Sunday, January 30, 2011

கிருபானந்த வாரியார் .

* வேலூர் அருகே , காங்கேயநல்லூரில் 1906 - ம் ஆண்டு , மல்லைய தாஸ் பாகவதர் -- கனகவல்லி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . இவரோடு பிறந்தவர்கள் 11 பேர் . இவர் நான்காவது குழந்தை !
* வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும் வழங்கியவர் அவரது அப்பா . வீட்டிலேயே இலக்கியம் , இலக்கணம் , இசை எல்லாம் கற்றுக்கொடுத்தார் . பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியரிடம் வீணை கற்றார் . எட்டு வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது . 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார் . மறையும் வரை எந்தப் பாட்டும் மறக்கவில்லை !
* வீர சைவ மரபினைச் சேர்ந்த சுவாமிகள் தம் ஐந்தாவது வயதில் கழுத்தில் சிவலிங்கம் அணிந்தார் . 1936 முதல் தினமும் முருகனுக்கு பூஜை செய்த பின்பே உணவு உட்கொள்வது வழக்கம் .
* வாரியார் தனது 19 -வது வயதில் தாய் மாமன் மகள் அமிர்த லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார் . பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்ததால் , குழந்தைகள் இல்லை !
* தியாகராஜ பாகவத்ர் கதாநாயகனாக நடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடிப் புகழ் பெற்ற ' சிவகவி ' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் வாரியாரே !
* வெளியூர் சென்றாலும் கூடவே பூஜைப் பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம் . தொடர்ந்து 57 வருடங்கள் ஒரு நாள்கூட இடைவெளி இன்றி பூஜை செய்தார் !
* எம். ஜி. ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் , ' பொன் மனச்செம்மல் ' என்பது அனைவராலும் சொல்லப்படுவது . அப்பட்டத்தை வழங்கியவர் இவரே !
* ' தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர் ' என்று கம்பர் கூறுகிறார் . ' தாமரையோ செவ்வண்ணம் உடையது . மது அருந்தியவருக்கும் , அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும் . அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும் ? " என்று கண்ணதாசன் கேட்க , ' அதை ' தம் அரைக் கண்ணால் ' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா ? ' என்று விளக்கம் கூறிக் கவியரசரை அசத்தினார் !
* ' எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது . பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும் , பசி அடங்குவதற்கு முன் கையை வாயைவிட்டு எடுத்துக்கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான் ' என்று ஒரு முஸ்லீம் அன்பர் கூறியதை நினைவில் வைத்திருக்கிறேன் ! ' என்பார் !
* ' எம்பெருமான் திருவருளாலே...' என்ற வார்த்தைகள் இல்லாமல் அவர் பேசியதே இல்லை !
* 20 வயதுக்கு மேல் , மேல் சட்டை அணிந்தது இல்லை . ஆட்டோகிராஃப் கேட்பவர்களுக்கு ' இரை தேடுவதோடு இறையையும் தேடு ' என்ற வார்த்தைகளையே பெரும்பாலும் எழுதிக் கையெழுத்து இடுவார் .
* லண்டனில் சொற்பொழிவை முடித்துவிட்டு , சுவாமிகள் திரும்பும்போது ( 07 - 11 - 1993 ) , விமானத்தில் அமர்ந்த நிலையிலேயே மரணம் சம்பவித்தது . ' மரணம் 88 வயதான அவரது பூத உடலுக்குத்தான் . அவருடைய ஆன்மாவுக்கு அல்ல . அவருடைய அழியாப் புகழுக்கு அல்ல . பூமிக்கு மேலே , சொர்க்கத்துக்கு அருகில் வாரியாரின் உயிர் பிரிந்திருப்பது வியப்பூட்டுகிறது ' என்று அன்று எழுதியது விகடன் !
--- ஆனந்தவிகடன் , 21 . 07. 2010.

No comments: