Wednesday, June 1, 2011

ஒரு கிராம் சிந்தனை !

ஒரு கிராம் சிந்தனை !
Innovate -- இந்த வார்த்தைக்கு ' எதையேனும் புதிதாகக் கண்டு பிடிப்பது அல்லது அறிமுகப்படுத்துவது ' என்று அர்த்தம் சொல்கிறது அகராதி . அர்த்தம் ஐந்து வார்த்தைகளுக்குள் அடங்கிவிட்டது . ஆனால் , அதன் நீள அகல விஸ்தீரணம் எந்தக் கற்பனை எல்லைகளிலும் அடங்காதது .
* மாருதி சுஸுகி நிறுவனம் தான் தயாரிக்கும் கார்களின் எடையைக் குறைக்க முடிவெடுத்தது . கிட்டதட்ட 2,500 உதிரி பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்படும் காரின் எடையை அசெம்ப்ளிங் யூனிட் மட்டும் நினைத்தால் குறைக்க முடியாது . அதேசமயம் , எல்லா உதிரி பாகங்களின் எடையைச் சகட்டுமேனிக்கும் குறைக்க முடியாது . அப்படிக் குறைத்தால் காரின் பெர்ஃபார்மன்ஸ் சீர்குலைந்துவிடும் . பிரச்னைக்கு தீர்வு தேடி முட்டிக்கொண்டு இருந்தபோது , ஒருவர் மூளையில் பல்ப் . ' 2,500 உதிரி பாகத் தயாரிப்பாளர்களிடமும் அவரவர்கள் தயாரித்து அனுப்பும் பாகங்களில் ஒரே ஒரு கிராம் எடையைக் குறைத்துத் தயாரிக்கச் சொன்னால் என்ன? ' சொன்னார்கள் . காரின் எடையில் 2.6 கிலோ எடை குறைந்தது .
பெர்ஃபார்மன்ஸும் மைலேஜும் அதிகரித்தது . அந்த ஒரு கிராம் சிந்தனைதான் இன்னோவேஷன் !
* அப்போலோ மருத்துவமனைகள் இந்தியாவில் பரவலாகச் செயல்படத் துவங்கிய காலகட்டத்தில், மிகப் பெரிய எதிப்பினை எதிர்கொண்டது . ' நீங்கள் நோயாளியா ? எங்களிடம் வாருங்கள் ... நாங்கள் உங்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கிறோம் ' என்று விளம்பரப்படுத்த முடியாது . ' ஆம்... நான் நோயாளி ' என்று யார் தானாகவே முன்வந்து ஒப்புக்கொள்வார்கள் . அதிலும் இந்தியர்களின் மனப்போக்கு இந்த விஷயத்தில் உலகப் பிரசித்தம் . ' நான் மரணமற்றவன் .என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் மரணம் நிகழும் . நான் சஞ்சீவி ! ' என்ற மனநிலையுடனேயே வளைய வருபவர்களிடம் எந்தப் பருப்பும் வேகாது என்று அவநம்பிக்கைக் குரல்கள்தான் எழுந்தன . ' மாத்தி யோசி ' தத்துவம்தான் அப்போது அப்போலோவின் துணைக்கு வந்தது . ' நோயாளிகள்தான் மருத்துவமனைக்குச் செல்வார்கள் ' என்பது பொதுவிதி . ' தன் ஆயுள் முழுக்க நடை உடையுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் , அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் மகிழ்ச்சியுடன் உலாவுவார்கள் என்பது புது விதி ' என்று விளம்பரப்படுத்தினார்கள் . இப்போது அப்போலோ எப்போதும் ஹாஸ்பிட்டல் ஃபுல் !
இதில் சில சங்கதிகள் மிக அந்நியப்மற்றதாகத் தோன்றுபவர்களுக்கு மட்டும் ஒரு பின்குறிப்பு :
' நிலவில் மனிதன் காலடி எடுத்துவைக்க முடியும் ' என்று தோன்றிய முதல் சிந்தனைப் பொறியை நினைத்துக்கொள்ளுங்கள் !
--- கி. கார்த்திகேயன் . ஆனந்த விகடன் . 15 / 9 / 10 .

No comments: