Friday, December 31, 2010

மேஜிக் !

* பார்வையால் அல்லது ஆழ் மனத்தின் சக்தியால் ஒரு பொருளைத் தொடாமலேயே நகர்த்தும் சக்திக்கு சைக்கோகைனசிஸ் என்று பெயர் .அதைப் பயன்படுத்தி 19 -ம் நூற்றாண்டைக் கலக்கியவர் டேனியல் டங்க்ளஸ் ஹ்யூம் .
* நமக்குச் சுத்தமா இதுவரைக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு மொழியை மந்திரம் போட்டுவிட்டது மாதிரி திடீரென்று பேசினால் , அதுதான் ஜெனோக்லாஸி ( Xenoglossy ) . இதை அறிவியலுடனும் இன்னும் சிலர் கடவுளுடனும் சம்பந்தப்படுத்துவது உண்டு .
* ஜெனோக்லாஸி என்ற ஒன்றை இதுவரை உண்மை என்றோ , பொய் என்றோ உலகம் ஒப்புக்கொள்ளவில்லை . ஆனால் , வாழ்வில் முன் எப்போதும் , எந்த வடிவத்திலும் அறிந்திடாத ஒரு மொழியைத் திடீரென்று கடகடவெனப் பேசுவது துளியும் சாத்தியம் இல்லை என்பதே ஆய்வாளர்களின் இறுதி முடிவு !
* கண்ணுக்கு முன்னே நடக்காத அல்லது இன்னமும் நடக்க ஆரம்பிக்காத ஒரு நிகழ்வை மனக் கண்ணில் பார்ப்பது என்பது ஈ. எஸ். பி - கான ( ' எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஸ்ப்ஷன் ' ) சிம்பிள் விளக்கம் . சம்பந்தப்பட்ட நபர் அந்த இடத்தில் இல்லாமலேயே இதைப் பார்ப்பதுதான் இன்னும் அதிசயம் . ' ஆறாவது அறிவை ' முழுமையாகப் பயன்படுத்தினால் ஈ.எஸ்.பி.
திறன் வெளிப்படும் ' என்பது நிறைய ஆராய்ச்சியாளர்களின் வாதம் . பொதுவாக , விலங்குகளுக்கு ' இன்ஸ்டிங்க்ட் ' எனப்படும் உள்ளுணர்வு அதிகமாக இருக்கும் . ஆபத்து வரப்போவதை அறிவது இதை வைத்துதான் . நவீன மருத்துவத்தில் நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து , காக்கா வலிப்பு வந்தவர்களுக்கு உதவியாக அனுப்புகிறார்கள் . அவை , அவர்களுக்கு வலிப்பு வரும் முன்பே அறிகுறிகளை உணர்ந்து நோயாளிகளுக்கு உணர்த்தும் . தேவையான மருந்துகள் மூலம் முங்கூட்டியே உஷார் ஆகலாம் .
--- மேஜிக் விகடன் , இணைப்பு . 2. 6 .10 .

Thursday, December 30, 2010

விளம்பரம் !

* ' நீங்கள் தொட விரும்பும் சருமம் ' ( The skin you love to touch ) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன் .
* உலகப் புகழ்பெற்ற நோவா கார் நிறுவனம் தயாரித்த புதிய மாடல் கார் ஸ்பானிஷ் நாட்டில் மட்டும் சரியாக விற்கவில்லை . என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது கிடைத்த
விடை.... அந்த மாடலின் பெயர் . நோவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் ' இது ஓடாது ' என்று அர்த்தமாம் !
* இப்போது உலகத்துக்கே ஒட்டுமொத்தமான பிரச்னை... புவி வெப்பமயமாதல் . ' மரங்களை வெட்டாதீர்கள் . இயற்கையைப் பாதுகாப்போம் ' என்று பல நாடுகளும் பல வழிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்றன . 2050 என்கிற கேள்வியோடு உலக உருண்டை இல்லாமல் வெறும் அச்சை மட்டும் காட்டி அச்சத்தை விளம்பரப்படுத்த
ஆரம்பித்திருக்கிறார்கள் !
* ' மைக்ரோசாஃப்ட் ' நிறுவனம் வின்டோஸ் Xp யை அறிமுகப்படுத்தியபோது , ஓர் ஆண் ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழற்ற முயற்சி செய்து , அதில் தோற்பதுபோல் விளம்பரம் செய்தது . " எங்களின் பாஸ்வேர்டு அவ்வளவு பாதுகாப்பானது ' என்பது கான்செப்ட் . மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தன் விளம்பரத்தை வாபஸ் வாங்கிக் கொண்டது .
* ஒரு பொருளின் அசைவு அல்லது விளைவின் மூலம் மற்றொரு பொருள் இயக்கப்படுவதற்கு டொமினோஸ் எஃபெக்ட் என்று பெயர் . சுருக்கமாகச் சொன்னால் ' அபூர்வ சகோதரர்கள் ' படத்தில் டெல்லி கணேஷை கமல் கோலிக் குண்டைப் பயன்படுத்திக் கொல்வாரே... அதுதான் டொமினோஸ் எஃபெக்ட் .
* ' 57 ஆயிரம் புகைப்படங்கள்.. இரண்டு மைல் நீளத்திற்கு இருக்கும் . பார்க்கக் கட்டணம் 3 அணா ' 1913 -ம் ஆண்டில் வெளியான இந்தியாவின் முதல் படமான ' ராஜா ஹரிச்சந்திரா '- வுக்கு தாதா சாகேப் பால்கே வெளியிட்ட விளம்பரம்தான் இது !
* கிரேக்க காலத்தில் விலை மாதுக்கள் தங்களை விளம்பரப்படுத்த அனுமதி இருந்தது . அம்புக் குறி பொறிக்கப்பட்ட காலணிகளில் சிவப்பு மை பதித்த விலை மாதர்கள் கிரேக்க வீதிகளில் வாடிக்கையாளர்களுக்குக்காகக் காத்திருப்பார்களாம் . அவர்கள் நகரும்போது செருப்புத் தடத்தின் சிவப்பு மையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் பின் தொடர்ந்ததாக வரலாறு !
* ' கோகோ கோலா , பெப்சி ' விளம்பர உலகின் தவிர்க்க இயலாத பாடங்கள் . 30 பைசா செலவில் ஒரு பானத்தைத் தயாரித்து ஏழு ரூபாய்க்கு விளம்பரம் செய்து 10 ரூபாய்க்கு விற்கும் விற்பனைத் தந்திரத்தை உலகுக்குக் கற்று தந்தது இந்த கோலாக்கள்தான் .
* தேர்தல் சமயத்தில் தலைமுடியை இரட்டை இலைபோல வெட்டிக்கொள்ளும் தொண்டர்கள் நம் ஊரில் உண்டு . உலகம் முழுக்க உடம்பில் விளம்பரம் செய்து கொள்வது ஒரு வியாபாரம் . இவர்களுக்கு Human Billboards enRu peyar .
* ஆல் அவுட் கொசு மருந்தை வாங்கி வைத்துவிட்டு அது எம்பி நாக்கை நீட்டிக் கொசுவைப் பிடிக்கும் என்று காத்திருந்தவர்கள் பலர் . 1990 வரையிலும் ஆணுறை உபயோகம்பற்றி மக்களுக்கு விளக்க இந்தியாவில் சமூக சேவகர்களே கிடைக்கவில்லை . பீஹார் பகுதிகளில் ' விளக்கியே ஆக வேண்டும் ' என்று அரசால் அனுப்பப்பட்டவர்கள் கட்டை விரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டு ' இப்படி அணிந்துகொண்டால் எய்ட்ஸ் வராது ' என்றார்கள் . விளைவு , மக்களும் ஆளுக்கு ஒன்றை வாங்கி கட்டை விரலில் மாட்டிக்கொண்டார்கள் !
--- விளம்பரம் விகடன் , இணைப்பு - 19 . 06. 2010.

Wednesday, December 29, 2010

பெண்பால் மிக ஆபத்து !

உலகெங்கும் இருக்கும் சகல ஜீவராசிகளின் பெண் பாலினத்தைக் கூர்ந்து கவனித்தால், வெட்டவெளிச்சமாகத் தெரிந்துபோகும் உண்மை.... the female of the species is deadlier than the male . அதாகப்பட்டது, எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது . காரணம், பெண்பாலுக்குத்தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவக் குணமும் பிழைக்கும் திறனும் இருக்கிறது . அவர்கள் இப்படி இருந்தாகவும் வேண்டும் . காரணம் , குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையைக் கற்றுத்தருவதும் பெண்ணின் வேலைதானே . இவள் சிறந்த வேட்டுவச்சியாக இருந்தால்தானே, அவள் குட்டிகளும் பிழைக்க முடியும் ? அதனாலேயே, இயற்கை பெண்களைப் பிறவி வேட்டைக்காரிகளாகப் படைக்கிறது . மனிதர்களிலும் அப்படித்தான் . ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் , பிற பெண்பாலினம் நேரடியாகத் தன் வல்லமையை வெளிப்படுத்தும் . தனக்கு வேண்டிய பவரைத் தானே போராடிப் பெற்றுக்கொள்ளும் .
ஆனால், மனிதப் பெண்கள் தங்கள் பவர் தேவைகளை இப்படி நேரடியாகவோ, பகிரங்கமாகவோ தீர்த்துக்கொள்வது இல்லை . எல்லாமே மறைமுகமாகத் தாய் வழி ஆதிக்கம்தான் . காரணம், பிற ஜீவராசித் தாய்கள் யாரையும் அண்டிப் பிழைக்காமல் சுயமாக வாழ்கின்றன . ஆனால், மனிதத் தாய்க்கு மட்டும் சமீபத்தில் சில காலம் வரை யாரையாவது அண்டிப் பிழைக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது . காரணம், நம் சமூக அமைப்பில் எல்லா அதிகாரங்களும் ஆண்களிடமே இருந்தன . அதனால், யாராவது ஓர் ஆணைப் பிடித்து, அவன் மேல் ஓர் ஒட்டுண்ணியாக வாழ்ந்தால் ஒழிய, இவளுக்கு என்று ஒரு வாழ்க்கை இல்லை என்கிற நிலைதான் பெண்களுக்கு .
ஆக இயற்கையின் விதிப்படி பெண் வேட்கையில் சிறந்தவளாக இருந்தாக வேண்டும் . ஆனால், மனித சமூக அமைப்பில் அவளுடைய வேட்டுவ குணம் வெளியே தெரிந்தால், ஆண்கள் ஆட்சேபிப்பார்கள் . இந்த முரண்பாட்டைச் சரிசெய்யவும் பெண்கள் பல வழிகளை வைத்திருந்தார்கள் .
--- டாக்டர் ஷாலினி . உயிர் மொழி ! தொடர் . ஆனந்தவிகடன் , 28. 07. 2010.

Tuesday, December 28, 2010

' சும்மா ' சாப்பிடு !

சைக்கிளை மிதி .... ' சும்மா ' சாப்பிடு !
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள கிரவுனி ஓட்டலுக்குள் நுழைகிறீர்கள் . ஓட்டல் ஊழியர் உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி இதுதான் : " அந்த பவர் சைக்கிளில் கொஞ்ச நேரம் பெடல் பண்ணினீங்கன்னா ப்ரியா சாப்பிடலாம்... ஓகேயா ?"
சம்மதித்து பெடல் செய்தால், ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் உங்களுக்கு 33 டாலர் ( ஆயிரத்து ஐநூறு ரூபாய் சொச்சம் ) மதிப்பிலான கூப்பன் தரப்படும் . எத்தனை கூப்பன் ' சம்பாதிக்கிறீர்களோ ' அதன் மதிப்புக்கு சமமான இயற்கை விவசாய உணவு ஐட்டங்களை ' சும்மா ' சாப்பிடலாம் !
சொந்தமாக மின்உற்பத்தி செய்து செலவைக் குறைத்தல் , இயற்கை விவசாய உணவு பயன்பாட்டை அதிகரித்தல் , புவி வெப்பமடைதலைத் தடுத்தல் என மூன்று நல்ல அம்சங்கள் நிறைந்த ' த்ரீ இன் ஒன் ' திட்டம் இது .
இதற்காக, பெடல் செய்தால் மின்சாரம் உற்பத்தி செய்யும் ' பவர் சைக்கிள் ' களை வாங்கி அடுக்கியிருக்கிறார்கள் . உள்நாட்டினர், சுற்றுலா பயணிகள் என அனைவரிடமும் இதற்கு நல்ல வரவேற்பு . பெடல் செய்து ப்ரீ சாப்பாடு ருசிக்க கியூ நீள்கிறது .
இந்த ஓட்டலில் மீதமாகும் உணவையும் பயோபவர் யூனிட்டிற்கு அனுப்பி மின்சாரமாக்கிவிடுகிறார்கள் !
ம்... இந்த அசத்தல் ஐடியா நம்மூரு ஓட்டல்களில் எப்ப வருமோ ?
--- தினமலர் , ஜூலை 25 . 2010.

Monday, December 27, 2010

பறவை ஜோக் !

ஒருவர் இரண்டு பெண் கிளிகளை வளர்த்து வந்தார் . அவை இரண்டும் எப்போதும் குளுகிளுப்பான சினிமா பாடல்களையே பாடிக்கொண்டிருக்கும் அதனால் நொந்துபோன அவர் , ஒரு துறவியைப் போய்ப் பார்த்தார் . அவரிடம் இரண்டு ஆண் கிளிகள் இருந்தன . அவை எப்போதும் தியானத்தில் இருந்தபடியே கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் .
விஷயத்தைக் கேட்ட முனிவர் , ' கவலைப்படாதே என்னுடைய இரண்டு ஆண் கிளிகளையும் நீ சில நாட்களுக்கு அழைத்துச் செல் . அவற்றுடன் பழகினால் உன் கிளிகளும் சமர்த்தாக மாறிவிடும் ' என்று கொடுத்து அனுப்பினார் .
வழக்கம் போல் ஆண் கிளிகள் கண்களை மூடி தவத்தில் இருந்தபோது , " அழகிய அசுரா , அழகிய அசுரா அத்துமீற ஆசை இல்லையா ? " என்று அந்த இரண்டு பெண் கிளிகளும் செக்ஸியான குரலில் பாடி உசுப்பேற்றின .
அந்த சப்த்த்தில் திடுக்கென கண் விழித்த ஆண் கிளிகள் , " ங்கொய்யால , இத்தனை நாளாக கடவுள்கிட்ட எதுக்குப் பிராத்தனை பண்ணினோமோ அது பலிச்சிடுச்சுடா " என்று கத்தியபடியே பெண் கிளிகள் மீது பாய்ந்தன .
--- அரசு பதில்கள் . குமுதம் . 07. 07. 2010.

Sunday, December 26, 2010

இதயம் !

இதயம் ஓய்வெடுப்பதே இல்லையா ?
நமது இதயத்தின் மேல் பகுதியில் 2 ஏட்ரியா ( ஆரிக்கிள் ) , கீழ் பகுதியில் 2 வென்ட்ரிக்கிள் என 4 அறைகள் உள்ளன . சராசரியாக நமது இதயம் ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 75 முறை துடிக்கும் . ஒரு துடிப்புக்கு சராசரியாக 0.8 நொடிகள் ஆகும் .
இதயத் துடிப்பின்போது முதலில் இதயம் சுருங்கும் . அப்போது ஆரிக்கிளில் இருந்து வென்ட்ரிக்கிளுக்கும் , அவற்றில் இருந்து நுரையீரல் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ரத்தம் பாயும் . இது , ' ஸிஸ்டலி ' இயக்கம் .
பிறகு இதயம் விரியும் . அப்போது , பிறபகுதிகளில் இருந்து இதயத்திற்கு ரத்தம் பாயும் . இது , ' டயஸ்டலி ' இயக்கம் .
ஒரு ஸிஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் ; ஒரு டயஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் . டயஸ்டலி இயக்கத்தின்போது இதயம் விரிந்து சும்மா இருக்கும் அல்லவா , அதுதான் அதன் ஓய்வு நேரம் !.
--- தினமலர் , ஜூலை 9 , 2010.
இதயம் ஓய்வெடுப்பதே இல்லையா ?
நமது இதயத்தின் மேல் பகுதியில் 2 ஏட்ரியா ( ஆரிக்கிள் ) , கீழ் பகுதியில் 2 வென்ட்ரிக்கிள் என 4 அறைகள் உள்ளன . சராசரியாக நமது இதயம் ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 75 முறை துடிக்கும் . ஒரு துடிப்புக்கு சராசரியாக 0.8 நொடிகள் ஆகும் .
இதயத் துடிப்பின்போது முதலில் இதயம் சுருங்கும் . அப்போது ஆரிக்கிளில் இருந்து வென்ட்ரிக்கிளுக்கும் , அவற்றில் இருந்து நுரையீரல் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ரத்தம் பாயும் . இது , ' ஸிஸ்டலி ' இயக்கம் .
பிறகு இதயம் விரியும் . அப்போது , பிறபகுதிகளில் இருந்து இதயத்திற்கு ரத்தம் பாயும் . இது , ' டயஸ்டலி ' இயக்கம் .
ஒரு ஸிஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் ; ஒரு டயஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் . டயஸ்டலி இயக்கத்தின்போது இதயம் விரிந்து சும்மா இருக்கும் அல்லவா , அதுதான் அதன் ஓய்வு நேரம் !.
--- தினமலர் , ஜூலை 9 , 2010.

Saturday, December 25, 2010

இது தெரியுமா ?

* மரங்கள் பற்றிய படிப்பு : டெண்ட்ராலாஜி
* பாம்புகள் பற்றிய படிப்பு : ஓஃபியாலஜி .
* பறவைகள் பற்றிய படிப்பு : ஆர்னிதாலஜி .
* செல் , திசுக்கள் பற்றிய படிப்பு : ஹிஸ்டாலஜி .
* சின்னங்கள் பற்றிய படிப்பு : ஐகனாலஜி .
* சங்குகள் பற்றிய படிப்பு : காங்காலஜி .
* மலைகள் பற்றிய படிப்பு : ஓரோலஜி .
* பாசிகள் பற்றிய படிப்பு : ஃபைகாலஜி .
* தோல் பற்றிய படிப்பு : டெர்மடாலஜி .
* குகைகள் பற்றிய படிப்பு : ஸ்பெலியாலஜி .
* பூச்சிகள் பற்றீய படிப்பு : என்டோமாலஜி .
* பாறைகள் பற்றிய படிப்பு : லிதாலஜி .
* தசைகள் பற்றிய படிப்பு : மையாலஜி .
* திமிங்கிலங்கள் பற்றீய படிப்பு : செடாலஜி .
* பழங்கள் , விதைகள் பற்றிய படிப்பு : கார்பாலஜி .
* நோய்கள் பற்றிய படிப்பு : பேதாலஜி .
* எறும்புகள் பற்றிய படிப்பு : மைர்மெகாலஜி .

Friday, December 24, 2010

ஹோட்டல் நாகரிகம் .

ஹோட்டலில் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது .
இன்று ஹோட்டலில் சாப்பிடுவது பலருக்கும் தவிர்க்க முடியாததாகி விட்டது . ஆனால் , ஹோட்டலில் முறைப்படி எப்படி சாப்பிடுவது , ஸ்பூன் , ஃபோர்க்கை எப்படிப் பிடிப்பது , நாப்கினை எப்படி உபயோகிப்பது என்று கூட பலருக்குத் தெரிவதில்லை . இதோ அவர்களுக்கு உதவும் வகையில் இந்த டிப்ஸ்...
முதலில் அங்குள்ள நாப்கின் மடிப்புகளை நீக்கி , இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள் . சாப்பிடும் முன் நாப்கினை மடியில் விரிக்க வேண்டும் .
கத்தியை வலது கையிலும் , ஃபோர்க்கை இடது கையிலும் பிடிக்க வேண்டும் .
சூப் குடிக்கும்போது , ஸ்பூனின் கைப்பிடியைக் கடிகாரத்தின் 4 மணி திசையிலும் , ஸ்பூனின் தலைப்பகுதியை 11 மணி திசையிலும் இருக்கும்படி வைத்து எதிர்ப்புறமாக சூப்பை அள்ள வேண்டும் . அப்போதுதான் , சூப் நம்மேல் சிந்தாது .
கத்தியையும் ஃபோர்க்கையும் பிடித்து பிரெட்டையோ , மற்ற உணவுப் பொருட்களையோ ' கட் ' செய்ய வேண்டும் . ஃபோர்கால் உணவைக் குத்தி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் .
சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்றால் ஃபோர்க்கையும் கத்தியையும் இணையாக அடுத்தடுத்து சேர்த்து வையுங்கள் . இன்னும் சாப்பிட வேண்டும் என்று ஆர்டர் செய்வதாக இருந்தால் , ஃபோர்க்கையும் கத்தியையும் ஒன்றின் மேல் ஒன்றாக ( பெருக்கல் குறி போல ) வையுங்கள் .
பெரும்பாலான ஸ்டார் ஹோட்டல்களில் டிக்காஷன் , பால் , சர்க்கரை இவைகளைத் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கும் . முதலில் டிக்காஷனை கப்பில் ஊற்றி , பிறகு அதில் தேவையான் பால் ஊற்றி , பின்பு சர்க்கரையைப் போட்டு ஸ்பூனால் கலக்கவேண்டும் . சூப்போ , காஃபியோ சத்தம் போட்டு உறிஞ்சிக் குடிக்காதீர்கள் .
தும்மலோ இருமலோ வந்தால் , நாப்கின் கொண்டே உங்கள் முகத்தை நாசுக்காக மறைத்துக் கொள்ளுங்கள் .
உணவுப் பொருள் பல்லில் மாட்டிக் கொண்டால் , நாப்கினை வைத்து , வாயை மறைத்தபடி பல் குத்தும் குச்சியால் ( அங்கு பல் குத்தும் குச்சி இருக்கும் ) சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் .
--- தனலட்சுமி சுந்தர், குமுதம் சினேகிதி / டிசம்பர் 1 . 2006 .

ஹையோ மசக்கை .

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது , அவளுக்கு மட்டும்தான் மசக்கை ஏற்படும் என்று நினைக்கிறீஈர்களா ? அதுதான் இல்லை ... உண்மையிலேயே அந்தப் பெண்ணுடைய கணவனுக்கும் ' மார்னிங் சிக்னல் ' என்று சொல்லப்படுகிற ' மசக்கை ' ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம் !
முப்பத்தி நான்கு தம்பதிகளிடம் , நியூஃபவுன்லேண்ட் யூனிவர்சிடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு நடத்தினார்கள் .
இந்தத் தம்பதிகளின் ஹார்மோன் அளவுகளை , குழந்தை பிறப்பதற்கு முன்பும் , குழந்தை பிறந்த பின்பும் அளவெடுத்துப் பார்த்தபோது , ஆச்சர்யமான தகவல் கிடைத்தது...
அதாவது , மனைவியின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது , குழந்தையின் மீது ஒருவித பிடிமானத்தை வளர்க்கும் ' கார்டிசோல் ' என்ற ஹார்மோன் ஆண்களுக்கு இருமடங்கு அதிகரிப்பதாகத் தெரிய வந்தது . அதுமட்டுமல்ல... ' ஹும் ! ... நான் ஆம்பளை தெரியுமா ? ' என்று ஆண்களின் உடம்பில் தெனாவெட்டு காட்டும் டெஸ்டோஸ் டிரான் ஹார்மோன் . அப்படியே பொசுக்கென்று மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து போய் விடுகிறதாம் .
பிள்ளைத்தாய்ச்சி பெண்ணின் உடலில் ஏற்படும் நுட்பமான வாசனை ( ஃபெரமோன்ஸ் ) தான், பக்கத்தில் இருக்கும் கணவரின் உடம்பில் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் !
--- தகவலீஸ்வரி , குமுதம் சினேகிதி / டிசம்பர் 1 . 2006 .

Thursday, December 23, 2010

ஸ்லிம் ஆக ....

தூங்கினால் ஸ்லிம்மாகலாம்...
நீங்கள் ஸ்லிம் ஆகணுமா ?
கட்டாயமாக தினமும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்குங்கள் . இந்தளவு தூக்கம் இருந்தால்தான் நம் உடமபு கலோரிகளை எரிக்கும் சக்தி பெறுகிறது . அதனால் , நல்ல தூக்கம் என்பது உடலை இளைக்க வைக்க மட்டுமல்ல... டயபடீஸ்காரர்களூக்கு சர்க்கரை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவும் உதவுகிறது .
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்...
நானும் எக்ஸர்சைஸ் செய்கிறேன் பேர்வழி என்று , தினமும் பத்து தடவை குனிந்து நிமிர்ந்தால் ஒரு உபயோகமும் கிடையாது . ஒரு நாளைக்கு குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்களாவது தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால்தான் , உடம்பிலுள்ள தேவையில்லாத கொழுப்பும் கரையும் .
டயபடீஸை வராமல் தடுக்கணுமா ?
டயபடீஸ் வரக்கூடிய குடும்ப பாரம்பரியம் உள்ள நபரா நீங்கள் ... உங்கள் டயபடீஸை பத்து வருடங்கள் தள்ளிப் போட உங்கள் உணவே உதவலாம் . குறிப்பாக விட்டமின் ' ஏ ' டயபடீஸை வரவிடாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதாம் . விட்டமின் ' ஏ ' அதிகம் நிறைந்த பச்சைக் காய்கறிகளையும் , பழங்களையும் உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் .
கைகளை தொங்கவிட வேண்டாமே...
வாக்கிங் போகும்போது , கைகளை வெறுமனே சும்மா வைத்துக் கொண்டிருப்பதைவிட , முன்புறம் கட்டிக் கொண்டு நடந்து பாருங்கள் . இன்னும் கூடுதலாக 10% கலோரியை எரிக்க முடியும் ! அதாவது இன்னும் பத்து நிமிடம் அதிகமாக ' வாக் ' செய்ததற்குச் சமம் !
--- குமுதம் சினேகிதி / டிசம்பர் 1 . 2006 .

Wednesday, December 22, 2010

பத்ரிநாத் திருக்கோயில் .

இமயமலையில் இலந்தை மரக்காடுகள் நிறைந்த நாராயண பர்வதம் என்ற பகுதியில் , அலக்நந்தா நதிக்கரையில் அமைந்திருக்கிறது பத்ரிநாத் திருத்தலம் . ஹரித்வாரிலிருந்து 300 கி. மீ. தொலைவில் உள்ளது இந்த புனிதத் தலம் .
சம்ஸ்கிருதத்தில் பத்ரி என்றால் இலந்தை . இலந்தை மரங்கள் அடங்கிய காடுகள் சுற்றி இருந்ததால் இதற்கு பத்ரிவனம் என்று பெயர் . இலந்தை மரத்தின் கீழே ஆச்சாரியர் ரூபத்தில் பெருமாள் அமர்ந்தருளிய தலம் என்பதால் கோயிலுக்கு பத்ரிகா ஆஸ்ரமம் என்றும் பெயர் .
கோயில் அமைப்பு
இக்கோயிலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் . ஒன்று , பத்ரிநாதர் குடிகொண்டுள்ள மூலஸ்தானம் . இந்த கர்ப்பகிருகம் பொன் தகடுகளால் வேயப்பட்ட மேல் கூரையோடு சேர்ந்தது .
இரண்டாவது , தரிசன மண்டபம் . இங்கேதான் பூஜை மற்றும் இதர சடங்குகள் நடைபெருகின்றன .
மூன்றாவது , சபா மண்டபம் . இங்குதான் சுவாமி காலையில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் .
தலச் சிறப்பு .
கோயில் அமைந்துள்ள வெண்பனி படர்ந்த மலையின் அழகிய சூழல் , ஆன்மிக அமைதியை அளிக்கும் , தியானம் செய்ய உகந்த இடம் இது .
பத்ரிநாத் கோயில் பின்பக்கம் உள்ள பள்ளத்தாக்கிலிருந்து நீலகண்டம் என்ற மலைஉச்சி பகுதியைப் பார்ப்பது , கண்கொள்ளாக் காட்சி . நீலகண்ட உச்சியின் அருகிலேயே நரநாராயணர்கள் இருப்பதாக ஐதீகம் .
பத்ரிநாத் ஆலயத்திற்கு எதிரில் உள்ள தப்தகுண்டம் தீர்த்தம் , ஒரு வெந்நீர் ஊற்றாகும் .
பத்ரிநாதரின் விக்ரகம் கறுப்பு நிற சாளக்கிராமத்தில் பத்மாசனத்தில் வீற்றிருப்பது போல அமைந்துள்ளது . பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும் போது திரையிடுவதில்லை .
மூலவர் : பத்ரி நாராயணர் .
தாயார் : அரவிந்தவல்லி .
தீர்த்தம் : தப்த குண்டம் ( வெந்நீர் ஊற்று ).
விமானம் : தப்த காஞ்சந விமானம் .
தல விருக்ஷம் : பத்ரி ( இலந்தை ).
மங்களாசாசனம் : பெரியாழ்வார் -- 11 பாசுரங்கள் .
--- தினமலர் , ஜூலை 8 . 2010 .

Tuesday, December 21, 2010

சூப்பர் டிப்ஸ் .

* இட்லி மாவு புளித்து , புளிப்பு வாசனை முகத்தைச் சுளிக்க வைக்கிறதா ? அதைப் போக்க ஒரு சுலபமான வழி , மாவில் கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கலக்கி வைத்தால் , சிறிது நேரத்தில் நீர் மேலே தேங்கி நிற்கும் . அதை வடித்துவிட்டு இட்லி வார்த்துப் பாருங்கள் . இட்லி புளிப்பில்லாமல் இருக்கும் .
* உங்கள் வீட்டு வாண்டு சூயிங்கம் மென்று விட்டு , அது தெரியாமல் தலைமுடியில் ஒட்டிக் கொண்டு விட்டதா ? கொஞ்சம் ஐஸ் கட்டியை எடுத்து , சூயிங்கம் பட்ட இடத்தில் நன்றாகத் தேய்த்து விட்டால் , சூயிங்கம் உருண்டு வந்துவிடும் .
* பழைய லெதர் பேக் என்றாலும் கூட , கிழியவில்லை எனில் , தூக்கிப் போட யாருக்கும் மனசே வராது . கவலையை விடுங்கள் . கொஞ்சம் தேன் மெழுகை பெகின் மீது நன்றாகத் தடவி , பின் துடையுங்கள் . பழைய பேக் புதுசு போல் பளிச்சிடும் .
* சுலபமாக திறந்து மூட முடியாமல் உங்கள் ஹேண்ட்பேகின் ' ஜிப்' புகள் சண்டித்தனம் செய்கிறதா ? சிறிதளவு வாசலின் அல்லது தலைவலி தைலத்தை ஜிப்பின் மேல் தடவிப் பாருங்கள் . ஜிப் சொன்னப் பேச்சைக் கேட்கும் .
* சுலபமாகத் துடைக்க முடியாத ஜன்னல் இடுக்குகளில் நிரம்பியிருக்கும் தூசுகளைத் துடைக்க , இதோ ஒரு சுலப டிப்ஸ்... வீட்டிலுள்ள பழைய காலுறையை உங்கள் கைகளில் மாட்டிக் கொண்டு , விரல்களால் துடைத்தால் , இடுக்குகளிலுள்ள அழுக்குகள் போயே போச் ! இதனால் மர வேலைப்பாடுகளில் உள்ள சிலாம்புகள் கையில் குத்தாமலும் இருக்கும் குடையின் சிறிய ஓட்டையில் மழை கசிந்து உங்கள் மேல் ஊற்றுகிறதா ? வீட்டைவிட்டுக் கிளம்பும் முன் அந்த இடத்தில் நிறமற்ற நெயில் பாலீஷைத் தடவினால் , அவசரத்துக்கு ஓட்டை அடைந்து விடும் . மறு ஏற்பாடு செய்யும்வரை இது உதவும் !
--- குமுதம் சினேகிதி . டிசம்பர் 1 . 2006

Monday, December 20, 2010

டென்ஷனைக் குறைக்க !

டென்ஷனைக் குறைக்க சில வழிமுறைகள் !
1 . எந்தவொரு வேலை செய்வதற்கு முன்பும் திட்டமிடுதல் அவசியம் .
2 . தினமும் அரைமணி நேரமாவது யோகாவும் , மூச்சுப் பயிற்சியும் செய்யுங்கள் .
3 . கவலைகளை மனதில் போட்டுப் புதைக்காமல் அவ்வப்போது வெளியேற்றி விடுங்கள் .
4 . வேலையை குறிப்பிட்ட நாளில் செய்து முடிக்க வேண்டி இருந்தால் , தள்ளிப்போடாமல் முடித்து விடுங்கள் .
5 .அலுவலகத்தில் டென்ஷனாக இருந்தால் , இரண்டு உள்ளங்கைகளாலும் கண்களை மூடி ஐந்து நிமிடம் அப்படியே இருங்கள் .
6 . டென்ஷனான நாட்களில் சிறிது நேரம் செலவழித்து ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள் .
7 . வீட்டுக்கு வரும்போது அழுது வடியும் சீரியலைப் பார்க்காமல் , நகைச்சுவைப் பகுதியைப் பார்த்து டென்ஷனைக் குறையுங்கள் .
--- சைக்காலஜிஸ்ட் , தேன்மொழி , குமுதம் சினேகிதி . டிசம்பர் 1 . 2006 .

Sunday, December 19, 2010

டிப்ஸ் ...

* பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !
* வாழைக்காய் தோல் சீவும்போதோ , அரியும்போதோ கைகள் கறுப்பாக ஆகிவிடும் . ஒரு ஸ்பூன் பொடி உப்பைக் கைகளில் நன்றாகத் தேய்த்துக் கொண்டு , தோல் சீவினாலோ ,அரிந்தாலோ கறுக்காது .
* ஹோட்டல்களில் சாதம் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டுமென்பதற்காக சுண்ணாம்பு நீரைக் கலந்து விடுகின்றனர் . அது வயிற்றைப் புண் ஆக்கிவிடும் . ஹோட்டலுக்குச் செல்லும்போது ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை , பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லுங்கள் . சாதத்தைப் பரிமாறியவுடன் , சிறிதளவு சாதத்தை இலையின் ஓரத்தில் வைத்து அதனுடன் மஞ்சள் தூளைக் கலந்து பிசையுங்கள் . சாதத்தில் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருந்தால் சாதம் உடனடியாக சிவப்பு நிறமாக மாறிவிடும் . அதன் பிறகாவது அத்தகைய ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து விடலாமே !
* முடி அதிகமாக உதிர்ந்தால் பூண்டை இடித்து மண்டை ஓட்டில் தேயுங்கள் . அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வது குறையும் .
* சிலருக்கு மாதவிலக்கின் போது வயிற்றுவலி அதிகம் இருக்கும் . அப்போது முருங்கைக்கீரையை ஆய்ந்து கழுவி சிறிது நல்லெண்ணெய் விட்டு உப்புப் போட்டு வதக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* பெண்களின் கை , கால்களில் முடி வளராமல் இருக்க , குப்பைமேனி , வேப்பிலை , மஞ்சள் மூன்றையும் நைசாக அரைத்து , கை கால்களில் தேய்த்து பத்து நிமிடம் ஊறிய பின் குளித்தால் முடிகள் உதிர்ந்து விடும் . உடல் வழு வழுப்பாக மாறும் . மேனி பளபளப்புக்கு குப்பைமேனி சிறந்த மூலிகை .
* உணவு வகையைப் பார்சல் கட்டும்போது பச்சை வாழை இலையில் கட்டினால் இலை கிழிந்து விடும் . இலையை வெந்நீரில் நனைத்து எடுத்துக் கட்டினால் இலை கிழியாது .
* சமையல் வேலையெல்லாம் முடிந்து விட்டது . கேஸ் அடுப்பின் பிசுக்கையெல்லாம் எப்படி நீக்குவது என்று மலைப்பாக உள்ளதா ? ஒரு ஸ்பாஞ்சில் வினிக்கரைத் தோய்த்து ,அடுப்பைத் துடைத்தால் , எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் நீங்கி , புதிய அடுப்பு போல் பளபளக்கும் .
* தாய்ப்பால் கொடுக்கும் முன் சிறிதளவு வெந்நீர் அல்லது மிதமான சூட்டில் பால் குடித்து விட்டால் பால் அதிகமாகச் சுரக்கும் .
* கழுத்தில் சங்கிலி அணிவதால் ஏற்படும் கறுப்பு மறைய , 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் குழைத்து கருமை உள்ள இடத்தில் பூசவும் . முப்பது நிமிடம் கழித்து கழுவவும் . இதுபோல் தொடர்ந்து செய்து வர கருமை மறையும் .
* வெந்நீரில் குளிப்பதாக இருந்தால் காலிலிருந்து தொடங்கி உடல் முழுவதும் ஊற்றி பிறகு தலைக்கு ஊற்றிக்கொள்ள வேண்டும் . குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலைக்கு ஊற்றிய பின் பிறகு உடம்புப் பகுதிக்கு நீர் ஊற்றிக் குளிக்க வேண்டும் . இதனால் , மூளை களைப்படையாது . சுறுசுறுப்பாக இயங்கும் .
--- மங்கையர் மலர் . மார்ச் 2007 .

Saturday, December 18, 2010

' அபாய ஆசி ' !

முதலைகளிடம் குழந்தைகளுக்கு ' அபாய ஆசி ' ! பாகிஸ்தானில் நடைபெறும் விநோத சடங்கு .
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீதி எனப்படும் சமூகத்தினர் வசிக்கின்றனர். ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த அவர்கள், முதலையை புனிதமாக கருதுகின்றனர். அதனால், அதை சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவிழாவை நடத்திவருகின்றனர் .
இந்த விழாவின் போது, அங்குள்ள வழிபாட்டுத்தலத்தில் பிரார்த்தனை நடத்தும் மக்கள், பின்னர் அருகே உள்ள குளத்திற்கு செல்கின்றனர். அங்கு வளர்க்கப்படும் முதலைகளுக்கு ஆட்டிறைச்சியை உணவாக படைக்கின்றனர்.
அந்த இறைச்சியை முதலைகள் ஏற்றுக்கொண்டால், அவர்களுக்கு அதிஷ்டம் அடிக்கும் என்பதும், செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் நம்பிக்கை. குவாஜா ஹஸன் என்ற துறவியின் சீடர்களாக முதலைகளை கருதுவதால், அவைகள் தங்களை எதுவும் செய்யாது என, சீதி இன மக்கள் நம்புகின்றனர் .
முதலைக்கோயில் திருவிழாவின் போது, இறைச்சியால் செய்யப்பட்ட உணவுப்பண்டங்களையும், இனிப்பு வகைகளையும் சிறுமிகள் எடுத்துச் செல்கின்றனர். முதியவர்கள் வழிபாடுகளை நடத்தும் போது, பக்தர்கள் வெறும் காலில் நடனமாடுகின்றனர். குழந்தைகளை முதலைக்கு மேலே தூக்கிப்பிடித்து ஆசி வாங்குகின்றனர். மனிதர்களுக்கு எப்படி இறுதிச்சடங்கு நடத்துகிறார்களோ, அதேபோன்று அவற்றுக்கும் நடத்துகின்றனர். இறந்த முதலையை குளிப்பாட்டி, சடங்குகளை செய்த பிறகு பிரத்யேகமான மயானத்தில் அவற்றை புதைக்கின்றனர்.
---தினகரன் , 16. 06. 2010.

Friday, December 17, 2010

வைரமுத்து -- பாடல் வரிகள் !

' ராவணன் ' படத்தில் இடம்பெறும் ' கள்வரே கள்வரே ' பாடலில் ஓர் இலக்கணம் சொல்லியிருக்கிறேன் . ' வலிமிகு இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகிறதே... வலிமிகு வலிமிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா ! என்று எழுதியிருக்கிறேன்.
மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், தமிழில் வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள், மிகா இடங்கள் என்பதை வலிமிகு இடம், வலிமிகா இடம் என்று சொல்வது தமிழ் இலக்கண மரபு. உதாரணமாக வினைத் தொகையில் வலி மிகாது. ' சுடுசோறு ' என்பதை ' சுடுச் சோறு ' என்றோ, ' ஊறுகாய் ' என்பதை ' ஊறுக்காய் ' என்றோ எழுதக் கூடாது. ' அலை கடல் ' என்பதை ' அலைக் கடல் ' என்று எழுதக் கூடாது. அதாவது வினைத் தொகையில் வலி மிகாது. சுட்டெழுத்தில் வலி மிகும். ' அந்தப் பக்கம்..' '.இந்தப் பக்கம்.' ' அந்தப் பெண் ' ' இந்தப் பெண் ' என சுட்டெழுத்தில் வலி மிகும். இதை நயமாக ' வலிமிகு இடங்கள் வலிமிகா இடங்கள் ' தமிழுக்குத் தெரிகிறதே, நீங்கள் என்னை அணைக்கிற போது ' வலிமிகு இடங்கள் வலிமிகா இடங்கள் உங்களுக்குத் தெரிகிறதா ' என காதல் கொண்டு மனைவி கேட்பதாக எழுதியிருக்கிறேன்.
' எந்திரன் ' படத்தில், பாட்டு முழுக்க விஞ்ஞான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ' வண்ணத்துப்பூச்சி கால்களால் ருசி அறியும் இந்த காதல் பூச்சி கண்களால் ருசி அறியும் ! ' என்பது போன்ற வரிகள் விழுந்திருக்கின்றன .
--- வைரமுத்து , குமுதம் . 07. 07. 2010.

Thursday, December 16, 2010

ரோபோ காதலி !

அசத்தும் அழகுடன் நவநாகரீக மங்கையாக விற்பனைக்கு வரும் ரோபோ காதலி !
இனிமேல் காதலியை தேடி அலைய வேண்டியதில்லை. நீங்கள் விரும்பும் உடல், தோற்றம், நிறம் மற்றூம் அழகுடன் ரோபோ காதலியை பெறலாம். இதற்காக புதிய பெண் ரோபோவை அமெரிக்க இன்ஜினியர் டக்ளஸ் ஹின்ஸ் உருவாக்கியிருக்கிறார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உலக எலக்டிரானிக்ஸ் கண்காட்சி நடந்தது. அதில் ' அடல்ட் என்டர்டெயின்மென்ட் ' பிரிவில், புதிய பெண் ரோபோ ' ராக்சி ' அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்களின் பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த செக்ஸ் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
5 அடி 7 அங்குலம் உயரம், 55 கிலோ எடை, அழகிய உருவ அமைப்புடன் ' ராக்சி ' பெண் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவுடன் உடல் முழுவதும் செயற்கை தோலால் மூடப்பட்டு புசுபுசுவென நிஜமான பெண் போன்றே இந்த ரோபோ தோற்றமளிக்கும். செயற்கை முறையில் எலும்புக் கூடு உருவாக்கப்பட்டு உடல் முழுவதும் சதை போன்ற மென்மையான பகுதி ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ நகர்ந்து செல்லும், ஆனால் காலை தூக்கி வைத்து நடக்காது. ரோபோவின் மார்பு பகுதியில் இயந்திர இதயம் பொருத்தப்பட்டு, உடல் குளூமையாக பராமரிக்கப்படும்.
இனம், தலைமுடி கலர், மார்பக அளவு வேறுபட்ட 5 விதமான மாடல்களில் ' ராக்சி ' ரோபோ விற்பனைக்கு வருகிறது. புதிய ' ராக்சி ' ரோபோ சமைக்காது, துணி துவைக்காது. ஆனால், மனைவி அல்லது காதலி செய்யும் எல்லா பணிகளையும் இது செய்யும்.
அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்த ரோபோ நல்ல தோழியாக இருக்கும். நீங்கள் கூறுவதை கவனமாக கேட்டு, பேசவும் செய்யும். நீங்கள் கையால் தொடுவதை உணரும் திறன் உண்டு. உங்கள் விருப்பு வெறுப்புகளை படு கச்சிதமாக அறிந்து கொள்ளும். இதில் புரோகிராம் செய்து நண்பர்களுடன் இதை பகிர்ந்துகொள்ளலாம்.
இந்த புதிய ' ராக்சி ' பெண் ரோபோ 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் டாலர் வரையிலான விலையில் கிடைக்கும். இவ்வாறு ஹின்ஸ் தெரிவித்தார்.
--- தினமலர், 11. 01. 2010.

Tuesday, December 14, 2010

ஆலிவ் எண்ணெய் .

மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.
பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.
புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது.
தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர்.
ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.
--- தினகரன் , 5 ஜூலை . 2010.

Monday, December 13, 2010

' ப்யூல் சேவர் '

பெட்ரோலை சேமிக்க ' ப்யூல் சேவர் ' கருவி . விவசாயி கண்டுபிடிப்பு .
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்துள்ள முகாசிபிடாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு. விவசாயி. காரில் பெட்ரோலை மிச்சப்படுத்தும், ' ப்யூல் சேவர் ' என்ற மின்னணு கருவியை கண்டுபிடித்துள்ளார். கருவி காரில் பொருத்தப்பட்டால் மைலேஜில் 6 கி. மீ. அதிகம் கிடைக்கிறது.
நேரு கூறியதாவது : ' ப்யூல் சேவர் ' என்ற கருவி, பெட்ரோல் பயன்படுத்தும் கார்களில் எளிய முறையில் பொருத்திக்கொள்ள ஏதுவாக ' எம்பெடட் டெக்னாலஜி சிஸ்டம் ' அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 25 க்கும் மேற்பட்ட கார்களில் இக்கருவி பொருத்தப்பட்டு பரிசோதனை செய்ததில், உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு 15 % மேலாக பெட்ரோல் செலவு மீதமாவதாகவும், 20% மேலாக அதிக மைலேஜ் தருவதாகவும் சோதனை முடிவு அறிக்கைகளை வழங்கியுள்ளனர். புனேவில் செயல்பட்டுவரும் ஆட்டோமொட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா ( ஏஆர்ஏஐ ) நிறுவனத்தின் தரக்கட்டுப்பாடு சோதனைகளை மேற்கொண்டு அதன் மூலம் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை மூலம் இதை வடிவமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இக்கருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
--- தினகரன் , 5 ஜூலை . 2010.

Sunday, December 12, 2010

' சுகர் பிரீ ' மாம்பழம் .

வந்து விட்டது ' சுகர் பிரீ ' மாம்பழங்கள் !
உத்தரபிரதேச மாநிலம் மலிகாபாத்தில் உள்ள அந்த மாநில தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வண்ணம் புதிய மா வகையை கண்டறிந்துள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளாக நடத்திய ஆராய்ச்சியில் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் சத்து மிக்க அதே சமயம் குறைந்த சர்க்கரை கொண்ட மாம்பழ வகையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சாதாரண மாம்பழங்களில் உள்ள சர்க்கரையளவில் 25 % மட்டுமே இதில் கலந்துள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி இதனை உட்கொள்ள முடியும். சர்க்கரை மட்டுமின்றி கார்போஹைட்ரேட்டும் இந்த மாம்பழங்களில் குறைவாக உள்ளது. மாறாக மாம்பழத்தில் உள்ள மினரல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன.
--- தினமலர், 04. 07. 2010.

Saturday, December 11, 2010

சண்டிகேஸ்வரர் .

எப்பொழுதும் சிவ தியானத்திலேயே இருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவ பூஜைக்கும், தியானத்திற்கும் இடையூறு விளைவிப்பவர் யாராயினும் அவரைக் கோபத்துடன் தண்டிப்பவர்.
இதனாலேயே ' சிவ நிந்தகரிபு ' என்று ஒரு பெயர் உண்டு.
இவரது இயற்பெயர் ' விசாரசருமர் '. சிவ பூஜைக்கு இடையூறு செய்த தமது தந்தையின் கால்களை மிகுந்த கோபத்துடன் துண்டித்தார். இதனால் இவருக்கு' சண்டிகேஸ்வரர் ' எனப் பெயர் வரலாயிற்று. ( சண்ட = கோபம் ).
சிவபெருமானுக்கு பூஜித்த மலர்களையே ( சிவ நிர்மால்யம் ) இவர் ஏற்றுக் கொள்வார். சிவபெருமானுக்கு நிவேதனம் செய்த உணவையே தமக்கு ஏற்றுக் கொள்வார். இவையனைத்துமே இவரது பக்தியை பாராட்டி சிவபெருமான் அருளியவையாகும்.
--- தினமலர், ஏப்ரல் 8 . 2010.

Friday, December 10, 2010

அதிசய சிற்பம் !

ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களை ஐராவதீஸ்வரர் கோயிலில் காணலாம். இங்கு வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது. அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும். ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பது போல் இக்காட்சி அமைந்திருக்கும். தாராசுரம் சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. இந்த சிற்பங்கள் சோழப் பேரரசனான இரண்டாம் ராஜராஜசோழனின் கலைப் பாணியின் வெளிப்பாடாகும்.
--- தினமலர் ,பிப்ரவரி 25 . 2010..

Thursday, December 9, 2010

ஆகமங்கள் .

இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்கள் :
1 . காமிகம் 2 . யோகஜம் 3 . சிந்தியம் 4 . காரணம் 5 . அஜிதம் 6 . தீப்தம் 7 . ஸூக்ஷ்மம் 8 . ஸஹஸ்ரம் 9 . அம்சுமான் 10 . ஸுபரபேதம் 11 . விஜயம் 12 . நிஸ்வாசம் 13 . ஸ்வாயம் புவம்14 . அனிலம் 15 . வீரம் 16 . ரௌரவம் 17 . மகுடம் 18 . விமலம் 19 . சந்த்ரஞானம் 20 . பிம்பம் 21 . ப்ரோத்கீதம் 22 . லலிதம் 23 . சித்தம் 24 . சந்தானம் 25 . சர்வம் 26 . பாரமேஸ்வரம் 27 . கிரணம் 28 . வாதுளம் .
--- தினமலர் ,பிப்ரவரி 25 . 2010.

Wednesday, December 8, 2010

அழகா... அலகா ?

காலங்காலமாக பெண்கள் காதில், மூக்கில், துளையிட்டு அணிகலன் அணிந்து வருகின்றனர். இது மரபு, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்ததாகவே இன்றும் உள்ளது. இந்தப் பழக்கம் ஃபேஷன் என்ற போர்வையில் தொப்புள், புருவம் போன்ற இடங்களில் அணியும்விதமாக இன்று வளர்ந்து நிற்கிறது.ஆண்களும் காது குத்திக் கடுக்கன் போடுகிறார்கள். புருவத்தில் சின்னஞ் சிறு ஆணி போன்ற அணிகலன் அணிகிறார்கள். இப்படி உறுப்புகளில் அணிகலன் அணிவதற்கு Body piercing என்று பெயர்.பழங்காலத்தில் உலோகம், எலும்புத் துண்டு, சோழி, தந்தம், கண்ணாடி போன்றவற்றால் ஆன நகைகளை அணிந்தார்கள். முன்பு எகிப்திய மன்னர்கள் Symbol of Royality என்பதன் அடையாளமாகத் தொப்புளில் வளையம் அணிந்தனர். ரோம் நகர் ஆண்களிடம் மார்பக நுனியில் வளையம் அணியும் பழக்கம் இருந்தது. மாயன்ஸ் என்கிற இனத்தினரிடம் நாக்கில் துவாரம் இட்டு அதில் நகை அணியும் வழக்கம் இருந்தது. அப்படி அணிந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.விக்டோரியா மாகாராணி காலத்தில் இங்கிலாந்தில் வளையம் அணிந்த ஆணுடன் உறவு கொண்டால் பெண்ணுக்கு நிறைய இன்பம் கிடைக்கும் என்று நம்பிக்கை. எகிப்தில் பெண்கள் தங்கள் பிறப்பு உறுப்பில் வளையம் அணிந்தார்கள். நம் நாட்டில் உறுப்புகளில் அணிகலன் அணிவது பற்றி வாத்சாயனரும் குறிப்பிட்டுள்ளார். உடல் ஆரோக்கியம், பிரார்த்தனை போன்ற அடிப்படையில்தான் இவை அணியப்பட்டன.தேவையற்ற இடங்களில் அணிகலன் அணிவதால் செக்ஸ் செயல்பாடோ, சுகமோ ஒரு டீஸ்பூன் அளவுகூட அதிகரிக்காது என்பதே நிஜம். அவஸ்தைதான் மிஞ்சும். மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக இதுபோன்று அணிவது எல்லோரையும் வசீகரிக்காது என்பதை மனதில்வையுங்கள்.--- டாக்டர் டி. நாராயண ரெட்டி. ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Tuesday, December 7, 2010

வழிபாட்டு பாடல் !

வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் அவசியம்தான் என்பதற்கு, திருமுருகன் வழிபாட்டு பாடல் ஒன்று அற்புதமான விளக்கமாக அமைந்துள்ளது...
' ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு அசுரரை வென்ற முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே ! '
இந்தப் பாடலை மேலோட்டமாகப் பார்த்தால், திருமுருகனின் ஆறு முகங்களைப் போற்றித் துதிக்கும் பாடலாகத் தொன்றும்.
சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், இதற்குள் அருமையான வாழ்க்கை வழிகாட்டுதல் ஒளிர்வது புரியும் : மயிலேறி விளையாடுதல், குழந்தை நிலை; ஞானமொழி பேசுதல், ஞானியின் நிலை; அடியார்கள் வினைதீர்த்தல், அபயமளித்து ஆதரிக்கும் நிலை; ( அன்னை சக்தியிடம் ) வேல் வாங்கிய நிலை, தீமையை அழிக்க பெரியோர் துணைதேடிய நிலை; அசுரரை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டிய நிலை; திருமணம் செய்தல், குடும்ப வாழ்ககை நிலை.!
' குழந்தையாய் இரு, ஞானியாய் இரு, துன்பப்படுவோரை ஆதரித்து உதவுபவனாய் இரு, தீமையை அழிக்க பெரியோர் துணை தேடு, தர்மத்தை நிலைநாட்டு... இனிய வாழ்க்கை அமையும் ! ' என்பதே இந்த போற்றிப்பாடல் சொல்லாமல் சொல்லும் வாழ்க்கை வழிகாட்டுதல் !
--- பூஜ்யா . தினமலர் , 03. 07. 2010.

Monday, December 6, 2010

விளிம்பு நிலை !

விளிம்பு நிலை மனிதர்களாக இருங்கள் !
எந்த விஷயத்தில் ஆழ்ந்தாலும் அமிழ்ந்தாலும், அதன் அடி ஆழம் வரை துழாவிச் செல்லுங்கள். அமெரிக்க விமானப் படையில் பயிற்சி விமானிகளிடம் ஜெட் விமானங்களை ஒப்படைப்பார்கள். அதீத வேகம் காரணமாக விமானம் வெடித்துச் சிதறும் நிலைக்கு முந்தைய அபாய எச்சரிக்கை வரை அதை விரட்டுவார்கள். தலைகீழாக, மேலும் கீழுமாக, முன் பின்னான அந்த விமானங்களை வைத்து என்னவெல்லாம் வித்தை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள் பயிற்சி விமானிகள். உடைக்காமல், மோதிச் சிதறடிக்காமல் அந்த விமானத்தை என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்வார்கள். காரணம் ? ' இந்தப் பழக்கத்தை push the outside of the envelope என்பார்கள். அதாவது, எந்தச் செயலையும் அதன் முற்று முதல் வரை ஆராய்ந்து துழாவிப் பார்ப்பது. பயிற்சியில் ஒரு விமானத்தின் முழுத் திறனையும் பரிசோதித்து அறிந்துகொண்டால்தான், யுத்தச் சமயங்களில் அதன் முழு ஆற்றலையும் பயன்படுத்த முடியும் ! '
--- கி. கார்த்திகேயன் ,, ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Sunday, December 5, 2010

எரிபொருள் ஏற்று !

ஒவ்வொரு நாளுக்கும் எரிபொருள் ஏற்றுங்கள் !
1969 - ல் முதன்முதலில் நிலவில் தரை இறங்கிய நீல் ஆம்ஸட்ராங் உள்ளிட்ட அப்பல்லோ விண்கல வீரர்கள் அதன் பிறகான சில மாதங்களுக்குக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ' நிலவிலேயே கால் பதித்துவிட்டோம். இனி, பூமியில் சாதிக்க என்ன இருக்கிறது ! ' என்ற எண்ணம் அவர்களை எந்தச் செயலிலும் கவனம் செலுத்தவிடாமல் மனச் சிதைவுக்கு ஆளாக்கி இருக்கிறது. எதை இலக்காக நிர்ணயித்துக் கொள்வது என்பதில் ஏற்பட்ட குழப்பமே அது. தங்களது முந்தைய சாதனைப் பெருமிதத்தை மனதில் இருந்து நீக்கிக்கொள்ளாமல், அதிலேயே திளைத்துக் கிடப்பதன் விளைவு என்றும் சொல்லலாம். ' நீங்களும் சராசரியானவர்தான். பல நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் இல்லாவிட்டால் உங்களால் நிலவில் கால்வைத்திருக்க முடியாது. பல்லாண்டு கால இடைவிடாத முயற்சிகளை உங்கள் மூலமாக உலகம் தெரிந்துகொள்ள முடிந்தது ! ' என்றெல்லாம் அவர்களுக்குப் பலவிதமாக கவுன்சிலிங் கொடுத்து இயல்பு நிலைக்குத் திருப்பினார்கள்.
--- கி.கார்த்திகேயன் , ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Saturday, December 4, 2010

தெரிந்து கொள்ளுவோம் !

* ' மழையில் நடந்து செல்வதையே நான் விரும்புகிறேன். அப்போதுதான் என் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது.' என்பார் சார்லி சாப்ளின். புன்னகையின் மூலம் வலிகள் கடந்து செல்வதுதான் அவரது மாயவித்தை. துன்பங்களை கணக்கில் வைக்காமல் சிரிப்பைக் கண்களில் வைத்தவர் சாப்ளின். அதுதான் சாப்ளீனின் வெற்றி ரகசியம்.
* மூளை இல்லாமல் இருப்பதுகூடப் பிரச்னை இல்லை. இதயமே இல்லாமல் இருப்பது பெரும் குற்றம்.
* ' வாழும் இந்த நொடியில் முழு உயிர்ப்புடன் வாழ். நமது கடமை நல்லதை மட்டுமே செய்வதுதான் ' என்றார் புத்தர்.. சலனமற்று வாழத் தெரிந்தால், சோதனைகள் சீண்டாது.
* சமீபத்தில் ஒரு சலூனில் ரசித்த பொன்மொழி : -- இன்றைய ( அ ) லட்சியம் , நாளைய ( ஏ ) மாற்றம் !
* ' சொந்தப் பணத்தைச் செலவு செய்யும்போது சிக்கனமாக இரு. பொது பணத்தை செலவு செய்யும்போது கஞ்சனாக இரு ' என்பது பொது வாழ்க்கையின் இலக்கணங்களில் ஒன்று.
* ' எதிரியை மன்னித்துவிடு, ஆனால், அவர் பெயரை மறக்காதே ! ' என்று ஓர் அரேபிய பழமொழி உண்டு .
* மற்றவர்களிடம் கலகல்வெனெச் சிரித்துப் பேசும் குணம் கொண்டவர்களை ' எக்ஸ்ட்ரோவர்ட்ஸ் ' ( extroverts ) என்பார்கள். அவர்கள் ஆண், பெண், அறிந்தவர், தெரிந்தவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாகப் பழகுவார்கள். இதற்கு நேர்மறையாக, கூச்சசுபாவம் நிரம்பியவர்களை நாம் ' இன்ட்ரோவர்ட்ஸ் ' ( introverts )
என்போம் .
* பொதுவாக, மனிதர்களை ஸ்கில்டு ( skilled ) , செமி - ஸ்கில்டு ( semi - skilled ) , அன் - ஸ்கில்டு ( un - skilled ) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் .
* வாழையையும் மூங்கிலையும் மரம்னு சொன்னாலும் அவை மரங்கள் இல்லை . வாழை , ஒரு பெரிய செடி ! மூங்கில் , ஒரு பெரிய புல் ! .
* விதவிதமான உணவுகள் கிடைத்தாலும் , விண்வெளி வீரர்கள் பாவம்தான் ... விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால் , அவர்களால் உணவின் வாசத்தை நுகரமுடியாது ; ருசியையும் முழு அளவில் உணரமுடியாது . பசியைத் தீர்க்க ஏதாவது விழுங்கியாக வேண்டுமே என்றுதான் சாப்பிட வேண்டியிருக்கும் !
* பாலின் நிறம் வெண்மையாக இருப்பதர்கு 3 காரணங்கள் உள்ளன . பாலில் உள்ள ' கேஸின் ' என்ற புரதமும் , பால் நுரையின் தன்மையும்தான் அதற்கு வெண்மை நிறத்தை அளிக்கிறது . மூன்றாவது காரணம் , கேஸின் மற்றும் பால் நுரையை உருவாக்கும் பொருட்கள் , வெண்மை நிறத்தை அதிகமாகப் பிரதிபலிப்பது .
* கேஸின் , கொழுப்புச்சத்து , நுரை அதிகமாகக் கொண்ட பால் ' பளிச் ' வெண்ணிறத்தில் இருக்கும் . இவை குறைவாகக் கொண்ட பால் , வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும் .
* ஒரு கட்டிடம் அது அமைந்திருக்கும் இடத்துக்குள்ளேயே இடிந்து விழுமாறு செய்வது ' இம்ப்ளோசன் ' எனப்படுகிறது . இதற்கு வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Friday, December 3, 2010

உங்களிடம் 3 Q இருக்கிறதா ?

பிசினஸ் மேனேஜ்மென்டில் சொல்லப்படுகிற சமயோசிதம், மற்றவர்களை நம் ஆளூகைக்குள் கொண்டுவருவது, நிதானம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. இந்த மூன்று விஷயங்களைத்தான் Intelligent Quotient ( IQ ), Emotional Quotient ( EQ ), Spiritual Quotient ( SQ ) ஆகிய மூன்று 'Q ' என்கிறார்கள். தமிழில் அறிவு வளம், மன வளம், மற்றும் ஆன்ம வளம் என்று கூறலாம். நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட சில சதவிகிதங்களில் இவை இயற்கையாகவே அமைந்திருக்கும். இவற்றை மேம்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது வெற்றி. எப்படி மேம்படுத்துவது ?
--- -ந. வினோத்குமார். ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Thursday, December 2, 2010

' ஐ.க்யூ '

' ஐ.க்யூ ' வளர்க்கச் சில ஐடியாக்கள்...
* நிறைய வாசியுங்கள்.
* இளமையோடு இருக்க வேண்டும் என்றால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருங்கள். காரணம், வயதான நரி புதிய தந்திரங்களைக் கற்றுக்கொள்ளாது.
* நீங்கள் வலது கைப் பழக்கம் உடையவராக இருந்தால், இடது கையாலும்.... இடது கைப் பழக்கம் உடையவராக இருந்தால் வலது கையாலும் எழுதிப் பழகுங்கள். இதன் மூலம் மூளையின் வேகமும் கவனமும் அதிகரிக்கும். தர்க்க அறிவை வளர்த்துக்கொள்வதற்கு இது ஒரு சின்ன எக்சர்சைஸ் !
* குறுக்கெழுத்துப் புதிர்கள், சுடோகு புதிர்கள் ஆகியவற்றுக்கு விடை காண முயலுங்கள்.
* ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், இன்னொன்றுக்கு தாவிப் பழகாதீர்கள் !
---ந. வினோத்குமார். ஆனந்தவிகடன், 30. 06. 2010.

Wednesday, December 1, 2010

சிவப்பு மிளகாய் !

சிவப்பு மிளகாயின் சித்து விளையாட்டுகள்.
பெருத்த உடம்பை குறைக்க ஆயிரக்கணக்கில் செலவழித்து ஜிம்முக்குப் போக வேண்டாம், ஜாகிங் என்ற பெயரில் தாறுமாறாக தலை தெறிக்க ஓட வேண்டாம். நம் கைக்கு அருகிலேயே இருக்கிறது ஸ்லிம் உடலுக்கான மருந்து. உடல் எடையைக் குறைக்கும் சித்து விளையாட்டுகளை நடத்தும் அது.
உலகம் முழுவதுமே எடை சமாச்சாரம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் உடல் எடையே சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இதய கோளாறுகள் போன்ற பாதிப்புகளுக்கு மூலாதாரமாக இருந்து வருகிறது. இதனால் நாளொரு கிலோவும் பொழுதொரு இஞ்சுமாக பெருக்கும் உடலை குறைக்க அல்லாடி வரும் மக்களை பார்த்து பரிதாபப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இரவும் பகலுமாக ஆராய்ந்து இதை உரக்க சொல்லியிருக்கிறார்கள்.
சிவப்பு மிளகாயில் இருக்கும் கேப்சைசின் என்ற ஒரு சங்கதிதான் கெட்ட கொழுப்புகளுக்கு எதிராக போர் நடத்தி உடல் எடையை குறைக்கிறதாம். உடலில் உள்ள நன்மை பயக்கக்கூடிய புரோட்டீன்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் கேப்சைசின், அதன்மூலம் கொழுப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கிறதாம். மிளகாயில் இருக்கும் கேப்சைசின் கொழுப்பு திசுக்களை சுருங்க வைப்பதோடு ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவையும் குறைக்கிறதாம். மேலும் உணவு என்ற பெயரில் அதிக கலோரிகள் உள்ளே வருவதையும் தடுக்கிறதாம். ஆனால் கேப்சைசின் எப்படி இந்த மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது என்பது மட்டும் இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு புரிபடாத மர்மமாக இருக்கிறது.
கேப்சைசின் இந்த ஆச்சரிய குணத்தை எலிகளை வைத்து பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். இதில் கேப்சைசின் கலந்த உணவுகளை உட்கொண்ட எலிகள் 8 சதவிகிதம் வரை எடை குறைந்திருக்கிறது. அதோடு அதன் உடலில் இருக்கும் கொழுப்புகளை உடைக்கும் புரோட்டீங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது.
--- தினமலர், ஜூன் 13. 2010.