Thursday, May 5, 2011

நியாயக்களஞ்சியம் .

எவ்வெச் சமயத்தில் பெண்டிரைப் பிறர் காண்பது குற்றமாகாது : நியாயம் .
இராமன் , சீதை இலக்குமணனுடன் காட்டிற்குச் செல்ல அயோத்தி வீதியில் நடக்கும்போது , நகர மக்கள் நீர் பொழியும் கண்ணீனராய் வழியை அடைத்து நின்றனர் . அப்போது இராமன் சீதையை நோக்கி , " மைதிலி உன் முக்காட்டினை நீக்குக " என்று பணித்தான் . அவளும் அங்ஙனமே செய்தாள் . பின் , நகர மக்களை நோக்கிப் , " பெருமக்களே என் மனைவியை , நீர் நிறைந்த உமது விழிகளால் தடையின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் ; மகளிரை வேள்வியிலும் , திருமணத்திலும் , ஆபத்திலும் , காட்டிலும் பார்ப்பது குற்றமாகாது " என்றான் .
ஒட்டகமுள் செடி நியாயம் ( உஷ்ட்ர கண்டக நியாயம் ) :
ஒட்டகம் வன்னி முதலிய முள் நிறைந்த தழைகளையும், வேம்பு முதலிய கசப்புத் தழைகளையும் அவற்றால் விளையும் துன்பம் கருதாமல் விரும்பித் தின்னும் . கீழ்மக்கள் நல்லனவிருக்கவும் தீயவைகளினாலுண்டாகும் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வாரகள் .
ஒருவன் உண்டு ஒருவன் கக்கின நியாயம் :
ஒரு நூல் விக்கின மின்றி முடியும் பொருட்டு முதலில் மங்கள வாழ்த்துப் பாட வேண்டும் என்பாரை மறுத்து இந்நியாயத்தைக் கூறுவர் . மங்கள வாழ்த்துடன் தொடங்கிய நன்னூல் நிறைவுபெறாமல் நின்றது . அஃதின்றித் தொடங்கிய தொல்காப்பியம் இனிது நிறைவேறி வழங்குகிறது .
--- கவியரசு கு. நடேசகவுண்டர் . நியாயக்களஞ்சியம் . என்ற நூலில் . 15 . 8 . 1985

No comments: