Wednesday, March 31, 2010

' Palindrome '

வலமிருந்து இடமாக படித்தாலும் அதே வார்த்தையாக அமைவதுதான் ' பாலின்ட்ரோம் ' . தமிழில் ' விகடகவி ' என்பது போல ! ஆங்கிலத்தில் ' பாலின்ட்ரோம் ' உபயோகித்தே உரையாடுகிற மன்னர்கள் உண்டு . ஓட்டோ ராட்காட் இதில் கில்லாடி ! பிரிட்டனில் 9 . 3 . 39 -- ல் பிறந்தார் அவர் . ஆச்சர்யம் .... பிறந்த தேதியே பாலின்ட்ரோம் !
அவரிடம் ஒரு பேட்டியில் , ' உங்களுக்கு என்ன கார் பிடிக்கும் ?' என்றதற்கு ' Race Car ' என்றார் அவர் . ( திருப்பிப் படியுங்கள் ! ) . ' சாதாரண காரில் என்ன மாடல் பிடிக்கும் ?' என்றதற்கு ' A Toyota ' என்று பதில் வந்தது . ' சினிமாவுக்கு போவீர்களா ? வீட்டில் டி. வி. தானா ?' என்றதற்கு ' Same nice Cinemas ' என்றார் ராட்காட் .
கடவுளுக்கும் பாலின்ட்ரோம் பிடிக்கும் என்று தோன்றுகிறது . எல்லா பிரச்னைகளையும் ஆரம்பித்து வைத்தவர் பெயரை Eve என்று வைத்தவராச்சே !
--- ஹாய் மதன் , 24 . 06 . 2001 .

Tuesday, March 30, 2010

புத்தரின் பல் !

புத்தரின் பல் எங்கே இருக்கிறது ?
கி. மு. 500 -ம் நூற்றாண்டில் புத்தர் இறந்தவுடன் அவரது சீடர்கள் புத்தரின் உடலை எரித்துவிட்டார்கள் . புத்தரின் பெண் சீடரான கீமா என்பவர் மட்டும் , புத்தரின் நினைவாக ஒரே ஒரு பல்லை எடுத்துவைத்துக் கொண்டார் . அந்தப் பல்லை அப்போதைய கலிங்கத்து மன்னன் ( இப்போதைய ஒரிஸ்ஸா ) பிரம்மதாத்திக்கு அன்புப் பரிசாக கொடுத்தார் .
' புத்தரின் பல் எந்த நாட்டில் இருக்கிறதோ , அங்கே மழை பெய்யும் . செல்வம் கொழிக்கும் . சுபிட்சம் வரும் ' என்று சென்டிமென்ட்கள் பரவ ஆரம்பிக்கின்றன . வறட்சியில் வறளும் பல அரசர்கள் , புத்தரின் பல்லைக் குறிவைக்கிறார்கள் . அமைதி படிக்கச் சொன்ன புத்தனின் பல்லுக்காகப் பல்லாயிரம் உயிர்கள் மடிகின்றன . புத்தரின் பல் பல அரசுகளின் கைமாறிச் சென்றுகொண்டே இருக்கிறது .
புத்தர் இறந்து 800 ஆண்டுகள் கழித்து , மீண்டும் கலிங்க நாட்டுக்கு வருகிறது புத்தரின் பல் . அப்போது கலிங்கத்தின் அரசனாக இருப்பவர் குஹசீவா . இந்தப் பல்லால் தன் நாட்டில் பல அதிசயங்கள் நிகழ்வதாக நம்புகிறார் குஹசீவா . தகவல் வெளியே பரவி , மீண்டும் பல்லுக்காகப் பல போர்கள் ஆரம்பிக்கின்றன . பல்லைக் காப்பாற்ற குஹசீவா , தன்னுடைய மகள் , மருமகனிடம் பல்லைக் கொடுத்து இலங்கைக்கு அனுப்பிவைக்கிறார் . இலங்கை ராஜா குஹசீவாவின் குடும்பத்தை ராஜமரியாதையோடு வரவேற்று , பல்லை வாங்கிக் கொள்கிறார் . இன்றும் புத்தரின் பல் இலங்கை கண்டியில் உள்ள புத்த மதக் கோயிலில் பத்திரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது . இதுதான் புத்தரின் பல் வரலாறு .
--- சார்லஸ் . ஆனந்தவிகடன் , 28 . 10 . 2009 .

Monday, March 29, 2010

ஹாய் மதன் பதில்கள் !

ஸீல் !
ரொம்ப 'ரிச் ' சான தாய்ப்பால் தரும் பிராணி ' ஸீல் ' தான் ! பிரசவமான சில நிமிடங்களில் குட்டி ஸீல் நேராகத் தாயை நோக்கித் தானாகத் தவழ்ந்து சென்று பால் குடிக்க ஆரம்பித்துவிடும் ! அந்தப் பாலின் சக்தி ஆச்சரியமானது . மிகச் சிறந்த ஜெர்ஸி பசுவின் பாலைவிடப் பன்னிரெண்டு மடங்கு கொழுப்புச் சத்தும் , நாலு மடங்கு புரோட்டீன் சத்தும் ஸீல் பாலில் உண்டு . வேறென்ன...? இந்தப் பாலைக் குடிக்கும் குட்டிகள் படுவேகமாக வளர்கின்றன !
-- 18 . 06 . 2000 .
தலைநகர் !
சிங்கப்பூரைத் தவிர , பத்து நாடுகளுக்குத் தலைநகரின் பெயரும் நாட்டின் பெயரும் ஒன்றே ! ( ஒரு எழுத்துக்கூட மாறாமல் ! ) . அவையாவன : ஆண்டோரா , ஜிபௌடி , கடமேளா , குவைத் , லக்ஸம்பர்க் , மெக்ஸிகோ , மொனாக்கோ , பனாமா , ஸான்மரீனோ மற்றும் வாடிகன் !
--- 28 . 11 . 200
அகண்டவெளி , விண்வெளி .!
அகண்டவெளி ( Cosmos ) , விண்வெளி ( Space ) வித்தியாசம் .
காஸ்மோஸ் என்பது மொத்தமாக அகண்ட வெளியைக் குறிக்கும் . அதில் ஒரு துளிதான் விண்வெளி -- Space ! பூமியைச் சுற்றியிருக்கும் வாயு மண்டலம் ஐந்து ' லேயர் ' களால் ஆனது . ட்ரோபோஸ்பியரில் ஆரம்பித்து ( 10.5 மைல்வரை ) எக்ஸோஸ்பியர் வரை ( 310 மைல் ) ! அதற்குமேல் outer space !
--- 07 . 01 . 2001 ..

Sunday, March 28, 2010

பேராசிரியர் !

ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் என் வீட்டிற்கு வந்திருந்தார் . என் கணவரின் நண்பர் அவர் . பல விஷயங்களைப் பற்றிப் பேசிய அவர் , " உன் மனைவி ' ஈ ' யா , ' ஐ ' யா " என்று கேட்டார் , என் கணவரை . என் கணவருக்கு ஒன்றும் புரியவில்லை . பிறகு அவரே விளக்கினார் .
" ஆங்கிலத்தில் ' மனைவி ' யை ' better half ' -- உயர்ந்த மறுபாதி என்பார்கள் . அதன்படி சிலருக்கு மனைவி ' better half ' ஆக அமையும் . சிலருக்கோ ' bitter half ' ஆக ( அதாவது உயிரை எடுக்கும் மனைவியாக ) அமைவதுமுண்டு . அதுதான் ' E ' யா , ' I ' யா என்று கேட்டேன் ,"
--- என் . குமார் . குமுதம் .
தாத்தாவின் வேடிக்கை !
என்னுடைய தாத்தா எதையும் வேடிக்கையாகவும் , மனதில் படும்படியும் நன்றாக விளக்குவார் .
அவரிடம் , " நான் equality என்பதற்கு பொருள் என்ன ? " என்று கேட்டேன் . அதற்கு அவர் கூறிய விளக்கம் :
ஈக்கு உள்ள ' க்வாலிடி ' ( குணம் ) ' ஈக்வாலிடி ' , ' ஈ ' அருவருப்பான பண்டங்களையும் வித்தியாசமில்லாமல் மொய்க்கிறது . அதுபோல சமத்துவமாக இருப்பது தான் ' equality ' .
--- மாலாராமசுப்ரமணியம் . குமுதம் .

Saturday, March 27, 2010

தந்தி .

வெளியூரில் நடைபெறும் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண தினத்தன்று காலையில் ' Wish You A Happy Wedding ' என்று தந்தி எழுதிக் கொண்டு தபாலாபீசுக்குச் சென்றேன் . ' தந்தி லைனி ' ல் கோளாறு காரணமாகத் தந்தி சாயங்காலம்தான் போய் சேரும் என்றார் தந்தி குமாஸ்தா . திருமணமோ பகல் 12 மணிக்குள் . என்ன செய்வது ? ஒரு ஐடியா தோன்றியது . திருமண தினத்தன்றே முதலிரவும் வைத்திருபதாக நண்பர் சொல்லியிருந்தது ஞாபகம் வரவே , தந்தியில் பின்வருமாறு ஒரு சிறு மாற்றம் செய்து அனுப்பினேன் :
" Wish You A Happy Bedding "
--- ஆர் . ரகோத்தமன் . குமுதம் .

Friday, March 26, 2010

அறிவிப்பு .

ஓட்டல் ஒன்றில் வாசலில் காணப்பட்ட அறிவிப்பு :
" தற்போது ' Non - Vegetarian ' ஆக இயங்கிவரும் இந்த ஓட்டல் விரைவில் ' Vegetarian ' ஓட்டலாக மாற்றி அமைக்கப்படும் என்பதை மட்ட ( ன )ற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
--- நிர்வாகி . குமுதம்

Thursday, March 25, 2010

ஆகா , அது .

சிவ பக்தரான வணிகரொருவர் , சிவனடியார் ஒருவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார் .
அவர் மனைவி , " காய்கறி எதுவும் இல்லையே ? நம் வீட்டுக் கொல்லையில் கீரை நிறைய பயிராகியிருக்கிறது . போய்ப் பறித்து வாருங்கள் ," என்றாள் . வணிகர் தோட்டத்துக்கு ஓடினார் . சிவனடியாரும் வணிகருடன் சேர்ந்து கீரை பறித்தார் .
வணிகரின் மனைவி இருவர் பறித்து வந்த கீரையையும் தனித்தனியாக நறுக்கி , தனித்தனிப் பாத்திரத்தில் சமைத்தாள் .
பிறகு சிவனடியார் பறித்து வந்த பாத்திரத்தை மட்டிலும் சுவாமி படத்திற்கு முன் வைத்து நிவேதனம் செய்தாள் . தான் பெரிய மகான் என்பதால் தன் கீரையை மட்டும் நிவேதனத்துக்கு உகந்ததாக எண்ணிச் செய்திருக்கிறாள் என்று வந்திருந்தவர் பெருமையுடன் நினைத்துக்கொண்டார் . வணிகரின் மனைவியிடமும் அப்படியே கூறினார் .
அந்த அம்மாள் சிரித்துக் கொண்டே சொன்னாள் : " அப்படி இல்லை , சுவாமி . நீங்கள் இருவரும் கீரை பறித்துக் கொண்டிருக்கும்போது , என் கணவர் சிவ நாமத்தைத் தன் வாயால் சொல்லிக் கொண்டே பறித்தார் . ஆகவே அவர் பறித்த கீரை அப்போதே இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது . தாங்கள் வெறுமே கீரையைப் பறித்ததால் தங்கள் கீரையைத் தனியாகச் சமைத்துத் தனியாக நிவேதனமும் செய்தென் ."
--- திரு , ஹரிதாஸ் சுவாமிகள் கூறக் கேட்டது .

Wednesday, March 24, 2010

அகத்தியர் உவமை !

அகத்தியர் ஓர் உவமை மூலம் ஐந்து விதமான கீரைகளைப்பற்றிக் கூறுகிறார் . இவைதான் அந்தக்கால ' வயாக்ரா ' கிரைகள் !
" நறுந்தாளி நன் முருங்கைத்
தழை
தூதுவளை நற்பசலை
வாளில் அறுகீரை
நெய்வார்த்து உண்ணில்
யாளியென விஞ்சுவார்
போகத்தில் "
யானையைவிடப் பெரிதான ' யாளி ' தற்போது இல்லை . கோயில் சிலைகளில் மட்டுமே ' யாளி ' எனும் மிருகத்தைக் காணலாம் . காதல் களியாட்டத்தில் நாம் அந்த யாளியையே மிஞ்ச முடியுமாம் ! எப்படி ? நறுந்தாளி , நன்முருங்கை , தூதுவளை , நற்பசலை , அரைக்கீரை -- இந்த ஐந்து கீரைகளையும் தினம் ஒன்றாக பருப்பு , மிளகு , சீரகம் , பூண்டு , சிறு வெங்காயம் சேர்த்துப் பொரியல் செய்து பகல் உணவில் மட்டும் இரண்டு பிடி சாதத்தில் ஒரு கப் அளவு கீரையும் -- ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துச் சுவையுடன் சாப்பிட்டால் போதும் ! இது தாங்க காதல் கெமிஸ்ட்ரிக்கான பாடம் .
--- குமுதம் . 20 - 12 - 2006 .

Tuesday, March 23, 2010

யோசிக்க வைத்த விஷயம் ?

ஜப்பானில் உள்ள எல்லாக் குடும்பங்களிலும் தலைமுறை பற்றிய தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும் . ஏனென்றால் பல நூற்றாண்டுகளாக ஜப்பானில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புத்த மடாலயங்களில் , அந்த ஊரில் பிறந்தவர்களின் பெயர்களையும் , குறிப்புக்களையும் எழுதி வைத்திருக்கிறார்கள் . அரசாங்க ஆவணங்களிலும் அது இடம் பெறுகிறது . எனவே 100 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்துவிட்டு வந்த ஜப்பானியர் ஒருவர் தன்னுடைய பெயரைச் சொன்னாலே போதும் அவருடைய குடும்பம் பற்றிய எல்லாத் தகவல்களையும் சுலபமாகச் சொல்லிவிடலாம் .
பேராசிரியர் நோபுரு கரஷிமா கூரிய இந்தத் தகவலை அருணகிரி சங்கொலியில் எழுதியிருந்ததைப் படித்தபோது , நமக்கெல்லாம் நம்முடைய நாலு தலைமுறைக்கு மேல் தெரியுமா என்ற யோஜனையும் , வெட்கமும் எழுந்தது .
--- அரசு பதில்கள் . 04 - 11 - 2009 . குமுதம் இதழில் கேள்வி கேட்டவர் : செல்லூர் கணேசன் , காரைக்கால்

Monday, March 22, 2010

கபட சந்நியாசிகள் !

சமண -- பௌத்த சமயங்களின் வீழ்ச்சியும் , பக்தி மார்க்கத்தின் வெற்றியும் பல புதிய மதக்கலாச்சாரங்களை தமிழகத்தில் தோற்றூவித்தன . அவற்றில் ஒன்றுதான் சந்நியாசிகளுக்குக் கிடைத்த சமூக அந்தஸ்த்தும் -- அங்கீகாரமும் . சைவமும் , வைணவமும் போட்டிபோட்டு அவர்களை இறைவனின் அடியார்களாகச் சித்தரித்தன . கடவுளின் அம்சமாகக்கூட அவர்கள் கருதப்பட்டனர் . அவர்களை உபசரிப்பதும் , உணவளிப்பதும் , வணங்குவதும் , அவர்கள் கேட்பதைக் கொடுத்துத் திருப்திப்படுத்துவதும் , சாதாரண பக்தர்களின் மதக்கடமைகளாக -- தொண்டுகளாகப் போதிக்கப்பட்டன . அந்தத் தொண்டுகள் சுவர்க்கத்திற்கான திறவுகோல்கள் எனச் சான்றளிக்கப்பட்டன . பெற்ற பிள்ளையைக் கொன்று சமைத்துப் போடவேண்டும் என்று கேட்ட சிவனடியாருக்காக , மகனையே கொன்று பிள்ளைக்கறி சமைத்த சிறுதொண்டரும்... ' எனது உடல்பசியைத் தணிக்க உனது மனைவியைத் தரவேண்டும்' என்று கூசாமல் கேட்ட சிவனடியாரை மகிழ்விக்க , தனது இல்லாளைத் தர முன்வந்த இயற்பகையும் , நாயன்மார்களாகப் போற்றப்பட்டனர் . பகுத்தறிவு -- மனிதாபிமானம் -- பெண்ணியம் ஆகியவை , பக்தியின் பெயரால் அங்கே படுகுழியில் புதைக்கப்பட்டன . அந்த அளவிற்குச் சந்நியாசிகளுக்கு உயரிய செல்வாக்கை உருவாக்கி வளர்த்தன வைதீக மதங்கள் . நாளடைவில் அந்தச் சாமியார்களில் பலர் மண்ணாசை , பெண்ணாசை , பொன்னாசை என்ற மூன்றையும் துறக்காமல் , அவற்றைச் ' சிக்கெனப் பிடித்துக்கொண்ட ' சுயநலமிகளாய் மாறி , பசுத்தோல் போர்த்திய புலிகளாய் , மதப்போர்வைக்குள் பாதுகாப்பாக உலாவந்தனர் . காவி உடைக்குள் காமசூத்திரர்களைச் சரிபார்க்கும் சரச ஒத்திகைகள் நடத்தப்பட்டன . அப்பாவி ஆண்களும் , பெண்களும் பக்தியின் பெயரால் நடந்த அந்தச் சுரண்டலுக்குப் பலியானார்கள் . இது , இன்றுவரை நீடிக்கும் அவலமாகத் தொடர்வது வெளிப்படையான -- வேதனையான உண்மை . சித்தர்களின் காலத்தில் இப்படிப்பட்ட கபட சந்நியாசிகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருந்ததோ என்னவோ ? பெரும்பாலான சித்தர்கள் இந்தப் போலி வேடதாரிகளை ஈவிரக்கம் இன்றித் தோலுரித்துக் காட்டினார்கள் . கஞ்சா உண்டும் , மாதரை மயக்கியும் , திரைமறைவில் சுகபோகங்களை அனுபவித்த அவர்களைப் பற்றிய எச்சரிக்கையும் , விழிப்புணர்வையும் மக்களிடம் உருவாக்க , சித்தர்கள் அயராமல் பாடுபட்டனர் .
--- சித்தர்களின் வைதீக மறுப்பு . எனும் கட்டுரையில் . நந்தா . குமுதம் தீராநதி . செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.

Sunday, March 21, 2010

பாடல் !

குழந்தைகளுக்கான் பாடல் !
இங்கிலீஷ் பாப்பா
ஹலோ சொல்லும்
ஸ்பேனிஷ் பாப்பா
ஹோலா சொல்லும்
சைனீஷ் பாப்பா
நீஹாவ் சொல்லும்
இத்தாலிப் பாப்பா
சியாவ் சொல்லும்
ப்ரெஞ்சுப் பாப்பா
சல்லு சொல்லும்
உருதுப் பாப்பா
சலாம் சொல்லும்
காங்கோ பாப்பா
மேம்போ சொல்லும்
ஸ்வாஹிலி பாப்பா
ஜம்போ சொல்லும்
ரெண்டு கையை
ஒண்ணு குவிச்சு
தமிழ்ப் பாப்பாதான்
வணக்கம் சொல்லும் !
உலகத் தரத்துக்குச் சவால் விடும்படியாக ' பாட்டி ' என்ற தகவல் யுகக் குழந்தைப் பாடல்கள் புத்தகம் ஒன்று வந்திருக்கிறது . பாடல்களை எழுதியவர் பெயர் கார்க்கி . அவரது தந்தையின் பெயர் வைரமுத்து .
--- அரசு பதில்கள் . குமுதம் , 04 - 11 - 2009 .

Saturday, March 20, 2010

சித்தர்கள் பிறப்பு !

சித்தர்களில் பலரை , மிகவும் பிற்படுத்தப்பட்ட -- ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாகத்தான் கர்ணபரம்பரைக் கதைகளும் , போகரின் நூலும் கூறுகின்றன .
சட்டைமுனி -- சிங்களத் தாசியின் மகன் ; கருவூரார் -- கல்தச்சர் ; கொங்கணர் -- கொல்லர் ; மூலத்தீசர் -- பள்ளர் ; உரோமரிஷி -- செம்படவனுக்கும் மலைக்குறத்திக்கும் பிறந்தவர் ; பாம்பாட்டிச் சித்தர் -- மாடுமேய்க்கும் இடைச்சிக்கும் , குருட்டு எமங்கலியனுக்கும் பிறந்தவர் ; இடைக்காடர் , குதம்பைச் சித்தர் -- இடையர்கள் ; சிவவாக்கியர் -- குறப்பெண்ணை மணந்தவர் என்பதாக அந்தக் குறிப்புகள் நீள்கின்றன .
மேல்தட்டு சாதிகளால் அழுத்தி நசுக்கப்பட்டு , கசக்கிப் பிழியப்பட்டதால் ஏற்பட்ட காயங்களும் -- வலியும் அவர்களுக்குள் கனன்று எரிந்திருக்க வேண்டும் . அந்தக் கனல் , சாதிப்பிளவுகளையும் -- அதை விதைத்துப் பயிராக்கி , அறுவடை செய்த பிராமணர்களையும் -- சத்திய ஆவேசத்துடன் சாடுவதற்கான உத்வேகத்தை அவர்களுக்கு ஊட்டியிருக்கலாம் , என்று கருத இடமிருக்கிறது . அப்படி இல்லையென்றால் , மற்றவர்களின் பார்வையில் சித்தர்களை இழிவானவர்களாகக் காட்ட , இப்படிப்பட்ட கட்டுக்கதைகளைப் பின்னாளில் திட்டமிட்டுப் பரப்பி இருக்கலாம் . எப்படியிருந்தாலும் , வைதீகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த வர்ணாசிரமத்தை அதிர வைக்கும் அறிவுப்போரை , சித்தர்கள் தலைமை ஏற்று வழிநடத்தினர் .
--- சித்தர்களின் வைதீக மறுப்பு . எனும் கட்டுரையில் . நந்தா . குமுதம் தீராநதி . செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Friday, March 19, 2010

கண்ணன் கானம் !

கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் என்று இலக்கிய கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்தார் கண்ணதாசன் . முன் வரிசையில் இருந்த ஒருவர் எழுந்து , ' கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல்கூட பட்டமரம் தானே ? கண்ணபிரான் கைகளில் இருந்தும் அதுமட்டும் ஏன் தளிர்க்கவில்லை ' என்று கேட்டார் . உடனே கண்ணதாசன் , ' கண்ணன் கானத்தை கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் . ஆனால் , புல்லாங்குழல் கண்ணனின் கையிலேயே பட்டுக்கொண்டிருக்கிறது . பெருமானின் கரம் பட்டால் மீண்டும் பிறவி கிடையாது . நேராக மோட்சம்தான் . அதனால்தான் புல்லாங்குழல் தளிர்க்கவில்லை ' என்று பளிச் பதில் கூறினார் .
--- தினமலர் . சண்டே ஸ்பெஷல் , நவம்பர் 1 , 2009 .

Thursday, March 18, 2010

சைக்கோ

சைக்கோ நூறு வகை....
" சைக்கோக்கள் பலவிதம் . எல்லா மனிதர்களிடமும் மன நோய்க்கான அம்சங்கள் உண்டு . அதற்கான விகிதங்கள்தான் வேறு . விகிதம் அதிகம் ஆகும்போது அவர்கள் மனநோயாளிகள் " என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் அசோகன் . இதில் நீங்கள் எந்த வகை ?
ஷ்கிஸ்சாய்டு ( sehizoid personality ) : ஆழமான கடலைப் போல அமைதியாகவே இருப்பார்கள் . இந்த நோய் உள்ளவர்களைச் சில சமயம் மக்கள் ஞானிகள் என்று கொண்டாடுகிற காமெடியும் நடக்கிறது .
ஷ்கிஸ்ஸடைபால் ( sehizotypal personality ) : இவர்கள் புனர் ஜென்மம் , கர்மம் , தர்மம் என்று எதைப்பற்றியாவது பேசிக் கொண்டு இருப்பார்கள் . கொஞ்சம் கஞ்சா + கொஞ்சம் தத்துவம் = இந்த சாமியார்கள் !
பார்டர்லைன் ( borderline personaality ) : அமைதியாக இருப்பார்கள் . திடீரெனப் புயலாக மாறுவார்கள் .
ஹிஸ்டீரியானிக் ( histrionic personaality ) : கல்யாணமோ , கட்சிக் கூட்டமோ தங்களையே முன்னிலைப்படுத்திக்கொள்வார்கள் . பெருமை பேசித் தள்ளுவார்கள் !
அப்செசிவ் ( obsessive personality ) : பெர்ஃபெக்ட் பார்ட்டிகள் . சுத்தமாக இருக்கிறேன் என்று ஒரு நாளில் ஒரு சோப்பைக் காலி செய்வார்கள் .
டிபெனடண்ட் ( dependent personality ) : மனித வாழ்க்கை என்பதே மற்றவர்களைச் சார்ந்து இருப்பதுதான் . ஆனால் , இவர்களோ சாய்ந்து படுத்துவிடுவார்கள் . டாய்லெட் போக வேண்டும் என்றால்கூட , ' கம்பெனிக்கு வர்றியா மச்சான் ' என்று நம்மை அலறவைப்பார்கள் !
ஆன்ஸியஸ் ( anxious personality ) : எப்போதுமே ஹைவோல்டேஜ் கம்பியில் காலைவைத்தது போலவே பதற்றமாக அலைவார்கள் . சுற்றியுள்ள ஆட்களையும் டென்ஷன் ஆக்கி , டென்ஷன் ஆகிறவர்கள் .
பேரனாய்ட் ( paranoid personality ) : ' எல்லாவற்றையும் சந்தேகி ' என்னும் வாக்கியத்தை மட்டும் சந்தேகப்படாமல் பின்பற்றுகிற பார்ட்டிகள் . நல்லதே செய்தால்கூட ' நாளைக்கு சோத்துல மண் அள்ளிப் போடுவானோ ? ' என்று சந்தேகப்படுவார்கள் .!
ஆன்டி - சோஷியல் ( anti - social personality ) : நாய் வாலில் பட்டாசு கட்டுகிற பக் பார்ட்டிகள் . 10 வயசிலேயே 18 வயசுப் பையன்களோடு சுற்றுவார்கள் . நீலப் படங்கள் அதிகம் பார்ப்பார்கள் . ஆன்டி - சோஷியல் மன நிலையும் , பார்டர்லைன் மன நிலையும் ஒருசேர இருந்தால் , சீரியல் கில்லராகும் வாய்ப்புகள் அதிகம் !
--- ஆனந்தவிகடன் , 04 - 11 - 2009 . இதழுடன் இணைப்பு .

Wednesday, March 17, 2010

தீர்த்தம் .

ஆலய தரிசனத்தில் ஆலய தீர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . தீர்த்த குளத்தில் நீராடி தூய்மையான உடை அணிந்து இறைவனை வழிபடுவது விசேஷம் . இயலாத நிலையில் குளத்தில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு கோவிலுகுள் சென்று வழிபடுவது நல்லது .
--- தினமலர் . பக்தி மலர் . அக்டோபர் 29 . 2009 .

Tuesday, March 16, 2010

நமஸ்காரம் .

நமஸ்காரம் செய்யும்போது மூன்று தடவையாவது 5, 7 , 12 தடவையாவது நமஸ்காரம் செய்ய வேண்டும் . ஒரு முறையோ இரண்டு முறையோ செய்யலாகாது . ஆண்கள் விழுந்து வணங்கும் போது தலை , இரண்டு காதுகள் , இரண்டு கைகள் , இரண்டு கால்கள் , முகம் ஆகியவை பூமியில் படுமாறு பதித்து வணங்க வேண்டும் . இதனை அஷ்டாங்க நமஸ்காரம் அல்லது சர்வாங்க நமஸ்காரம் என்பார்கள் .
பெண்கள் நமஸ்கரிக்கும் போது தலை , இரண்டு கைகள் , இரு முழந்தால்கள் ஆக ஐந்து அங்கங்கள் பூமியில் நன்கு படும்படி வணங்க வேண்டும் . இதை பஞ்சாங்க நமஸ்காரம் என்பார்கள் .
கொடி மரத்தை தாண்டியபின் வேறு எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் கூடாது .
தெய்வத்தை கையெடுத்து வணங்க சில முறைகள் உண்டு . தலையால் மட்டும் வணங்குதல் ஏகாங்க நமஸ்காரம் . தலையின் மேல் வலக்கரம் குவித்து வணங்குதல் த்விதாங்க நமஸ்காரம் . தலையின் மேல் இரு கைகளையும் குவித்து வணங்குதல் த்ரிவிதாங்க நமஸ்காரம் . ஆண்கள் இம்முன்று வகையிலும் வணங்கலாம் . பெண்கள் இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராகவே வைத்து வணங்கவேண்டும் .
--- தினமலர் . பக்தி மலர் . அக்டோபர் 29 . 2009 .

Monday, March 15, 2010

பிரதட்சணம்

பின்வரும் தெய்வங்களுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் பிரதட்சணம் என்று நூல்கள் சொல்கின்றன .
விநாயகருக்கு ஒரு பிரதட்சணம் .
சிவனுக்கு மூன்று பிரதட்சணம் .
முருகனுக்கு ஆறு பிரதட்சணம் .
விஷ்ணுவுக்கும் , அம்பாளுக்கும் நான்கு
நவக்கிரகங்களுக்கு ஒன்பது .
--- தினமலர் . பக்தி மலர் . அக்டோபர் 29 . 2009 .

Sunday, March 14, 2010

கோயில் பிரகாரம் .

பெரிய சிவாலயங்களில் சுவாமியைச் சுற்றிவர பிரகாரம் இருக்கும் . அவை மூன்று , ஐந்து , ஏழு பிரகாரங்கள் என்ற அமைப்பில் இருப்பது விசேஷம் . மூன்று பிரகாரங்கள் அன்னமயம் , பிராணமயம் , மனோமயம் என்ற மூன்று கோஷங்கலைக் குறிக்கும் . ஐந்து பிரகாரமாயின் இவற்றுடன் விஞ்ஞான , ஆனந்த மயகோஷங்கள் கூடும் . ஏழு ஸ்தூல சூட்சுமத்தை குறிப்பவை .
சில கோயில்களில் ஒரே ஒரு பிரகாரம் இருக்கும் . வெளிப்பிரகாரம் இருப்பதும் உண்டு . உட்பிரகாரத்தை வலம் வருவதை விட வெளிப் பிரகாரத்தை வலம் வருவது மூன்று மடங்கு புண்ணிய பலனை தரக்கூடியதாகும் .
பிரதட்சணம் செய்யும் போது மெல்ல மெல்ல நடக்க வேண்டும் . நிறைமாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணெய் குடத்தை , கால்களில் விலங்கு உடையவளாய் இருந்து சுமந்து நடந்தால் எப்படி அடிமேல் அடி எடுத்து வைப்பாளோ அதுபோல் நடக்க வேண்டும் என்பது பிரதட்சணவிதி.
காலை பிரதட்சணம் நோயை அகற்றும் ; பகல் பிரதட்சணம் விரும்பியதைக் கொடுக்கும் ; மாலைப் பிரதட்சணம் பாவங்களை அகற்றும் ; அர்த்தஜாமப் பிரதட்சணம் போகசித்தி கொடுப்பதுடன் , செல்வம் வளம் தரும் . அங்கப் பிரதட்சணம் செய்தால் தீய வினைகளையெல்லாம் நீங்கப்பெற்று முக்தி கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம் . ஆண்கள் அங்கப்பிரதட்சணமும் , பெண்கள் அடிப்பிரதட்சணமும் செய்யலாம் .
--- தினமலர் , பக்தி மலர் . அக்டொபர் 29 . 2009 .

Saturday, March 13, 2010

இந்தியா கேட் !

முதல் உலகப்போரில் உயிர் நீத்த 90 ஆயிரம் இந்தியப் போர்ப்படை வீரர்களின் நினைவாக டில்லியில் 42 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது தான் இந்திய நுழைவாயில் எனப்படும் இந்தியா கேட் . இதில் ஏறத்தாழ 13 ஆயிரத்து 516 போர் வீரர்களின் பெயர்கள் அடையாளம் கண்டு போறிக்கப்பட்டுள்ளன .
இந்த கேட் அருகில் 1971ல் ஏற்றப்பட்ட அமர்ஜோதி சுடர் இன்றளவும் அணையாது எரிந்து கொண்டிருக்கிறது . ஒவ்வொரு குடியரசு தினத்திலும் குடியரசு தலைவர் அமர்ஜோதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது கடைபிடிக்கப்படும் மரபாகும் .
--- தினமலர் , சிறுவர் மலர் , அக்டோபர் 30 , 2009

Friday, March 12, 2010

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் .

பல்கலைக்கழகங்களில் பழமையானதும் , உலகப் புகழ் பெற்றதும் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் ! இது தேம்ஸ் நதியும் , ஷெர்வெல் ஆறும் சங்கமமாகும் இடத்தின் கரையில் நதிக்கும் ஆறுக்கும் இடையில் அமைந்திருக்கிறது . ஆற்றில் இறங்கி கரையேறும் இடத்தை துறை என்பர் . இதற்கு ஆங்கிலத்தில் போர்டு என்று பெயர் .இந்தத் துறையில் எருமைகள் வந்து , நீராடி , நீர் அருந்தி செல்வதால் அந்தக் குறிப்பிட்ட நதிக்கரையை ஆக்ஸ்போர்ட் என்று அழைத்தனர் . அந்த இடத்தில் பல்கலைக்கழகம் அமைந்ததால் அதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் என்று அழைத்தனர் .
--- தினமலர் , சிறுவர் மலர் , அக்டோபர் 30 , 2009

Thursday, March 11, 2010

போலீஸ் நாய் !

பொதுவாகவே நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் . அதே நேரத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதனின் செல்லப் பிராணியாய் அவன் கூடவே வசித்து வருவதால் நாய்களுக்கு மனிதனின் வாழ்க்கை பற்றியும் நன்கு தெரியும் . அதனால் நாய்களைப் பழக்குவது என்பது எளிதான விஷயம் .
நாய்களில் தனி வகைகளான டாபர்மேன் , பிஞ்சர் , ஜெர்மன் ஷெப்பர்ட் , லாபரேட்டர்ரெட்ரீவர் போன்றவை போலீஸ் டிரெயினிங்கிற்கு மிக உகந்தவை . இவை மூன்று மாத குட்டியாக இருக்கும் போதே கென்ன்ல்கிளப் எனப்படும் நாய்களுக்கான அமைப்பில் இருந்து போலீஸ் வாங்கும் .
உடனே பயிற்சிகள் ஆரம்பித்து விடும் . சொல்வதைக் கேட்பது , மோப்பம் பிடிப்பது இதுதான் முதல்கட்டப் பயிற்சி . அதில் தேர்ச்சி பெற்றதும் ஆயுதங்கள் , வெடிகுண்டுகள் , குற்றவாளிகளின் வாசனை போன்றவற்றை மோப்பம் பிடிக்க பிரத்யேகப் பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள் .ஒரு வகையில் இந்த நாய்களுக்கு ராஜயோகம்தான் . மின்விசிறி உள்ள அறையில்தான் இவை தூங்கும் . எனர்ஜி டானிக்குகள் , அவித்த முட்டை , பால் , மாட்டுக்கறி , பிரியாணி , ரொட்டித் துண்டுகள் போன்றவற்றை வெளுத்துவாங்கும் . போலீஸ் நாய்களில் அதிகம் வேவு பார்ப்பது பெண் நாய்களே . ஆண் நாய்களைவிட அவற்றுக்குத் திறமை அதிகமாம் . அதிக பட்சம் ஒரு நாய் போலீஸில் பத்து ஆண்டுகள் பணிபுரியும் . அதற்குப் பிறகு சல்யூட் அடித்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் . ரிடையர்மெண்ட் பணம் எல்லாம் கிடையாது . பாவம் !
--- தினமலர் , சிறுவர் மலர் , அக்டோபர் 30 , 2009 .

Wednesday, March 10, 2010

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் .

கணிதம் , தத்துவம் இரண்டிலும் உச்ச கட்டப் புகழ் பெற்றிருந்த மேதை பெர்ட்ராண்ட் ரஸ்ஸலை ஆர். கே. லட்சுமணன் சென்று சந்தித்தபோது , மணிக்கணக்கில் பேசினார் . அவர் , " எந்த ஒரு கருத்தையும் எடுத்துச் சொல்வதற்குச் சிறுகதைதான் தகுந்த உத்தி " என்ற ரஸ்ஸல் , நிறைய உதாரணங்களைச் சொல்லி விளக்கினார் . விடைபெறும்போது , " இந்தியர்களான நீங்கள் கண்டுபிடித்தது நத்திங் ! நத்திங் !" என்றார் . லட்சுமணுக்கு முகம் சிவந்து போயிற்று . " இல்லை சார் , அப்படிச் சொல்லிவிட முடியாது . உதாரணமாகக் , செஸ் ஆட்டம் ..." என்று லட்சுமண் தட்டுத் தடுமாறி ஏதோ சமாதானமாகக் கூற முயன்ற போது , கண்களில் குறும்பு கொப்பளிக்க , " இந்தியர்கள் கண்டுபிடித்தது நத்திங் ! அதாவது நத்திங் என்ர கோட்பாட்டையும் அதன் வரிவடிவமான பூஜ்யத்தையும் நீங்கள்தான் கண்டுபித்தீர்கள் . கணிதத்தின் மாபெரும் கண்டுபிடிப்பல்லவா அது !" என்றாராம் அந்தப் பொல்லாத மனிதர் .
--- பொக்கிஷம் , ஆனந்தவிகடன் . 28 - 10 - 2009 .

Monday, March 8, 2010

' சிலிகான் இம்ப்ளான்ட்'

' சிலிகான் இம்ப்ளான்ட்' செய்துகொண்டவர்களுக்குப் பால் ஊறுவதில் பிரச்னை உண்டா ? குழந்தை பால் அருந்துவதில் சிரமம் ஏற்படுமா ?
இம்ப்ளான்ட் ( செயற்கையாக மார்பகத்தைப் பெரிதாக்குவது ) என்பது மேலெழுந்தவாரியாகச் செய்யப்படுவது . நதிகளைப் போல பாலின் உற்பத்தி ஸ்தலம் இருப்பது மார்பகத்துக்கு உட்பகுதியில் ! ஆகவே , பிரச்னை இருக்காது . கர்ப்பமுற்ற பெண்ணின் மார்பகத்துக்கு உள்ளே ' வியர்வைச் சுரப்பிகள் ' உண்டு . ஒரே வித்தியாசம் , அவை சுரப்பது பால் ! கர்ப்பம் தரித்த பிறகு , காம்புக்கு ( nipple ) நேர் பின்னால் உள்ள இந்தச் சுரப்பிகள் சற்றுப் பெரிதாகும் . இப்படிச் சுரக்கும் பால் மெல்லிய குழாய்கள் மூலம் குட்டிக் குட்டி கோடவுன்களுக்கு வந்து சேர்கிறது .இந்த Storage Space - க்கு Sinuses என்று பெயர் . அங்கேயிருந்து மினி ' டியூப் ' கள் மூலம் பால் ஒவ்வொரு காம்பின் நுனிக்கும் வந்து சேர்கிறது . பிறந்தவுடனே குழந்தை அதை நுகர்ந்து தெரிந்துகொண்டு உறிஞ்சுவதுதான் ஆச்சர்யம் ! ' இம்ப்ளான்ட் ', தோலுக்கு ஜஸ்ட் உள்ளே பொருத்தப்படுவது . இதனால் , மார்பகத்தின் மென்மை சற்று மாறும்தான் ! இயற்கையான மார்பகத்தில் பால் குடித்த குழந்தையை இம்ப்ளான்ட் மார்பகத்துக்கு மாற்றினாலும்....பால் கிடைக்கும் . ஆனால் , இது என்ன ... அவ்வளவு மிருதுவாக இல்லாமல் , ஒரு மாதிரியாக இருக்கிறதே ?! ' என்று குழந்தை சற்று வித்தியாசமாக உணரக்கூடும் ! .
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் 28 - 10 - 2009 .

Sunday, March 7, 2010

சாதி பேதம் !

" சாதிபேதம் இல்லை அகப்பேய் !
தான்ஆக நின்றவர் "க்கு என்பார் அகப்பேய் சித்தர் .
" தொல்லுலகில் நால்சாதி அனேகம்சாதி
தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே ! " என்று , சாதிகள் தொற்றுவிக்கப்பட்டதன் சூட்சுமத்தைச் சொல்லித் தந்தார் வால்மீகச் சித்தர் .
" பறைச்சியாவது ஏதடா ? பனத்தியாவது ஏதடா ?
இறைச்சிதோல் எலும்பிலும் , இலக்கம்இட்டு இருக்குதோ ?
பறைச்சிபோகம் வேறதோ ? பனத்திபோகம் வேறதோ ? " என்ற கேள்விகளை அடுக்கி , சாதிய மூலவர்கள் மீது வெறுப்பைக் கொட்டினார் சிவவாக்கியர் . ( பனத்தி -- பாப்பனத்தி ) .
" சாதிப் பிரிவினில் தீமூட்டுவோம் !
சந்தை வெளியினில் கோல்நாட்டுவோம் ! " என்று சபதம் செய்தார் பாம்பாட்டிச் சித்தர் .
' மானும் , பன்றியும் சேர்ந்தால் கரு உண்டாகாது . ஏனெனில் , அவை வேறுவேறு இனம் . வேதியர் குலத்து ஆணும் , ' சூத்திரப் ' பெண்ணும் சேர்ந்தால் கரு உண்டாகும் . அவர்கள் ஒரே இனம் . இயற்கை நியதி இப்படி இருக்க , சாதியின் பெயரால் தீண்டாமை எதற்காக ? ' என்று தேவாரம் பாடிய சுந்தரரைப் பார்த்து ஒரு கோபக் குரல் , ' ஞானவெட்டியான் ' நூலில் ஒலித்தது .
--- சித்தர்களின் வைதீக மறுப்பு , என்ற கட்டுரையில் நந்தா . குமுதம் தீராநதி , செப்டம்பர் . 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்

Saturday, March 6, 2010

சாதி மறுப்பு .

அன்றைய வைதீக மதத்திற்கு -- அதாவது இன்றைய இந்து மதத்திற்கு சாதி என்பது ஒரு மாற்றமுடியாத அங்கமாகவும் , அடையாளமாகவும் விளங்குகிறது . வர்ணாசிரம தர்மம் என்பது , வைதீகத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட அம்சமாகும் . அது சமுதாயத்தின் அடித்தளம்வரை ஆழமாக வேரூன்றியுள்ள சாபக்கேடாகவே தொடர்கிறது . சாதி இல்லாமல் இந்துமதம் இருக்கமுடியாது . இந்துவாகப் பிறந்த எவனும் சாதி என்ற வட்டத்தை -- அந்தப் பிறவி முத்திரையை , எளிதில் புறந்தள்ள முடியாது . பிறக்கும்போதே உயர்ந்தசாதி -- தாழ்ந்தசாதி என்ற வேற்றுமைச் சின்னத்தைச் சுமந்தபடிதான் வாழ்க்கைப் பந்தயம் தொடங்குகிறது . உலகப்பந்தின் எந்தப் பகுதியிலும் , எந்த மதத்திலும் இல்லாத கொடுமையான சமூகப் பாகுபாடு இது . ' பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் ' என்று , பிற்போக்கு சக்திகளின் பிடரியில் அறைந்த வள்ளுவனின் கால்பதித்த தமிழ்மண்னை , சாதிகளால் கூறுபோட்டன சனாதன வியூகங்கள் . அந்த சாதிப் பிரிவுகளுக்கும் , தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிராக ஓங்கிக்குரல் கொடுத்து , சமூகநீதிக்கு அடிக்கல் நாட்டியவர்கள் தமிழகச் சித்தர்கள் .
--- சித்தர்களின் வைதீக மறுப்பு , என்ற கட்டுரையில் நந்தா . குமுதம் தீராநதி , செப்டம்பர் . 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Friday, March 5, 2010

நியூயார்க் .

அமெரிக்கா என்ற புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு ஐரோப்பியர்கள் குடியேறியபோது , 1614 ம் ஆண்டு மன்ஹாட்டன் தீவின் தெற்கு முனையில் ' நியூஆம்ஸ்டர்டாம் ' என்ற டச்சு காலனி அமைக்கப்பட்டது . அங்கிருந்த ட்ச்சு காலனியை ஆங்கிலேயர்கள் 1664 ம் ஆண்டு கைப்பற்றி , யார்க் - அல்பேனி பிரபு நினைவாக ' நியூ யார்க் ' எனப்பெயரிட்டனர் . 1698 ம் ஆண்டில் நியூ யார்க் நகரில் 4 ஆயிரத்து 937 பேர் வசித்தனர் . பின்னர் , அமெரிக்காவின் வர்த்தக தலைநகரமாக நியூ யார்க் மாறியது . மக்கள்தொகையும் கிடுகிடுவென அதிகரித்தது .
இப்போது உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ ரயில் சேவையாக , நியூ யார்க் நகர நிர்வாகம் பெருநகர போக்குவரத்து ஆணையம் இயக்குகிறது . ' தூங்கா நகரம் ' என பெயர் பெற்ற நியூ யார்க்கில் 24 மணி நேரமும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது .
1904ம் ஆண்டு சேவை தொடங்கப்பட்டபோது , எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் 5 சென்ட் கட்டணமே வசூலிக்கப்பட்டது . பின்னர் 1948 ம் ஆண்டு இது 10 சென்ட் ஆக உயர்த்தப்பட்டது . முதலில் டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டு , இப்போது ' மெட்ரோ கார்டு ' அமலில் இருக்கிறது . இப்போது அடிப்படை கட்டணம் 2. 25 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் 27 - 10 - 2009 .

Thursday, March 4, 2010

சுதந்திரதேவி சிலை !

அமெரிக்க சுதந்திர தின நூற்றாண்டு விழாவுக்கு பிரான்ஸ் மக்கள் பரிசாக அளித்த சுதந்திரதேவி சிலை 1886 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ம் தேதி , நியூயார்க் நகரில் திறந்து வைக்கப்பட்டது .
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் விடுதலை பெற்று விட்டதாக அமெரிக்க சுதந்திர பிரகடனம் 1786ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வெளியிடப்பட்டது . இதன் நூற்றாண்டு விழா 1886 ம் ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது .
இதற்கு முன்னதாக அமெரிக்க சுதந்திர தின நூற்றாண்டு விழாவுக்கு ஒரு மாபெரும் பரிசை பிரான்ஸ் மக்கள் வழங்கவேண்டும் என்று அமெரிக்க சரித்திரம் எழுதிய பிரெஞ்சு அரசியல்வாதி எட்வர்டு டி லாபோலயே யோசனை கூறினார் . இதற்காக ஒரு பிரம்மாண்ட சிலை வடிவமைக்க பிரெஞ்சு கலைஞர் பிரட்ரிக் பார்தோல்டி கேட்டுக்கொள்ளப்பட்டார் . சிலையின் உட்புற கட்டுமான வடிவமைப்புக்கு ஈபிள் டவர் வடிவமைப்பாளர் மாரிஸ் கோச்லின் உதவி செய்தார் . இதற்காக பிரான்ஸ் நாட்டில் நன்கொடைகள் , இசை நிகழ்ச்சிகள் , லாட்டரி மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் பிராங்க் நிதி திரட்டப்பட்டது .
சிலை உருவாக்கும் பணி 1870ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது . தாமிரம் கொண்டு மாபெரும் சிலை உருவாக்கப்பட்டது . இது 350 தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு , 214 பெட்டிகளில் அடைக்கப்பட்டு கப்பல் பயணத்துக்கு தயாரானது . ஐசெரி என்ற பிரெஞ்ச் கப்பலில் பெட்டிகள் ஏற்றப்பட்டு , நியூயார்க் துறைமுகத்துக்கு 1885ம் ஆண்டு ஜூலை மாதம் வந்திறங்கின . நியூயார்க் நகரில் சிலைக்கு பீடம் அமைக்கும் பணியை அமெரிக்கர்கள் ஏற்றுக்கொண்டனர் . நியூயார்க் துறைமுகம் அருகே பெட்லோ தீவில் பீடம் அமைக்கும் பணி 1886ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது . பின்னர் , பீடம் மீது சிலை நிறுவப்பட்டது .
சுதந்திர தேவி சிலையின் உயரம் 151 அடி ஆகும் . பீடத்தையும் சேர்த்து 305 அடி உயரத்திற்கு கம்பீரமாக சிலை நின்றது . தலையில் கிரீடம் , கால்களுக்கு அடியில் உடைந்த சங்கிலி , வலது கையில் தீபம் , இடது கையில் சுதந்திர பிரகடன தேதி பொறிக்கப்பட்ட கல்வெட்டு தாங்கி சுதந்திரதேவி கம்பீரமாக நின்றார் . அப்போதைய அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லேண்ட் சிலையை திறந்து வைத்தார் . 1902 ம் ஆண்டு வரை கலங்கரை விளக்கமாக இது செயல்பட்டது . அமெரிக்காவில் மின்சார விளக்கு பயன்படுத்திய முதல் ' லைட் - ஹவுஸ் ' இதுதான் . உலகின் ஏழு புதிய அதிசயங்கள் பட்டியலில் சுதந்திரதேவி சிலை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
--- தினமலர் . 28 - 10 - 2009 .

Wednesday, March 3, 2010

குறிக்கோள் .

ஒரு தீவில் ஒரு வழக்கம் இருந்தது . யார் வேண்டுமானாலும் அரசர் ஆகலாம் . ஆனால் , ஐந்தாண்டுகள் மட்டுமே ஆட்சி செய்யமுடியும் . பிறகு , அருகில் உள்ள இன்னொரு தீவில் அவரைத் தூக்கி எறிந்து விடுவார்கள் . அங்குள்ள கொடிய விலங்குகள் அவரைக் கொன்று தின்றுவிடும் . பல ஆண்டுகளாக இந்தப்பழக்கம் இருந்தது . இந்தமுறை ஓர் இளஞன் அரசனானான் . சிறப்பாக ஆட்சி செய்தான் . ஐந்தாண்டுகள் முடிந்தன . அவனை அடுத்த தீவில் கொண்டு தள்ளிவிடப் படகில் அழைத்துப் போனார்கள் .
ஆனால் , என்ன ஆச்சர்யம் ! அந்தத் தீவில் மனிதர்கள் பலர் இருந்து அவனை வரவேற்றார்கள் . உண்மையில் நடந்தது என்ன தெரியுமா ? இந்த்த் தீவை ஆண்டுகொண்டிருந்தபோதே மறைமுகமாக சில படை வீரர்களை அங்கே அனுப்பி மிருகங்களைக் கொன்றான் . காடுகளையெல்லாம் செம்மைப் படுத்தினான் . வீடுகளை உருவாக்கினான் . குடும்பங்களைக் குடி பெயரச் செய்தான் . இப்போது இன்னொரு நாடு உருவாகிவிட்டது . இப்போது இரண்டு நாடுகளுக்கும் இவனே தலைவன் .
இதனைக் குறியீடாக வைத்துக் கொண்டு குறிக்கோளை அடையலாம் ; சாதனை படைக்கலாம் .
---இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் , ஆகஸ்ட் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Tuesday, March 2, 2010

அறிவுக் களஞ்சியம் .

* பெங்களூர் நகர் கெம்பே கௌடாவினால் 1537 -ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . அங்கே தான் 1905 ல் முதல் மின்சார பல்பு எரிந்தது . இன்று அதன் மக்கள் தொகை 53 லட்சம் .
* ஸ்வீகாரம் ( தத்து ) எடுக்கப்பட்ட குழந்தைக்கு ( ஆண் அல்லது பெண் ) புதிய குடும்பத்தில் சகல உரிமைகளும் உண்டு . சென்னை உயர்நீதி மன்றம் விளக்கம் .
* பூமியின் சராசரி உஷ்ணம் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட நோயால் 30 ஆயிரம் மக்கள் இறப்பார்கள் -- ஆராய்ச்சி கருத்து .
* ஆசியா , ஐரோப்பா ஆகிய 2 கண்டங்களை இணைத்து வரும் ஒரே நகரம் இஸ்டான்புல் ( துருக்கி ) தான் போஸ்போரஸ் கால்வாய் நகரின் மத்தியில் ஓடுகிறது .
* திரு . என். டி. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தின் தலைசிறந்த பொதுக்
கல்வி இயக்குனராக பணியாற்றியபோது அவர் ஒருவரே இயக்குனராக விளங்கினார் . இன்று 12 இயக்குனர்கள்
அவர் செய்த பணிகளை நிர்வகிக்கிறார்கள் .
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம் ஒரு பூகம்பத்தின் விளைவுகளையும் தாங்கிக் கொண்டு
நிலையாக இருக்கக்கூடிய வல்லமை பெற்றதென ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள் .
* இந்தியாவை மூன்று பக்கமும் சூழ்ந்துள்ள கடற்கரை ஓரத்தின் மொத்த நீளம் 7516 கிலோமீட்டர்கள் .
--- வி . கார்த்திகேயன் . அருட்செல்வர் சேக்கிழார் , அக்டோபர், நவம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Monday, March 1, 2010

புத்த பகவான் .

பௌத்தம் . புத்த பகவான் .
பிறப்பு :
கபிலவஸ்துவுக்கும் தேவதஹ் என்ற ஊருக்கும் இடையில் நேபாளத்தின் மலையடிவாரத்தில் நெளதன்வா என்ற ஸ்டேஷனிலிருந்து மேற்கே 8 கல் தொலைவில் ருக்மிந்தேயி இருக்கிறது . ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன் அங்கெல்லாம் ஒரு காடாய் இருந்தது .அந்தக் காட்டுப்பிரதேசம் லும்பினி எனப்படும் . கிறிஸ்து பிறப்பதற்கு 563 ஆண்டுகளுக்கு முன் கபிலவஸ்துவின் மகாராணியான மகா மாயாதேவி தன் பிறந்த அகமான தேவதஹூக்குப் போய் கொண்டிருக்கையில் இந்த லும்பினி காட்டில் வழியிலேயே அவர்களுக்கு கௌதமன் பிறந்து விட்டான் . பிறந்த பிள்ளைக்கு சித்தார்த்தன் என்று பெயரிடப்பட்டது . பிள்ளை பிறந்த 7 -ம் நாள் தாய் இறந்து போனாள் ; சித்தார்த்தரின் அத்தையான கௌதமி அவரைப் பாதுகாத்து வளர்த்தாள் .
பிள்ளைப்பிராயம் :
பள்ளிக்குப் போகும் வயது வந்ததும் சித்தார்த்தர் விசுவாமித்திரர் என்ற ஆசிரியரிடம் வேதம் , உபநிடதம் முதலியவைகளைக் கற்றதோடு , தக்க பிறரிடம் அரசியலையும் போர்க்கலையையும் பயின்றார் . மற்போரிலும் , குதிரையேற்றம் , வில் - வாள் வித்தைகளிலும் தேர் செலுத்துவதிலும் இணையற்று விளங்கினார் .
திருமணம் :
சித்தார்த்தர் வமிசம் சாக்கிய வமிசம் எனப்படும் . அவருக்கு 16 வயது ஆனபோது தண்டபாணி சாக்கியர் என்ற தம் இனத்தார் ஒருவரின் பெண்ணான யசோதரையுடன் அவருக்கு திருமணம் நடந்தது .
இடையில் , அவரது வாழ்வில் நடந்த சில சம்பவங்களினால் அரசிளங்குமரனுக்கு மனம் மிகவும் சங்கடப்பட்டது . அதாவது , தம் மாளிகையை ஒட்டிய பாதை ஓரத்தில் ஒரு முதியவனைக் கண்டது , ஒரு நோயாளியைக் கண்டது , போகும் வழியில் ஒரு சவத்தைக் கண்டது , ஒரு துறவியைக் கண்டது போன்றவையே அவை .இதனைத் தொடர்ந்து அவருக்கு பிள்ளை பிறந்தது . அரசன் காதுகளுக்கு இச்செய்தி எட்டியதும் அவர் தன் பேரப் பிள்ளைக்கு ராகுல் என்று பெயர் இட்டார் . இதன் காரணமாகவும் அவர் தம் தந்தையிடம் , வீட்டைவிட்டு வெளியேற அனுமதி வேண்டினார் .
அனுமதி கோரியது :
அரச குமாரருக்கு மகவு பிறந்திருப்பதை முன்னிட்டு அரண்மனையெங்கும் விழா கொண்டாட்ப்பட்டுக் கொண்டிருக்கையில் சித்தார்த்தர் தம் தந்தையை அணுகி , " அப்பா , உலகில் எங்கும் துன்பமாகவே இருக்கிறது . ஒருவரை முதுமை வதைக்க , இன்னொருவர் நோயிடம் சிக்கி அல்லலுருகிறார் . சிலரையோ எமன் வந்து தூக்கிப் போய்விடுகிறான் . இவைகள் அனைத்திலிருந்தும் விடுபடக் கருதி நான் துறவு பூணப் போகிறேன் " என்றார் .
' மஹாபி நிஷ்க்ரமணம் ' - ( பெருந்துறவு ) :
ஒரு நாள் இரவு மஞ்சத்திலிருந்து எழுந்து வாயிலுக்கு வந்தார் . சித்தார்த்தர் யசோதரை அறைக்கு விரைந்தார் . கிளம்பி போகுமின் குழந்தையின் வதனத்தைப் பார்க்க வேண்டும் என்பது அவர் எண்ணம் . யசோதரையின் பக்கத்தில் ராகுலன் கண் அயர்ந்து கொண்டிருந்தான் . அவனை எழுப்பினால் யசோதரையும் விழித்துக் கொள்வாள் , பிறகு தன்னை வெளியே செல்ல விடமாட்டாள் என்று எண்ணியவராய் முன்வைத்த அடியை பின்னால் வாங்கித் திரும்பியவர் அப்படியே வெளியேறி விட்டார் . வெளியே வந்து அங்கே சித்தமாய் இருந்த குதிரை மீது அமர்ந்து இரவோடு இரவாக 30 காத தூரம் போய் கோரக்பூருக்கு அருகில் ஓடும் அனோமா என்ற ஆற்றின் கரையைச் சேர்ந்தார் . அங்கே அவர் தமது ஆடம்பர ஆடை அணிகளையெல்லாம் களைந்தபின் சாதாரண துணியை அணிந்து கொண்டு , உடைவாளினால் தம் சிங்கார முடியையும் நீக்கிவிட்டுத் துறவு பூண்டார் . அப்போது சித்தார்தருக்கு வயது 26 .
தவம் இயற்றுதல் :
அழகிய ஆருயிர் மனைவியை விட்டு , பிறந்து 7 நாளே ஆன சிறு பாலகனையும் , இளவரசனுக்கு உரிய அரச மாளிகையின் இன்பங்களையும் துறந்து சித்தார்த்தர் தவம் இயற்றக் கிளம்பி விட்டார் . 6,7 ஆண்டுகள் கடுந்தவம் இயற்றினார் .
ஞானோதயம் :
ஒரு நாள் இரவு ஒரு அரச மரத்தடியில் தியானத்தில் அமர்ந்திருக்கையில் அவருக்கு ஞானோதயம் ஆயிற்று . மக்கள் துயரங்களுக்கு மருந்து அவருக்குத் தெரியவந்து விட்டது . அதுமுதல் அவர் ' புத்தர் ' ( அறிவு விளக்கம் பெற்றவர் ) எனப்படலானார் . எந்த அரச மரத்தடியில் அவர் ஞானம் பெற்றாரோ அது ' போதி மரம் ' எனப்பட்டது ; அந்த மரம் இருந்த இடம் புத்த கயை ஆகிவிட்டது . இது நடந்தது கிறிஸ்து பிறப்பதற்கு 528 ஆண்டுகள் முன்பு ஆகும் . இப்போது அவரது பிராயம் 35 . புத்த பகவான் ஒரு மாத காலம் அந்த போதி மரத்தின் அடியிலேயே தியானத்தில் இருந்தார் ; அதன் பிறகு தாம் கண்ட உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லக் கிளம்பிவிட்டார் .
அதே ஆண்டு ஆனி மாதம் நிறைமதி நன்நாளன்று பகவான் காசியை அடுத்த மிருகதாபம் சேர்ந்தார் . அது இப்போது சாரநாத் எனப்படுகிறது .
தர்ம பிரசாரம் :
தமக்கு 80 வயது ஆகும் வரையில் புத்த பகவான் தமது தருமத்தை எல்லோருக்கும் புரியும் மக்கள் மொழியில் எடுத்து ஓதினார் . அப்போது வழங்கிய மொழி சமஸ்கிருதத்தின் திரிபான பாலி ஆகையால் , புத்த பகவானின் போதனைகளெல்லாம் அம்மொழியிலேயே அமைந்தன .
சங்கம் அமைத்தது :
அவரது தந்தையான சுத்தோதனரும் , மகன் இராகுலனும் பௌத்த சமய தீக்ஷை பெற்றார்கள் . அதன்பின்னர் வெளிநாடுகள் பலவற்றில் தம் தருமத்தைப் பரப்பவென பிஷூக்களை பல இடங்களுக்கு அனுப்பினார் .
நிர்வாணம் :
ஒரு வைகாசி பூர்ணிமை அன்று பிறந்தது போலவே , இன்னொரு வைகாசி பூர்ணிமை அன்று நிர்வாணம் எய்தி மறைந்தார் . இது நிகழ்ந்தது கி. மு. 483 - இல் ஆகும் .
--- கிருஷ்ணதத்தபட் பௌத்தம் நூலிலிருந்து . நூல் உதவி : செல்லூர் கண்ணன்

பகவான் மகாவீரர் .

" மித்தீ மே ஸவ்வ பூயேஸூ "
' எல்லா உயிர்களுடனும் எனக்கு நட்புறவுள்ளது ' என்ற இது பகவான் மகாவீரரின் குறிக்கோள் .
அஹிம்சையே உருவெடுத்து வந்தால் எப்படி இருக்கும் ? அதுதான் மகாவீரர் .
அவரது வாழ்க்கை தியாக மயமானது ; தவமயமானது .
உடமை என்று சொல்ல அவர் ஒரு கோவணமும் வைத்திருந்ததில்லை .
அவரது வாழ்க்கையும் , அவர் வாக்கும் , அவர் கருத்துக்களும் ஊழுழி காலம் வரையில் மக்களுக்கு நலம் பயந்துகொண்டேயிருக்கும் .
பிறப்பு :
ஏறக்குறைய 2,600 ஆண்டுகளுக்கு முன் கி. மு. 599 -க்கு முன்பு , ஜனநாயக ஆட்சி இயங்கிய வைசாலி நாட்டில் குண்ட கிராமம் என்ற ஊரில் சித்தார்த்தன் என்ற அரசனுக்கு சித்திரை மாதம் சுக்கில பட்சம் , திரயோதசி திதியன்று மகாவீரர் பிறந்தார் . வைசாலிஎன்பது இன்றைய பீகார் மாகாணத்தைச் சேர்ந்த முஜபர்பூர் மாவட்டத்திலுள்ள ஈஸாட் எனப்படும் ஊராகும் .
மகாவீரரின் தந்தையார் சித்தார்த்தனை எல்லோரும் சாதாரணமாக புகழ் பெற்றவர் என்ற பொருளுள்ள ஸஜ்ஜம்ஸ் என்றும் அழைத்து வந்தார்கள் . அவர் ஞாத்ரு என்ற வம்சத்தில் , கசியப கோத்திரத்தில் பிறந்தவர் .
மகாவீரரின் தாயின் பெயர் திரிசலை . அவளது பிறந்த வீட்டின் கோத்திரம் வசிட்டம் .
மகாவீரரின் அண்ணன் நந்திவர்த்தனன் என்பவர் . அண்ணனுக்கு அடுத்துப் பிறந்திருந்த அக்காள் சுதேசனை ஆவாள் . அவரையும் அடுத்து மூன்றாவதாக பிறந்தவர் மகாவீரர் . இவர் தம் பெற்றோரின் கடைக்குட்டி .
பிறந்ததும் இவருக்கு பெற்றோர் வர்த்தமானன் என்று பெயர் சூட்டினார்கள் .
திருமணம் :
சமன மதத்தின் சுவேதாம்பரப் பிரிவினரின் கருத்துப்படி இவருக்கு பெற்றோர் தக்க பிராயத்தில் திருமணம் செய்து வைத்தார்கள் என்று தெரிகிறது . இவர் மனைவியின் பெயர் யசோதை என்றும் , இவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது என்றும் , அவள் பெயர் அயோஜ்யை ( அனவத்யை ) என்றும் தெரிகிறது . ஜமாலி என்ற ஓர் அரசகுமாரருடன் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது . ஆனால் , சமண மதத்தின் இன்னொரு பிரிவினரான திகம்பரரோ வர்த்தமானர் மணமே செய்து கொள்ளவில்லை என்கிறார்கள் .
பெற்றோர் இறந்த போது , 30 வயதே ஆகி இருந்த போது இவர் வீடுவாயிலை விட்டு , ஆன்மிக சாதனை புரியும் பொருட்டு வெளியேறி விட்டார் .
தவம் :
12 ஆண்டுகள் கடுந்தவமும் சாதனையும் புரிந்ததின் விளைவாக யோக மார்க்கத்தில் வெகுவாக முன்னேறி ' கேவலஞானம் ' பெற்றார் .
சங்கம் அமைத்தது :
பகவான் மகாவீரர் சிரமணன் , சிரமணி , சிரமணோ பாசகன் , சிரமணோ பாசிகை என்ற நான்கு வகையினரைக் கொண்ட சங்கத்தை நிறுவினார் .
நிர்வாணம் :
30 ஆண்டுகள் ஓயாது சுற்றி தாம் கண்ட உண்மைகளை மக்களுக்கு அளித்து , அவர்களை உய்வித்த பின் , சமண சமையத்தின் இறுதி தீர்த்தங்கரர் என்று கொண்டாடப்படும் பகவான் மகாவீரர் கி. மு. 527 - இல் அபாபாபுரி என்ற ஊரில் கார்த்திகை மாதம் அமாவாசை அன்று நிர்வாணம் எய்தினார் . கார்த்திகை அமாவாசையன்று இன்றும் ஜெயினர்கள் வாழும் இடங்களில் எல்லா வீடுகளிலும் விளக்குகள் ஏற்றி வைத்துக் கொண்டாடுகிறார்கள் . ரிடபநாதர் முதலாவது தீர்த்தங்கராய் இருக்க , மாகாவீரர் 24 -வது இறுதி தீர்த்தங்கரர் ஆவார்
அஹிம்சைக்கு ஒரு சிறிய உதாரணம் இரவில் உணவு கொள்ளுதல் தடுக்கப்பட்டிருப்பதாகும் ..
--கிருஷ்ணதத்தபட் , சமணம் என்ற நூலில் .நூல் உதவி : செல்லூர் கண்ணன் .