Sunday, June 14, 2009

சாக்ரடீஸ் .

சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை . 2450 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாகக் கூறப்படுகிறது . அப்போது உலகில் எந்த மதமும் தோன்றவில்லை . தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம் , தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார் . ஆனால் , அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை . அவருடைய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி எப்போதும் இளைஞர்கள் குழுமியிருந்தனர் . அதில் ஒருவரான பிளாட்டோ , சாக்ரடீஸ் பற்றிய சிந்தனைகளை பல புத்தகங்களாக எழுதினார் . இந்த புத்தகங்கள் மூலம்தான் சாக்ரடீஸ் பற்றி வெளி உலகத்துக்கு தெரியவந்தது .
சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது . அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினான் . இளைஞர்களைக் கெடுக்கிறார் , கிரேக்கர்கள் தொழுது வரும் கடவுள்களை தூற்றி , ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார் , வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் , சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார் , புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார் . சாக்ரடீஸ் மிகவும் தீயவர் . இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .
இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ் , என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்குவிசாரணை செய்ய விரும்பவில்லை . என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் . நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் . ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்ப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம் என்றார் .
இதன் பின்னர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது . மரணம் , மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப்பதிவு செய்தனர் . 220 பேர் சாக்ரடீஸை மன்னித்துவிடுமாறும் , 281 பேர் மரணதண்டனை அளிக்கவும் வாக்களித்தனர் . எனவே சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339 ம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார் . அப்போது விழாக்காலம் என்பதால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்துவைக்கவேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது . சாக்ரடீஸை தப்ப வைக்க கிரீடோ என்பவர் ரகசியமாக சிறைக்கு சென்று சந்தித்தார் . ஆனால் சாக்ரடீஸ் தப்பிக்க விரும்பவில்லை . திட்டமிட்டபடி 30 நாட்கள் கழித்து விஷம் கொடுத்து சாக்ரடீஸ் கொல்லப்பட்டார் .
--- தினமலர் 15 - 02 -2009 .

No comments: