Tuesday, July 12, 2011

சிவாஜி கணேசன் .

" ' நான் நடித்துக் கொண்டே சாகவேண்டும் ' என்று அண்ணன் ( சிவாஜி ) ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன் . இதைப் பார்த்துவிட்டு எல்லோருமே ' நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும் ' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் . அண்ணன் மட்டும்தான் அப்படிச் சொல்லலாம் . அவருக்குத்தான் அந்த தகுதி உண்டு . மத்தவங்க நடிக்கிறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா ? "
--நடிகர் நாகேஷ் ( 12 - 10 - 1986 ) ஆனந்த விகடன் , 6 .10 . 10 .

Sunday, July 10, 2011

ஆயுர்வேதம் .

நம்முடைய அளவு கடந்த வெளிநாட்டு மோகத்தால் கைவிட்ட அற்புதங்களில் ஒன்று ஆயுர்வேதம் . புனர்வசு ஆத்ரேயர் என்ற ரிஷியின் சீடரான அக்னிவேசர் எழுதிய ' அக்னிவேச சம்ஹிதை' யே ஆயுர்வேதத்தின் முதல் நூல் . சுஷ்ருதர் என்ற ரிஷி இயற்றிய ' சுஷ்ருத சம்ஹிதை 'யும் ஆயுர்வேதத்தின் அடிப்படை நூல்களில் ஒன்று . புத்தருக்கும் முற்பட்டவர் சுஷ்ருதர் . இப்படி இயேசு பிறப்பதற்கு 4,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பழக்கத்தில் இருந்து வந்த ஆயுர்வேதத்தை இன்று நாம் இழந்துவிட்டோம் . அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, மயக்க மருந்து போன்றவை அலோபதியின் சிறப்புகள் . ஆனால், நோயே வராமல் தடுப்பதற்கு அலோபதியில் வழி இல்லை . ஆயுர்வேதம் அதைச் செய்கிறது . தேகத்தை நோயே வராத சமநிலைக்குக் கொண்டுவருகிறது . நோய் வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதை வேறோடு அகற்றுகிறது . மேலும், ஆயுர்வேத மருந்துக்குப் பக்க விளைவுகள் இல்லை .
அவசர வாழ்க்கை என்று சொல்லி, நம்முடைய பாரம்பரியத்தைத் தொலைத்துவிட்டோம் . எண்ணெய்க் குளியலும் அதில் ஒன்று . வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் போட்டால், பல வியாதிகளில் இருந்து தப்பலாம் . கண்ணிலும் காதிலும் எண்ணெய்விட்டு ஊறவைத்து, சுடச்சுட வெந்நீரில் குளித்த அனுபவம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பாக்கியசாலிகள் . எண்ணெய்க் குளியலை ஆயுர்வேதத்தில் அப்யங்கம் என்பார்கள் .
அப்யங்கத்தைத் தொடர்ந்து செய்வது பஞ்சகர்மா . அந்தக் காலத்தில் ராஜாக்கள் செய்துகொண்ட வைத்தியம் . நோயாளி என்றில்லை யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் . இளமை துள்ளும் . எப்படி ? நம் உடம்பில் 72 ஆயிரம் நாடிகள் உள்ளன . இந்த நாடிகளைச் சுத்தம் செய்வதே பஞ்சகர்மா . கசாய வஸ்தி, ஸ்நேக வஸ்தி, வமனம் ( வாந்தி எடுக்கவைக்கும் சிகிச்சை ), நசியம் ( மூக்கு வழியாக மருந்தைச் செலுத்துவது ), விரேஜனம் ( பேதி ) என்பதே பஞ்சகர்மா . வஸ்தி என்றால் எனிமா . வஸ்தி, விரேஜனம் இரண்டும் பேதிதானே... என்ன வித்தியாசம் ? வஸ்தி ( எனிமா ) என்பது ' கீழ் ' வழியாக மருந்தைச் செலுத்தி பேதி போகவைப்பது . விரேஜனம், வாய் வழியாக பேதி மருந்தைக் கொடுப்பது .
---' மனம்கொத்திப்பறவை ' தொடரில் , சாரு நிவேதிதா . ஆனந்த விகடன் , 6 .10 . 10 .

Saturday, July 9, 2011

ஆண்களில் ஐந்து வகை !

ஆல்ஃபா , பீட்டா , காமா , டெல்டா , ஒமேகா .ஆண்களில் ஐந்து வகை !
தொல்காப்பியர் ஏன் அப்படி எழுதினார் ? அடிமையாக இருப்பவன் பாட்டுக்குத் தலைவனாக, அதாவது, ஹீரோவாக இருக்க முடியாது என்று ஒரு விதியை அவர் முன்வைக்க காரணம் என்ன ? சிம்பிள்.... சுயசிந்தனா சக்தியும் சுதந்திரமும் இல்லாதவன், ஏவல் செய்ய மட்டுமே லாயக்கானவன் . இப்படிப்பட்டவணை ஆண்களும் மதிக்க மாட்டார்கள், பெண்களும் காதலனாகவோ, கணவனாகவோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .
.உலகில் உள்ள எல்லாப் பெண்பாலின் உயிரினங்களுக்கும் ஒரு பொது சுபாவம் உண்டு . அவை எல்லாமே தலைமைக் குணங்களைக்கொண்ட உயர் அந்தஸ்து ஆல்ஃபா ஆண்களைத்தான் இனப்பெருக்கத்துக்காக தேர்வு செய்கின்றன . தன் வாழ்வைச் சுயமாக நிர்ணயிக்க முடியாத அடிமை நிலையில் இருக்கும் ஒமேகா ஆண்களைப் பெண்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை . இதில் ஒரு பெரிய மரபணுவியல் சூட்சுமமே இருக்கிறது . சமூகக் கூட்டங்களாக வாழும் யானை, குரங்கு, ஓநாய் மாதிரியான விலங்குகளில் என்னதான் நாம் எல்லோரும் ஒரே தரம் என்று சமத்துவம் பேசினாலும், இவற்றுக்குள் ஒரு சமூக அடுக்கு நிலை Social hierarchy இருக்கத்தான் செய்கிறது . அதிக பவர் இருக்கும், பேரந்தஸ்து பெருந்தகை, ஆல்ஃபா என்கிற தலைமைப் பதவியை வகிக்கும் . அதற்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் பீட்டா, காமா, டெல்டா வகையறாக்கள்.... மந்திரி, செயலாளர் மாதிரியான நிலைகளை நிரப்பும் . இந்த எல்லா நிலைகளுக்கும் கீழே மிகக் குறைவான சமூக அந்தஸ்தில் இருக்கும் ஒமேகா, ஏவலுக்குக் கட்டுப்பட்டு இருக்கும் .
--- ' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் , 6 .10 . 10 .

Friday, July 8, 2011

விலங்குகளில் ஆண் -- பெண் !

எல்லா விலங்குகளுக்கும் ஆண், பெண் பெயர் உண்டு . நாம் அதையெல்லாம் மறந்து விட்டு பொதுப் பெயரில் சொல்லிக்கிட்டு இருக்கோம் . நம்ம தொன்மையான நூலான தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியில் இதைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கு .
ஆண் எருமை, ஆடு, மாடுகளை ' கடா ', ' பகடு ' என்று சொல்லணும் . செம்மறியாட்டுக்கு ' தகர் ', குரங்கு, முயலுக்கு ' கடுவன் ', புலிக்கு ' போத்து ', மானுக்கு ' கலை ', எருமைக்கு ' ஏறு ', வாத்துக்கு ' வரடம் ', கரடி, பன்றி, யானை, புலி ஆகியவற்றுக்கு ' ஒருத்தல் ', குதிரைக்கு ' மா ' என்று ஆண்பால் பெயர்கள் உள்ளன .
பெண் ஒட்டகம், யானை, கவரிமானுக்கு ' பிடி ', கழுதைக்கு ' பேடை , பெட்டை ', குரங்குக்கு ' மந்தி ', எருமைக்கு 'ஆ ', பன்றிக்கு ' மோழல் ', ஆடுக்கு ' மூடு ', வாத்துக்கு ' வாத்து ', தேனீக்கு ' அரசி ', மயிலுக்கு ' அலகு ' என்று பெண்பால் பெயர்கள் உள்ளன . பொதுவாக பெண்பால் விலங்குகளுக்கு ' பிணா ', ' பிணவு ' என்று பயன்படுத்தலாம் .
இளம் ஆடு, பூனை, நாய், கழுதை, குதிரை, கரடியை ' குட்டி ' என்றும், இளம் மாடு, எருமை, முதலை, ஒட்டகம் ஆகியவற்றை ' கன்று ' என்றும், ஒட்டகம், யானையை ' கயத்தலை ',
' மினி ', ' களவம் ' என்றும், இளம் கீரியை 'பிள்ளை ' என்றும், இளம் அணிலை ' வெருகு ', ' நாவி ' என்றும், இளம் குரங்கை ' குழலி ', ' குட்டி ' என்றும் அழைக்கலாம் . பொதுவாக இளம் விலங்குகள், அன்னத்தையும் ' பறழ் ' என்று அழைக்கவேண்டும் என்று தொல்காப்பியம் சொல்கிறது .
--- தினமலர் , அக்டோபர் 1 . 2010 .

Thursday, July 7, 2011

ரத்த அழுத்தம் .

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரத்த அழுத்த நிலை சுருங்கும் அழுத்தம் விரியும் அழுத்தம்
( Systolic B. P ) ( Diastolic B . P )
( mm. Hg ) ( mm . Hg )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இயல்பு நிலை 120 மற்றும் 80
( Normaal )
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உயர் ரத்த அழுத்த 120 - 139 அல்லது 80 -- 89 .
முன் நிலை
( Pre - hypertension )
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உயர் ரத்த அழுத்த 140 -- 159 அல்லது 90 -- 99
நிலை -- 1
( Stage 1 hypertension )
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உயர் ரத்த அழுத்த 160 அல்லது 100
நிலை -- 2
( Stage 2 Hypertension )
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவள் விகடன் இணைப்பு . 8 . 10 . 10 இதழ் உதவி : N.கிரி , ( News Agent -- Thirunallar ) கொல்லுமாங்குடி .

Wednesday, July 6, 2011

பிராணாயாமம் .

பராணாயாமம் பற்றி திருமூலர் எழுதிய......
'' ஏற்றி இறக்கி இருகாலும்
பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும்
கணகறிவார் இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி
வார்க்கு
கூற்றை உதைக்கு
குறிஅதுவாமே ! '
என்ற வைர வரிகள், தமிழ்ச் சமுதாயத்தை வாழவைக்கும் வாய்களாகத் திகழ்கின்றன . இவை உயிர் வாழ்தலில் காற்றின் முக்கியத்துவத்தைப் பேசுகின்றன .
--- அவள் விகடன் இணைப்பு . 8 . 10 . 10 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent -- Thirunallar ) கொல்லுமாங்குடி

Tuesday, July 5, 2011

கள்ளம் இல்லை !

மழை நினைத்தால் .
வறண்ட பூமி
வரம் பெறும் ,
வளம் பெறும்
உருண்ட பூமி
உரம் பெறும் ,
உணவு பெறும் .
விளை நிலம் ,
வீரியம் பெறும் ,
வேலையின்மை விடைபெறும் .
வனம் காடு
கனம் பெறும் ,
வனவிலங்கு மகிழுறும் .
அணை ஆறு
நிறைவு பெறும் ,
அகிலம் சுகம்பெறும் .
இன்றோ மழையால்....
ஏழ்மை என்பது
ஏற்றம் பெறுகிறது
இல்லாமை நிலைபெறுகிறது
நகர் வாழ்வு
நலிவு பெறுகிறது
நலமின்மை நலம்
பெறுகிறது
விடிவுண்டு இதற்கு
மழைநீர்
விரைந்தோட வழிவிடுவீர் .
அதன் போக்கில்
சுவர் எழுப்பும்
தடைவேண்டாம் .
ஆறு , குளம்
ஏரி , நிலம் எதிலும்
வீடு வேண்டாம் .
வெள்ளப் பெருக்கில்
கள்ளம் இல்லை
கடலோடி மறைந்திடுமே !
--- பெ . மாடசாமி, காவல்துறை உதவி ஆணையாலர் , வடபழநி . குமுதம் சிநேகிதி,. அக்டோபர் 1 -- 15 , 2010 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent -- Thirunallar ) கொல்லுமாங்குடி

Monday, July 4, 2011

மனிதனுக்கு மலேரியா வந்தது எப்படி ?

மலேரியா நோய்க்கிருமி சிம்பன்சி அல்லது கொரில்லா குரங்குகளிடம் இருந்தே மனிதனுக்கு பரவி இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . ஒருவருக்கு ஒரு நோய் பாதித்தது என்றால் அது என்ன நோய், அதற்கு என்ன மருந்து என்பதை கண்டுபிடிப்பது ஒரு வகை ஆராய்ச்சி . இந்த நோய்க்கிருமியின் மூலம் எது ? நோய் மனிதனுக்கு எங்கிருந்து முதலில் பரவி இருக்கும் என ஆராய்வது இரண்டாவது வகை .
மலேரியா காய்ச்சல் வருவதற்கு ' பிளாஸ்மோடியம் பால்சிபரம் ' என்ற கிருமிதான் காரணம் . கண்ணுக்குத் தெரியாத இந்த கிருமி பல லட்சம் மக்களை ஆண்டுதோறும் பாடாய் படுத்தி வருகிறது . இந்த கிருமிகளை மனிதர்களுக்கு பரப்புவது கொசுக்கள்தான் . அதுவும் ' அனோபிலிஸ் ' எனப்படும் பெண் கொசுக்கள்தான், மலேரிய கிருமியை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரப்புகிறது
மலேரியா பாதித்த ஒருவரை கடிக்கும் கொசு, அப்படியே அவரது ரத்தத்தில் இருந்து பிளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற கிருமியை எடுத்துக்கொண்டு, பறந்து சென்று அடுத்தவர் உடலை கடிக்கும்போது, அவருக்கு அந்த காய்ச்சல் பரவுகிறது . ஆனால், பிளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற மலேரியா கிருமியை மனிதனுக்குள் பரப்பியது யார் ? என்ற ஆராய்ச்சியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலபாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர் . ஆராய்ச்சி முடிவில் மனிதனுக்கு மலேரியா காய்ச்சலை வரவழைக்கும் பிளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற நோய் கிருமி சிம்பன்சி அல்லது கொரில்லா குரங்குகளிடமிருந்து தான் மனிதனுக்குள் பரவி இருக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர் .
சிம்பன்சி குரங்குகள் ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகம் வசிக்கின்றன என்பதாலும், மேலும் எய்ட்ஸ் நோய் கிருமிகள் சிம்பன்சி குரங்குகளிடம் இருந்துதான் மனிதனுக்கு பரவியது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மலேரியாவின் தாயகம், ஆப்பிரிக்க நாடுகளாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்பதோடு மனிதனுக்கு வரும் நோய்களும் குரங்கிடம் இருந்தே வந்தன என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
--- தினமலர் . 24 . 9 . 2010 .

Sunday, July 3, 2011

' சுருக் ' சூத்திரங்கள் .

அமெரிக்காவைச் சேர்ந்த ' திங்க்ஆஹா ' என்ற பதிப்பகம் சமீபகாலமாகப் பல தலைப்புகளில் குட்டிப் புத்தகங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறது . இவற்றை ' ட்வீ ட் ' புத்தகங்கள் என்று அழைக்கிறார்கள் .
அதென்ன ' ட்வீ ட் ' ?
இன்ட்ர் நெட்டில் ' ட்வீ ட்டர் ' என்ற சோஷியல் நெட்வொர்க் இணைய தளத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அங்கே நாம் பேச விரும்புகிற விஷயங்களை 140 எழுத்துகளுக்குள் சொல்லி முடித்துவிட வேண்டும் . இதைத்தான் ' ட்வீ ட் ' என்கிறார்கள் .
இப்படி ஒவ்வொரு தலைப்பிலும் ரத்தினச்சுருக்கமாக 140 எழுத்துகளுக்குள் அடங்கிய 140 வாசகங்களைத் தொகுத்தால் அவைதான் ' ட்வீ ட் ' புத்தகங்கள் . நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது, திட்டமிடுவது, முடிவெடுப்பது, புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது, தன்னம்பிக்கை என்று பல தலைப்புகளில் இந்தப் புத்தகங்கள் வெளியாகியுள்ளன .
--- என். சொக்கன் , வெற்றிக்கு ஒரு புத்தகம் . குமுதம் , 29 . 9 . 2010 .

Saturday, July 2, 2011

அரசியல் -- நியாயம் !

அரசியலில் யாரும் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்களா ?
ஒரு பிரபலமான எழுத்தாளர் வீட்டுக்கு ஒரு அரசியல் தலைவரின் நெருங்கிய உறவினர் வந்தார் . தேர்தல் நேரம் . அந்த அரசியல் தலைவர் தேர்தலில் நிற்கிறார் தேர்தல் செலவுக்கு அவசரமாய் இரண்டுலட்ச ரூபாய் தேவைப்படுகிறது கொடுத்து உதவ முடியுமா ? என்று கேட்கிறார், அந்த உறவினர் . எழுத்தாளரும் இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறார் . தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன . தேர்தலில் அந்தத் தலைவர் தோற்றுவிட்டார் . சில நாட்களில் எழுதாளர் வீட்டுக்கு அந்த அரசியல் தலைவரும் அவரது மனைவியும் வருகிறார்கள் .
' அவசர நேரத்தில் பணம் கொடுத்து உதவியதற்கு நன்றி . ஆனால், அந்தப் பணத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை ' என்று சொல்லி தாங்கள் வாங்கிய இரண்டு லட்ச ரூபாயை திருப்பி தருகிறார்கள் . அந்தத் தலைவர் மன்மோகன்சிங் . பணம் கொடுத்து உதவிய எழுத்தாளர் குஷ்வந்த்சிங் . தனது சமீபத்திய புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார் கு.சி .
--- அரசு பதில்கள் . குமுதம் 22 . 9 . 2010 .

Friday, July 1, 2011

காந்தி .

காந்தி , அரிச்சந்திரனின் ரசிகர் . சத்திய சோதனையாளர் . அரையாடைப் பக்கிரி . அகிம்சைப் போராளி !
* மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2 -ல் பிறந்தார் . மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30 -ல் மறைந்தார் . காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது !
* காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி விடுமுறை . குடியரசு தினம் , சுதந்திர தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள் !
* முதன்முதலில் ' தேசத் தந்தை ' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் . ' மகாத்மா ' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர் !
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் ' ஹரிஜன் ' என்பது . அதன் பொருள் , ' கடவுளின் குழந்தைகள் ! '
* ' உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி ' என்று சொன்ன காந்தி , லண்டனில் சட்டம் பயிலும்போது , ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார் !
* காந்தி ஒரு துறவியைப்போன்றவர்தான் . ஆனால் , அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை . 1931 -ல் லண்டனுக்குச் சென்றபோது , பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்தி . ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு , பக்கிஙஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது , அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர் . அதில் ஒருவர் , ' இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா ' என்று கேட்டார் .' எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து , மன்னரே அணிந்திருந்தார் ' என்று பதில் அளித்தார் காந்தி !
* ' வெள்ளையனே வெளியேறு ' போராட்டத்தின்போது , காந்தி சொன்ன வாக்கியம்தான்... ' செய் அல்லது செத்து மடி ! '
* ' கொள்கை இல்லாத அரசியல் , வேலை செய்யாமல் வரும் செல்வம் , மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம் , பண்பு இல்லாத அறிவு , நியாயம் இல்லாத வணிகம் , மனிதம் மறந்த அறிவியல் , தியாகம் இல்லாத வழிபாடு '. இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள் !
* கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார் . எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும் , உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார் . அதை அவரும் கடைப்பிடித்தார் !
* தான் தவறு செய்தால் , அதற்காக மௌன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால் , அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக் கொண்டு இருந்தார் . இந்தக் குணம் , அவர் தாய் புத்லிபாயிடம் இருந்து வந்ததாகும் !
* இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமா ? அவர் வாழ்நாளில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அது . இது நடந்தது 1961 ஜனவரி 26 -ல் !
* ' என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு ' என்று காந்தி அழைத்தது வினோபா பாவேவைத்தான் !
* மார்டின் லூதர்கிங் , தலாய் லாமா , ஆன் சான் சூகி , நெல்சன் மண்டேலா , அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கிய காரணம் , காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் . ஆனால் , காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை !
* இந்தியா சுதந்திரம் அடைந்தபோது , அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர் . ஒருவர் காந்தி . இன்னொருவர் தந்தை பெரியார் !
* ' கனவில் இருந்து நிஜத்துக்கு , இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு ' - காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது !
--- ந. வினோத்குமார் . ஆனந்தவிகடன் , 8 / 9/ 2010.