Wednesday, December 29, 2010

பெண்பால் மிக ஆபத்து !

உலகெங்கும் இருக்கும் சகல ஜீவராசிகளின் பெண் பாலினத்தைக் கூர்ந்து கவனித்தால், வெட்டவெளிச்சமாகத் தெரிந்துபோகும் உண்மை.... the female of the species is deadlier than the male . அதாகப்பட்டது, எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது . காரணம், பெண்பாலுக்குத்தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவக் குணமும் பிழைக்கும் திறனும் இருக்கிறது . அவர்கள் இப்படி இருந்தாகவும் வேண்டும் . காரணம் , குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையைக் கற்றுத்தருவதும் பெண்ணின் வேலைதானே . இவள் சிறந்த வேட்டுவச்சியாக இருந்தால்தானே, அவள் குட்டிகளும் பிழைக்க முடியும் ? அதனாலேயே, இயற்கை பெண்களைப் பிறவி வேட்டைக்காரிகளாகப் படைக்கிறது . மனிதர்களிலும் அப்படித்தான் . ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் , பிற பெண்பாலினம் நேரடியாகத் தன் வல்லமையை வெளிப்படுத்தும் . தனக்கு வேண்டிய பவரைத் தானே போராடிப் பெற்றுக்கொள்ளும் .
ஆனால், மனிதப் பெண்கள் தங்கள் பவர் தேவைகளை இப்படி நேரடியாகவோ, பகிரங்கமாகவோ தீர்த்துக்கொள்வது இல்லை . எல்லாமே மறைமுகமாகத் தாய் வழி ஆதிக்கம்தான் . காரணம், பிற ஜீவராசித் தாய்கள் யாரையும் அண்டிப் பிழைக்காமல் சுயமாக வாழ்கின்றன . ஆனால், மனிதத் தாய்க்கு மட்டும் சமீபத்தில் சில காலம் வரை யாரையாவது அண்டிப் பிழைக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது . காரணம், நம் சமூக அமைப்பில் எல்லா அதிகாரங்களும் ஆண்களிடமே இருந்தன . அதனால், யாராவது ஓர் ஆணைப் பிடித்து, அவன் மேல் ஓர் ஒட்டுண்ணியாக வாழ்ந்தால் ஒழிய, இவளுக்கு என்று ஒரு வாழ்க்கை இல்லை என்கிற நிலைதான் பெண்களுக்கு .
ஆக இயற்கையின் விதிப்படி பெண் வேட்கையில் சிறந்தவளாக இருந்தாக வேண்டும் . ஆனால், மனித சமூக அமைப்பில் அவளுடைய வேட்டுவ குணம் வெளியே தெரிந்தால், ஆண்கள் ஆட்சேபிப்பார்கள் . இந்த முரண்பாட்டைச் சரிசெய்யவும் பெண்கள் பல வழிகளை வைத்திருந்தார்கள் .
--- டாக்டர் ஷாலினி . உயிர் மொழி ! தொடர் . ஆனந்தவிகடன் , 28. 07. 2010.

No comments: