Friday, September 25, 2009

கனகாபிஷேகம் !

காஞ்சி முனிவருக்கு கனகாபிஷேகம் !
காஞ்சிப் பெரியவர் ( 20 - 05 - 1894 -- 08 - 01 - 1994 ).
1907 -ம் ஆண்டு தம்முடைய 13 -வது வயதில் ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68 - வது பீடாதிபதியானவர் பூஜ்யஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் .
எந்தச் சமயத் தலைவருக்கும் இதுவரையில் நடந்திராத வகையில் , ஐந்து கனகாபிஷேகங்கள் நடத்தப்பட்டது ஸ்ரீ காமகோடி பீடத்தின் சிறப்பானதொரு விஷயம் . 1954 - ல் ஸ்ரீ மஹா சுவாமிகளின் 60 ஆண்டு நிறைவு விழாவின்போது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன் குருநாதருக்கு முதல் கனகாபிஷேகம் செய்தார் . ஸ்ரீ பரமாச்சாரியாள் ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி இரண்டாவது கனகாபிஷேகம் 1957 - ல் நடந்தது ! சென்னை மைலாப்பூரில் நடந்த ஸ்ரீ ராமநவமி விழாவின்போது ( 1965 - ல் ) காஞ்சிப் பெரியவருக்கு மூன்றாவது கனகாபிஷேகம் செய்தார் ஸ்ரீ ஜெயேந்திரர் . இப்போது நூற்றாண்டு விழாவின் ஒரு சிறப்பம்சமாக 25 - 04 - 1993 அன்று ஸ்ரீ மஹா சுவாமிகளுக்கு நான்காவது கனகாபிஷேகம் நடத்தப்பட்டது .
26 - 05 - 1993 அன்று ஸ்ரீ பரமாச்சாரியாருக்கு ஐந்தாவது கனகாபிஷேகம் நடந்தது . காலை 9 : 30 மணியளவில் நடந்த இந்த மகா வைபவத்தைக் காண அதிகாலை மூன்று மணியிலிருந்தே மக்கள் க்யூவில் நிற்கத் தொடங்கிவிட்டார்கள் .
சுவாமிகள் அமர , வெள்ளியினால் ஆன ஒரு சிம்மாசனம் ' தகதக ' வென்ற ஜொலிப்போடு காத்திருக்க... பெரியவர் வந்து அமர்ந்ததும் , அது மேலும் ஒளியுடையதாக மின்னியது .
இம்முறை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்கவென்று தனி ஏற்பாடுகளை மடம் செய்திருந்தது . பி.பி.சி. , சி.என்.என். போன்ற வெளிநாட்டு டி.வி.க்காரர்கள் உட்பட வீடியோ மற்றும் புகைப்பட காமிராக்கள் மட்டுமே கிட்டத்தட்ட 35 இருந்தன .
பார்வையாளர்களிலிருந்து வி.ஐ.பி. வரிசைக்குள் நைசாக நுழைய முயன்றவர்களை, ஆஜானுபாகுவாய் இருந்த தேர்தல் அதிகாரி டி.என். சேஷன் கையைப்பிடித்துத் தடுத்துக் கொண்டிருந்தார் .
சரியாக 20 நிமிடங்களில் கனகாபிஷேகம் முடிய , பெரியவர் மக்களைப் பார்த்து இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்திக் கூப்பியபோது மொத்தக் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டது !
--- ஆனந்தவிகடன் , 06 - 06 - 1993 .

No comments: