Monday, June 8, 2009

வர்த்தமானர் .

வாராது வந்த மாமணி வர்த்தமான மகாவீரர் .
உலக வரலாற்றில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு காலத்தால் போற்றுதற்குரிய சிறப்பானதொரு காலப் பெட்டகம் ஆகும் .தத்துவ விசாரணைகளும் , ஐயமனப்பான்மைகளும் கலந்திருந்த காலம் .
வர்த்தமான மகாவீரர் , கௌதம புத்தர் , கன்பூஷியஸ் , ஹிராக்ளடஸ் , லாசோ போன்ற போற்றுதற்குரிய ஆசான்களின் சகாப்தமாக அமைந்த நூற்றாண்டு ,
இந்த வேளையில் , சமண சமயத்தை தோற்றுவித்ததாகக் கருதப்படும் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வரலாற்று அறிஞர்களால் ஆழ்ந்து தெளிந்து ஒப்புக் கொள்ளப்பட்டவர் ஆவர் .
வர்த்தமானர் கி.மு. 599-ல் வைசாலிக்கு அருகில் உள்ள குண்டலபுரம் என்ற இடத்தை அரசாண்ட சித்தார்த்தன் என்பவருக்கும் த்ரிசலாதேவி அம்மையாருக்கும் மகனாய் அவதரித்தார் .இளைஞராக இருந்தபோது இவர்தம் நெஞ்சுரத்தைக் காண விரும்பிய தேவனொருவர் நெடும் பல அரவாகக் கடுந்தோற்றம் பூண்டு மரம் ஒன்றினை பின்னிப்பிணைந்து நின்ற போது விளையாடிக் கொண்டிருந்த வர்த்தமானர் என்ற பயமறியா பாலகன் அந்த பாம்பின் தலையின் மீது கால் வைத்து ஆடியதாகவும் அதன் கண் இமையவன் இவரை மகாவீரர் எனப்பெயரிட்டு போற்றினன் என மரபுக் கதைகள் உண்டு .
இல்லற் வாழ்வில் சிறிதும் நாட்டமின்மையால் , தம்முடைய தமையனார் நந்தி வர்த்தனரின் உடன்பாட்டுடன் தம் 30-ஆம் அகவையில் வீட்டைத் துறந்து துறவறம் மேற்கொண்டார் மகாவீரர் . பின்னர் ஆடைகளைத் துறந்த துறவியாக 13 ஆண்டுகள் மிகக்கடுமையான விரதங்கள் மேற்கொண்டு தனது 44-வது வயதில் மெய்யறிவு பெற்றார் . அது முதல் ஜீனர் ( வெற்றி பெற்றவர் ) என்றும் இவரை பின்பற்றுவோர் ஜீனர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் . சுமார் 30 ஆண்டுகள் சித்தாந்தியாக பாமரரும் தெளிந்து விரும்பும் தமது புதுக் கருத்துக்களை பரப்பிய வண்ணம் பல இடங்கள் சுற்றி வந்தார் . தமது 72 -வது வயதில் இராஜகிருகத்திற்கு அருகில் பாவாபுரி என்னும் இடத்தில் வீடுபேறு அடைந்தார் .
--- கா. இர. குப்புதாசு . வடக்கு வாசல் .ஜனவரி , 2009 . 5A / 11032, Second Floor, Gall No. 9 , Sat Nagar, Karol Bagh, NEW DELHI - 110 005 .

No comments: