Wednesday, June 22, 2011

பால் எமன் ?

பாலில் தண்ணீர் கலப்பார்கள் தெரியும் . தெரியாதது... சோப் பவுடரும் , கிழங்கு மாவும் கலக்கிறார்கள் என்பது . ரத்தத்தை ' ஜிலீரிட ' வைக்கும் இந்தத் தகவல், அன்றாடம் பால் பயன்படுத்துபவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது .
" கொழுப்பு நீக்கப்பட்ட பாலில், புரதம் மட்டுமே இருக்கும் . அதில் நுரை அதிகம் வராது . அதற்காக சோப் பவுடர் கலப்பது உண்டு . அதனால் நுரை தளும்பத் தளும்ப வரும் . அதேபோல், பால் கெட்டியாக இருக்க மாவுச் சத்து ( ஸ்டார்ச் ) அதிகமுள்ள மரவள்ளிக்கிழங்கு சேர்க்கிறார்கள் . இதனால் பாலில் இயற்கையாக இருக்கும் சத்துக்கள் குறையும் . மற்றபடி பாதிப்புகள் பெரிதாக இருக்காது . ஆனால், சோப் பவுடர் அப்படியில்லை ! "
என்னதான் சூடாக்கினாலும், இந்த இரண்டு சேர்ப்பிகளும், இரண்டு மூன்று நாட்கள் வரை பாலிலேயே தங்கியிருக்கும் என்பது அதிர்ச்சி ரகம் . இதில், மற்றொரு கொடுமை என்ன தெரியுமா ? ' யூரியா'வும் கலக்கப்படுவதுதான் .
பொதுவாக ஒரு பொருளை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதற்கு ' பிரிசர்வேட்டிவ்கள் ' சேர்ப்பதுண்டு . அதேபோல், கறந்த பாலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு போகும் போது பால் கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு . அதனைத் தடுப்பதற்காக யூரியா சேர்க்கிறார்கள் .
இது மட்டுமா ? புளிக்காமல் இருக்க சோடியம் - பை - கார்பனேட்டும், அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்த ' ஹைட்ரஜன் பெராக்ஸைடும் சேர்க்கிறார்கள் .
பாலில் ' ஹைட்ரஜன் பெராக்ஸைடு ' ஒரு துளி விட்டால்போதும், கெட்டுப் போகாது . கூடவே அந்த ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதும் சிரமம் . இதில் உச்சகட்ட கொடுமை என்ன தெரியுமா ? கலப்பட பாலில் கொஞ்சூண்டு உப்பு அல்லது சர்க்கரை போட்டால் போதும், கலப்படம் வெளியில் தெரியாது . இருந்தாலும் இந்த ரசாயனச் சேர்மங்களை எல்லாம் ' நியூட்ரலைஸர்ஸ் ' என்கிற பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் .
--- எஸ். அன்வர் . குமுதம் . 29 . 9 . 2010 .

No comments: