Thursday, September 23, 2010

பாரதிதாசன் .

சுப்புரத்தினம் -- பெற்றோர் வைத்த பெயர் . அப்பா பெயர் கனகசபை என்பதால் , கனக. சுப்புரத்தினம் எனும் பெயரால் கவிதைகள் வரைந்தார். தனது குருநாதர் மீதான பாசத்தால், பாரதிதாசன் என்ற பெயரைச்சூட்டிக்கொண்டார் . அவரது கவீதைகளுக்கு புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்ற பட்டங்களே அடையாளம் .
' வளையாபதி ' படத்துக்கு இவர் எழுதிக் கொடுத்த வசனத்தில் சில வரிகள் மாற்றப்பட்டதால் 40 ஆயிரம் பணத்தையும் நான்கு படங்களுக்கான ஒப்பந்தங்களையும் தூக்கி எரிந்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து கம்பீரமாக வெளியேறியவர் !
' உங்களுக்கு எல்லாம் தமிழை நான் வாரிக் கொடுக்கிறேன் . எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசன் ' என்று பாராட்டியவர் கிருபானந்த வாரியார் . ஆத்திகர்களையும் தனது கொஞ்சு தமிழால் ஈர்த்த நாத்திகர் !
புதுச்சேரியில் ஒருமுறை புயல் சுழன்றடித்தபோது இவரை ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குத் தூக்கி எறிந்தது சூராவளி. ஒருமுழுநாள் கழித்து வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்தார். அவரது ' பறந்து திரிந்த ' அனுபவங்களைக் ' காற்றும் கனகசுப்புரத்தினமும் ' என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார் . அந்தக் கதையை மறுபடி மறுபடி சொல்லிக் கேட்டவர் அரவிந்தர் !
நாடு முழுக்க நிதி திரட்டி 25 ஆயிரம் ரூபாயை இவருக்கு வழங்கினார் அண்ணா. ' நான் கொடுக்க நீங்கள் வாங்கக் கூடாது ' என்ற அண்ணா, அந்தப் பணத்தைக் கையில் ஏந்தி நிற்க... பாரதிதாசன் எடுத்துக்கொண்டார் !
ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி புதுச்சேரி வந்தபோது , அவரை போலீஸுக்குத் தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி, நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளி நாட்டுக்கு அனுப்பிவைத்த அஞ்சாமைக்குச் சொந்தக்காரர் !
' சுப்புரத்தினம் எனக்காக ஒரு பாட்டு எழுதேன் ' என்று பாரதியார் கேட்டுகொண்டதும் இவர் எழுதிய பாட்டுதான், ' எங்கெங்கு காணினும் சக்தியடா ! '
பள்ளி ஆசிரியராக 37 ஆண்டுகள் இருந்தார் . அவரை நிம்மதியாக ஓர் இடத்தில் பணியாற்றவிடாமல் 15 பள்ளிகலுக்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள் . ' அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் என்னை மாற்ற மாட்டார்களாம், அரசியல் இல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும் ?' என்று கொதித்தார்!
' அ ' என்றால் அணில் என்று இருந்ததை ' அம்மா ' என்று பாடப் புத்தகத்தில் மாற்றிய அன்பு ஆசான் இவர்தான் !
இசை , மெட்டு குறையாமல் பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர் . தான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் தானே பாடுவார் . ' வீர சுதந்திரம் வேண்டி நின்றார் ' பாடலை இவர் பாடிக்கொண்டு இருக்கும்போதுதான் பாரதியார் இவரை முதன்முதலாகப் பார்த்தார் !
பழனியம்மாள் இவரது மனைவி. இவர்களுக்கு சரஸ்வதி, வசந்தா, ரமணி ஆகிய மூன்று மகள்களும், மன்னர்மன்னன் என்ற மகனும் உண்டு !
' வாழ்க்கை என்பது ஆராய்ச்சியும் இல்லை... அறிவாற்றலும் இல்லை. மக்களுக்கு உழைப்பதுதான் வாழ்க்கை. நன்மைக்கும் உண்மைக்கும் ஒருவன் அன்புடன் எழுதினால் என்றும் நிலைக்கும். அதைத்தான் நான் செய்கிறேன் ' என்றவரின் உடல் புதுச்சேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது, திரண்ட கூட்டம் அவரது கவிதைகக்குக் கிடைத்த அங்கீகாரம். மயானக் கரையில்வைத்து அவ்வை டி. கே. சண்முகம் பாடினார்... ' துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... இனபம் சேர்க்க மாட்டாயா ! '
--- ப. திருமாவேலன் . ஆ. விகடன் , 26. 05. 2010.

2 comments:

Thamizhan said...

ஒரே ஒரு தேன் துளி . நிலவைப் பற்றி யார் யாரோ பாடியுள்ளனர்,புரட்சிக் கவிஞரின் வர்களைப் படியுங்கள் >

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து

நிலவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்

கோல முழுதும் காட்டி விட்டாற் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ !

வானச் சோலையிலே பூத்த தனிப் பூவோ நீ தான் சொக்க வெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ !

காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கி கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ !

க. சந்தானம் said...

Dear Thamizhan , ஒரே ஒரு தேன் துளி....படித்திருக்கிறேன் . ஒரு திரைப்படத்திலும் சீர்காழியார் தனது கணீரென்ற் குரலில் பாடியுள்ளார் , மிக்க நன்றி !