Friday, July 17, 2009

' தலைக் காவிரி '

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பிரம்மகிரி மலை உச்சியில் காவிரி பிறக்கும் இடத்திற்குத் ' தலைக் காவிரி ' என்று பெயர் .
காவிரி தனது பாதையில் ஹாரங்கி , ஹேமாவதி , லட்சுமணதீர்த்தா ஆகிய உபநதிகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மைசூர் அருகே கிருஷ்ணராஜ சாகர் அணையை அடைகிறது . அங்கிருந்து கிழக்கு நோக்கி ஓடி வரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இரு கிளைகளாக பிரிந்து மீண்டும் கூடுக்கிறது . இது காவிரி நதி ஏற்படுத்தியுள்ள மிகப் பெரிய தீவு .
தி. நரசிபுரம் அருகே கபினி நதி இணைந்த பிறகு காவிரி நீர் இரட்டிப்பாகி தலக்காடு வழியாக மண்டியா மாவட்டத்தை அடைகிறது . அங்கே சிவசமுத்திரம் என்னுமிடத்தில் காவிரி மீண்டும் கிளை பிரிந்து இரண்டாவது பெரிய தீவை ஏற்படுத்தியுள்ளது .
பல நீர்வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ள காவிரியின் மிகப் பெரிய நீர் வீழ்ச்சி இருப்பது சிவசமுத்திரத்தில் தான் .
சிவசமுத்திரத்தில் காவிரி இருவேறு கிளைகளாகப் பிரிந்து கண்ணையும் , மனதையும் குளிர வைக்கும் இரண்டு உயரமான நீர் வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது .முதல் கிளையிலுள்ள நீர் வீச்சிக்கு ' சுகன சுக்கி ' என்றும் , அங்கிருந்து ஒரு மைல்தொலைவில் இரண்டாவது கிளையிலுள்ள நீர் வீழ்ச்சிக்கு ' பர சுக்கி ' என்றும் பெயர் .
சுமார் 350 அடி உயரமுள்ள இந்த நீர் வீழ்ச்சிகள் உலகிலேயே பதினேழாவது இடத்தை அலங்கரித்துள்ளது பெருமைக்குரியது . கனடாவிலுள்ள புகழ் பெற்ற ' நயாகரா ' நீர்வீழ்ச்சி கூட இதனை அடுத்ததுதான் . மைசூரிலிருந்து வடகிழக்கே 70 கி. மீ . தொலைவிலுள்ள சிவசமுத்திரம் கர்நாடகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும் . நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பயணிகள் தினமும் காணவரும் இந்த நீர்வீழ்ச்சிகளின் எழில் கொஞ்சும் அழகைக் கண்டுகளிக்க இரு கண்கள் போதாது .
--- ஐ . சேகநாதன் . தினமணி கதிர் . 23 - 08 - 1998 .

No comments: