Wednesday, May 20, 2009

சவுக்கு மரமும் , வாழை மரமும் !

" எனக்குப் பொன்னாடை போர்த்தி , ' ஹாஸ்யச் சக்ரவர்த்தி ' என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறீர்கள் . நான் ஒரு சாதாரண சினிமா நடிகன் .என்னை ஒட்டி இவ்வளவு பெரிய விழா எடுத்திருப்பது , ஒரு நாயின் முன் முழுத் தேங்காயைப் போட்டது போலத்தான் . அந்த நாய் தேங்காயை உருட்டிக் கொண்டிருக்குமே தவிர , வேறொன்றும் செய்யாது ; செய்யவும் முடியாது
சவுக்கு மரங்களைச் சாரம் கட்டித்தான் புதுக் கட்டட வேலையைச் செய்வோம் .வேலை முடிந்ததும் சவுக்கு மரங்களைத் தூரப் போட்டுவிட்டு , கட்டட வேலைகளில் எவ்விதப் பங்கும் பெறாத வாழை மரங்களைக் கொண்டு வந்து கட்டி , பூஜை செய்வோம் .அது போல , இந்த ஆலய திருப்பணிக்காக இரவு பகலாகப் பாடுபட்டு உழைப்பவர்களுக்கு நன்றி கூற மறந்து , ஏதேதோ பேசிவிட்டேன் ! அவர்களுக்கு என் நன்றி ! "
--- திருச்சி தில்லை நகரில் அருளானந்தர் கோயிலில் நடந்த விழாவில் திரைப்பட நடிகர் , நாகேஷ் ஆற்றிய உரை .
கவிதை !
அன்பை எங்கெங்கோ
தேடினேன்
அகத்தில் இருப்பதை
அறியாமல் .
உண்மையை எங்கெங்கோ
தேடினேன்
உள்ளத்துள் இருப்பதை
அறியாமல் .
அமைதியை எங்கெங்கோ
தேடினேன்
அடிமனதில் இருப்பதை
அறியாமல் .
புத்துணர்வை எங்கெங்கோ
தேடினேன்
புதைந்துகிடப்பதை அறியாமல் .
உற்சாகத்தை எங்கெங்கோ
தேடினேன்
உணர்வில் இருப்பதை
அறியாமல் .
நிம்மதியை எங்கெங்கோ
தேடினேன்
நினைவில் இருப்பதை
அறியாமல் .
மகிழ்ச்சியை எங்கெங்கோ
தேடினேன்
மனதில் இருப்பதை அறியாமல் .
என்னை எங்கெங்கோ
தேடினேன்
எனக்குள் இருப்பதை
அறியாமல் !
--- வாஞ்சி கோவிந்தராஜன் , மத்திய சிறைவாசி , திருச்சி .--- ஆனந்தவிகடன் ,25 -02 -2009 .

No comments: