Tuesday, March 29, 2011

பட்டாம்பூச்சிகள் !

இரண்டு பட்டாம்பூச்சிகள் காதலித்தன . யாருக்கு இன்னொருவர் மேல் நேசம் அதிகம் என்பதில் இருவருக்கும் போட்டி . ஒரு தடாகத்திலிருந்த தாமரையைக் காட்டி, " நாளை காலை யார் இதன் மீது முதலில் அமர்கிறார்களோ அவர்களுக்குத்தான் அதிக நேசம் " என்று தீர்மானித்தன . மறுநாள் காலை,, தாமரை மலர்வதற்கு முன்பாகவே ' படபட ' வென சிறகடித்து வந்த ஆண் பூச்சி ஆவலோடு காத்திருந்தது . தாமரை மலர்ந்த அடுத்த விநாடி அதில் அமர்ந்தது . அதிர்ந்தது . தாமரைக்குள்ளே பெண் பட்டாம்பூச்சி செத்துக் கிடந்தது . தன் அன்பை உணர்த்த முதல் நாள் மாலையே வந்து அமர்ந்துகொண்ட அந்த பட்டாம்பூச்சி, தாமரை மூடிக் கொண்டதால் மூச்சுத் திணறி இறந்தது . அந்த வண்ணத்துப் பூச்சியின் நேசம் தான் தாமரையின் வாசமாய் இன்று வரை வாழ்கிறது . சாக்ரடீஸ் . சாக்ரடீசுக்கு மரணதண்டனை விதிக்க அந்த நீதிபதிக்கு விருப்பமில்லை . ஏதென்சை விட்டுச் சென்று விடுங்கள், அல்லது உங்கள் போதனைகளை நிறுத்தி விடுங்கள் என்றார் . அதற்கு சாக்ரடீஸ் ஏதென்சை விட்டு நான் செல்லவிரும்பவில்லை . இருளில் பிறர் தடுமாறுவதைப் பார்த்து நான் அமைதி காக்க முடியாது . எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன் என்றார் . மரணதண்டனை மட்டுமே வழி என்றார் நீதிபதி . எனக்கு மரணதண்டனை விதிப்பதால் மட்டுமே நீங்கள் புகழடைவீர்கள் . இல்லையென்றால் உங்களை யாருக்குமே தெரியாது என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் சாக்ரடீஸ் . குழந்தைகள் . சில குழந்தைகள் தொடக்கத்தில் மந்தமாக இருப்பார்கள் . அவர்களது பெற்றோருக்கு அச்சம் இருக்கும் . ஆனால், பயப்படத் தேவையில்லை . சீனாவில் மோஸோ என்றொரு மூங்கில் வகை உண்டு . வளர்வதற்கான சூழலில் கூட அது வளர்ச்சிக்கான எந்த அறிகுறியையும் முதல் ஐந்து ஆண்டுகளுக்குக் காட்டாது . ஐந்தாம் ஆண்டிலிருந்து, நாளொன்றுக்கு இரண்டரை அடிவரையில் அசுர வேகத்தில் வளரும் . ஆறே வாரங்களில் 90 அடிகளைத் தொட்டுவிடும் . அந்த ஐந்தாண்டுகளில் அதன் வேர்கள் அவ்வளவு உறுதியாக மண்ணில் ஊன்றப்படுகின்றன . மெல்ல வளரும் குழந்தைகளை ஊக்குவியுங்கள் . அவர்களும் சாதிப்பார்கள் . --- நம்பிக்கை மின்னல்கள் நூலில் மரபின்மைந்தன் ம. முத்தையா .

No comments: