Saturday, May 7, 2011

' நியாயக்களஞ்சியம் '

கரி நியாயம் ( அங்கார நியாயம் ) :
கரியைக் கையிலெடுத்தால் அது சூடுடையதாய் இருக்கும் போது சுட்டுப் புண்ணாக்குகின்றது . குளிர்ந்திருக்கும் போது சுடாவிடினும் கையை மாசுபடுத்துகிறது . எனவே , அது எந்நிலையிலிருப்பினும் அதன் கூட்டுறவால் தீமையே விளைகிறது . தீயோர் கூட்டுறவும் அத்தகையதே .
கழுதைக் குரல் ( ராய பருத நியாயம் ) :
கழுதையின் குரல் தொடக்கத்தில் பெரிதாகவே தொடங்கி உச்சத்துக்குச் சென்று பின் இறங்கி மத்யமமாகிப் படிப்படியே இறங்கி அடங்கிவிடும் . கீழோர் அன்பும் பெரிதாகவே தொடங்கி வளர்ந்து பின் படிப்படியாய்த் தேய்ந்து பின் இல்லயாகும் .
கற்பகத்தின் பழம் உடனே பயன்படுகின்றது என்னும் நியாயம் :
கற்பக மரத்தின் காய் தோன்றியவுடனே பழுத்துவிடுமாம் . ஏனைய மரங்களின் காய்கள் தோன்றிப் பன்னாளைக்குப் பின்னர் மலர்வது போல அன்று . அதுபோலவே புண்ணியவான் விருப்பம் உடனே இறைவேறும் . ( கர்பக மரமும் பருவத்தில்தான் பழந்தருமெனில் ஏனைய மரங்களைவிட அதற்கு என்ன சிறப்பு உள்ளது ) .
--- கவியரசு கு. நடேசகவுண்டர் . நியாயக்களஞ்சியம் . என்ற நூலில் .. 15 . 8 . 1985

No comments: