Monday, April 25, 2011

டிப்ஸ் ...டிப்ஸ் ...

* சுவாமிப் படங்களை சாதாரண நீர் கொண்டு துடைக்காமல், பன்னீர் கலந்த நீரினாலோ அல்லது கற்பூரம் கரைத்த நீரினாலோ துடைத்தால் பூச்சி அரித்து வீணாகாமல் நீண்டநாள் பாதுகாக்கலாம் .
* பாத்ரூம் டைல்ஸ்களில், பாத்திரம் துலக்கும் பவுடருடன், கோலமாவைக் கலந்துத் தூவி ஊற வைத்துக் கழுவவும் . பளபளப்பு கூடுவதோடு வழுக்கவும் வழுக்காது .
* சேப்பங்கிழங்கை எப்படிச் சமைத்தாலும் வழுவழுப்பு போகாது . கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து, ஃபிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைத்து, பொரித்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மொறு மொறுப்பாக இருக்கும் .
* ஃபெவிகால் ஒட்டுவதற்கு எடுத்து, மூடி வைப்போம் . அடுத்தமுறை உபயோகிக்கும்போது மேல் பக்கம் ஆடை போல் கெட்டியாகியிருக்கும் . நீண்ட நாட்களுக்குப் பின் திறந்து பார்த்தால் முழுவதுமே கெட்டியாகி வீணாகிவிடும் . இதைத் தடுக்க, ஃபெவிகாலை ஒருமுறை உபயொகித்தவுடன் அது மூழ்கும்படி மேலே சிறிது தண்ணீர் ஊற்றி வைக்கவும் அப்போது கெட்டியாகாமல் இருக்கும் .
* வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் தூளாக்கி, அத்துடன் நன்கு வறுத்த சேமியாவைப் பொடியாக நொறுக்கிப் போட்டு, வறுத்த முந்த்ரியையும் ஒடித்துப் போட்டுக் கலந்து வைத்துக் கொண்டால், விருந்தினர் வந்ததும் கொதி நீரில் ஒரு கரண்டி எடுத்துப் போட்டுக் கிளறி, சூடான பாலும் ஒரு ஸ்பூன் நெய்யும் விட்டுக் கலந்து சட்டென்று நிமிடத்தில் பாயசம் செய்து விடலாம் .
* போளி தட்டும்போது வாழையிலையின் பின்பக்கமாகத் தட்டினால் மெல்லியதாக வரும் .
* ஊறுகாய் கிண்ணத்தில் ஸ்பூனுக்குப் பதிலாக சிறிய ஃபோர்க்குகளை உபயோகிக்கலாம் . இதனால் ஊறுகாயுடன் என்ண்ணெயும் சேர்ந்து வாராமல் ஊறுகாயிலேயே தங்கிவிடும் .
* நாம் தினசரி உபயோகிக்கும் சர்க்கரை பாட்டிலில் எறும்பு வந்துவிட்டால், வெங்காயம், உருளைக்கிழங்கு வைத்திருக்கும் தட்டில் பாட்டிலைத் திறந்து வைத்துவிடுங்கள் . சில மணி நேரங்களில் எறும்பெல்லாம் மாயமாய் மறைந்து போயிருக்கும் .
* தரையில் எலுமிச்சைச் சாறு பட்டு தரை வெள்ளையாக மாறியிருந்தால், அதன் மீது பூசணிக்காயை நறுக்கி தேய்க்கவும் . கறை உடனடியாக நீங்கிவிடும் .
* தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும்போது ஒரு டீஸ்பூன் சீரகத்தை வறுத்து, சேர்த்து அரைக்கவும் . வாசனையாக இருப்பதோடு, எளிதில் செரிமானம் ஆகும் .
* சுவாமி படங்களைக் கண்ணாடி ஃப்ரேம் போடாமல், லேமினேஷன் செய்வதுதான் நல்லது . பூச்சி அரிக்காது . துடைப்பதும் சுலபம் . வெளியூர் மாற்றலாகிப் போகும்போது உடையாமலும் இருக்கும் . அதிக எடையும் இருக்காது .
* கடையில் வாங்கும் சுண்டைக்காய் வற்றலை, தண்ணீரில் போட்டு அலசவும் . பிறகு, புளித்த மோரில் ஊற வைத்துக் காய வைத்து வறுத்தால், அபார ருசி கிடைக்கும் . அதிகப் படியான உப்பும் தண்ணீரில் போய்விடும் .
* பாகற்காயை நறுக்கி, அரிசி களந்த நீரில் ஊற வைத்து, பிறகு சமைத்தால் துளியும் கசக்காது .
* வீட்டில் பல்லிகள் பாடாய்ப் படுத்துகிறதா ? பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும் .
* இட்லிப்பொடி காரமாகி விட்டதா ? ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை அரைத்துச் சேர்த்தால், காரம் குறையும் .
* இட்லி கல் போல வருகிறதா ? ஒரு கிலோ இட்லி மாவுக்கு ஒரு சாஷே ஈனோ உப்பைக் கலந்து, அரை மணி நேரம் கழித்து வார்த்தால், இட்லி பஞ்சு போல் இருக்கும் . எளிதில் ஜீரணமும் ஆகும் .
--- மங்கையர் மலர் .செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N. கிரி , ( News Agent Thirunallar ) கொல்லுமாங்குடி

No comments: