Thursday, March 31, 2011

காஷ்மீரில்....?

என்ன நடக்கிறது காஷ்மீரில் ?
காஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து - முஸ்லீம் பிரச்னையோ, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான இடம்பிடிக்கும் போட்டியோ அல்ல ; அதன் வேர் இந்தியப் பிரிவினையில் இருந்து தொடங்குகிறது . காஷ்மீரில் பெரும்பகுதி முஸ்லீம் இருந்தபோதிலும் சுதந்திரத்தின்போது ஹரிசிங் என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார் .அவர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்தார் . அந்த நிலையில் பாகிஸ்தானின் பஸ்தான் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது படை எடுத்தனர் . அதை சமாளிக்க முடியாத ஹரிசிங், நேருவுடன் ஒப்பந்தம் போட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார் . இப்படித்தான் காஷ்மீர் இந்தியாவுக்கு வந்தது . பின்னர் படிப்படியான நிகழ்வுகளின் காரணமாக அரசியல் சட்டத்தில் 370 - வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது . இந்த இணைப்பில் மிக முக்கியமான அம்சம் என்பது ' காஷ்மீர மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் ' என்பதுதான் . ஆனால், இன்று வரை அப்படி ஓர் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்ல . நேருவும் அதன் பின் வந்த யாருமே அந்த ஓட்டெடுப்பு நடத்த துணியவே இல்லை . காஷ்மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றி ' சுதந்திர காஷ்மீர் ' கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள் . 50 ஆண்டுகள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980 -களின் பிற்பகுதியில் போராட்டம், ஆயுத வடிவம் எடுத்தது . காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதாலும், அவர்கள் முஸ்லீம்கள் என்பதாலும் சுதந்திரமாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ்தான் . அதன்பிறகு போராட்டம், தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது . அந்த அழகிய பள்ளத்தாக்கு படிப்படியாக ரத்தப் பிரதேசம் ஆன கதை இதுதான் .
பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லீம்கள் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்பவில்லை . இரு தரப்பும் முஸ்லீம்கள்தான் என்றாலும் அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது . பாகிஸ்தானின் முஸ்லீம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் . காஷ்மீரின் முஸ்லீம்கள் ' குஃபி ' வகையைச் சேர்ந்தவர்கள் . தங்களைத் தனித்த தேசிய என வகைப்படுத்தும் காஷ்மீரிகள் ' சுதந்திர காஷ்மீர் ' கேட்கின்றனர் . இதை பாகிஸ்தானோ, இந்தியாவோ இதுவரை கண்டுகொள்ளவில்லை .
--- ஆனந்தவிகடன் , 25. 8. 2010.

Wednesday, March 30, 2011

குழந்தை பேசவில்லை !

என் குழந்தை பல வாரங்களாகப் பேசவில்லை !
தெற்கே தலைவைத்து நாங்கள் படுத்தது இல்லை
ஊருக்குத் தெற்கே சுடுகாடு இருந்தபோது
தலைவைத்துப் படுக்க
ஒரு திசை இல்லை
இப்போது
ஊரே சுடுகாடாய்
பதுங்கு குழிக்குள்
அழுகிய பிணங்களுடன்
பேசிக்கொண்டு இருந்த என்னுடன்
என் குழந்தை
பல வாரங்களாகப் பேசவில்லை
வெடியோசை
பற்றி எரியும் ஊரகள்
வெட்டி எறியப்பட்ட உடல்கள்
மரண ஓலம்
பிண நாற்றம்
பயம், பீதி, பசி
இவற்றுடன்
பேசாத என் குழந்தை
இதைத் தவிர
என்னுடன் எதுவும் இல்லை
என் வீடு -- வாசல்
என் தாய் -- தந்தை
என் கணவன்
என் மூத்த பிள்ளை
என் உற்றார் உறவுகள்
என் வார்த்தை
என் சுவாசம்
இங்கு எதுவும் எனக்கானது இல்லை
பேசாத என் குழந்தையைத் தவிர
வெள்ளைக் கூடாரத்துக்கு
வந்து சேரும் வரை
முள்வேலிச் சிறைக்குள்
விறைத்த துப்பாக்கிகளின்
கண்காணிப்பில்
எனது உடல்
நொதித்துக்கொண்டு இருக்கிறது
பாழுங்கிணறென !
--- மாலதி மைத்ரி , ஆனந்தவிகடன் . 25. 8. 2010.

Tuesday, March 29, 2011

பட்டாம்பூச்சிகள் !

இரண்டு பட்டாம்பூச்சிகள் காதலித்தன . யாருக்கு இன்னொருவர் மேல் நேசம் அதிகம் என்பதில் இருவருக்கும் போட்டி . ஒரு தடாகத்திலிருந்த தாமரையைக் காட்டி, " நாளை காலை யார் இதன் மீது முதலில் அமர்கிறார்களோ அவர்களுக்குத்தான் அதிக நேசம் " என்று தீர்மானித்தன . மறுநாள் காலை,, தாமரை மலர்வதற்கு முன்பாகவே ' படபட ' வென சிறகடித்து வந்த ஆண் பூச்சி ஆவலோடு காத்திருந்தது . தாமரை மலர்ந்த அடுத்த விநாடி அதில் அமர்ந்தது . அதிர்ந்தது . தாமரைக்குள்ளே பெண் பட்டாம்பூச்சி செத்துக் கிடந்தது . தன் அன்பை உணர்த்த முதல் நாள் மாலையே வந்து அமர்ந்துகொண்ட அந்த பட்டாம்பூச்சி, தாமரை மூடிக் கொண்டதால் மூச்சுத் திணறி இறந்தது . அந்த வண்ணத்துப் பூச்சியின் நேசம் தான் தாமரையின் வாசமாய் இன்று வரை வாழ்கிறது . சாக்ரடீஸ் . சாக்ரடீசுக்கு மரணதண்டனை விதிக்க அந்த நீதிபதிக்கு விருப்பமில்லை . ஏதென்சை விட்டுச் சென்று விடுங்கள், அல்லது உங்கள் போதனைகளை நிறுத்தி விடுங்கள் என்றார் . அதற்கு சாக்ரடீஸ் ஏதென்சை விட்டு நான் செல்லவிரும்பவில்லை . இருளில் பிறர் தடுமாறுவதைப் பார்த்து நான் அமைதி காக்க முடியாது . எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன் என்றார் . மரணதண்டனை மட்டுமே வழி என்றார் நீதிபதி . எனக்கு மரணதண்டனை விதிப்பதால் மட்டுமே நீங்கள் புகழடைவீர்கள் . இல்லையென்றால் உங்களை யாருக்குமே தெரியாது என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் சாக்ரடீஸ் . குழந்தைகள் . சில குழந்தைகள் தொடக்கத்தில் மந்தமாக இருப்பார்கள் . அவர்களது பெற்றோருக்கு அச்சம் இருக்கும் . ஆனால், பயப்படத் தேவையில்லை . சீனாவில் மோஸோ என்றொரு மூங்கில் வகை உண்டு . வளர்வதற்கான சூழலில் கூட அது வளர்ச்சிக்கான எந்த அறிகுறியையும் முதல் ஐந்து ஆண்டுகளுக்குக் காட்டாது . ஐந்தாம் ஆண்டிலிருந்து, நாளொன்றுக்கு இரண்டரை அடிவரையில் அசுர வேகத்தில் வளரும் . ஆறே வாரங்களில் 90 அடிகளைத் தொட்டுவிடும் . அந்த ஐந்தாண்டுகளில் அதன் வேர்கள் அவ்வளவு உறுதியாக மண்ணில் ஊன்றப்படுகின்றன . மெல்ல வளரும் குழந்தைகளை ஊக்குவியுங்கள் . அவர்களும் சாதிப்பார்கள் . --- நம்பிக்கை மின்னல்கள் நூலில் மரபின்மைந்தன் ம. முத்தையா .

Monday, March 28, 2011

வலைபாயுதே !

* " தேவதைக்கு ஆண் பால் இல்லை .
சாத்தானுக்குப் பெண் பால் இல்லை ! "
* " நான் ஃபுல் மீல்ஸ் வாங்கினால் லிமிட் ஆகவும் ,
லிமிடெட் மீல்ஸை ஃபுல் ஆகவும் சாப்பிடுகிறேன் ! "
* " தக்காளி, முட்டை விலை ஜாஸ்தியாகிடுச்சான்னு தெரியலை...
எல்லோரும் ஷூவைத் தூக்கி அடிக்கிறாங்க ! "
* ஒரு ரயில் பெட்டியில் கண்ட விளம்பரம் :" எல்.ஐ.சி பாலிசி
எடுத்துவிட்டீர்களா ? " # பொருத்தம் !
* " சிலர் சொல்வார்கள், ' நல்லவர்களைக் கண்டுபிடியுங்கள் .
தீயவர்களைப் புறக்கணியுங்கள் ! ' என்று . ஆனால், அது இப்படி
இருக்க வேண்டும் . ' ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்லதைக்
கண்டுபிடியுங்கள் . அவர்களுக்குள் இருக்கும் தீமைகளைப்
புறக்கணியுங்கள் ! ' யாருமே இங்கு பெர்ஃபெக்ட் கிடையாது ! "
* " எழுத்து ஒரு போதை . போதையில்கூட எழுத வேண்டும்
என்று தோன்றும் ! "
* " நடக்கிற ரயில் விபத்துகளைப் பார்த்தா, டிரெய்ன் டிக்கெட் புக் பண்ணினா,
' பர்த் ' கன்ஃபாம் ஆகுதோ இல்லையோ ' டெத் ' கன்ஃபாம் ஆயிடும்போல இருக்கே ? ! "
--- ஆனந்தவிகடன் . 25. 8. 2010.

நான்கு வழிச் சாலைப் பயணம் !

மிக மிகச் சுருக்கமாக, தினமும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள இந்த நான்கு விதிகளைக் கட்டாயம் கடைபிடியுங்கள் . 1 ) உங்களைப் படுக்கையில் இருந்து துள்ளியெழச் செய்யும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் ! 2 ) உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு எது மட்டும் தேவை என்பதில் தெளிவாக இருங்கள் ! 3 ) உங்கள் இலக்கை அடைய உங்கள் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள் ! 4 ) இலக்குகளைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பகுதி பகுதியாக நிறைவேற்றி வெற்றிக் கோட்டை எட்டிப்பிடியுங்கள் ! வாழ்த்துக்கள் ! --- கி. கார்த்திகேயன் . ஆனந்தவிகடன் . 5 . 5 . 10 .

Sunday, March 27, 2011

வெளி நிறம் ஓர் மதிப்பல்ல !

பள்ளி மணி அடித்ததும்
புள்ளி மான்கள் போலவே
பிள்ளைகள் அனைவரும்
துள்ளி வீடு வந்தனர் .
கண்ணன் என்று ஓர் சிறுவன்
கண்கள் கலங்க வீடுவந்தான்
' கண்ணா ஏன் அழுகிறாய் ? '
கனிவோடு தாய் கேட்டாள்...
' கருங்குருவி என்று பலரும்
கிண்டல் செய்கிறார்களே...
வருத்தமாக இருக்கிறது '
என்று அழுதான் கண்ணனே !
' கறுப்பும் ஒரு நிறம்தானே ?
கண்ணீர்விடத் தேவையில்லை !
உருவத்தில் கறுப்பு இருக்கலாம்...
உள்ளத்தில் கறுப்பு கூடாது !
வெள்ளை உள்ளம் உனக்கிருக்க
வீண் அழுகை உனக்கெதற்கு ? '
அள்ளியணைத்த அம்மாவும்
ஆறுதலாய் அறிவு சொன்னாள் !
' வெளி நிறம் ஓர் மதிப்பில்லை '
உணர்ந்திட்டான் கண்ணனுமே
களித்திட்டான்... கவலைநீங்கி
கலகலவெனச் சிரித்திட்டான் !
--- எம். ஆனந்தி, வேலூர் . தினமலர் . ஆகஸ்ட் 20 . 2010 .

Saturday, March 26, 2011

அறுசுவை மகத்துவம் !

எப்படி சாப்பிடணும் ?
முதலில் இனிப்பையும், பிறகு வரிசையாக புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவை கொண்டவற்றையும் சாப்பிட வேண்டும் . நிறைவாக, தயிரில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் உணவு நன்கு செரிக்கும் . இந்த அறுசுவைகளும் அன்றாட உணவில் சமச்சீராக இருப்பதே ஆரோக்கியம் .
,-- தினமலர் .22 . 8 . 2010.

Friday, March 25, 2011

மேஜிக் கணக்கு !

உங்களது நண்பரை அழைத்துக் கொள்ளுங்கள் . ' நான் சொல்லும் சின்னக் கணக்குகளைச் செய்.... கடைசியில் வரும் விடையை மட்டும் சொன்னால்போதும், உன் வயசையும் உங்க அம்மா ( அல்லது அப்பா ) வயசை நான் கரெட்டாச் சொல்றேன் ! ' என்று ' பில்டெப் '. கொடுங்க . பிறகு ஒரு காகிதத்தைக் கொடுத்து இப்படி கணக்கு செய்யச் சொல்லுங்கள் ....
1 . உங்க அம்மா ( அல்லது அப்பா ) வயசை எழுதிக் கொள் .
2 . அதை 2- ஆல் பெருக்கு .
3 . வரும் விடையுடன் 5 -ஐக் கூட்டு .
4 . வரும் விடையை 50 -ஆல் பெருக்கு .
5 . வரும் விடையுடன் உன் வயதைக் கூட்டு....
6 . வரும் விடையுடன் 365 ஐ கூட்டு . விடையைச் சொல் !
இதன்பின் நீங்கள் செய்ய வேண்டியது, 2 சிறிய கழித்தல்கள்தான் ...
உங்கள் நண்பர் சொல்லும் விடை, 4 இலக்க எண்ணாக இருக்கும் . அதன் முதல் இரு இலக்கங்களில் இருந்து 6 ஐ கழியுங்கள்; அதில் வரும் விடைதான், நண்பரின் அம்மா ( அல்லது அப்பா ) வயது ! கடைசி இரு இலக்கங்களில் இருந்து 15- ஐ கழியுங்கள்; அதில் வரும் விடைதான், நண்பரின் வயது !
ஒரு உதாரணம் : உங்கள் நண்பரின் வயது 10 ; அவரது அம்மாவின் வயது 30 என்று வைத்துக் கொள்வோம் . நீங்கள் சொல்லியபடி அவர் கணக்கு செய்து முடித்து 3,625 என்று
( 1. 30; 2. 60; 3 . 65; 4. 3250; 5. 3260; 6. 3625 ) சொல்வார் . .
இதன் முதல் இரு இலக்கங்கள் 36 ; இதில் 6 -ஐ கழித்தால், நண்பரின் அம்மா வயது 30 . இதன் கடைசி இரு இலக்கங்கள் 25 ; இதில் 15 -ஐ கழித்தால், நண்பரின் வயது 10 !
--- தினமலர் .20 . 8 . 2010.

Thursday, March 24, 2011

பஞ்சபூத சக்தி !

நோய் துரத்தும் பஞ்சபூத சக்தி !
நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்சபூத சக்திகள் உடலில் சரிவர இணைந்திருந்தால் நோய்கள் அணுகாது .
இதற்கு இயற்கை மருத்துவத்தில் உள்ள ஒரு சுலப வழி :
நெல்லி ( நில சக்தி ) 600 கிராம், மிளகு ( நீர் சக்தி ) 500 கிராம், கடுக்காய் ( தீ சக்தி ) 400 கிராம், மஞ்சள் ( வாயி சக்தி ) 300 கிராம், வேப்பவித்து ( ஆகாய சக்தி ) 200 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும் . கடுக்காயில் விதையை நீக்கிவிட வேண்டும் .
இந்த ஐந்தையும் அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம் .
நூறு மில்லி பசும்பாலில் இந்த பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவில் கலந்து காய்ச்ச வேண்டும் . இது இளம்சூடாக இருக்கும்போது தலையில் தேய்த்து, வெந்நீரில் குளிக்க வேண்டும் . ஷாம்பு, சிகைக்காய் பயன்படுத்தக்கூடாது .
வாரம் ஒரு முறை இதைப் பின்பற்றினால், உடலில் பஞ்சபூத சக்தி நிறைந்து ஆரோக்கியம் பெருகும் !
--- தினமலர் .22 . 8 . 2010.

Wednesday, March 23, 2011

ஆப்கன் அதிர்ச்சி !

ஆப்கன் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக சேவகி ஒருவர் சொன்னது இது ... " ஆப்கானிஸ்தான் சாலைகளில் குறைந்தபட்சம் ஆறு அடி இடைவெளி விட்டுத்தான் கணவனைப் பின் தொடர்ந்து மனைவி நடந்து வர வேண்டும் . நிவாரணப் பணிகளுக்காக ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு தம்பதியினர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள் . ஆனால், ஆச்சர்யம்... கணவனுக்கு ஆறு அடிகள் முன்பாக மனைவி சென்றுகொண்டு இருந்தார் . எனக்குப் பயங்கர சந்தோஷம் . உடனே ஓடிச் சென்று, அவளது கணவனைப் பாராட்டினேன் . அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருந்தவன், ' இந்தப் பகுதியில் புதைத்துவைக்கப்பட்டு இருந்த பல கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப் படவில்லை. அதனால்தான் என் மனைவியை எனக்கு முன்னால் நடக்கச் சொல்லி, அவள் பாதங்கள் கடந்த பாதையில் நான் நடக்கிறேன் , என்றான் அவன் . நான் நிலைகுலைந்துவிட்டேன் ! " இதுதான் ஆப்கனில் பெண்களின் நிலை .
--- கி. கார்த்திகேயன் , ,ஆனந்தவிகடன் . 25. 8. 2010.

Tuesday, March 22, 2011

உலக மக்கள் தொகை !

ஐ. நா. புள்ளி விவரப்படி உலக மக்கள் தொகை தற்போது ஆறு பில்லியனுக்கு மேல் ( 620 கோடி ). கை நீட்டினால், யார் மீதும் இடிக்காத அளவுக்கு ஒவ்வொருவருக்கும் இடம் வேண்டும் என்றால், 620 கோடி மக்களையும் நிற்கவைக்க 21,000 சதுர மைல் இடம் போதும் . அதாவது ஸ்ரீலங்கா போதுமானது . நெருக்கி அடித்துக்கொண்டு நிற்க 800 சதுர மைல் போதும். வியப்படைய வேண்டாம் . பிரபல் பிரிட்டிஷ் விஞ்ஞானப் புத்தகத்தில் படித்த தகவல் இது !
--- ஹாய் மதன் ,ஆனந்தவிகடன் . 25. 8. 2010.

Monday, March 21, 2011

' ஆரோதெரபி '

எண்ணங்களின் சக்தி மகத்தானது . எண்ணம் என்பதும் மின்காந்த அலைதான் .
நமது ஸ்தூல ( ரத்தமும் சதையும் கலந்த ) உருவத்தை சாதாரண கேமராவால் புகைப்படம் எடுப்பதுபோல், நமது சூட்சும ( கண்ணுக்குப் புலப்படாத ) உருவத்தை ' கிர்லியன் கேமரா ' என்ற விசேஷ கேமராவால் புகைப்படம் எடுக்க முடியும் . அந்த புகைப்படத்திற்கு ' ஆரோபிலிம் ' என்று பெயர் . ஆரோ என்றால், எண்ண அலைகள் . இந்த ஆரோவில் வானவில் போல் 7 நிற அடுக்குகள் இருக்கும் . அந்த நிறங்களின் தன்மையை வைத்து உடல் நோய், மனநோய்களைக் கண்டுபிடித்து சரியான சிகிச்சை அளித்து குணமாக்கும் மருத்துவமுறைக்கு ' ஆரோதெரபி ' என்று பெயர் !
--- பூஜ்யா , தினமலர் .21 . 8 . 2010.

Sunday, March 20, 2011

தலைக்கு டை !

தலைக்கு டை அடித்தால் நரைமுடி மேலும் அதிகரித்துவிடும் என்று சொல்ல்கிறார்கள் .
" டை அடித்தால் நரை முடிகள் அதிகமாவது மட்டுமல்ல, இன்னும் பல ஆபத்துக்களும் அதில் உள்ளன . டை என்பது முடிகளுக்கான வெளிப்பூச்சு அல்ல.... முடிகளின் வேரைச் சென்று அதன் மூலம் இரத்தத்தில் கலந்து ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் விஷத்தன்மையைப் பரப்பும் பேராபத்தையும் ஏற்படுத்தக்கூடிய விஷமி . டைகளில் கலந்துள்ள PPD என்கிற இரசாயனம் சிறுநீரகப்பை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது .
நாம் தலைமுடிக்கு டை அடித்த சில நிமிடங்கள் கழித்து நமது சிறுநீரைப் பரிசோதித்தால் டைகளில் உள்ள விஷத் தன்மைகள் அதில் அப்பட்டமாக வெளிப்படுகிறது என்பதை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளன .
எவ்வளவு நவீன ' டை 'யாக இருந்தாலும் அதனால் முடிகளுக்கு மட்டும் இன்றி மொத்த உடம்புக்கும் கேடு என்பது தவிர்க்கவே முடியாதது .
டைகள் வெள்ளைகளை மட்டுமின்றி ஆரோக்கியமான கறுப்பு முடிகளின் ஃபோலிக்கில் என்று சொல்லப்படும் வேர்களையும் விஷமாக்கி, எல்லா முடிகளின் ஆரோக்கியத்தையும் அழித்துவிடுகின்றன . அதனால்தான் டை அடிப்பவருக்கு திடீரென வெள்ளை முடிகள் அதிகரித்தது போல் தோன்றும் . கூடவே முடிகள் கொட்டுவதும் அதிகமாகும் ."
---இளையரவி , தகவல் தமயந்தி . குமுதம் 25 . 8. 2010.

Saturday, March 19, 2011

கராத்தே வீரர் !

கராத்தே வீரர்கள் செங்கற்களை அடுக்கிவைத்துக் கையால் உடைக்கிறார்களே, கைகளுக்கு இவ்வளவு சக்தியை ஏற்படுத்த முடியுமா ?
அப்படி ஒரு சக்தியைக் கைக்கு ஏற்படுத்திக்கொள்ள முடியும் . பிராக்டிஸ் ! வேகத்தில் ஏற்படும் சக்தி அது ( Kineitic energy ) . ஒரு தேர்ந்த வீரர் செங்கற்களை உடைக்கும்போது, அரை டன் எடைக்குச் சமமான சக்தி அவருடைய கையில் உற்பத்தி ஆகிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்து இருக்கிறார்கள் . கையின் வேகம் -- விநாடிக்கு 20 அடிக்கு மேல் ! இந்த ' உடைக்கிற சாதனை 'க்கு கராத்தேயில் ' டமாஷிவாரா ' என்று பெயர் .
மிகப் பெரிய ஆண் உறுப்பு ( Penis ) உள்ள பறவை எது ?
பறவைகளுக்கு Penis கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும் ! பொதுவாக, பறவைகளூக்கு ( ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ) பார்க்க ஒரேமாதிரி இருக்கும் ' க்ளோயேகா ( Cloaca ) ' என்பதுதான் உண்டு .
( ஜப்பானில் Chick Fixer என்கிற பணியில் தேர்ச்சி பெறுவதற்கான பட்டப் படிப்புகூட உண்டு . அதாவது, டார்ச் அடித்துப் பார்த்து, பறவைகளில் ஆண் -- பெண் இனம் பிரிக்கிற பணி ! ) . ஆனால், அன்னம், வாத்து போன்ற சில வகைப் பறவைகளுக்கு ஆண் உறுப்பு உண்டு . ( மூன்று சதவிகித பறவை இனங்களுக்கு Penis உண்டு ) ! அர்ஜன்டைன் நீலவாத்து என்கிற இனத்தின் ஆண் உறுப்பு... வாத்தைவிட நீளமானது . உலக ரெக்கார்ட் !
--- ஹாய் மதன் , ஆனந்தவிகடன் , 18. 8. 2010 .

Friday, March 18, 2011

மாற்று எரிபொருள் ' விஸ்கி ' !

ஸ்காட்லாந்து நிபுணர்கள் கண்டுபிடிப்பு . புதிய மாற்று எரிபொருள் ஆனது ' விஸ்கி ' போட்டால் கார் ஓடும் .
இனி காருக்கு (ம்) ஒரு பெக் விஸ்கி போட்டால் போதும் . அடுத்த பெட்ரோல் பங்க் வரை பிரச்னையின்றி ஓடும் . ஆம், விஸ்கியில் இருக்கும் 2 மூலப்பொருள்கள் வாகனங்களுக்கு தாவர எரிபொருளாக பயன்படுவதை ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
விஸ்கியில் உள்ள செம்பு தாதுவில் இருந்து திரவ வடிவில் எடுக்கப்பட்ட ' பாட் ஆல் ', தனியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ' ட்ராப் ' ஆகிய 2 மூலப்பொருள்கள் மாற்று எரிபொருளாக பயன்படும் தன்மை இருப்பதை கண்டுபிடித்தனர் . அவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பூட்டனால் என்று பெயரிட்டுள்ளனர் .
இந்த பயோ -- ப்யூலை பெட்ரோல், டீசலுடன் 5 முதல் 10 சதவிகிதம் வரை கலந்து பயன்படுத்தலாம் . சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது . 5 -- 10 சதவிகிதம் கலந்தாலே சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலை பெருமளவில் மிச்சம் செய்ய முடியும் . சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க முடியும் .
--- தினகரன். ஆகஸ்ட் 19 . 2010 .

Thursday, March 17, 2011

போர்க்குணம் !

வெற்றிக்காக எத்தகைய போர்க்குணம் வேண்டும் என்பதை தன் மாணவன் ஒருவனுக்குப் புரிய வைக்க நினைத்தார் குரு . உடனே, அந்த மாணவனை ஒரு குளத்துக்குள் மார்பளவு ஆழத்துக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தார் . சட்டென்று, அவனுடைய தலையை தண்ணீருக்குள் பலம் கொண்ட மட்டும் அழுத்தினார் சில விநாடிகளில், குருவையே தள்ளிக் கொண்டு தண்ணீருக்கு மேலே வந்து, ' ஆளைக் கொல்வது போல இப்படி அழுத்துகிறீர்களே... உங்களுக்கு என்னவாச்சு ? ' என்று கேட்டான் மாணவன் கோபம் பொங்க .
குருவோ...' அழுத்தியது ஒருபுறம் இருக்கட்டும் . அதிலிருந்து நீ எப்படி விடுபட்டு வந்தாய் அதைச் சொல் ? ' என்றார் சாந்தமாக .
' மூச்சுத் திணறியதில் என் உயிரே போய்விடும் போல இருந்தது . அதான், முழு பலத்தையும் பிரயோகித்து வெளியில் வந்தேன் . இதிலென்ன அதிசயம் ? ' என்று பதிலளித்தான் மாணவன் .
' இத்தகைய தீவிரம்தான், எத்தகைய இரும்புக் கோட்டையையும் திறக்கும் சாவி ' என்று முடித்தார் குரு .
--- அவள் விகடன் ஆசிரியர் ஸ்ரீ , அவள் விகடன் , 27. 8 ..2010. இதழ் உதவி : N. கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

Wednesday, March 16, 2011

டிப்ஸ்....டிப்ஸ் ...

* வெஜிடபிள் சமோசா மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமா ? சமோசா தயாரித்தவுடன், ( எண்ணெயில் பொரிப்பதற்கு முன் ) ஒரு தட்டில் வரிசையாகப் பரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள் . சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெளியே எடுத்து, பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைத்துவிடுங்கள் . பிறகு, எண்ணெயில் பொரியுங்கள் . ' சமோசா செம தூள் 'என்று உற்சாகக் குரல் கொடுப்பீர்கள் .
* கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்றவை மூன்று நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்க, வாழை இலையில் சுற்றி தண்ணீர் பாத்திரத்தின் மேல் வைத்துவிடுங்கள் . அன்று வாங்கியது போல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் .
* சாதம் உதிர் உதிராக வரவேண்டுமா ? சூடான சாதத்தின் மீது காய்ச்சிய பாலை கொஞ்சம்போல தெளித்துவிட்டு, ஒரு முள் கரண்டியால் பரப்பி மூடி விடுங்கள் . பரிமாறும் போது சாதம் உதிராக இருக்கும் .
* கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, கரகரப்பான அரிசிப் பொரியை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கினால், ஐந்தே நிமிடங்களில் அரிசிப் பொரி உப்புமா தயார் !
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, உப்பு சேர்க்க மறந்து போனாலும் கவலையில்லை . சப்பாத்தி தேக்கும்போது தொட்டுக் கொள்ளும் கோதுமை மாவில் அரை டீஸ்பூன் உப்புத் தூளை சேர்த்துக் கலந்துவிடுங்கள் . உப்பு கலந்த மாவில் புரட்டி சப்பாத்தி இடும்போது சப்பாத்திகளில் உப்பு சமமாகப் பரவி விடும்.
--- அவள் விகடன் , 27. 8 ..2010. இதழ் உதவி : N. கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

Tuesday, March 15, 2011

உதிர்ந்திடும் மந்திரம் !

வயதின் சுருக்கங்களுக்குப் பின்னே
வாழ்வின் பெருக்கங்கள்
வாழ்ந்ததற்கு அடையாளமாக....
தெருவில் எறியப்படுகின்ற
தேய்ந்த எந்திரங்கள்
படித்து முடித்துவிட்ட
பாடப் புத்தகங்கள்....
கவனித்துக்கொள்ள மட்டுமே நாங்கள்
கவனிக்கப்பட அல்ல .
வீசப்படும் வார்த்தைகளுக்கு வலிக்காமல்
தழுவி எடுத்துக்கொள்ளப்
பழகிவிட்டோம் .
விடைகள் கிடைக்காத உள்ளத்தை
உடையாமல் கொண்டு செல்ல
நடையின் வேகம் குறைந்தோம் .
சுமந்து எம்மை மறுநாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்
தள்ளாடும் நாட்கள் !
நிஜ விழுதுகளில்
ஊஞ்சலாடியதொரு
காலம்.... இன்று
நினைவுகளையே விழுதாய் ஊன்றி
நிற்கின்றோம் நாங்கள் !
முதிர்ந்ததும் உதிர்ந்துவிடும்
மந்திரம் தெரியவில்லை .
முடியாதவற்றிலிருந்து ஒதுங்கும்
இங்கிதமும் அறியவில்லை .
மனவலியின் அழுத்தத்தில்
உடல் வலி மறக்கிறோம் .
உடல் வலியின் உக்கிரத்தில்
மனமிருப்பதையே மறக்கிறோம் .
--- கே. பி. ஜனா, அவள் விகடன் , 27. 8. 2010. இதழ் உதவி : N. கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

Monday, March 14, 2011

நீங்களும் 007 !

சைரன் ஸ்டிக் .
சிறிய ஸ்டிக் போல இருக்கும் இந்த கருவியை வீடு, ஹோட்டல் அல்லது விடுதிகளின் கதவுகளில் ஒட்டி வைக்கலாம் . நாம் உள்ளே இருக்கும்போது ஆன் செய்து வைத்துவிட்டால், நம்மை மீறி யாராவது கதவைத் திறக்க முயற்சிக்கும்போது..... விதவிதமான ஒலிகளை எழுப்பி, உஷார்படுத்தும் ! -- விலை : ரூ 250 .
செக்யூரிட்டி கேமரா .
உள்ளங்கை அளவே இருக்கும் இந்த கேமராவை, வீட்டின் வெளியிலோ அல்லது கதவிலிருக்கும் லென்ஸ் பகுதியிலோ பொருத்திவிடலாம் . இது, டி. வி - யுடன் இணைக்கப்பட்டிருக்கும் . காலிங் பெல் அடித்ததும், டி. வி -யை ' ஆன் ' செய்தால், வந்திருக்கும் நபர் யாரென்று புரியும் . தேவைப்பட்டால் திறக்கலாம் . -- விலை : ரூ 4,000 .
தூம் கேமரா .
வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் பொருத்திக் கொள்ளலாம் . பார்ப்பதற்கு ஃபேன்ஸி லைட் போல இருக்கும் ரெக்கார்டருடன் இணைக்க வேண்டும் . சுமார் 20 மீட்டர் தூரத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளை இது பதிவு செய்யும் . வெளிச்சம் குறைவான இடங்களில் கூட துல்லியமாக படம் எடுத்து, அந்த ரெக்கார்டரில் சேமித்துவிடும் . தேவைப்படும்போது, டி. வி -யுடன் இணைத்து பதிவானவற்றைப் பார்க்கலாம் . -- விலை : கேமரா , ரூ. 2,500 . ரெக்கார்டர் . ரூ. 3,500 .
சி.சி.டி.வி. கேமரா .
( C.C.T.V. -- Closed -- Circuit television )
சுமார் 25 மீட்டர் தூரத்துக்குள் நடப்பவற்றை படம் பிடிக்ககூடிய இந்த கேமரா, இரவிலும்கூட துல்லியமாக காட்டும் . அதுதான் இதன் ஸ்பெஷாலிட்டியே ! வீடு, தொழிற்சாலை, குடோன், அலுவலகம் என்று உபயோகப்படுத்தலாம் . கேமராவை ரெக்கார்டருடன் இணைத்துவிட்டால், பதிவாகும் விஷயங்களை கம்ப்யூட்டர் அல்லது டி. வி. மூலம் பார்க்கலாம் .
--- விலை : கேமரா ரூ. 2,700 . ரெக்கார்டர் ரூ. 3,500 .
--- ம. பிரியதர்ஷினி , சென்னை . அவள் விகடன் இணைப்பு , 27. 8. 2010. இதழ் உதவி : N. கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

Sunday, March 13, 2011

ப்ராணாயாமம் .

பூஜையில் ஈடுபடும்போது மனம் ஒருமைப்படுவது அவசியம் . மனம் ஒருமைப்பட ப்ராணாயாமம் உதவுகிறது . புறத்தே மூச்சினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அகத்தே ப்ராணசக்தியை நம் கட்டுக்குள் கொண்டு வர முயல்வதே ப்ராணாயாமம் .
ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கிக் கட்டைவிரல் மோதிர விரல்களால் மூக்கை இருபுறமும் தொட்டுக்கொண்டு வலது பக்கம் அழுத்தி இடது பக்கம் மெதுவாக மூச்சை இழுத்துப் பின் இருபுறமும் அழுத்தி மூச்சை நிறுத்தி முடிவில் வலது பக்கம் மெதுவாக மூச்சை விடவேண்டும் .
உள் இழுப்பது ' பூரகம் , ' நிறுத்துவது ' கும்பகம் ', வெளிவிடுவது ' ரேசகம் ' எனப்படும் . பூரக - கும்பக - ரேசகத்தின் கால அளவை 1 ; 3 ; 2 என்ற விகிதத்தில் இருத்தல் சிறந்தது . பூரக - குமபக - ரேசக மூன்றும் சேர்ந்தது ஒரு ப்ராணாயாமம் .
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே
என்ற திருமூலர் வாக்கினை உய்த்து உணரவும் .
--- எளிய ஆகம பூஜா முறை , என்ற நூலில் ஆர். பி. வி. எஸ். மணியன் . நூல் உதவி : K. S. மாதவன் , நெற்குன்றம் . சென்னை .107 .

Saturday, March 12, 2011

எல்லாம் மேஜிக் எண்தான் !

1 . ஏதாவது நான்கு இலக்க எண்ணை எழும்படி உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் .
2 . இதன்பிறகு, " இது ஒரு மேஜிக் எண் தெரியுமா? இப்போது பார் மேஜிக்கை ! " என்று ' பில்டெப் ' கொடுங்கள் . இதன்பிறகு, அந்த எண்ணின் முதல் இலக்கம், முதல் இரு இலக்கங்கள், முதல் மூன்று இலக்கங்கள் ஆகியவற்றை தனித்தனியாக எழுதச் சொல்லுங்கள் . இந்த 3 எண்களையும் கூட்டச் சொல்லுங்கள் .
3 . வரும் விடையை 9 -ஆல் பெருக்கச்சொல்லுங்கள் .
4 . அவர் முதலில் எழுதிய எண்ணின் இலக்கங்களைக் கூட்டச் சொல்லுங்கள் . வரும் விடையை, முன்னர் பெருக்கி வந்த எண்ணுடன் கூட்டச் சொல்லுங்கள்... இதில் கிடைக்கும் விடை, அவர் முதலில் எழுதிய எண்ணாகத்தான் இருக்கும் !
ஒரு உதாரணம் :
நண்பர் எழுதிய எண், 1345 என்று வைத்துக்கொள்வோம் .
இதன் முதல் இலக்கம் 1 ; முதல் இரு இலக்கங்கள் 13 ; முதல் மூன்று இலக்கங்கள் 134 . இந்த மூன்று எண்களையும் கூட்டினால், 148 .
இந்த 148 -ஐ 9 -ஆல் பெருக்கினால் 1332 .
ஒரிஜினல் எண்ணின் ( 1345 ) இலக்கங்களின் கூட்டுத் தொகை 1 + 3 + 4 + 5 = 13 .
1332 -ஐயும் 13 -ஐயும் கூட்டினால் வரும் விடை 1345.... உங்கள் நண்பர் முதலில் எழுதிய எண் !
--- தினமலர் , ஆகஸ்ட் 13 . 2010.

Friday, March 11, 2011

' அலோ '

தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும்போது ' அலோ ' என்று ஏன் சொல்லுகிறார்கள் ?
பழைய பிரஞ்சு மொழியில், ' அங்கே யார் ? ' என்று கேட்க, ' ஹேலா ' என்பார்கள் . பழைய ஜெர்மானிய மொழியில், சிறிது தொலைவில் உள்ள ஓடக்காரரை அழைக்க ' ஹேலா , ஹல்லோ ' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள் . இந்த 3 வார்த்தைகளில் இருந்துதான் ' ஹலோ ' வந்திருக்கும் என்பது சில ஆய்வாளர்களது கருத்து .
பழைய ஆங்கிலத்தில் ' ஹலாவ் ' என்று ஒரு ' வாழ்த்து ' வார்த்தை உண்டு . அதற்கு, ' நீ நல்லாயிரு ! ' என்று அர்த்தம் .அந்த வார்த்தைதான் ' ஹலோ ' என்று மாறியுள்ளது என்பது வேறு ஆய்வாளர்களது கருத்து .
' அங்கே யார் ? ' என்று கேட்டல் , தொலைவில் உள்ளவரை அழைப்பதற்கான வார்த்தை , வாழ்த்து வார்த்தை என்ற மூன்று அர்த்தங்களுமே ' ஹலோ ' என்ற வார்த்தைக்குப் பொருந்துகின்றன . இதனால், இந்த வார்த்தையின் மூலம் எந்த மொழி என்று திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்படவில்லை .
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலக்சாண்டர் கிரஹாம் பெல், மறுமுனையில் இருப்பவரை அழைக்க ' அஹோய் ' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்றார் . இது கப்பலில் இருப்பவர்களை அழைக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை . சிறிதுகாலம் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது .
பிரபலக் கண்டுபிடிப்பாளரான தாமஸ் ஆல்வா எடிசன், ' அஹோய் ' என்பதைவிட ' அலோ ' என்பதே பொருத்தம் என்று கருத்து தெரிவித்தார் . இதைப் பலரும் ஏற்றதால், அலோ என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது !
--- தினமலர் , ஆகஸ்ட் 13 . 2010.

Thursday, March 10, 2011

' ரிப்பீட் ' எண் !

1 . ஒரு தாளில் 12345679 என்ற எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .
2 . இதில் ஏதாவது ஒரு இலக்கத்தை வட்டமிடுமாறு உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் .
3 . அவர் வட்டமிட்ட எண்ணைக் கவனியுங்கள் . மனதுக்குள் அதை 9 -ஆல் பெருக்குங்கள் . இதை நீங்கள் உங்கள் நண்பருக்குத் தெரியாமல் சட்டென செய்துமுடிக்க வேண்டும் .
இதன்பிறகு, அவர் வட்டமிட்ட எண்ணை ஒன்பது முறை தொடர்ந்து எழுதுங்கள் . பின்னர் அவரிடம், " நான் இப்போது ஒரு எண்ணைச் சொல்லி 12345679 என்ற எண்ணைப் பெருக்கச் சொல்வேன் . வரும் விடை, நான் எழுதிய எண்ணாகத்தான் இருக்கும் ! பார் இந்த மேஜிக்கை ! " என்று ' பில்டெப் ' கொடுங்கள் .
பிறகு, நீங்கள் பெருக்கி வைத்த எண்ணை ( வட்டமிட்ட எண்ணை 9 -ஆல் பெருக்கி வரும் விடை ) சொல்லிப் பெருக்கச் சொல்லுங்கள் . வரும் விடையின் எல்லா இலக்கங்களும், நண்பர் வட்டமிட்ட எண்ணாகத்தான் இருக்கும் ! அவர் அசந்து போவார் !
ஒரு உதாரணம் :
நண்பர் வட்டமிட்ட எண் ' 6 ' என்று வைத்துக் கொள்வோம் . இதை 9 -ஆல் பெருக்கினால் 54 . எனவே, 12345679 என்ற எண்னை 54 ஆல் பெருக்கச் சொல்ல வேண்டும் .
வரும் விடை : 666666666 !
--- தினமலர் , ஆகஸ்ட் 13 . 2010.

Wednesday, March 9, 2011

உஷார் ரிப்போர்ட் !

எமனாகும் காய்கறிகள் .
பசுக்களின் பால் உற்பத்தியைப் பெருக்க ஊசி போடப்படுவது உண்டு . பெயர்... ' ஆக்சிடோஸின் ' தெரியும் . தெரியாதது ! அதே ஊசி காய்கறிகளுக்குப் போடப்பட்டு மனிதர்களுக்கு கண்ணி வெடியாக மாறுகிறது என்பதுதான் .
' ஆக்சிடோஸின் ' ஒரு ஹார்மோன் . குழந்தைப் பேற்றின் போது, பெண்களின் கருப்பை சுருங்கவும், அதன் வாய் விரிவடையவும் ' ஆக்சிடோஸினை ' ஊசி மூலம் உடலுக்குள் செலுத்துவார்கள் . இதன் மூலம் குழந்தைப் பேற்றில் சிரமம் இருக்காது. ஆனால், காய்கறிகளுக்கு ' ஆக்சிடோஸின் ' போடுவது எப்படி ? எதனால் ? பிரபல பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரிடம் பேசினோம் .
" ஊசி வடிவில் இருக்கும் மருந்தை செடிப் பருவத்தில் அல்லது காயாக மாறுவதற்கு முன்பே உள்ளே செலுத்திவிடுவார்கள் . அதனால் இலை, தண்டு, பூ... உள்ளிட்ட உறுப்புகளின் வளர்ச்சி அமோகமாய் இருக்கும் .
ஒரு விஷயம் தெரியுமா ? ' ஆக்சிடோஸின் ' ஒரு சில நாடுகளில் தடை செய்யப்பட்ட ' ஷெட்யூல் - ஹெச் ' மருந்து.டாக்டர் சிபாரிசு இல்லாமல் கிடைகாது . கொடுக்கக் கூடாது . நுண்ணிய குப்பிகளில் ( ஆம்ப்யூல் ) அடைத்து விற்க வேண்டும் என்பது விதி . ஆனால், வியாபார ரீதியில் மிகச் சிறிய பிளாஸ்டிக் குடுவைகளிலும் அடைத்து 15 ரூபாய்க்கு கூட விற்கப்படுது . பசுக்கள் அல்லது காய்கறிச் செடிகளின் உள்ளே ' ஆக்சிடோஸினை ' செலுத்துவதற்கு தொழில்நுட்ப ஞானம் தேவையில்லை . யார் வேண்டுமானாலும் மருந்தைக் கையாள முடியும் .
சரி ! ஆக்சிடோஸின் நிறைந்த காய்கறிகள் உண்பதால் உடலில் பாதிப்பு வருமா ?
" செடிகளுக்கு உடலியங்கு தன்மை இல்லை என்பதால் உள்ளே செலுத்திய ' ஆக்சிடோஸின் ' வெளியேறாது . மாறாக உள்ளேயே தங்கிவிடும் . இதனால் காய்கறிகளில் ரசாயனத் தன்மை அதிகரிக்கும் . அத்தகைய காய்கறிகளை நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதால் தலைவலி முதல் மூளை நரம்பு வரை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உண்டு ! " என்கிறார் பிரபல குடல் நோய் நிபுணர் டாக்டர் மாறன் , எச்சரிக்கை கலந்த குரலில் !
--- எஸ் . அன்வர் , குமுதம் 18. 8 . 2010.

Tuesday, March 8, 2011

ஜோக்ஸ் !

* " என் பையன் சந்தோஷமாயிருந்தா, என்ன ' மம்மி ' ன்னு கூப்பிடுவான் ."
" கோபமாயிருந்தா ? "
" ' ஜிம்மி' ன்னு கூப்பிடுவான் ! "
* " என்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திட்டாங்க ! "
" காடு ப்ளஸ் யூ ... "
* " எல்கேஜி சேர்ந்த உன் மகன் ந்ல்லாப் பேசறானா ? "
" முன்பெல்லாம் பிஸ்கெட் , பிஸ்கெட்னு அடம்பிடிப்பான் . இப்ப பீஸ்கட்டு , பீஸ்கட்டுங்கறான் ! "
* " சொல் பேச்சு கேட்காம அப்படி என்னதான் பண்ரான் உம் பையன் "
" எப்போதும் செல் பேச்சாகவே இருக்கான் ! "
* " உன் மருமகள் உன்னை அடிக்கும் போது உன் மகன் சும்மாவா இருந்தான் ? எதுவும் கேட்கலையா ? "
" கேட்டானே , அவ அடிக்கிற மாதிரி நீ ஏம்மா நடந்திக்துறேன்னு ! "

தெரிந்து கொள்வோம் !

* பெமினைன் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் பெண்ணைக் குறிக்கும் . பிரெஞ்சுமொழியில் ஆணைக் குறிக்கும் .
* நாம் ஒரு அடி எடுத்துவைக்கும்போது உடலில் 54 தசைகள் அசைகிறது . தசைகள் அசையும்போது , ' சர்கோலேக்டிக் ஆசிட் ' என்ற அமிலம் அதிகமாக உற்பத்தியாகி அவற்றை சுற்றிலும் பரவும் . இதனால் உடலுக்குள் ஒருவகையான அழுத்தம் ஏற்பட்டு சோர்வு , களைப்பு ஏற்படும் . ஓய்வெடுக்கும்போதும் தூங்கும்போதும் இந்த அமிலம் சுரப்பதில்லை என்பதால் சோர்வு , களைப்பு இல்லாத புத்துணர்ச்சி கிடைக்கும் !
* ஒரு புத்தகம் மற்றும் ஒரு பேனாவை 110 ரூபாய் கொடுத்து வாங்கினேன் , புத்தகத்தின் விலை , பேனாவின் விலையை விட நூறு ரூபாய் அதிகம் ... புத்தகத்தின் விலை என்ன ? -- விடை : பலரும் , நூறு ரூபாய் என்று அவசரத்தில் தவறாக சொல்வார்கள் ! புத்தக விலை ரூ. 105 ; பேனா விலை , ரூ; 5 .
--- தினமலர் , இணைப்பு . மார்ச் , 12 , 2010 .

Sunday, March 6, 2011

அறியாமையை உணர்ந்தவன் !

" அறிதொற்றியாமை கண்டற்றால் " என்கிறாரே வள்ளுவர் -- ' அறிதோறும் அறிவு பெற்றற்றால் ' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் ?
அறியாமையை உணர்ந்தவன்தான் அறிவைத் தேட முடியும் .
நேற்று மூட்டைப் பூச்சிகள் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன் . அதில் ஓர் அபூர்வத் தகவல் அறிந்தேன் .
காமவெறி கொண்டு ஆண் மூட்டைப் பூச்சி அலையுமாம் . பெண் மூட்டைப்பூச்சியை வசப்படுத்துமாம் . பிறகுதான் தெரியுமாம் . பெண் மூட்டைப் பூச்சிக்குப் பெண்ணுறுப்பே இல்லையென்று . பெண் மூட்டைப் பூச்சியின் பின்பக்கம் பொட்டென்று ஒரு போடு போட்டு அவசரத் துளையை உண்டாக்கிக் கொள்ளுமாம் ஆண் மூட்டைப்பூச்சி .
படித்ததும் யோசிக்க ஆரம்பித்தேன் . மூட்டைப்பூச்சி நம்மைக் கடிக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே ! எத்தனை மூட்டைப்பூச்சிகள் நம் மீது ' அவசரத்துளை ' போட்டனவோ ? யாரறிவார் ?
அறியும் போதுதான் அறியாமை தெரிகிறது .
--- வைரமுத்து , குமுதம் . 18 . 07. 2007 .

சிரிப்போ... சிரிப்பு !

* " ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ப்ரீ ?"
" எப்ப வந்தாலும் ப்ரீ கிடையாது... பீஸ் வாங்குவேன் !"
* " அப்பா, நான் சாதிக்க விரும்புகிறேன் ."
" நல்லதும்மா , ஆமா எந்தத் துறைல ?"
" அய்யோ, அப்பா அவர் பேர் சாதிக் ."
* " டேய்....உன் மனைவியைக் காணோம்னு என்கிட்டே சொன்னே. ஆனா பேப்பர்ல உங்க அம்மாவைக் காணவில்லைன்னு விளம்பரம் போட்டிருக்கே. அச்சுப் பிழையா ?"
" அம்மா வீட்ல இல்லைன்னு பேப்பர்ல பார்த்ததும் , என் மனைவி உடனே வீடு வந்துடுவா . பிரச்சனையே அவங்களுக்குள்ளேதானே !"

Friday, March 4, 2011

வாயுள்ள பிள்ளை .

உங்களுக்குப் பேசத் தெரியுமா ? இதென்ன பிரமாதம் ? எல்லோரும்தான் பேசுகிறார்கள் . வாயைத் திறந்தால் பேச்சு . அது ஒரு பெரிய விஷயமா ? நிச்சயமாகப் பெரிய விஷயம்தான் . சரியான் நேரத்தில் , சரியான இடத்தில் , சரியானவிதத்தில் பேசுவதென்பது சாதாரண சமாச்சாரமே இல்லை .
பெரிய அரசியல் பிரமுகர்கள் , நிறுவனங்களின் தலைவர்கள் , முக்கிய அதிகாரிகள் , கலைத்துறைப் பிரபலங்கள் என்று யாரை எடுத்துக்கொண்டாலும் சரி , அவர்களுடைய பேச்சு , மற்றவர்களிடம் பழகும் விதம் ஒரு பெரிய ப்ளஸ் பாயின்டாக இருக்கும் . பல சமயங்களில் அதுவே அவர்களுடைய வளர்ச்சிக்கு ஏணியாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம் .
எந்தச் சூழ்நிலையிலும் பேச்சு ஒன்றையே ஆயுதமாக , கேடயமாகப் பயன்படுத்தி ஜெயிக்கமுடியும் என்கிற கருத்தை முன்னிருத்தியுள்ள ஒரு சுவாரஸ்யமான சூப்பர் ஹிட் தொகுப்பு , ' ஹவ் டூ டாக் டூ எனிவன் ' ( How To Talk To Anyone ) லீல் லௌண்டஸ் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் பேச்சுக்கலை , பழகும்தன்மையை மேம்படுத்திக்கொள்வதற்கான் பல நுட்பங்கள் , வழிமுறைகள் , ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன .
அவரது வெற்றி சூத்திரங்களில் முக்கியமான பத்து இங்கே சுருக்கமாக :
1 . மனிதர்கள் எல்லோருமே உள்ளுக்குள் இன்னும் குழந்தைகள்தான் . அவர்களிடம் உள்ள ஏதேனும் ஓர் அம்சத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினால் புளகாங்கிதம் அடைந்துவிடுவார்கள் . நீங்கள் சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் நிச்சயமாக ஒரு நல்ல விஷயமாவது இருக்கும் . அதைத் துப்பறிந்து கண்டுபிடித்துச் சொல்லுங்கள் , ஸ்கோர் பண்ணுங்கள் .
2 . மற்றவர்களிடம் பேசும்போது மெஷின் கன் சுடுவதுபோல படபடவென்று பேசிக்கொண்டே இருக்காதீர்கள் . அடுத்தவர்களுடைய மனோபாவத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களுடைய பேசும் தன்மையை மாற்றுங்கள் , ஏற்றுங்கள் , அல்லது குறையுங்கள் ! அப்போதுதான் உங்கள் பேச்சு எடுபடும் .
3 . ஒருவரைப் புதிதாகத் தெரிந்துகோள்ளும்போது , அவர்களுடைய நெகடிவ் அம்சங்களை ( உதாரணமாக : தோல்விகள் , சர்ச்சைகள் ) முன்வைத்துப் பேசாதீர்கள் . அதெல்லாம் நீங்கள் நல்ல நண்பர்களாக நெருங்கியபிறகு பார்த்துக்கொள்ளலாம் .
4 . யார் பேசினாலும் அக்கறையோடு கவனித்துக் கேளுங்கள் , கண்கள் இங்கே யோசனை வேறு எங்கோ என்பதுபோல் நடந்துகொள்ளாதீர்கள் , ஆர்வமாய் தலையசைத்துக் கேளூங்கள் , அப்போதுதான் பேசுபவர்களுக்கு உற்சாகமாய் இருக்கும் .
5 . வெளியூர் , வெளிமாநிலம் , வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கிறபோது , முடிந்தவரை அவர்களுடைய லோக்கல் கலாச்சாரம் , பழகுமுறைகள்த் தெரிந்துவைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள் , அந்த அக்கறை அவர்களைக் கவரும் . உதாரணமாக ஒரு பஞ்சாபி சிங் உங்களைப் பார்த்து ' வணக்கம் சார் ' என்று சொல்லிக் கை கூப்பினால் அப்படியே மெய்சிலிர்த்துப் போய்விடமாட்டீர்களா ?
6 . ஒருவரை ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கும்போது , அவர்களைப்பற்றிய தனித்துவமான தகவல் ஒன்றை ஞாபகம் வைத்திருந்து சொல்லி ஆச்சர்யப்படுத்துங்கள் . ( உதாரணமாக : ' உங்க பொண்ணு டான்ஸ் கத்துக்கறதாச் சொன்னீர்களே , அரங்கேற்றம் எப்போ ? ' ) மிக எளிமையாகத் தோன்றுகிற இந்த உத்தி , அற்புதமான பலன்களைத் தரக்கூடியது . .
7 . யாரியமாவது உதவி கேட்க நேர்ந்தால் , அதைச் செய்வதன்மூலம் அவர்களுக்கு ஏதாவது பலன் இருக்கக்கூடுமா என்று யோசியுங்கள் , அதை முன்னே வைத்துப் பேசுங்கள் , அப்புறம் நீங்களே வேண்டாம் என்று சொன்னாலும்கூட , அவர்கள் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள் .
8 . பேசிவிட்டுக் கிளம்பும்போது , மறக்காமல் நன்றி சொல்லுங்கள் . அதுவும் வெற்று ' நன்றி ' போதாது , ' உங்களிடம் பேசியதில் ரொம்பப் பிரமாதமான புது விஷயங்களைத் தெரிந்துகொண்டேன் , அதற்காக நன்றி ' என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள் , அடுத்த சந்திப்புக்கு அந்த ' நன்றி 'தான் அவர்களை உங்களிடம் கொக்கி போட்டு இழுக்கும் !
9 . முக்கியமான நபர்களைச் சந்திக்கும்போது அவர்களைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு சொல்லுங்கள் . பேசும்போது அவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லும்போது உங்கள் மீது மதிப்பு உயரும் .
10 . கடைசியாக , முகத்தில் ஒரு புன்னகையோடு பேசுங்கள் . சிடுசிடுவென்று இருப்பவரை யாருக்கும் பிடிக்காது . பேசாவிட்டாலும் புன்னகையே மற்றவர்களை கவர்ந்திழுக்கும் .
--- என். சொக்கன் . குமுதம் , 11. 8. 2010.

Thursday, March 3, 2011

வலை பாயுதே !

* திருடன் கொள்ளை அடித்தால் அது கைவரிசை.... அதையே
மணமகன் செய்தால் சீர்வரிசை !
* முன்பெல்லாம் ' மழையில் நனையவா ? ' என் அனுமதி கேட்டுக்கொண்டு இருந்த தோழி ,
இப்போது ' மழையில் நனைய வா ! ' என்கிறாள் அதிகாரத்தோடு !
* கோழி கொதித்த போது ' கறிக் கொழம்பு ' என்றேன் .
தோழி கொதித்த போது , ' சரி கிளம்பு ! ' என்றேன் !
* ஜென் பிரியர்கள் ஜன்னலைக்கூட
' ஜென் 'னல் என்றே அழைப்பார்கள் !
--- ஆனந்தவிகடன் , 11. 8. 10

Wednesday, March 2, 2011

மேஜிக் கணக்கு !

உங்கள் நண்பர்களிடம், கீழ்க்கண்டபடி கணக்கு செய்ய சொல்லுங்கள் ...
1 . பல இலக்கங்கள் உள்ள ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள் . அதில், ' 0' மட்டும் வரவேண்டாம் .
2 . அந்த எண்ணின் எல்லா இலக்கங்களையும் கூட்டுங்கள் .
3 . நினைத்த எண்ணிலிருந்து இந்த கூட்டுத் தொகை எண்ணைக் கழியுங்கள் .
4 . வரும் விடையின் இலக்கங்களில் ஏதாவது ஒரு எண்ணை நீக்குங்கள் . ஒரு எண் பலமுறை வந்தாலும், அதில் ஒரே ஒரு எண்ணை மட்டுமே நீக்கவேண்டும் . உதாரணமாக 1224 என்ற எண்ணில் 2 ஐ நீக்குவதாக இருந்தால் ஒரு 2 ஐ மட்டுமே நீக்க வேண்டும்
5 . மீதியுள்ள எண்ணின் இலக்கங்களைக் கூட்டி, அந்த கூட்டுத்தொகை எண்ணைச் சொல்லுங்கள் ... நீங்கள் நீக்கிய எண்ணை நான் சொல்லுகிறேன் !
இதன்பின், அவர்கள் எவ்வளவு பெரிய எண்ணைச் சொன்னாலும், அவர்களால் நீக்கப்பட்ட எண்ணை நீங்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சொல்லிவிடலாம் !
எப்படி ?
ஒரு உதாரணம் பார்க்கலாம் ...
1 . உங்கள் நண்பர் நினைத்த எண் : 1,23,456 .
2 . இதில் உள்ள இலக்கங்களின் கூட்டுத்தொகை : 1 + 2 + 3 + 4 + 5 + ^ 6 = 21 .
3 . கழித்தல் செயல்பாடு : 1,23,456 - 21 = 1,23,435.
4 . இதில் நண்பர் நீக்கிய எண் 1 என்று வைத்துக்கொள்வோம் .
5 . மிஞ்சியுள்ள எண் : 23,435. இதன் இலக்கங்களைக் கூட்டி ( 2 + 3 + 4 + 3 + 5 ), ' 17 ' என்று நண்பர் கூறுவார் .
- இதன்பின் நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு சிறு கணக்குதான் .
இந்த எண்ணுடன் ( குறைந்தபட்சம் ) எந்த எண்ணைக் கூட்டினால் 9 ஆல் வகுபடும் என்று பார்க்கவேண்டும் . இந்த உதாரணத்தில், 17 உடன் 1 ஐக் கூட்டினால் 18 ; இது 9 ஆல் வ்குபடும் ! இதைக் கண்டுபிடித்ததும், ' நீக்கிய எண் 1 ' என்று சரியான விடையைச் சொல்லி நீங்கள் அசத்திவிடலாம் !
இந்த உதாரணக் கணக்கில், நண்பர் ' 2 ' என்ற இலக்கத்தை நீக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம் . அவரிடம் மிஞ்சும் எண் : 13,435 . இதன் இலக்கங்களைக் கூட்டி ' 16 ' என்று சொல்வார் . இதோடு 2 ஐ சேர்த்தால் 18 வரும் . அது 9 ஆல் வகுபடும் . எனவே, ' நீக்கிய எண் 2 ' என்று அசத்திவிடலாம் !
--- தினமலர் , ஜூலை 30 , 2010 .

Tuesday, March 1, 2011

கோவிலில் வழிபட....

கோயிலுக்குச் செல்வது மனம் ஒன்றி வழிபடவே ! மனம் ஒன்றி வழிபட வேண்டும் என்றால் மெய், வாய், கண், மூக்கு, காது என்ற ஐம்புலன்களும் மனதில் ஒன்றியிருந்து அமைதியாக வழிபடுதல் .
வழிபடும் வேளையில் ஐம்புலன்களை அலைபாய விடாமல் இருந்தால் மனம் ஒன்றி வழிபடலாம் . அதாவது பார்வையை அலைபாய விடுதல், வீண் வம்பு பேச்சுகளைக் கேட்டல், வாச நுகர்ச்சியில் ஈடுபடுதல், வீண் வார்த்தைகளைப் பேசுதல், உடலைத் தேவையின்றி அசைத்தல் ஆகியவற்ரைத் தவிர்க்க வேண்டும் ; முழுமையான தெய்வீக சிந்தனையில் மூழ்கி வழிபட வேண்டும் .
இந்த நவீன யுகத்தில், கோயிலுக்குள் இருக்கும் போதுகூட சிலர் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கின்றனர் . இதைத் தவிர்க்க வேண்டும் .
--- ஏ. வி. சுவாமிநாத சிவாச்சாரியார் , தினமலர் , ஆகஸ்ட் 12 . 2010.

தேவை ஒரு பிரகடனம்...!

இறையன்பு நிறையீர் !
வணக்கம் . மென்மேலும் வளர இறையருளைப் பிரார்த்திக்கிறேன் . வாழ்வியலில் கடைபிடிக்கப்பட்டு வரும் இல்லற தர்மங்கள் இன்றைய இந்தியாவின் விலைவாசி ஏறுமுகத்தில் இழிவுகளின் உயரங்களாக மாறிவருகின்றன . அதாவது
ஒரு கணவனின் உயிரணுவும், மனைவியின் சினைமுட்டையும் சோதனைக்குழாயில் இணைக்கப்பட்டு அதை வாடகைத் தாய் ஒருத்தியின் வயிற்றில் வளரச் செய்து குழந்தைப் பேறுக்குப் பிறகு சினைமுட்டை தந்தவளிடம் அவளின் குழந்தையாகவே ஒப்படைக்கப்படுகிறது .
இந்த வகை சீரழிவுக் கலாச்சாரம் பெங்களுர், ஹைதராபாத், ஆமதாபாத் போன்ற இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வருகின்றன . குறிப்பாக ஐ.டி., சாஃப்ட்வேர் துறைகளில் பணியாற்றுகின்ற ஆண்கள், பெண்கள் திருமணத்திற்குப் பிறகு பணி, தகுதி உயர்வு போன்றவை குழந்தைப்பேறு காரணமாக பாதிக்கிறது என்பதால் கிடைத்துவரும் அபரிமிதமான வருவாயை இழக்க மனமில்லாததாலும், இருப்பதைக் கொண்டு சமரச வழியில் சிக்கனமாக வாழ முயற்சி மேற்கொள்ளாததுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன .
இதே போல வாடகைத்தாயாக இருக்க இசைவு தரும் பெண்கள் வெறும் இரண்டு லட்ச ரூபாய்களும், சில மாத மருத்துவ கண்காணிப்பு மற்றும் சத்தான உணவும் கிடைக்கப் பெறுவதால் வாடகைத்தாயாக முன்வர சம்மதிக்கிறரார்கள் .
அன்பு, அரவணைப்பு, அந்தரங்கத்தில் பகிர்ந்துகொள்ளும் பாரம்பரியப் பெருமைகளின் நீட்சியாக மனமும், உடலும் ஒன்றில் ஒன்று ஒன்றிக் கலந்து உருவாகும் புத்திரர்களே உத்தம புத்திரர்கள் . தம்பதியரின் உயிரை சினையிலிருந்தும் சோதனைக்குழாயிலும் உருவாக்கிய கரு வாடகைத்தாயின் வயிற்றிலுமாக வளர்ந்து பிரசவமானால் இந்தியத்தின் எதிர்காலம் மனச்சிதைவுகளின் தாயகமாக மாறிவிடும் . நம் தேசத்தின் குடும்ப உள்கட்டமைப்பை குலைக்கும் இச்சீரழிவைத் தடுக்க இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ அரும்பாடுபட்டு வருகிற மகான்கள், துறவியர்கள், அறநெறி போற்றி வளர்க்கும் ஆன்மிகச் செம்மல்கள் ஒருங்கிணைந்து முழுவீச்சில் பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தி விழிப்புணர்வைத் தூண்டிட வேண்டுகிறேன் .
--- 'சிவ ஒளி' பிப்ரவரி 2011 மாத இதழில் , ஆசிரியர் கா. விஜயராகவன் .