Sunday, November 7, 2010

லூஸ் -- லஸ் !

மயிலாப்பூரில் உள்ள லஸ் என்ற இடத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் தெரியுமா ? சொன்னால் என்னை லூஸ் என்பீர்கள் .
வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா செல்லும் கடல் வழியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து , கி. பி. 1500 -ல் எட்டு போர்ச்சுகீசிய பாதிரியார்கள் இந்தியாவை நோக்கிக் கப்பலில் கிளம்பி , ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கோழிக்கோடு வந்து சேர்ந்தார்கள் . கரை இறங்கியதும் அவர்களில் மூன்று பேர் கொல்லப்படவே , பதறிய மீதி ஐந்து பேரும் கடல் வழியாகப் புறப்படுகிறார்கள் . பயணத்தின்போது புயலில் மாட்டி வழி தெரியாமல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டபோது , மேரி மாதாவைப் பிரார்த்தனை செய்கிறார்கள் .
அப்போது ஓர் இடத்தில் வெளிச்சம் தெரியவே , அதை நோக்கிக் கப்பலைச் செலுத்துகிறார்கள் . அந்த இடம் ஒரு கடற்கரை . .அந்தக் கரையில் இருந்து பார்த்தபோதும் வெளிச்சம் சிறிது தூரத்தில் தெரியவே , அதைத் தொடர்ந்து வருகிறார்கள் . ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் வெளிச்சம் மறைகிறது . அந்த இடத்தில் அந்த பாதிரிகள் மேரி மாதாவுக்கு ஒரு கோயிலைக் கட்டுகிறார்கள் . அவர்கள் இறங்கிய இடம் , மெரினா கடற்கரை . மாதாவுக்குக் கோயில் கட்டிய இடம் இன்றைய லஸ் .
1516 -ல் கட்டி முடித்த அந்த ஆலயத்தை ' நோஸா செஞோரா தெ லூஸ் ' என்று போர்ச்சுகீசிய மொழியில் அழைத்தார்கள் . லூஸ் என்றால் வெளிச்சம் . ' எங்களுக்கு வெளிச்சத்தை அளித்த மாதா ' என்று பொருள் . இன்றும் இந்த ஆலயத்தை மக்கள் காட்டுக் கோயில் என்றும் , பிரகாச மாதா ஆலயம் என்றும் அழைக்கிறார்கள் .
மயிலாப்பூர்வாசிகளுக்கு இந்த ஆலயத்தின் மகிமை தெரியுமா என்று தெரியவில்லை .
--- மனம் கொத்திப் பறவை ! என்ற தொடரில் , சாரு நிவேதிதா . ஆனந்தவிகடன் , 28. 07.2010.

No comments: