Monday, July 5, 2010

பெரிய கோயில் .

தஞ்சை பெரிய கோயில் .
1010 ல் முதல் கும்பாபிஷேகம் . ஓலைச் சுவடியில் ஆதாரம் .
தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் மேல் உள்ள கலசம் பற்றியும் , பிற்காலத்தில் நிகழ்ந்த கும்பாபிஷேகங்களை விவரிக்கும் வகையில் ஓலைச்சுவடி கிடைத்துள்ளது . சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள அந்த ஓலைச்சுவடியில் பெரிய கோயிலுக்கு ராஜராஜசோழன் முதன்முதலில் கும்பாபிஷேகம் செய்தது கி. பி. 1010 ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் தற்போது கோயிலின் உச்சியில் காணப்படும் கலசம் 12 அடி உயரமுடையது . இது 1729 ம் ஆண்டில் அங்கு பொருத்தப்பட்டதாகும் . 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விமானத்திற்கு பொற்தகடுகள் வேய்ந்ததோடு 3,083 பலம் ( கிலோ ) எடையில் செப்புக்குடம் ராஜராஜன் அளித்தார் என்றும் ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளது .
மேலும் அதில் சக ஆண்டு 1795 சோபகிருது வருடம் ஆவணி 24 சுக்ல பட்சம் சதுர்தசி குருவாரத்தில் சிவாஜி மன்னரால் ஒரு முறையும் , அதற்கு முன்பு சக ஆண்டு 1,611 சௌமிய வருடம் முதல் சரபோஜி மன்னரால் ஒரு முறையும் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளன . இவை முறையே 1843 செப்டம்பர் 7 ம் தேதியையும் , 1729 ம் ஆண்டையும் குறிக்கிறது .
ஓலைச்சுவடியில் உள்ள இதே தகவல் சரஸ்வதி மகாலில் உள்ள ஒரு மோடி ஆவணத்திலும் கூறப்பட்டுள்ளது . 1797 ல் ஆங்கிலேயர் ஒருவர் பெரிய கோயிலின் உச்சிவரை ஏறினார் . ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆங்கிலப் படையினரின் தங்குமிடமாகவும் கோயில் பயன்பட்டதாகவும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது .
1857 ல் லாம்ண்டன் என்ற ஆங்கிலேயர் கோயிலின் உச்சியில் சென்று நில அளவை செய்வதற்கு கயிறு கட்டி நிலஅளவை கருவியை ஏற்றும்போது கயிறு அறுந்து அக்கருவி உடைந்ததாக அவர் எழுதிய குறிப்பு உள்ளது .
--- தொல்லியலாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தினகரன் 11 . பிப்ரவரி 2010 ..

No comments: