Sunday, July 25, 2010

தினகரன்

ஜூலை 25 , 2010 ஞாயிற்றுக்கிழமை .
உடல் இளைக்க வழி
குண்டாக இருப்பவர்களுக்கு வரி விதிக்கலாமா என பல நாடுகள் யோசித்து வருகின்றன . ஜெர்மனி அரசு அதற்கான சட்டத்தை தயாரித்து கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை உருவாக காத்திருக்கிறது . அனைவருக்கும் மருத்துவ வசதி வழங்குவதற்கு ஆகும் செலவு அதுகரித்து வருவதை சமாளிக்க முடியாமல் அரசுகள் இந்த யோசனைக்கு தள்ளப்படுகின்றன .
உயரத்துக்கு பொருந்தாத அதிக எடையை ஓவர் வெயிட் அல்லது ஒபிசிட்டி என்கின்றனர் டாக்டர்கள் . எடையை ( கிலோ ) உயரத்தின் ( மீட்டர் ) மடங்கால் வகுக்கும்போது வருவது பி. எம்.ஐ என்ற குறியீடு . அது 25 க்கு மேல் இருந்தால் அது ஓவர் வெயிட் ; 30 ஐ தாண்டினால் ஒபிசிட்டி . இந்த கண்டிஷன் வந்தால் ஆபத்தான பல நோய்களுக்கு உடலின் கதவுகள் திறந்துவிட்டதாக அர்த்தம் .
உடல் உழைப்பு குறைந்த சொகுசு வாழ்க்கையால் உலகம் முழுவதும் மக்கள் குண்டாகிக் கொண்டிருக்கிறார்கள் . பெல்ஜியம் போன்ற சில நாடுகளில் ராணுவ வீரர்களே நம்மூர் போலீஸ் மாதிரி தொப்பை சுமக்கின்றனர் . இதனால் நோய்களும் அதற்கான சிகிச்சையும் அரசுக்கு செலவும் அதிகரிக்கின்றன . ஜெர்மனி அரசுக்கு இந்த வகையில் ஆண்டுக்கு ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது . இதற்கு முடிவு கட்ட பல வழிகலை ஆராய்கின்றனர் .
கேன்சர் உண்டாக்கும் பீடி, சிகரெட் மீது அதிக வரி விதிப்பது போன்று , உடலில் கொழுப்பு சேர உதவும் சாக்லேட் போன்ற தின்பண்டங்களுக்கும் வரி விதிக்கலாம் என்பது ஒரு யோசனை . கோலா, சிப்ஸ், கேக், பீஃப் என்று பெரிய பட்டியல் பரிசீலிக்கப்படுகிறது . குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் முதலில் எடை மெஷினில் ஏறச் சொல்லி , எடை கூடியிருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் தீர்மானம் போட்டிருக்கிறது . ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் நல்லது என்ற அக்கறை . இந்த ரீதியில் போனால் விமான , பஸ் , சினிமா டிக்கெட் கட்டணத்தை எடைக்கு ஏற்றபடி உயர்த்தும் திட்டமும் அமலுக்கு வரலாம் .
தவறான வாழ்க்கை முறையால் உடல் நலம் பாதிக்கப்படுபவர்களுக்காக எங்கள் வரிப் பணத்தை அரசு ஏன் செலவிட வேண்டும் என குண்டாகாத மக்கள் கேட்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது . உடல் நலத்தில் அக்கறை காட்ட மக்களை தூண்டும் என்கிற வகையில் இந்த யோசனகளை பரிசீலிக்கலாம் .
--- தினகரன் , தலையங்கம் . ஜூலை 25 , 2010 ஞாயிற்றுக்கிழமை

No comments: