Tuesday, June 28, 2011

மனிதரின் மொழிகள் .

மனிதரின் மொழிகள் புரிந்துவிடில்....மொழி வளர்க்க... அறிவு சிறக்க... சில டிப்ஸ் !
' மொழி என்பது ஒரு வலிமையான ஆயுதம் . ஆனால், அது அக்குள் சிரைப்பதற்கானது அல்ல ! ' என்கிறார் எழுத்தாளர் மகா . ஸ்வேதாதேவி . மொழியின் வீரியம் எவ்வளவு என்பதை வெளிப்படுத்தவே இந்த மேற்கோள் .
" முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் . ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே தவிர அது அறிவு கிடையாது . ஆனால், அதைக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், வேறு வழி இல்லை என்கிற பிம்பம் நிலவுகிறது . அதை முற்றாக மறுக்க முடியாத இன்றைய சூழலில் ' மொழியறிவு ' என்ற புதிய சொல்லின் அவசியத்தை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் . மொழியறிவு என்பதைக் காட்டிலும் ' மொழித்திறன் ' என்ற வார்த்தைப் பதம் மிகக் கச்சிதமாகப் பொருந்தும் ! "என்கிறார் ஹெலன் மேத்தா . பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தின் சென்னைக் கிளைத் தலைவர் மற்றும் பயிற்சியாளர் .
' டெக்னிக்கல் ஸ்கில்ஸ் ' என்ற அந்த வகைத் திறன்கள் முக்கியம்தான் . ஆனால், அதைவிட முக்கியம் தொடர்புகொள்ளும் திறன் . தொடர்புகொள்வதில்கூட நன்றாகப் பரிணமிக்கிறார்கள் . ஆனால், தொடர்புகொள்ளுதலைப் பயன்படுத்தும் விதம் என்பதில்தான் தவறு நிகழ்கிறது . அதாவது, மற்றவர்கள் சொல்வதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா என்பதைக் காட்டிலும், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதே முக்கியம் . நம்மில் பலர் மற்றவர் பேசுவதைப் புரிந்து கொள்கிறோம் . ஆனால், அதற்கு எதிர்வினை அளிக்க முற்படுகிறபோது தடுமாறுகிறோம் . இந்தத் தடுமாற்றம்தான், நமக்கு அவ்வளவு மொழித் திறன் இல்லை என்பதை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் .
ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான படிநிலைகள் நான்கு . அவை ... கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் . ஒருவர் மிகச் சிறந்த கேட்டல் திறன் உடையவராக இருந்தால், அவரால் சிறந்த பேச்சாளராக இருக்க முடியும் . சிறந்த பேச்சாளராக இருக்கும்போது, அவரால் சிறந்த படிப்பாளியாக இருக்க முடியும் . சிறந்த படிப்பாளியாக இருக்கும் ஒருவர் நல்ல எழுத்தாளராகவும் இருக்க முடியும் . இந்தப் படிநிலையின் சாராம்சம் இதுதான் .
உச்சரிப்பு மிக அவசியம் . நீங்கள் தெளிவாக உச்சரிக்கும்போது, வார்த்தைகள் கோவையாக வராமல் போனாலும், உங்கள் பேச்சு மற்றவருக்குப் புரியும் . ' அக்ஸென்ட்' ( accent ) என்பார்கள் . அதாவது குறிப்பிட்ட பகுதியில் இருந்து வரும் ஒருவர் ஒரு வார்த்தையைக் குறிப்பிட்ட முறையில் உச்சரிக்கும் முறை . உதாரணமாக, தமிழர்கள் ' ஆபீஸ் ' என்பார்கள் . மலையாளிகளோ ' ஓபீஸ் ' என்பார்கள் . ஆனால், இப்போது எல்லாம் ' அக்ஸென்ட் ' பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை . எல்லா நாடுகளுக்கும் ஏற்றவாறு ஒரு சமன்பாட்டு நிலைக்குத் தயாராகி விட்டார்கள் ! என்று உற்சாகப்படுத்துகிறார் ஹெலன் .
" Applied Linguistics ' என்பது, ஒரு மொழியை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது .
பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பாடத்தில், இரண்டாவது அத்தியாயமே விசாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதாக இருக்கின்றது .
ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தருவதை Phonetics என்பார்கள் . அதைக் கற்றுக்கொள்வது மிக முக்கியம் .
மூல மொழி ( Source Language ) . மொழியாக்க மொழி ( Target language ) இரண்டிலும் தேர்ச்சி பெறுவது முக்கியம் . மூல மொழியில் இருக்கும் சில சொல்லாடல்களை அப்படியே மொழிமாற்றம் செய்வது நல்லது அல்ல . உதாரணமாக, ' நாங்கள் நடந்து சென்றோம் ' என்பதை ஆங்கிலத்தில் சொல்லும்போது, பலர் ' We Went by Walking ' என்கிறார்கள் . அது தவறு .
' நாங்கள் பேருந்தில் சென்றோம் , ரயிலில் சென்றோம் ' என்பதுபோல நடப்பது என்பதும் ஒரு சர்வீஸ்போன்ற அர்த்ததைக் கொடுக்கும் . நாம் செய்வது சிறு தவறுதான் என்றாலும், மொத்தக் கருத்துமே மாறிவிட வாய்ப்பு இருக்கிறது . தொடர்ந்த நேசிப்பும், இடைவிடாத வாசிப்பும் மட்டுமே ஒரு மொழியில் உங்களுக்கான அறிவை மேம்படுத்திக்கொள்ள உதவி செய்யும் " என்று முடிக்கிறார் மீனா கந்தசாமி .
--- ந. வினோத்குமார் . ஆனந்தவிகடன் , 22 . 9. 2010 .

No comments: