Tuesday, January 19, 2010

அழியபபோவது யாரு ?

தேனீக்களைக் காணவில்லையாம் !
இந்தக் கவலை உலகெங்கும் அதிகரித்து வருகிறது . அமெரிக்காவில் கோடிக்கனக்கான தேனீக்கள் காணாமற் போய்விட்டதைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் திரைப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது . ' வேனிஷிங் ஆஃப் ஹனிபீஸ் ' என்ற இந்தப் படம் தேனீக்கள் காணாமற் போனதற்குக் காரணம் பூச்சி மருந்துகள்தான் என்று குற்றம் சாட்டுகிறது .
தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடிமுழுகிப்போய்விடும் என்று கேட்பவர்கள் அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத்தானிருக்க முடியும் . மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும் , பயிர்கள் விளைவதும் நடக்கின்றன . மகரந்தச் சேர்க்கையின் மன்மதத் தூதர்கள் தேனீக்கள்தான் .
தேனீக்கள் காணாமற்போனதையடுத்து , ஆஸ்திரேலியாவிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது . தேனீக்கள் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன . கரையான் பூச்சிகள் முதல் , செல்போன் அலைவரிசைகளின் பாதிப்பு வரை பல காரணங்கள் இருந்தாலும் , இந்தப் படம் பூச்சி மருந்தை முக்கியக் காரணமாக விவரிக்கிறது . விதைக்குள்ளேயே சென்று ஊடுருவியிருக்கும் பூச்சி மருந்துகள் தேனீக்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வதை பூச்சி மருந்து தயாரிக்கும் பேயர் கம்பெனி மறுக்கிறது . எது எப்படியானாலும் தேனீக்கள் அழிந்தால் விவசாயம் அழியும் ; மனிதன் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .
தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பா என்று மேலைநாடுகளில் மட்டுமல்ல , விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான் என்கிறது ' டைம்ஸ் ஆஃப் இந்தியா '.
தேனீக்கள் , சிட்டுக் குருவிகள் எல்லாம் அழிவதற்குக் காரணம் பூச்சி மருந்துகள் மட்டுமல்ல , செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன . செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகலையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .
--- ஞாநி . ஓ...பக்கங்கள் . குமுதம் 04 - 11 - 2009 .

No comments: