Monday, July 26, 2010

' ரோல்மாடல் யார் ? '

" என் ரோல்மாடல் என் ஆசிரியர்கள்தான் . அவர்கள் இன்றி நான் இல்லை . எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர்கள்தான் அவர்களின் ரோல்மாடலாக இருக்க வேண்டும் . மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் பதினேழு வருடங்களை , அதாவது இருபத்தைந்தாயிரம் மணித்துளிகளை ஆசிரியர்களிடம் செல்வழிக்கிறார்கள் . பிறகு ஆசிரியர் அன்றி வேறுயார் ரோல்மாடலாக இருக்க முடியும் ?"
சொன்னவர் யார் ? டாக்டர் அப்துல் கலாமைத் தவிர வேறு யார் சொல்லியிருக்க முடியும் என்று இந்நேரம் யூகித்துவிட்டு இருப்பீர்கள் .
இன்று நாடு கொண்டாடும் கலாமை நாம் பெற்றதற்கு இரக்க குணமுள்ள ஒரு பழைய பேப்பர் கடைக்காரர்தான் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா ?
சென்னை எம். ஐ. டி . கல்லூரியில் கலாம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அவரது தந்தையிடமிருந்து வந்த ஒரு கடிதம் , கலாமின் இதயத்தைக் கிழித்தது . ராமேஸ்வரம் புயலில் கலாமின் வீடு சிதிலமடைந்தது . தந்தையாரின் சிறிய கப்பலை கடல்னீர் கபளீகரம் செய்துவிட்டது . ' படிப்பை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் . எப்படியாவது பணம் புரட்டிக்கொண்டு வீட்டுக்கு வா ' என்று கட்டளையிட்டு விட்டது கடிதம் .
எப்படி பணத்தைப் புரட்டுவது ? கையில் இருந்த புத்தகங்கள் மட்டுமே கலாமின் சொத்து . படிப்பு கிடக்கட்டும் , குடும்பத்தைப் பார்ப்போம் என்று கனத்த மனதோடு தன் புத்தகங்களைப் பழைய பேப்பர்க் கடையில் போடுகிறார்.
கலாமின் புத்தகங்களைக் கண்ணுற்ற அந்த ஈரமனதுக்காரர் நிலமையை விசாரிக்கிறார் . ' படிக்கிற பையன் புக்கையெல்லாம் விக்காதேப்பா , உனக்கு வேண்டிய காசை இப்போது தர்றேன் . தைரியமா ஊருக்குப் போயிட்டு வா ! '
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த பேப்பர் கடைக்காரர் ஒருவேளை கலாமுக்கு உதவியிருக்காவிட்டால் ?
--- நூல் : அப்துல் கலாம் ; கனவு நாயகன் . ஆசிரியர் : ச. ந. கண்ணன் .
--- புதிய தலைமுறை . 14 ஜனவரி 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: