Tuesday, August 31, 2010

ஒரு மாதம் டிராபிக் ஜாம் !

100 கி. மீ., நீளத்துக்கு வாகனங்கள் !
பிசியான சாலையில் டூ வீலரில் போகிறோம் . ரெட் சிக்னல் விழுந்து விடுகிறது . 2 நிமிடம் நிற்பதற்கே வெறுத்து போய் விடுகிறது . யார் யாரையோ சபிக்கிறோம் . இதற்கே இவ்வளவு டென்ஷனாகும் நம்மவர்கள் சீனாவில் நடக்கும் கூத்தை கேட்டால் ரொம்பவே ஆறுதல் அடைவார்கள் .
சீன தலைநகர் பெய்ஜிங் -- ஜாங்கியாகூ நெடுஞ்சாலையில் சாலை சீரமைக்கும் பணி கடந்த 14ம் தேதி தொடங்கியது . சரியான மாற்றுவழி ஏற்பாடு செய்யாததால் வாகனங்கள் இரு புறமும் குவிய தொடங்கின . எப்போதும் பரபரப்பான சாலை என்பதால் வாகன வரிசை கிலோமீட்டர் கணக்கில் நீண்டது . நாளுக்கு நாள் இந்த வரிசை வளர்ந்து இப்போது, அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் நிற்கின்றனவாம் . ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் என்ற அளவில்தான் வாகனங்கள் முன்னேற முடிகிறது .
இதுபற்றி பேசிய ஜாங்கியாகூ நகர டிராபிக் கமிஷனர் ஜாங் மிங் ஹே, ' கடந்த ஆகஸ்ட் 14ல் டிராபிக் ஜாம் தொடங்கியது . இன்னும் நீடிக்கிறது . எப்போது இது சரியாகும் என்று தெரியவில்லை . குறைந்தது 2 வாரமாவது ஆகும் ' என்று அலுத்துக்கொள்கிறார் .டிராபிக் ஜாம் சீன அரசுக்கு கவலை தந்தாலும் இதனால் ஒரு விதத்தில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் . நீண்ட காலம் நீடித்த டிராபிக் ஜாம் என்ற வகையில் இது ஒரு உலக சாதனையாம் .
சாலை பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனத்தினர் கூறுகையில் : செப்டம்பர் 17 க்கு முன்னர் வேலை முடிய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர் . எல்லாம் சரி, டிராபிக் ஜாமில் சிக்கிய வாகனங்களில் இருப்பவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்க முடிகிறதா ? சாப்பாடு, தூக்கம், அரட்டை, சீட்டாட்டம், செஸ் என பொழுது போகிறதாம் .
நம்மூரில் நடப்பது போல டிராபிக் ஜாமை பயன்படுத்தி வியாபாரத்தை தொடங்கிவிட்டனர் உள்ளூர் மக்கள் . ஒரு டம்ளர் சுடுநீரை 14 ரூபாய்க்கு விறபதை தாங்கவே முடியலை என பொங்குகிறார் ஒரு டிரவர் .
சீனா என்றால் எல்லாவற்ரிலும் பிரமாண்டம்தான் . அதற்காக டிராபிக் ஜாமிலுமா ?
--- தினமலர் . 26. 8. 2010.

மனைவி சொல்படி !

மனைவி சொல்படி ஆட்சி நடத்திய ஒரு ராஜாவுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது . நம்மை மாதிரி எல்லோரும் மனைவி ஆலோசனைப்படி நடக்கிறார்களா ? என்று சோதிக்க ஆசைப்பட்டார் . நாட்டின் தளபதியை அழைத்து கருத்து கேட்டார் . அமைச்சரை அழைத்து பேசினார் . எல்லோரும் ' உங்க பாதையில் நாங்களும் செல்கிறோம் ' என்று பதில் சொன்னார்கள் .
திருப்தி ஏற்படாத மன்னர் ' நாட்டின் குடிமகன்களை அழைத்து இதுபற்றி கேட்டார் . மனைவி சொல்படி நடக்கிறவர்கள் ஒரு பக்கம் நில்லுங்கள் . மனைவியிடம் ஆலோசனை கேட்காதவர்கள் மறுபுறம் நிற்க வேண்டும் என்று உத்தரவு போட்டார் . ஒரே ஒருவரைத் தவிர , மற்றவர்கள் அனைவரும் மனைவி சொல்படி நடக்கிறோம் என்று வரிசையில் நின்றார்கள் .
அட , ஒருவராவது சொந்தமாக சிந்தித்து நடக்கிறாரே ? அவருக்கு பரிசு வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜா , அவரை அழைத்து பேசினார் . ' எப்பவுமே கூட்டத்தோடு நிற்காதீங்க .... தனியாக நில்லுங்க 'னு என் மனைவி சொல்லியிருக்கிறார் ... அதான் , தனியே நின்னேன் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் அந்த நபர் ... சிரிப்பை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டார் ராஜா .
--- தமிழக துணை அமைச்சர் , மு. க. ஸ்டாலின் . சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மகளிர் சுய உதவி குழுவில் .
--- தினமலர் ,13 03. 2010 .

Monday, August 30, 2010

பைசா கோபுரம் !

பைசா நகரில் உள்ள தேவாலயத்தின் மணிக்கூண்டாகப் பயன்படுத்தவே 8 மாடிகள் கொண்ட இந்த கோபுரக் கட்டடத்தைக் கட்டத் தொடங்கினர் . கி.பி. 1173 ஆகஸ்ட் 9ம் தேதி கட்டுமானப்பணி தொடங்கியது . போர்கள் மற்றும் கட்டுமானப் பிரச்னைகளால் கி.பி. 1372ம் ஆண்டுவரை இதை உருவாக்கும் பணி தொடர்ந்தது .
இதை சாதாரணக் கட்டடம் போல செங்குத்தாகவே கட்டினர் . அடித்தளம் சரியாக அமைக்கப்படாததால் கி.பி , 1272 ல் கோபுரம் தென்மேற்கு பக்கமாகக் கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பித்தது . இதன்பின் அடித்தளத்தை சிறிது சரிசெய்து கட்டுமானத்தைத் தொடர்ந்தனர் . ஆனாலும் சாய்வு நிற்கவில்லை . 1920ம் ஆண்டில் , அடித்தளத்தை நவீன தொழில்நுட்ப முறையில் சரிசெய்தனர் . இதனால் , 5.5 டிகிரியாக இருந்த சாய்மான அளவு 3.99 டிகிரியாகக் குறைக்கப்பட்டுள்ளது .
பைசா சாய்வுகோபுரத்தின் உயரம் 55.86 மீட்டர் . எடை , 14 ஆயிரத்து 700 டன் . இதன் மாடிகளுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சுழல்படிக்கட்டில் 296 படிகள் உள்ளன !
--- தினமலர் , இணைப்பு . மார்ச் , 12 , 2010 .

Sunday, August 29, 2010

மக்கள் தீர்மானிக்கட்டும் .

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ( இவிஎம் ) தில்லுமுல்லு செய்ய முடியுமா என்ற கேள்வி மறுபடியும் கிளம்பியிருக்கிறது . முடியும் என்று பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டி ' நிரூபித்த ' ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டதால் சந்தேகம் பரவ தொடங்கியிருக்கிறது .
ஹரி பிரசாத் ஆந்திராவை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்சினியர் . நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் ' விட்டா ' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் .இவரும் அமெரிக்க பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஒருவரும், பிறருடைய கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ரகசியங்களை அம்பலப்படுத்தும் நெதர்லாந்து ஜித்தர் ஒருத்தரும் கூட்டணி அமைத்திருக்கின்றனர் . நோக்கம் : இந்திய இவிஎம்களில் மோசடி செய்யமுடியும் என நிரூபிப்பது . இவிஎம்கள் சாதா பேட்டரியில் இயங்கும் . பெரிய பிரோகிராம் எதுவும் கிடையாது . தில்லுமுல்லு செய்ய வாய்ப்பில்லை .
வாய்ப்பு இருக்கிறது என அடித்துச் சொன்ன கட்சிகளுக்கு அதை நிரூபிக்க வாய்ப்பளித்தது தேர்தல் கமிஷன் . யாராலும் முடியவில்லை . இன்று 13 லட்சம் இவிஎம்களுடன் மின்னணு வாக்குப்பதிவில் உலகின் நம்பர் ஒன் நாடு இந்தியா .
இந்த பின்னணியில் பரபரப்பாக டெமோ கொடுத்துள்ளார் ஹரி . அதில் அவர் பயன்படுத்திய இவிஎம் மும்பை அரசு குடோனில் திருடப்பட்டது என தேர்தல் கமிஷன் புகார் கொடுக்க, ஹரி கைதானார் . ஒரு எந்திரத்தை திறக்க முடிந்தால் உள்ளிருக்கும் எதையும் மாற்ற முடியும் . திறக்கவே வாய்ப்பில்லாத சூழலில் தில்லுமுல்லு சாத்தியமில்லை .
ஹரியை விடுவித்து, சர்வகட்சி தலைவர்கள் முன்னிலையில் அவர் டெமோ கொடுக்கவும் அதை பொதுமக்கள் பார்க்க நாடெங்கும் நேரடியாக ஒளிபரப்பவும் தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும் . நேர்மை எப்போதும் சோதனைகளுக்கு அஞ்சுவதில்லை .
---தினகரன். தலையங்கம் , ஆகஸ்ட் 27 , 2010 வெள்ளிக்கிழமை .

Saturday, August 28, 2010

சூரிய மண்டலத்துக்கு வெளியே !

விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு . சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் . மேலும் 7 கோள் .
ஜெனீவா , ஆகஸ்ட் 26 : சூரியனை சுற்றியுள்ள வட்டப் பாதைக்கு வெளியே சூரியன் அளவுக்கு புதிய கிரகம் இருப்பதையும், இதுவரை இல்லாத மிகச் சிறிய கோள் உட்பட 7 புதிய கோள்களையும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
இதுபற்றி ஜெனீவாவில் இரோப்பியன் சதர்ன் அப்சர்வேடரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது :
சூரிய சுற்றுப் பாதைக்கு வெளியே சூரியனைப் போன்ற, அதே அளவில் கிரகம் ஒன்று இருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது .அந்த புதிய கோளின் சுற்று பாதையில் 7 கிரகங்கள் உள்ளன . அதில் ஒரு கிரகம் மிகச் சிறியது . இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் மிகச் சிறியதான அது விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது .
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பெரும்பாலானவை பூமியை விட 13 முதல் 25 மடங்கு பெரியவை . ஒரே ஒரு கிரகம் மட்டுமே பூமியைப் போல 1.4 மடங்கு உள்ளது . பூமியை தவிர்த்து சூரிய மண்டலத்திலும், அதற்கு வெளியிலும் உள்ள கோள்களில் இதுவே மிகச் சிறியது என கருதப்படுகிறது . " புதிய கிரகங்கள் அனைத்தும் பாறைகள், பனிக்கட்டிகளால் ஆனவை . அவை உறுதியானவை . அதன் மேற்பகுதியில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயு இருக்கலாம் . இந்த கிரகங்களில் உயிரினம் வசிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை " என்று ஒரு விஞ்ஞானி தெரிவித்தார் .
--- தினகரன் , 26 ஆகஸ்ட் 2010 .

அட்வைஸ் !

ஈர்க்கும் அட்வைஸ் !
நெடுஞ்சாலை ஒன்றில் ரசித்த ஒரு வாசகம் :
' நீங்கள் ரத்த தானம் செய்ய விரும்புகிறீர்களா ? அதை ரோட்டில் செய்யாதீர்கள் தயவு செய்து ரத்த வங்கியில் செய்யுங்கள் .'
பெட்ரோல் பங்கில் பார்த்த இன்னொரு வாசகம் :
' கவனத்தோடு செல்லுங்கள் ரோட்டில் , மனைவி மக்கள் காத்திருப்பார்கள் வீட்டில் '
--- சுகந்தா சுசீந்தர் , திருச்சி . தினமலர் இணைப்பு . மார்ச் 13 . 2010 .

Friday, August 27, 2010

படிகள் பத்து !

மனித இனம் , விலங்கு இனம் முதலியவற்றைத் தன்னில் கொண்டு அவற்றின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப இறைவன் அவதாரம் எடுத்துப் பூமிக்கு வந்திருக்கிறார் என்று ' பத்து அவதாரம் ' நமக்குப் புலப்படுத்துகிறது . எப்படி ?
1 ) மச்சாவதாரம் : தண்ணீருக்கும் அடியில் உள்ளது மீன் .
2 ) கூர்மாவதாரம் : கொஞ்சம் தண்ணீருக்கு மேலே , கொஞ்சம் கீழே வசிக்கும் ஆமை .
3 ) வராக அவதாரம் : பூமிக்கு மேலே உள்ள மிருகம் . பன்றி .
4 ) நரசிம்மாவதாரம் : விலங்கு நிலையும் , மனித நிலையும் கலந்தது . ( சிங்கம் -- மனிதன் ) .
5 ) வாமனாவதாரம் : குட்டையான மனித நிலைக்கு மாறுதல் .
6 ) பரசுராம அவதாரம் : கோபம் கொண்ட மனித நிலை -- குறையுள்ளது .
7 ) பலராமர் அவதாரம் : சாதாரண மனிதர் .
8 ) கிருஷ்ணாவதாரம் : விளையாட்டும் , வினையும் கலந்த மனிதத் தன்மை .
9 ) இராமாவதாரம் : பொறுமையுடன் விவேகமான மனித நிலை கொண்டது .
10 ) புத்தர் அவதாரம் : மனித நிலை கடந்து மேலான நிலை கொண்டது .
-- சிலம்பொலி செல்லப்பன் . ( 10. 12. 1978 ) ஆனந்தவிகடன் , 10. 03. 2010 .

Thursday, August 26, 2010

கோயில் .

சூரியனின் சுந்தரக் கோயில் .
ஒரிசா மாநிலத்தில் அழகு சிற்பங்களுடன் , ஆன்மிகப் பெருமையுடன் ஜொலிஜோலித்துக் கொண்டிருக்கிறது , கோணார்க் கோயில் . பூரியில் இருந்து 35 கி.மீ., புவனேஸ்வரில் இருந்து 65 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது இந்த சூரியத் திருத்தலம் .
கோணா என்றால் சக்தி மூலை ; அர்க்கா என்றால் சூரியன் . கோணார்க் என்றால் , சூரியன் அருள்பாலிக்கும் சக்தி மூலை . கோயில் எழுந்த பின்னணி சுவாரஸ்யமானது ....
சம்பா என்ற மன்னன் தொழுநோயால் அவதிப்பட்டான் . சூரியனை வழிபட்டால் நோய் நீங்கும் என விமோசன வழி தெரிந்ததும் , இங்குள்ள சந்திரபாகா நதியில் நீராடி சூரியனை நோக்கி தவம் செய்து நோய் நீங்கப்பெற்றான் நேர்த்திக்கடனாக கோயில் கட்டினான் . இந்தக் கோயிலை 13 வது நூற்றாண்டில் கங்க வம்ச மன்னரான நரசிம்மதேவர் புதுப்பித்தார் . ஆயிரத்து 200 சிற்பிகளின் 12 ஆண்டு உழைப்பில் ஆன்மிக அழகு பொக்கிஷமாகப் பிரமாண்டமாக எழுந்தது கோணார்க் கோயில் !
வேற்று மதத்தினரின் படையெடுப்புக்களில் சிதைவுகள் நடந்தாலும் , தேர் வடிவிலான பிரதான கோயில் கம்பீரம் குறையாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது .தேர் வடிவின் நாலாபுறமும் தலா 10 அடி விட்டத்திலான 24 சக்கரங்கள்; முன்பகுதியில் தேரை இழுக்கும் தோற்றத்தில் 7 குதிரைகளின் சிற்பங்கள் உள்ளன . நான்கு மேல்பகுதிகளிலும் உள்ள சூரியபகவானின் சிற்பங்களில் சூரிய ஒளி படரும் அற்புதக் காட்சி , சொர்க்க கற்பனைகளையும் தோற்கடிக்கும் !
முகசாலா என்ற நுழைவாயில் , நடன அரங்கம் , சூரியனின் மனைவியான சாயாதேவியின் கோயில், நடனக்கூடம் , ஆளுயர மனித சிற்பங்கள் , பிரமாண்டமான யானை, குதிரை, காவல் வீரர்கள் சிலைகள், நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கல் தோரன வளைவுகள் என பிரமிக்க வைக்கிறது கோணார்க் கோயில் . இது யுனெஸ்கோவால் சர்வதேச பாரம்பரியக் கலைச் சின்னம் என அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இடம் . ஒரு முக்கியத் தகவல் : இது சிதிலமடைந்த கோயில் என்பதால் , மூலவர் ( சூரிய பகவான் ) விக்ரகத்தை கி.பி. 1696ல் பூரி கோயிலுக்கு மாற்றிவிட்டனர் !
--- தினமலர் , இணைப்பு . மார்ச் 7 2010 .

Wednesday, August 25, 2010

பெண் வக்கீல் ஜுனியர்தான் !

" வெற்றிகரமான வாழ்க்கை நடத்தும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் சக்தியாக இருப்பவள் ஒரு பெண்தான் என்பது உலகம் அறிந்த உண்மை . ஆனால், பெண்ணுக்கு எங்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ? Woman என்றால் Wife Of man என்றுதான் அர்த்தம் , இங்கே !"
-- மிஸ் . வசந்தி . சமூக சேவகி . ஆ. விகடன் . 10. 03. 2010 .

Tuesday, August 24, 2010

கருப்பு பணம் பற்றிய தகவல் !

சுவிஸ் வங்கிகள் சங்கம் அறிவிப்பு . கருப்பு பணம் பற்றிய தகவல் அளிக்க 4 முக்கிய நிபர்ந்தனை. " எல்லா விவரமும் தர முடியாது '
உலகம் மூழுவதும் வரி கட்டாத, கணக்கில் வராத கருப்பு பணத்தை டெபாசிட் செய்து வைக்கும் சொர்க்கபூமியாக சுவிட்சர்லாந்து வங்கிகள் இருப்பதாக இந்தியா உட்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன . எனவே, கருப்பு பண டெபாசிட் பற்றி விவரங்களை அளித்து உதவுமாறு வலியுறுத்தி வருகின்றன .
எனினும், தங்கள் நாட்டில் பணத்தை டெபாசிட் செய்து வளர்ச்சிக்கு உதவும் வாடிக்கையாளர்களின் விவரங்களை வெளிநாடுகளுக்கு தெரிவிக்க சுவிஸ் மறுத்துவந்தது .
இந்நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அளிப்பதில் நான்கு முக்கிய நிபர்ந்தனைகளை நிறைவு செய்தால் மட்டுமே தகவல் அளிக்க முடியும் என்று சுவிஸ் வங்கிகள் சங்கம் ( எஸ்பிஏ ) திடீரென அறிவித்துள்ளது .
வாடிக்கையாளரின் வங்கி கணக்கு விவரத்தை கேட்கும் நாடு, சந்தேகத்துக்குரிய நபரின் அடையாளம், அவர் மீது சுமத்தப்படும் குற்றம், சந்தேகம் எழுவதற்கான காரணங்கள், அவர் கணக்கு வைத்துள்ள வங்கி ஆகியவற்றை அந்தந்த நாட்டின் வருமான வரித் துறை மூலம் எழுத்துப்பூர்வ கோரிக்கையாக அளிக்க வேண்டும் .
அப்படி பெறப்படும் குறிப்பிட்ட கணக்குகள் பற்றிய விவரங்களை மட்டுமே அளிக்க முடியும் என்று எஸ்பிஏ தெரிவித்துள்ளது
--- தினகரன் , ஆகஸ்ட் 23 . 2010..

ரகசியம் -- குழந்தை !

ரகசியம் !
ஒரு ரகசியம் ரகசியமாகவே இருக்க எவ்வளவு பேரிடம் ( அதிகபட்சம் ) அதைச் சொல்லலாம் ?
' நூறு சதவிகித சக்சஸ் ரேட் ' வேண்டுமானால், ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது ! டாக்டர் ஜேம்ஸ் பாரி ( Barry ) , விக்டோரியா மகாராணியிடம் அரசவை சர்ஜனாக 40 வருடங்கள் தொடர்ந்து பணிபுரிந்தார் . அவரைப் பாராட்டி மகாராணி ' ராணுவ ஜெனரல் ' ஆகப் பதவி உயர்வுகூடக் கொடுத்தார் . 1865- ம் ஆண்டு ஜேம்ஸ் பாரி இறந்த பிறகுதான் அதுவரை யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம் வெளிப்பட்டது . அவர் ஒரு பெண் !
குழந்தை !
வளர்ந்த மனிதனைக்காட்டிலும் , பிறந்த குழந்தைக்கு எலும்புகள் அதிகம் . விளக்கம் :
அது உண்மை ! பிறந்த குழந்தைக்கு இருப்பது 350 எலும்புகள் . வயதான பிறகு 206 எலும்புகள் ! குறிப்பாக , மணிக்கட்டு, கால், கை பகுதிகளில் உள்ள எலும்புகள் போகப் போக இணைந்துவிடுகின்றன . இன்னொரு ஆச்சர்யம் - குழந்தையால் மூச்சுவிட்டுக்கொண்டே ( Breathing ) சாப்பிடவும் , விழுங்கவும் முடியும் . நாம் விழுங்கும்போது மூச்சை நிறுத்திக் கொண்டாக வேண்டும் !
--- ஹாய் மதன் . ஆ. விகடன் . 10. 03. 2010 .

Monday, August 23, 2010

பந்தும் , குழலும் !

ஒருமுறை கால்பந்து இறைவனிடம் போய் முறையிட்டதாம் . ' நானும் புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துதான் இயங்குகிறோம் . புல்லாங்குழலை எல்லோரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள் . ஆனால், என்னை மட்டும் எல்லோரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள் . இறைவா ! உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு ? ' என்று ஆதங்கத்தோடு கேட்டதாம் கால்பந்து .
அதற்கு இறைவன், ' புல்லாங்குழல் தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து விடுகிறது . ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறாய் . அதனால்தான், உன்னை எல்லோரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள் ' என்று சொன்னாராம் .
இந்த கதை சொல்லும் கருத்து என்னவென்றால், கருமிகளை காலம் எட்டி உதைத்துவிடும் . ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை, வரலாறு தன் குறிப்பேட்டில் பதித்து வைத்து கொள்ளும்; புகழ்ந்து மகிழும் என்பதுதான் .
--- இப்தார் விருந்தில் செல்வி . ஜெயலலிதா பேச்சு . தினகரன் & தினமலர் . ஆகஸ்ட் 19 . 2010 .

கை குலுக்கல் !

அழுத்தமாகக் கை குலுக்குங்கள் என்பது அடிப்படை மேனெஜ்மென்ட் பாடங்களூள் ஒன்றுதான் . ஆனால், அது எப்படி ? இதற்கும் ஒரு சுலப வழி ஒன்று இருக்கிறது . எதிரில் இருப்பவருடன் கைகுலுக்கும்போது உங்கள் ஆள்காட்டி விரலால் அவரது மணிக்கட்டு நரம்பை மிருதுவாக அழுத்திக்கொடுங்கள் . ( பல்ஸ் பார்க்க மருத்துவர்கள் உங்கள் மணிக்கட்டில் அழுத்திப் பிடிப்பார்களே ... அதேதான் ! ). அந்த நரம்பு நேரடியாக இதயத்துக்கு ரத்தம் பாய்ச்சும் மகா தமனி . அது உணரும் எந்த உணர்வும் , இதயத்தாலும் அழுத்தமாகவே உணரப்படும் . நண்பர்களிடையே இதை முதலில் பழகுங்கள் உஷார் , ' ஃபெதர் டச் ' என்பார்களே... அப்படி இருக்க வேண்டும் உங்கள் அழுத்தம் !
--- கி. கார்த்திகேயன் . ஆ. விகடன் . 06. 01. 2010 .

Sunday, August 22, 2010

பிரயோஜனம் இல்லை !

நமது உடம்பில் உள்ள மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் மூன்றையும் தொடர்ந்து பயன்படுத்தாவிட்டால் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் என்பது மருத்துவ நிஜம் . அதனால்தான் மருத்துவர்கள் தொடர்ந்து சிந்திக்கவும் , வாக்கிங் போகவும் ஆலோசனை சொல்கிறார்கள் . இதே நிலைதான் ஜனன உறுப்புகளுக்கும் !
--- ஆ.விகடன் . 10. 03. 2010 .

Saturday, August 21, 2010

தெரியுமா ? தெரியுமே !

* 1968 -ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸில் கென்னடியைச் சுட்டுக் கொன்றான் சர் ஹான் பிஷாரா என்பவன் . அவனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது . ஆனால், தன் சகோதரனைக் கொன்றவனுக்காக நீதிமன்றத்தில் போராடி ஆயுள் தண்டனையாக குறைத்தார் கென்னடியின் சகோதரர் டெட் கென்னடி .
* ஆண் யானைகள் உறவுக்கு ரெடியாகும்போது அதன் நெற்றியில் மஸ்து என்கிற ஒரு திரவம் சுரக்கும் . அப்போது அவை ஆக்ரோஷமான மனனிலையில் இருக்கும் . பெண் யானைக்கு ஏற்பாடு செய்ய முடியாததால் , ஆண் யானையின் பாகன்கள் அதன்மேல் தண்ணீர் ஊற்றி கூல் பண்ண முயற்சி செய்வார்கள் . ' தேவை கிடைக்காத கோபத்தால் யானைகள் பாகன்களைப் பந்தாடுகின்றன . இதற்கு பெயர்தான் மதம் பிடிப்பது !
* இயேசுவைக் காட்டிக்கொடுக்க 30 வெள்ளிக்காசுகளை வாங்கினான் யூதாஸ் . இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் குற்ற உணர்வு தாளாமல் காசுகளைத் திருப்பிக் கொடுத்தபோது , ' இதை மறுபடியும் கஜானாவில் வைக்க முடியாது , ஏனெனில் ,இது ரத்தத்துக்குக் கிடைத்த விலை ' என்றார்களாம் . இதில் இருந்துதான் ' ப்ளட் மணி ' என்ற வார்த்தை தோன்றியது அதாவது , ரத்தத்துக்கு ஈடாகக் கொடுக்கும் பணம் .
--- ரிவெஞ்ச் விகடன் . 10. 03. 2010 .

Friday, August 20, 2010

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் , அமெரிக்காவை !
* ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக 1945 ம் ஆண்டு செயல்பட ஆரம்பித்தது .
* ஒரு பாஸ்போர்ட் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும் .
* அமெரிக்கா ஒரு மெகா நாடு என்று எல்லோருக்கும் தெரியும் ,. அந்த நாடு 50 மாநிலங்களைக்கொண்டது என்று தெரியுமா ?
* மோனலிசா ஓவியம் பாரீஸ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது .
* அமெரிக்காவின் லிபர்டி தீவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் உயரம் 151 அடி .
* போரில் அமெரிக்கா அணு ஆயுதங்களைப் 1941 ம் ஆண்டு பயன்படுத்தியது .
* நாசா விண்வெளி மையத்துக்கு ' கென்னடி ' என்று அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் சூட்ட்ப்பட்டுள்ளது .
* அமெரிக்காவின் ' ட்வின் டவர்ஸ் ' எனப்படும் ரெட்டைக் கோபுரம் 2001 -ம் வருஷம் செப்டம்பர் 11 -ம் தேதி
தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது . அதன் உயரம் 1368 அடி .
* அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை வாஷிங்டனில் பென்ஸில்வேனியா அவென்யூ என்ற இடத்தில்
அமைந்துள்ளது .
* அமெரிக்காவில் எந்த ஒரு அவசர உதவிக்கும் ( FIRE , MEDICAL EMERGENCY , CRIME ) 911 என்ற தொலைபேசி
எண்ணை மட்டுமே உபயோகிப்பார்கள் ..
* அமெரிக்காவின் புகழ்பெற்ற இடமான ' WALL STREET ' ( சுவர் தெரு ) நியூயாக் நகரத்தில் உள்ளது .
* நியூயாக் நகரம் மன்ஹாட்டன் தீவில் அமைந்துள்ளது .
--- ஆனந்த. விகடன் , பல இதழ்களின் வாயிலாக .

Thursday, August 19, 2010

தேடு .

உன்னைத் தேடு .
அன்பில் அமைதியைத் தேடு
இளமையில் கல்வியைத் தேடு
ஒற்றுமையில் பலத்தைத் தேடு
கோபத்தில் பொறுமையைத் தேடு !
பயணத்தில் விவேகத்தைத் தேடு
சிந்தனையில் அறிவைத் தேடு
சிரிப்பில் ஆரோக்கியத்தைத் தேடு
தோல்வியில் முயற்சியைத் தேடு !
நட்பில் நம்பிக்கையைத் தேடு'
கற்பனையில் கவிதையைத் தேடு
வேதனையில் உறுதியைத் தேடு
வாழ்க்கையில் நீ உன்னைத் தேடு !
--- எஸ். உதயபாலா , கீரனூர் . தினத்தந்தி , இணைப்பு 06.03. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு .

Wednesday, August 18, 2010

கங்கை நதி !

இமய மலைத் தொடரில் கங்கோத்ரி பனிமலையில் கங்கை நதி உருவாகி , உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் , பீகார் , மேற்கு வங்கம் வழியாக ஓடி , வங்க தேசத்தில் கடலில் கலக்கிறது . மொத்தம் 2 ஆயிரத்து 510 கி. மீ., நீளம் கொண்ட கங்கை நதியை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களில் 40 கோடி மக்கள் வசிக்கின்றனர் . நதியை ஒட்டிய நகரங்களின் சாக்கடை மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் கங்கை நதி மாசடைகிறது .
--- தினமலர் . 09 . 03. 2010 .

Tuesday, August 17, 2010

' கோ துவாதசி '

கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் துவாதசி ' கோ துவாதசி ' எனப்படும் . அன்று கன்றுடன் கூடிய பசுவை பூஜித்து வணங்க வேண்டும் . உலகத்தில் உத்தமமமான பிராமணர் , பசுக்கள் இருவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் .இருவரும் ' அமுல்யம் ' அதாவது விலை மதிக்க முடியாதவர்கள் . உலகம் செழிப்பதற்காகப் பிரம்மதேவர் யக்ஞத்தைப்படைத்தார் . அந்த யக்ஞத்திற்கு மந்திரங்களும் ஹவிஸும் மிக முக்கியம் . மந்திரங்கள் உத்தமமான பிராம்மணர்களிடத்தில் இருக்கின்றன . ஹவிஸ் எனும் நெய் பசுக்களிடம் இருக்கிறது .இந்த உலகத்தில் பசுக்களுக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை .
--- பத்மா நாராயணன் , தாராபுரம் . பெண்மனி . டிசம்பர் , 2008 . இதழ் உதவி : K . மகேஷ் , திருநள்ளாறு .

Monday, August 16, 2010

குரல் !

முதல் குரல் !
இந்தியா சுதந்திரம் அடைந்த இரவு 12 மணிக்கு சென்னை வானொலியில் டி. கே. பட்டம்மாளை பாரதியார் பாடலான ' ஆடுவோமே பள்ளு பாடுவோமே ' என்று மகிழ்ச்சி பொங்கப் பாட வைத்து நேரடி ஒலிபரப்பு செய்ய வைத்தது . சுதந்திர இந்தியாவின் முதல் குரல் !
அதேபோல் மகாத்மாகாந்தி இறந்தபோது ' சாந்தி நிலவவேண்டும் ' பாடலை அகில இந்திய வானொலியில் பாடியதும் டி. கே. பட்டம்மாள்தான் .
--- குமுதம் 10 . 03. 2010 .

முத்தம் ...

பிடிவாத முத்தம் ...
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வழங்கவும் இல்லை
ஆனால் பிடிவாதமாக ஒரு முத்தம்
என் கன்னத்தில்....
கொசுக்கடி !
--- ஆர். ப்ரியதர்ஷிணி , திருச்சி .
மனிதக் காட்சி சாலை !
முதியோர் இல்லம்
இது மனிதக் காட்சி சாலை...
பால் குடித்த மிருகம்
அவ்வப்போது வந்து பார்த்துச்
செல்லும் !
---தினமலர் , இணைப்பு . மார்ச் 6 . 2010 .

Sunday, August 15, 2010

துளசியின் பெருமை !.

துளசி இலையின் நுனியில் நான்முகனும் , அடியில் சங்கரனும் , மத்தியில் நாராயணனும் வசிக்கிறார்கள் .
. பனிரெண்டு ஆதித்யர்கள் , பதினோரு ருத்ரர்கள் , எட்டு வசுக்கள் , அசுவினி தேவர்கள் இருவர் வசிக்கின்றனர் .
துளசி இலையின் நீர் கங்கைக்கு நிகரானது . எனவேதான் துளசி நீரால் எம்பெருமான் திருமேனியில் ஆவாஹனாதிகள் செய்கிறார்கள் .
--- தினமலர் . இணைப்பு . மார்ச் 4 , 2010 .

Saturday, August 14, 2010

பாசுரங்கள் 4000 .

ஆழ்வார்கள் பாடிய 4000 பாசுரங்கள் :
பொய்கையாழ்வார் ................100 .
பூதத்தாழ்வார் .........................100 .
பேயாழ்வார் .............................100 .
திருமிழையாழ்வார் .................216 .
மதுரகவியாழ்வார் ........ ..........11 .
நம்மாழ்வார் ............... ..........1,296 .
குலசேகரர்ழ்வார் ........... .........105 .
பெரியாழ்வார் ............................473 .
ஆண்டாள் ..................................173 .
தொண்டரடிப்பொடியாழ்வார் .... 55 .
திருப்பாணாழ்வார் .......................10 .
திருமங்கையாழ்வார் ...............1,361
--- தினமலர் . இணைப்பு . மார்ச் 4 , 2010

Friday, August 13, 2010

தங்கத்தில் மெனு !

தங்கத்தில் சூடான மெனு . விலை ரூ. 11. 65 லட்சம் . நியூயார்க் ஓட்டலில் புதுமை . கின்னஸ் சாதனை படைத்தது .
தங்கத்தில் நகைகள் செய்து உடலை அலங்கரிக்கலாம், தெரியும் . பஸ்பமாக சில பணக்காரர்கள் அதை சாப்பிடுவதாக கேள்விபட்டிருக்கிறொம் . இப்போது 24 காரட் தங்கத்தில் சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிடும் ' பழக் கலவை ' ( டெசர்ட் ) தயார் . விலை ரூ. 11.65 லட்சம் !
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல், கிராண்ட் ஓபுலன்ஸ் சண்டே, அதில் இப்போது கோடீஸ்வரர்களைக் கவர வித்தியாசமான மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அதன் பெயர் ப்ரோஜன் ஹாட் சாக்லேட் . இரவு உணவுக்கு பிறகு சாப்பிடும் பழங்கள் கலந்த டெசர்ட் என்ற ஐட்டம் அது .
அதில் சுவிசர்லாந்தில் இருந்து பெறப்படும் 24 காரட் சுத்தமான திரவ தங்கம் ( சமையலில் பயன்படுத்தக்கூடியது ) சேர்க்கப்படுகிறது .
24 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்படுகிறது . ஒரு டெசர்ட் ரூ. 11. 65 லட்சம் . கோடீஸ்வரர்கள் அப்படியே சாப்பிடலாம் . இந்த டெசர்ட்டை ருசிக்க 2 நாட்களுக்கு முன்பே ஓட்டலுக்கு ஆர்டர் தர வேண்டும் .
--- தினகரன் . 12 ஆகஸ்ட் . 2010.

அருந்ததி பார்ப்பது ஏன் ?

திருமணமான புதுத் தம்பதிகள் பின்னிரவில் அருந்ததி பார்க்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது .
வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி . ஒரு சமயம் தேவேந்திரன், அருந்ததியிடம் வந்து, " ஒரு குடம் கொண்டு வா . குளத்தில் இருந்தோ , கிணற்றீல் இருந்தோ நீர் எடுக்காமல், குடத்தில் நீர் நிரப்பிக் காண்பிக்கிறேன் " என்றான் . அருந்ததி அவன் சொன்னபடியே குடம் கொண்டு வந்தாள் .
தேவேந்திரன் , சிறிது நேரம் தியானம் செய்து விட்டுக் குடத்தைப் பார்த்தான் . குடத்தில் கால் பாகம் நீர் நிரம்பியிருந்தது . பிறகு வாயுதேவன் வந்து தியானம் செய்தான் . அடுத்த கால்பாகம் நீரை மட்டுமே நிரப்பமுடிந்தது . எஞ்சிய அரைக் குடத்தை நிரப்பித் தருவதாகக்கூறி அருந்ததி தியானம் செய்யத் தொடங்கினாள் . சிறிது நேரத்தில் குடம் முழுவதும் நீரால் நிரம்பியது
இதைக் கண்டு தேவேந்திரன் , ஆச்சர்யமடைந்தான் . " தேவர்களால் கூட முடியாத காரியத்தை உன்னால் எப்படி செய்ய முடிந்தது ?" என்று கேட்டான் . அருந்ததி , " என் கணவரை நினைத்து தியானம் செய்ததால்தான் அது சாத்தியமானது " என்று கூறினாள் .
தேவர்கள் எல்லோரும் , அவளூடைய கற்பின் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டியே நட்சத்திரமாகப் பிறக்கும்படி செய்தனர் . அது முதல் திருமணம் முடித்த தம்பதியினர் , கற்புக்கரசியாக விளங்க வேண்டி , அருந்ததி பார்ப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது .
--- நன்றி : ' ஆன்மிகத் தகவல்கள் '
தகவல் : சதாசிவன் , சென்னை . மங்கையர் மலர் . மார்ச் 2010 .

Thursday, August 12, 2010

கவிதை !

* மரம் வாடினால்
தண்ணீர் விடுவேன்
இதயம் வாடினால்
கண்ணீர் விடுவேன்
நீ வாடினால்
உயிரை விடுவேன்
அடிக்கடி
இப்படி ரீல் விடுவேன் .
* அவள் என்னை திரும்பி பார்த்தாள்
நானும் அவளைத் திரும்பி பார்த்தேன்
அவள் மறுபடி பார்த்தாள்
நானும் அவளை மறுபடி பார்த்தேன்
இரண்டு பேருக்கும்
தெரியல விடை !
--- வி. சந்தியா , சென்னை . மங்கையர் மலர் . மார்ச் 2010 .

Wednesday, August 11, 2010

வயர் இல்லா மின்சாரம் !

வயர் இணைப்பு இல்லாமலே இனி மின்சாரத்தை கடத்த முடியும் .
மின்சாரம் , அத்தியாவசிய தேவையான தண்ணீரைவிட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது . மின்சாரத்தைக் கடத்த தாமிர வயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது .குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வயர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும் . சில வேளைகளில் வயர்கள் சேதம் அடைந்தால் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது . இந்த இரு பிரச்னைகளும் இல்லாமல் , வயர் இல்லாமல் மின்சாரத்தை கடத்த முடியும் என்று தற்போது தெரியவந்துள்ளது .
இந்த முறையில் , வயர்களுக்குப் பதிலாக ரேடியோ அலைகள் மூலம் மின்சாரம் கடத்தப்படுகிறது . விளக்குகளை ஆன் , ஆப் செய்யவும் சுவிட்சுகள் தேவையில்லை . ரிமோட் கண்ட்ரோல் போதும் . இதனால் வீட்டில் எந்த இடத்தில் இருந்தும் எந்த அறையில் உள்ள விளக்கையும் இயக்க முடியும் . 300 அடி தூரத்திற்குள்ளாக விளக்கை இயக்கும் வகையில் ரிமோட் தாயாரிக்கப்பட்டுள்ளது .
வயர் இல்லாத இந்த லைட்டிங் சிஸ்டத்திற்கு ' வெர்வ் ' என்று பெயரிட்டுள்ளார் இதைக் கண்டுபிடித்த ஜான் . பி. கார்னெட் .
இவர் ஒரு அமெரிக்க விஞ்ஞானப் பத்திரிகையாலர் ஆவார் .
ஜான் தனது திட்டம் குறித்து கூறுகையில் , " சிறிய அளவிலான வீடாக இருந்தாலும் பல மீட்டர் அளவுக்கு வயர்கள் தேவைப்படும் . மேலும் இதற்காக வயர்ங் செய்து சுவரை துளையிடுவது , சுவிட்ச் பெட்டிகள் அமைப்பது என கணிசமான அளவில் செலவாகும் . குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை பராமரிப்பு செலவு செய்யவேண்டி இருக்கும் .இதற்கெல்லாம் விடை தருகிறது எனது வெர்வ் சிஸ்டம் , கண்ட்ரோலர் மூலம் இயக்க முடியும் . இதுவே பியூஸ் பாக்சாகவும் செயல்படும் . சுற்றுச் சூழலுக்கும் உகந்தது " என்றார் . .
---. தினத்தந்தி இணைப்பு . 27 - 02 - 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு

அற்புத காட்சி !

விண்ணில் ஓர் அற்புத காட்சி .
சனி , செவ்வாய் , வெள்ளி கிரகங்களை அருகருகே பார்க்கலாம் !
செவ்வாய், வெள்ளி, சனிக்கிரகங்கள் முக்கோண வடிவில் அருகருகே தெரியும் அற்புத காட்சியை விரைவில் மாலை நேரத்தில் வானத்தில் பார்க்கலாம் .
வானில் விரைவில் அதிசய காட்சி ஒன்று அரங்கேறப்போகிறது . செவ்வாய், வெள்ளி, சனிக் கிரகங்கள் முக்கோண வடிவத்தில் காட்சியளிக்கும் . இதை , 15 நாட்களுக்கு தினமும் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு திசையில் பார்க்கலாம் .
இந்த கிரகங்கள் அருகருகே இருப்பதுபோல் காட்சியளித்தாலும், அவை நீண்ட தொலைவில் உள்ளன . பூமியில் இருந்து, வெள்ளி கிரகம் 11.38 கோடி கி. மீ. தூரத்திலும், செவ்வாய் 30.6 கோடி கி. மீ. தூரத்திலும், சனிக் கிரகம் 153 கோடி கி. மீ. தூரத்திலும் இருக்கின்றன . இதில், மற்ற கிரகங்களை விட வெள்ளி கிரகம் பூமிக்கு அருகில் இருப்பதால் பிரகாசமாக தெரியும் . 3 கோள்களுக்கு அருகிலேயே நாளை மறுதினம் பிறை சந்திரன் காட்சி அளிக்கும் .
இந்த அற்புத காட்சிகளை பைனாகுலர் உதவியுடன் தெளிவாக பார்க்கலாம் என்று கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் டி. பி. தாரி கூறினார் .
---- தினகரன் , செவ்வாய் , ஆகஸ்ட் 10 , 2010 .

Tuesday, August 10, 2010

சிவாஜி கோட்டை !

இந்திய வரலாற்றில் கம்பீர சக்ரவர்த்தியாக ஜொலிக்கும் மாவீரர் சத்ரபதி சிவாஜியின் தலைநகராகத் திகழ்ந்த இடம் , ராய்காட் மலைக்கோட்டை .
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் இருந்து தெற்காக 210 கி. மீ. தொலைவில் , சஹாயத்ரி மலைப்பகுதியில் , ஈட்டி வடிவ பாறைகளின் மீது 5.12 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து பரந்துள்ளது ராய்காட் கோட்டை .
ஆரம்பத்தில் ரெய்ரி என்று அழைக்கப்பட்டுவந்த இந்த பகுதியை கி.பி. 1656ல் கைப்பற்றிய சிவாஜி ராய்காட் என்று புதுப்பெயர் சூட்டினார் . ' நண்பர்கள் எளிதாக வரும் வகையிலும் , எதிரிகள் நுழைய முடியாதபடியும் கோட்டையை அமைக்க வேண்டும் ' என்று ராஜதந்திர நோக்குடன் சிவாஜி அளித்த உத்தரவுப்படி அபாஜி சோந்தேவும் ஹிரோஜி இந்துல்கரும் , ஒரே ஒரு குறுகிய வழிப்பாதை கொண்ட இந்த கோட்டையை உருவாக்கினார் .
வரலாற்று சிறப்புமிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகம் கி.பி. 1674ல் இங்குதான் நடந்தது . இதே கோட்டையில்தான் 1689ல் சிவாஜி மரணமடைந்தார் . சிவாஜியின் மகன் சாம்பாஜியிடம் இருந்து இந்த கோட்டையை 1689ல் முகலாயர்கள் கைப்பற்றினர் . பின்னர் இதை பிரிட்டிஷார் கைப்பற்றினர் .
கோட்டைப் பகுதியில் பிரம்மாண்டமான சுற்றுச்சுவர்கள், அரண்மனைகள், சிவாஜி வழிபட்ட ஜகதீஸ்வரர் கோயில், தர்பார் மண்டபம், அரியனை, பெண்களுக்கான அரண்மனைகள், எதிரிகளைக் கண்காணிக்க வசதியாக 12 மாடிகள் கொண்ட கோபுரங்கள், பாதாளச் சிறைகள், சந்தைப் பகுதி கட்டடங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் சிதிலங்கள் இந்திய வரலாற்றின் மகத்தான காலகட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன .
இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சித் தர்வாஜாகிராமத்தில் சிவாஜியின் தாய் ஜீஜாபாயின் சமாதி உள்ளது . கோட்டைக்குள் சிவாஜியின் சமாதி உள்ளது .கோட்டைக்குள் ஒரு ஆச்சர்யம் : சிவாஜியின் செல்ல நாயான வாக்யாவின் சமாதி , சிலை !
--- தினமலர். பிப்ரவரி 28 2010 .

Monday, August 9, 2010

பறவை .

" ஒரு பறவை ஒரு மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்தக் கணத்திலும் முறிந்துவிடும் என்ற பயத்தில் அமர்வதில்லை . ஏனென்றால் , அது நம்புவது அந்தக் கிளையை அல்ல , தன் சிறகுகளை "
-- ஜென் சிந்தனை .பேராசிரியர் க. ராமச்சந்திரன் . தினத்தந்தி இணைப்பு . 27 - 02 - 2010 .
இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு

Sunday, August 8, 2010

மெகா கடிகாரம் !

உலகின் மெகா கடிகாரம் சவுதியில் அமைகிறது .
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிக்பென் கடிகாரம்தான் மிகப்பெரிய உயரமான ஒன்றாகும் . ஆனால் , இதைவிட அதிக உயரத்தில் உயர் கோபுர கடிகாரம் மெக்காவில் அமைக்கப்பட உள்ளது . இதற்கான பணிகளை சவுதி அரேபியா தொடங்கியுள்ளது .
இந்த கடிகார கோபுரம் 600 மீட்டர் உயரமானது . லண்டனில் உள்ள பிக்பென் டவர் கடிகாரத்தைவிட 6 மடங்கு உயரமானது . நான்கு புறமும் தோற்றம் கொண்ட இந்த கடிகாரத்தை ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர் . இந்த கடிகாரத்தின் முகப்பு கண்ணாடி மொசைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது . அப்ராஜ் - அல் - பெய்த் என்ற ஓட்டல் மற்றும் குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியாக இந்த கடிகார டவர் கட்டப்பட்டுள்ளது . சவுதி பின்லேடன் குரூப் இந்த கட்டடத்தை கட்டி உள்ளனர் . நகரின் அழகை பார்வையாளர்கள் கண்டுகளிக்க இந்த கடிகாரத்தின் கீழ் பகுதியில் சமதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது . ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து இந்த கடிகாரம் அதிகாரபூர்வமாக செயல்பட துவங்கும் என்று தெரிகிறது .
--- தினமலர் , 8 ஆகஸ்ட் , 2010 .

மூன்றாம் கை !

கைகள் .....
இந்த ஒற்றைச் சொல்லில் இரண்டு அடங்கியிருக்கிறது . ஆம் . பிறக்கும்போதே ஒவ்வொருவரும் இரண்டு கைகளோடு தான் பிறக்கின்றோம் . பிறக்கின்ற எல்லோரும் வாகை சூடி வரலாற்று ஏடுகளில் இடம் பெற்றிருக்கிறார்களா ?
இல்லையே .... சிலர் மட்டும் சிகரங்களைத் தொட்டு இருக்கிறார்கள் . காரணம் , அவர்களிடம் மூன்றாவது கை முளைத்திருக்கும் .அது வெளியில் தெரியாத கை . உள்ளுக்குள் இருக்கும் உன்னதக் கை .
இது என்ன ? புரியாத புதிராக இருக்கிறது என்கிறீர்களா ? ஆம், அந்த மூன்றாவது கைதான் நம்பிக்கை .இதைத்தான் கவிஞர் மு. மேத்தா ,
" இரண்டு கை மனிதரால்
இயலாதது -- ஆனால்
மூன்றாவது கை மனிதரால்
முடியும்
அவர்களுக்கு
வானமும் வசப்படும்
கடலும் தனது
கதவு திறந்து
முத்தெடுத்துக் கொடுக்கும்
முத்தமும் கொடுக்கும்
இரு கை மனிதர்களுக்கு
இணையற்ற அந்த
மூன்றாம் கை எது ?
நானறிந்த வரை
நம்பிக்கை " -- என்பார் .
---.பேராசிரியர் க. ராமச்சந்திரன் . தினத்தந்தி இணைப்பு . 27 - 02 - 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு

Saturday, August 7, 2010

மிதக்கும் நகரம் !

ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடம் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் ! அதுதான் ' பிரீடம் ஷிப் ' என்ற மிதக்கும் நகரம் !
இதன் நீளம் 1,317 மீட்டர்கள் . அகலம் 221 மீட்டர்கள் . உயரம் 103 மீட்டர்கள் . இந்தக் கப்பல் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தைவிட உயரமானது . இரண்டு கால்பந்து மைதானங்கள் சேர்ந்த அகலம் கொண்டது . இவ்வளவு பெரிய ' மெகா ' கப்பல் கடலில் மிதப்பது மட்டுமல்ல , உலகைச் சுற்றிலும் வலம் வரவும் போகிறது .
' பிரீடம் ஷிப் ' பற்றிய எல்லா தகவல்களுமே பிரமிக்கவைக்கின்றன . இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மொத்தம் 17 ஆயிரம் குடியிருப்புப் பிரிவுகள் அமையும் . இக்கப்பல் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டபடி இருக்கும் . இங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்தபடி உலகைச் சுற்றிப்பார்க்கலாம் .
இந்தக் கப்பல் தளங்களின் உச்சியில் சிறு விமானங்கள் இறங்கி ஏறும் வகையில் , 1,158 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையும் , விமானங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அமைக்கப்படும் . உல்லாசப் படகுகளை நிறுத்தும் பகுதி , ஒரு பெரிய வணிக வளாகம் , பள்ளி, கல்லூரி, கோல்ப்மைதானம், சைக்கிள் ஓட்டும் பாதைகள், ஓய்வாய் கழிப்பதற்கு 200 திறந்த வெளிப் பகுதிகள் ஆகியவையும் அமையும் .
இம்மாபெரும் கப்பலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை . இதில் பல உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டு அமைப்புகள் இருக்கும் . விளையாட்டுப் பிரியர்களுக்கு ஏற்ற வசதிகளும் உண்டு . டென்னிஸ், கூடைப்பந்து, ' பவுலிங் ' போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடலாம் . நீச்சல் குளம், பசும்புல் பரப்பு, ' ஸ்கேட்டிங் ' வளையம், செயற்கைக் கடற்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் வசதி போன்றவைகளும் உண்டு .
ஒவ்வொருகுடியிருப்பிலும் 100 உலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், கப்பல் செல்லும் கடலை ஒட்டிய நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளையும் காணலாம் . இணைய வசதியும் உண்டு .
இந்த மிதக்கும் நகரத்துக்கென்று ஒரு தனி பாதுகாப்புப் படையும் உண்டு . இக்கப்பலின் மற்றொரு சிறப்பம்சமாக இது இயற்கைக்கு உகந்ததாக இருக்கும் . இதன் கழிவுகளால் கடல் பாதிக்கப்படாமல் அவை மறுசுழற்சி செய்யப்படும் அல்லது பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கப்படும் .
இவ்வளவு பெரிய கப்பலை கடலில் நகர்த்துவது என்பது எளிதான விஷயமல்ல . அதற்கென்று , தலா 3,700 குதிரைசக்தி திறன் கொண்ட 100 டீசல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் . கற்பனைக்கும் அப்பாற்பட்ட இக்கப்பலை கட்டிமுடிக்க மூன்றாண்டுகளும் , பல்லாயிரம் கோடி ரூபாயும் ஆகும் என்று கனக்கிட்டிருக்கிறார்கள் .
ஆதங்கமான ஒரே விஷயம் , இக்கப்பலில் நிரந்தரக் குடியிருப்பு பெறவும், பயணம் செய்யவும் கோடீஸ்வரர்களால் மட்டுமே முடியும் !
--- தினத்தந்தி , இணைப்பு . 26 - 02 - 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு .

Friday, August 6, 2010

ஒரு நாய் !

ஒரு சிக்கனுக்கு ஒரு நாய் !
சங்கரன் பிள்ளை , அசைவ விடுதி ஒன்றை நடத்திக்கொண்டு இருந்தார் . மெனுவில் , சிக்கன் கட்லெட்டும் ஒன்று . அதில் நாய்க்கறியும் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன . நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் சங்கரன் பிள்ளை .
நீதிபதி : " என்ன இது, சிக்கன் கட்லெட்டில் நாய்க் கறியைக் கலக்குகிறீர்களாமே ? அதுவும் அதிக அளவில் !"
சங்கரன் பிள்ளை : " கலப்பது உண்மைதான் யுவர் ஹானர் . ஆனால், சரிக்குச் சரியாக மட்டுமே ( 50 : 50 ) கலக்கிறேன் !"
நீதிபதி : " பெரிய அளவில் கலப்படம் செய்வதால் , உனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்போகிறேன் !"
சங்கரன் பிள்ளை : " ஆனால் நீதிபதி அவர்களே , நான்தான் அதிகமாகக் கலப்பதில்லையே . சரிக்குச் சரியான அளவுதானே கலக்கிறேன் !"
. நீதிபதி : " அப்படி என்றால் ?"
சங்கரன் பிள்ளை : " ஒரு சிக்கனுக்கு ஒரு நாய் , அவ்வளவுதான் !"
இப்படித்தான் நிறைய பேர் தங்கள் நோக்கத்தில் மட்டும் கவனமாக இருந்து , மற்றவர்கள் நலனை உதரிவிடுகிறார்கள் !
---சத்குரு ஜக்கி வாசுதேவ் , ஈஷா காட்டுப்பூ . செப்டம்பர் 2008 .

Thursday, August 5, 2010

' சூரிய சுனாமி '

சூரிய ' சுனாமி ' அலைகள் பூமியை இன்று தாக்கும் . வெளிவட்டத்தில் திடீர் வெடிப்பு !
வெப்பத்தில் தகிக்கும் சூரியனின் வெளிப்புறத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 01 . 08 . 2010 ) அடுத்தடுத்து இரண்டு ஒளிக்கீற்றுகள் வெளியானதை அமெரிக்க விண்வெளி நிலையத்தின் ( நாசா ) லேட்டஸ்ட் செயற்கைக் கோள் பதிவு செய்தது . அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர் . வெப்பத்தை இதுவரை இல்லாத அதிக அளவில் ஓரிடத்தில் இருந்து வெளியேற்றியதாகக் கூறினர் .
வாண வேடிக்கை போல நடந்த இந்த ஒளி வீச்சு , பூமியை விட பெரியது என்றும் , வெளியேற்றப்பட்ட வெப்ப அலைகள் பூமியை நோக்கி வேகமாக வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர் .மணிக்கு 9.3 கோடி மைல்கள் வேகத்தில் வரும் பூமியை நோக்கி வரும் ' சூரிய சுனாமி ' அலைகள் , இன்று காலையில் பூமி வளி மண்டலத்தை தாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது . அவை பூமியைக் காக்கும் இயற்கை காந்த பரப்பை கடுமையாக தாக்கும் . அதனால் , பிரிட்டன் உட்பட சில நாடுகளில் தகவல் தொடர்பு பாதிக்கப்படக்கூடும் .விண்வெளியில் செயற்கைக் கோள்கள் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் .
சூரியனில் இருந்து பூமியை நோக்கி மிகப் பெரிய அளவில் வெப்ப அலைகள் வெளியாவது இதுவே முதல்முறை . சூரியனிடம் இருந்து பூமியை நோக்கி வெப்ப அலைகள் வெளிப்பட்டுள்ளதால் , வளிமண்டலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு பூமியின் வானிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் .
--- தினகரன் & தினமலர் . 4 ஆகஸ்ட் , 2010 .

நாய்கள் !

டாபர்மன் நாய் இருக்கிறதே , இது அதன் முதலாளிக்கு முன்னே ஓடி முதலாளியையே முன்னுக்கு இழுக்கும் . அல்சேஷன் என்று அழைக்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட் இருக்கிறதே ,இது அதன் உரிமையாளருக்குச் சமமாக நடந்து வரும் . பொமரேனியன் இருக்கிறதே , இது முதலாளி முன்னே நடக்க , அவருக்குப் பின்னால் வரும் .-- லேனா தமிழ்வாணன் . குமுதம் 03.03. 2010 .

Wednesday, August 4, 2010

உழைப்பின் பெருமை !

ஓர் அரசர் பக்கத்து ஊருக்கு வருவதாகக் கேள்விப்பட்டு ஊர் மக்கள் எல்லாம் காடு, கழனி வேலைகளை விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்கப் போனார்கள் . அரசர் ஏதாவது கொடுப்பார் என்று எண்ணம் . ஒரு கிழவி மட்டும் அப்படிப் போகாது , மர நிழலில் உட்கார்ந்து கூடை முடைந்து கொண்டிருந்தாள் . அங்கு வந்த பிச்சைக்கார வழிப்போக்கன் , " பாட்டி நீ அரசரைப் பார்க்க போகவில்லையா ?" என்றான் . " வெட்டிப் பயல்கள் , வேலை இல்லாமல் போய் விட்டார்கள் . நான் உழைக்காமல் போனால் என் குடும்பத்துக்கு யார் சோறு போடுவார்கள் ?" என்று படு சூடாகப் பதில் கொடுத்தாள் பாட்டி .
கலீர் என்று சிரித்த பிச்சைக்காரன் அரச முத்திரையிட்ட தங்க மோதிரத்தைப் பாட்டியிடம் நீட்டினான் . திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் பாட்டி . " அரசனை தரிசிக்கப் போனவர்கள் திரும்பி வந்ததும் , உழைத்துப் பிழைக்கும் உன்னை வந்து அரசரே தரிசித்து விட்டுப் போனார் என்று இதைக் காட்டு " என்று கொடுத்துவிட்டு சிட்டாய்ப் பறந்தார் அரசர் . இதுதான் உழைப்பின் பெருமை .
உழைப்பதால் சக்தி விரயமாவதாகப் பலர் தவறாக நினைக்கிறார்கள் . இல்லை, அது மேலும் பலமடைகிறது . உடல் நலிவடைவதில்லை . பொலிவடைகிறது . உழைத்தவனுக்குப் பசி என்கிற பரிசு கிடைக்கிறது . பசி செரிமானம் என்ற சிறப்பு செய்கிறது . உழைக்காதவனுக்கு உடம்பெல்லாம் வலிக்கிறது . உழைத்தவனுக்கு ஜொலிக்கிறது .
--- சுகி. சிவம் . தினகரன் . 27. 02. 2010 .

Tuesday, August 3, 2010

கப்பல் -- ஆணி !

கடலில் சிறிய இரும்பு ஆணி மூழ்குகிறது ;ஆனால் இரும்பால் ஆன பெரிய கப்பல் மிதக்கிறதே ? இது எப்படி ?
தண்ணீரில் விழும் ஒரு பொருள் தனது எடைக்கு சமமான நீரை இடம் மாற்றினால், அது மிதக்கும் ; ஒரு பொருளின் எடை அது இடம்மாற்றும் நீரின் எடையைவிடக் குறைவாக இருந்தால், அது மூழ்கிவிடும் .
தண்ணீரைவிட காற்றின் அடர்த்தி குறைவு . எனவே, காற்றைக் கொண்டிருக்கும் பொருட்களும் தண்ணீரில் மிதக்கும் .
கப்பலின் வடிவமைப்பு, அது தனது எடைக்கு சமமான கடல் நீரை இடம்மாற்றும் வகையில் உள்ளது . அதோடு , கப்பலுக்குள் காற்றோட்டமும் தாராளமாக உள்ளது . இதனால் , கடலில் கப்பல் மிதக்கிறது .
சிறிய இரும்பு ஆணி மற்றும் இரும்பு பாளங்களின் வடிவமைப்பு , அவை தமது எடைக்கு சமமான நீரை இடம்மாற்றும் வகையில் இல்லை . அவை தமது எடையை விடக் குறைந்த எடையிலான நீரையே இடம் மாற்றுகின்றன . அவற்றுக்குள் காற்றோட்டமும் இல்லை . இதனால் , அவை கடலில் மூழ்கிவிடுகின்றன.
--- தினமலர் . பிப்ரவரி , 26 , 2010.

Sunday, August 1, 2010

ராசி தோசை !

ராசிகளுடன் நமக்கிருக்கும் பிணைப்பைப் பயன்படுத்தி ஒரு புதுமையை வார்த்திருக்கிறார்கள் மதுரை , டெம்பிள் சிட்டி ஓட்டல்காரர்கள் . ராசிக்கேற்ற உணவு வகைகள் என்ற பெயரில் அவர்கள் வழங்கும் ராசி தோசை மக்களை அதிகமாகவே ஈர்த்திருக்கிறது .
வாதம், பித்தம், சிலேத்துமம் என நாடிகளை மூன்றாகப் பிரித்து நோய்களை இனம் கண்டு குணப்படுத்தும் நடைமுறை சித்த மருத்துவத்தில் உள்ளது . இதை அடிப்படையாகக் கொண்டு ராசிநாதனுக்கு உரிய கிரகங்களுக்கு உரிய தானியங்களையும் நம் முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர் .
குரு, புதன் ஆகிய கிரகங்களுக்கு கொண்டை கடலை , சனி பகவானுக்கு எள் , சூரியன் , செவ்வாய் மற்றும் ராகுவுக்கு உளுந்து , கேது பகவானுக்கு கொள்ளு , சுக்கிரன் மற்றும் சந்திரனுக்கு மொச்சை , என தானியங்களை வகைப்படுத்தியுள்ளனர் .இதே போல் ஒவ்வொரு கிரகத்துக்கு உகந்த சுவையும் உண்டு . சூரியனுக்கு காரம், சந்திரனுக்கு இனிப்பு, செவ்வாய்க்கு துவர்ப்பு, புதனுக்கு உப்பு, குரு மற்றும் சுக்கிரனுக்கு தித்திப்பு, ராகு மற்றும் கேதுவுக்கு புளிப்பு என்பது ராசிநாதனுக்குரிய சுவை பட்டியல் .
மேஷ ராசிக்காரர்களுக்கு துவரம் பருப்புடன் கூடிய சாம்பார், ரிஷபத்துக்கு மொச்சை பயறு மசாலாவுடன் கூடிய தோசை, மிதுனத்துக்கு பச்சை பயறு வகையுடன் கூடிய தோசை, சிம்மத்துக்கு காரசார சைடுடிஷ்களுடன் கூடிய கோதுமை தோசை, கன்னி ராசிக்காரர்களுக்கு பச்சைப் பட்டாணி மசாலா தோசை, துலாம் ராசிக்கு சென்னா மசாலா தோசை, விருச்சிகத்துக்கு நவரச தோசை , தனுசுக்கு வெங்காய ஊத்தப்பம், மகரத்துக்கு வெங்காயத்துடன் கூடிய எள்ளு தோசை, கும்பத்துக்கு உருளைக் கிழங்கு மசாலா, எள்ளு தோசை, மீனத்துக்கு கொண்டை கடலை மசாலா தோசை என்று அந்தந்த ராசிகளுக்குரிய தானியங்கள் மற்றும் சுவைகளை அடிப்படையாக வைத்து தோசை வார்த்து வழங்குகிறார்கள் .
மேலும் ராசி தோசை என்பதால் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் சாதாரண தோசைகளுக்கான கட்டணமே வசூலிக்கப்படுகிறது .
---ஜோதி , தினமலர் . பிப்ரவரி 21 , 2010 .