Wednesday, January 20, 2010

சாதனைக்கு துணை !

மனிதனின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுவது விண்வெளிக்குச் சென்றது . இந்தச் சாதனைக்கு துணை நின்றது ஒரு நாய் என்றால் நம்பமுடிகிறதா ? ஆம் , விண்வெளியில் உயிரினம் இருக்க முடியுமா என்று ஆராய்வதற்காக முதன் முதலில் அனுப்பபட்டது ஒரு நாய்தான் . லைகா என்ற நாய் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நாள் 1957 , நவம்பர் 3 .
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் விண்வெளித்துறையில் கடும்போட்டி நிகழ்ந்த நேரம் அது .விண்வெளித்துறையில் மைல்கல்லாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடித்தார் ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் . அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் விஞ்ஞானிகள் உருவாக்கிய திட்டம்தான் நாயை விண்வெளியின் புற சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி சோதிப்பது . ஸ்புட்னிக் -- 2 என்ற விண்கலம் இதற்காக வேக வேகமாக உருவாக்கப்பட்டது . மாஸ்கோ நகர வீதிகளில் திரிந்து கொண்டிருந்த மாங்குரல் ரகத்தை சேர்ந்த பெண் நாயை விண்வெளிக்கு அனுப்புவது என்று முடிவாயிற்று .
அந்த நாய்க்கு லைகா என்று புதுப்பெயரும் சூட்டப்பட்டது . ஸ்புட்னிக் - 2 புறப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே லைகா அதில் ஏற்றப்பட்டது . விண்வெளியின் மேல் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும்போது உயிரினத்தின் ( நாயின் ) உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்று கண்டறிய சென்சார்கள் பொருத்தப்பட்டன .நாய் உண்பதற்காக ஜெல் வடிவ உணவும் தயார்படுத்தப்பட்டிருந்தது .
1957 , நவம்பர் 3 ல் லைகாவுடன் ஜிவ்வென்று விண்ணுக்கு கிளம்பியது ஸ்புட்னிக் - 2 . ஆனால் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே நாய் உடலில் பொருத்தப்பட்டிருந்த டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து சிக்னல்கள் வரவில்லை .உடனேயே விஞ்ஞானிகளுக்கு புரிந்து போயிற்று . லைகா விண்வெளியில் இறந்துவிட்டது என்று . லைகாவின் கதி இதுதான் என்று முன்கூட்டியே தெரிந்திருந்ததால் விஞ்ஞானிகள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை . ஆனால் உலகெங்கும் இருந்து விலங்கு நல ஆர்வலர்கள் சோதனை என்ற பெயரில் நாயை சித்ரவதை செய்து கொலை செய்ததாக குற்ற்ம்சாட்டி பெரும் போராட்டங்கள் நடத்தினர் . ஆனால் ரஷ்யாவில் மட்டும் இது தொடர்பாக எந்த சர்ச்சையும் எழவில்லை .
--- தினமலர் , 03 - 11 - 2009 .

No comments: