Thursday, March 4, 2010

சுதந்திரதேவி சிலை !

அமெரிக்க சுதந்திர தின நூற்றாண்டு விழாவுக்கு பிரான்ஸ் மக்கள் பரிசாக அளித்த சுதந்திரதேவி சிலை 1886 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ம் தேதி , நியூயார்க் நகரில் திறந்து வைக்கப்பட்டது .
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் விடுதலை பெற்று விட்டதாக அமெரிக்க சுதந்திர பிரகடனம் 1786ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வெளியிடப்பட்டது . இதன் நூற்றாண்டு விழா 1886 ம் ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது .
இதற்கு முன்னதாக அமெரிக்க சுதந்திர தின நூற்றாண்டு விழாவுக்கு ஒரு மாபெரும் பரிசை பிரான்ஸ் மக்கள் வழங்கவேண்டும் என்று அமெரிக்க சரித்திரம் எழுதிய பிரெஞ்சு அரசியல்வாதி எட்வர்டு டி லாபோலயே யோசனை கூறினார் . இதற்காக ஒரு பிரம்மாண்ட சிலை வடிவமைக்க பிரெஞ்சு கலைஞர் பிரட்ரிக் பார்தோல்டி கேட்டுக்கொள்ளப்பட்டார் . சிலையின் உட்புற கட்டுமான வடிவமைப்புக்கு ஈபிள் டவர் வடிவமைப்பாளர் மாரிஸ் கோச்லின் உதவி செய்தார் . இதற்காக பிரான்ஸ் நாட்டில் நன்கொடைகள் , இசை நிகழ்ச்சிகள் , லாட்டரி மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் பிராங்க் நிதி திரட்டப்பட்டது .
சிலை உருவாக்கும் பணி 1870ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது . தாமிரம் கொண்டு மாபெரும் சிலை உருவாக்கப்பட்டது . இது 350 தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு , 214 பெட்டிகளில் அடைக்கப்பட்டு கப்பல் பயணத்துக்கு தயாரானது . ஐசெரி என்ற பிரெஞ்ச் கப்பலில் பெட்டிகள் ஏற்றப்பட்டு , நியூயார்க் துறைமுகத்துக்கு 1885ம் ஆண்டு ஜூலை மாதம் வந்திறங்கின . நியூயார்க் நகரில் சிலைக்கு பீடம் அமைக்கும் பணியை அமெரிக்கர்கள் ஏற்றுக்கொண்டனர் . நியூயார்க் துறைமுகம் அருகே பெட்லோ தீவில் பீடம் அமைக்கும் பணி 1886ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது . பின்னர் , பீடம் மீது சிலை நிறுவப்பட்டது .
சுதந்திர தேவி சிலையின் உயரம் 151 அடி ஆகும் . பீடத்தையும் சேர்த்து 305 அடி உயரத்திற்கு கம்பீரமாக சிலை நின்றது . தலையில் கிரீடம் , கால்களுக்கு அடியில் உடைந்த சங்கிலி , வலது கையில் தீபம் , இடது கையில் சுதந்திர பிரகடன தேதி பொறிக்கப்பட்ட கல்வெட்டு தாங்கி சுதந்திரதேவி கம்பீரமாக நின்றார் . அப்போதைய அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லேண்ட் சிலையை திறந்து வைத்தார் . 1902 ம் ஆண்டு வரை கலங்கரை விளக்கமாக இது செயல்பட்டது . அமெரிக்காவில் மின்சார விளக்கு பயன்படுத்திய முதல் ' லைட் - ஹவுஸ் ' இதுதான் . உலகின் ஏழு புதிய அதிசயங்கள் பட்டியலில் சுதந்திரதேவி சிலை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
--- தினமலர் . 28 - 10 - 2009 .

No comments: