Monday, March 1, 2010

பகவான் மகாவீரர் .

" மித்தீ மே ஸவ்வ பூயேஸூ "
' எல்லா உயிர்களுடனும் எனக்கு நட்புறவுள்ளது ' என்ற இது பகவான் மகாவீரரின் குறிக்கோள் .
அஹிம்சையே உருவெடுத்து வந்தால் எப்படி இருக்கும் ? அதுதான் மகாவீரர் .
அவரது வாழ்க்கை தியாக மயமானது ; தவமயமானது .
உடமை என்று சொல்ல அவர் ஒரு கோவணமும் வைத்திருந்ததில்லை .
அவரது வாழ்க்கையும் , அவர் வாக்கும் , அவர் கருத்துக்களும் ஊழுழி காலம் வரையில் மக்களுக்கு நலம் பயந்துகொண்டேயிருக்கும் .
பிறப்பு :
ஏறக்குறைய 2,600 ஆண்டுகளுக்கு முன் கி. மு. 599 -க்கு முன்பு , ஜனநாயக ஆட்சி இயங்கிய வைசாலி நாட்டில் குண்ட கிராமம் என்ற ஊரில் சித்தார்த்தன் என்ற அரசனுக்கு சித்திரை மாதம் சுக்கில பட்சம் , திரயோதசி திதியன்று மகாவீரர் பிறந்தார் . வைசாலிஎன்பது இன்றைய பீகார் மாகாணத்தைச் சேர்ந்த முஜபர்பூர் மாவட்டத்திலுள்ள ஈஸாட் எனப்படும் ஊராகும் .
மகாவீரரின் தந்தையார் சித்தார்த்தனை எல்லோரும் சாதாரணமாக புகழ் பெற்றவர் என்ற பொருளுள்ள ஸஜ்ஜம்ஸ் என்றும் அழைத்து வந்தார்கள் . அவர் ஞாத்ரு என்ற வம்சத்தில் , கசியப கோத்திரத்தில் பிறந்தவர் .
மகாவீரரின் தாயின் பெயர் திரிசலை . அவளது பிறந்த வீட்டின் கோத்திரம் வசிட்டம் .
மகாவீரரின் அண்ணன் நந்திவர்த்தனன் என்பவர் . அண்ணனுக்கு அடுத்துப் பிறந்திருந்த அக்காள் சுதேசனை ஆவாள் . அவரையும் அடுத்து மூன்றாவதாக பிறந்தவர் மகாவீரர் . இவர் தம் பெற்றோரின் கடைக்குட்டி .
பிறந்ததும் இவருக்கு பெற்றோர் வர்த்தமானன் என்று பெயர் சூட்டினார்கள் .
திருமணம் :
சமன மதத்தின் சுவேதாம்பரப் பிரிவினரின் கருத்துப்படி இவருக்கு பெற்றோர் தக்க பிராயத்தில் திருமணம் செய்து வைத்தார்கள் என்று தெரிகிறது . இவர் மனைவியின் பெயர் யசோதை என்றும் , இவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது என்றும் , அவள் பெயர் அயோஜ்யை ( அனவத்யை ) என்றும் தெரிகிறது . ஜமாலி என்ற ஓர் அரசகுமாரருடன் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது . ஆனால் , சமண மதத்தின் இன்னொரு பிரிவினரான திகம்பரரோ வர்த்தமானர் மணமே செய்து கொள்ளவில்லை என்கிறார்கள் .
பெற்றோர் இறந்த போது , 30 வயதே ஆகி இருந்த போது இவர் வீடுவாயிலை விட்டு , ஆன்மிக சாதனை புரியும் பொருட்டு வெளியேறி விட்டார் .
தவம் :
12 ஆண்டுகள் கடுந்தவமும் சாதனையும் புரிந்ததின் விளைவாக யோக மார்க்கத்தில் வெகுவாக முன்னேறி ' கேவலஞானம் ' பெற்றார் .
சங்கம் அமைத்தது :
பகவான் மகாவீரர் சிரமணன் , சிரமணி , சிரமணோ பாசகன் , சிரமணோ பாசிகை என்ற நான்கு வகையினரைக் கொண்ட சங்கத்தை நிறுவினார் .
நிர்வாணம் :
30 ஆண்டுகள் ஓயாது சுற்றி தாம் கண்ட உண்மைகளை மக்களுக்கு அளித்து , அவர்களை உய்வித்த பின் , சமண சமையத்தின் இறுதி தீர்த்தங்கரர் என்று கொண்டாடப்படும் பகவான் மகாவீரர் கி. மு. 527 - இல் அபாபாபுரி என்ற ஊரில் கார்த்திகை மாதம் அமாவாசை அன்று நிர்வாணம் எய்தினார் . கார்த்திகை அமாவாசையன்று இன்றும் ஜெயினர்கள் வாழும் இடங்களில் எல்லா வீடுகளிலும் விளக்குகள் ஏற்றி வைத்துக் கொண்டாடுகிறார்கள் . ரிடபநாதர் முதலாவது தீர்த்தங்கராய் இருக்க , மாகாவீரர் 24 -வது இறுதி தீர்த்தங்கரர் ஆவார்
அஹிம்சைக்கு ஒரு சிறிய உதாரணம் இரவில் உணவு கொள்ளுதல் தடுக்கப்பட்டிருப்பதாகும் ..
--கிருஷ்ணதத்தபட் , சமணம் என்ற நூலில் .நூல் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: