Saturday, December 18, 2010

' அபாய ஆசி ' !

முதலைகளிடம் குழந்தைகளுக்கு ' அபாய ஆசி ' ! பாகிஸ்தானில் நடைபெறும் விநோத சடங்கு .
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீதி எனப்படும் சமூகத்தினர் வசிக்கின்றனர். ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த அவர்கள், முதலையை புனிதமாக கருதுகின்றனர். அதனால், அதை சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவிழாவை நடத்திவருகின்றனர் .
இந்த விழாவின் போது, அங்குள்ள வழிபாட்டுத்தலத்தில் பிரார்த்தனை நடத்தும் மக்கள், பின்னர் அருகே உள்ள குளத்திற்கு செல்கின்றனர். அங்கு வளர்க்கப்படும் முதலைகளுக்கு ஆட்டிறைச்சியை உணவாக படைக்கின்றனர்.
அந்த இறைச்சியை முதலைகள் ஏற்றுக்கொண்டால், அவர்களுக்கு அதிஷ்டம் அடிக்கும் என்பதும், செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் நம்பிக்கை. குவாஜா ஹஸன் என்ற துறவியின் சீடர்களாக முதலைகளை கருதுவதால், அவைகள் தங்களை எதுவும் செய்யாது என, சீதி இன மக்கள் நம்புகின்றனர் .
முதலைக்கோயில் திருவிழாவின் போது, இறைச்சியால் செய்யப்பட்ட உணவுப்பண்டங்களையும், இனிப்பு வகைகளையும் சிறுமிகள் எடுத்துச் செல்கின்றனர். முதியவர்கள் வழிபாடுகளை நடத்தும் போது, பக்தர்கள் வெறும் காலில் நடனமாடுகின்றனர். குழந்தைகளை முதலைக்கு மேலே தூக்கிப்பிடித்து ஆசி வாங்குகின்றனர். மனிதர்களுக்கு எப்படி இறுதிச்சடங்கு நடத்துகிறார்களோ, அதேபோன்று அவற்றுக்கும் நடத்துகின்றனர். இறந்த முதலையை குளிப்பாட்டி, சடங்குகளை செய்த பிறகு பிரத்யேகமான மயானத்தில் அவற்றை புதைக்கின்றனர்.
---தினகரன் , 16. 06. 2010.

No comments: